Published:Updated:

வினோதினியும் உங்கள் நிதி உதவியும்!

வினோதினியும் உங்கள் நிதி உதவியும்!
வினோதினியும் உங்கள் நிதி உதவியும்!
வினோதினியும் உங்கள் நிதி உதவியும்!

காதலை ஏற்க மறுத்த காரணத்தால், கயவன் ஒருவனின் ஆசிட் வீச்சுக்கு ஆளாகி, இரண்டு மாதங்களுக்கும் மேலாக மருத்துவனையில் உயிர் போராட்டம் நடத்தி வந்த அன்புச் சகோதரி விநோதினி, நம் நம்பிக்கைகளை எல்லாம் மீறி இயற்கையோடு கலந்துவிட்டார். பிப்ரவரி 12-ம் தேதி காலை அந்த செய்தி இடியாக உலகைத் தாக்கிய சில நிமிடங்களில், உலகெங்கிலும் உள்ள தமிழ் உள்ளங்களிடமிருந்து கண்ணீர் அஞ்சலி வந்து நிறைந்தபடி உள்ளது.

வினோதினி குறித்த கட்டுரை ஆனந்த விகடன் இதழில் வெளியானதைத் தொடர்ந்து, அவர்  நல்லபடி தேறி வர வேண்டும் என்று அத்தனை வாசக உள்ளங்களும் உருக்கமாகப் பிரார்த்தித்தன. அதோடு, அவருடைய மருத்துவ சிகிச்சைக்காக உங்களில் ஏராளமான வாசகர்கள் மனமுவந்து நிதியும் அனுப்பத் துவங்கினீர்கள். அப்படி வந்து சேர்ந்த நன்கொடை 10 லட்சத்தை நெருங்கியது. இன்னொரு பக்கம், விகடன் வழிகாட்டுதலின்படி வினோதினியின் வங்கிக் கணக்குக்கே பணம் செலுத்தியவர்களும் ஏராளம்.

இதை வினோதினி மற்றும் அவருடைய பெற்றோரிடம் தெரிவித்தபோது, உருக்கமாக நன்றி சொன்ன அவர்கள், ''இன்னும் பலரிடமிருந்து நிதி நேரடியாக எங்களை வந்து அடைந்தபடி இருக்கிறது. அதை வைத்து இதுவரையிலான மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டு வருகிறோம். விகடன் வாசகர்கள் அளித்த நிதி அப்படியே இருக்கட்டும். இன்னும் சில நாட்களில் மொத்தமாகப் பெற்றுக் கொள்கிறோம்'' என்று கூறியிருந்தார்கள்.

வினோதினியிடமே அப்போது நேரில் பேசினோம். அவரது விருப்பப்படி அவர் பெயரிலேயே ஒரு வங்கிக் கணக்கை தனியாகத் துவங்கி இந்த நிதியைச் சேர்ப்பிக்கும் முயற்சியில் நாம் இறங்கி இருந்த நிலையில்தான், இயற்கை நம்மிடமிருந்து வினோதினியைப் பறித்துக்கொண்டு நம்மையெல்லாம் தீராத சோகத்தில் ஆழ்த்திவிட்டது.

அன்பு வாசகர்களே...

தங்களின் ஒரே மகளையும் இழந்து எதிர்காலம் சூனியமாகி, ஆதரவின்றித் தவிக்கும் பரிதாபத்துக்குரிய அந்தப் பெற்றோரிடமே தற்போது வாசகர்கள் அனுப்பி உதவிய நிதியை  உடனடியாகச் சேர்ப்பிக்க முடிவு செய்துள்ளோம். அதுகுறித்த முழு விவரங்களையும் மிக விரைவில் உங்களுக்குத் தெரிவிக்கிறோம்.

உதவிய உள்ளங்கள் அனைவருக்கும் விகடன் குழுமத்தின் இதயபூர்வமான நன்றிகள்.