Published:Updated:

'ரூ.12,110 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி; உழுவார் உலகத்தாருக்கு!' -வள்ளுவரை மேற்கோள் காட்டிய முதல்வர்

கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்வதாகத் தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெற்றுவருகிறது. ஆளுநர் உரையுடன் தொடங்கிய இந்த கூட்டத்தொடரில், இன்று தமிழக முதல்வர் பழனிசாமி, சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பின்படி தமிழகத்திலுள்ள கூட்டுறவு வங்கிகளில் 16.43 லட்சம் விவசாயிகள் வாங்கிய 12,110 கோடிக்கும் அதிகமான பயிர்க் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன என்று அறிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி

கொரோனா காலத்தில் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்ட முதல்வர் திருக்குறளை மேற்கோள்காட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

`உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து”

விளக்கம்: உழவு செய்ய முடியாமல் உயிர்வாழ்கின்றவர்கள் எல்லோரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர்கள் உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர்.

சட்டப்பேரவையில் தமிழக சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவிப்பை வெளியிட்டுப் பேசியவர், ``ஒரு நாட்டின் வளம், அந்த நாட்டின் விவசாயத்தைப் பொறுத்தே அமையும். அதனால்தான் அம்மாவின் அரசு, விவசாயிகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கிவருகிறது. அவர்களுக்காக அதிக திட்டங்களைத் தீட்டி, அதற்கு நிதி ஒதுக்கிச் செயல்படுத்திவருகிறது. விவசாயிகளுக்கு ஒரு தொய்வு ஏற்படும்போதெல்லாம் அம்மாவின் அரசு அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி அவர்களைக் காப்பதில் முன்னிலையில் இருந்துவருகிறது" என்றார்.

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி

தொடர்ந்து பேசியவர், ``2016-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததுமே 31.03.2016 அன்று வரை நிலுவையிலிருந்த 5,318 கோடி ரூபாய் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தார். இந்த கடன் ரத்தால் 12 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர். கடந்த 2017-ம் ஆண்டு வறட்சியால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக 2,247 கோடி ரூபாய் வறட்சி நிவாரணமாக வழங்கப்பட்டிருக்கிறது" எனக் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், ``கொரோனா பேரிடர் காரணமாக உலக நாடுகள் அனைத்துமே பெரும் பாதிப்பைச் சந்தித்தன. தமிழ்நாட்டிலும் இதன் தாக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதித்தது. இந்நிலையில், விவசாயிகள் வாழ்க்கையில் பெரும் பாதிப்பு உள்ளாகியிருக்கிறது. இதைத் தொடர்ந்து, நிவர், புரவி புயலின் தாக்கம், சென்ற மாதம் பெய்த கனமழை ஆகியவற்றால் பெருத்த பயிர் சேதம் ஏற்பட்டது. கடன் பெற்று விவசாயம் செய்யும் விவசாயிகள் பெரும் துயரத்துக்கு உள்ளானார்கள்" என்றார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

தொடர்ந்து, ``அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் பெரும் சேதமடைந்தன. அதற்கான நிவாரணங்கள் வழங்கப்பட்டுவருகின்றன. தற்போதுள்ள சூழலைக் கருத்தில்கொண்டு, கூட்டுறவு வங்கிகளில் நிலுவையிலுள்ள 16.13 லட்சம் விவசாயிகளின் பயிர்க் கடன் 12,110 கோடி ரூபாயும் தள்ளுபடி செய்யப்படும்" என்று அறிவித்தார்.

`2006-ம் ஆண்டு தேர்தலில் நிலமில்லா விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் விவசாய நிலம் வழங்கப்படும்’ என்று தி.மு.க வாக்குறுதி அளித்திருந்தது. அந்த வாக்குறுதியை அவர்களால் நிறைவேற்றவே முடியவில்லை - முதல்வர் பழனிச்சாமி.

தொடர்ந்து பேசுகையில், ``நானும் ஒரு விவசாயி. விவசாயிகளை அதிகம் நேசிப்பவன். வேளாண் பெருங்குடி மக்களின் இன்னல்களைத் தீர்ப்பதே எனது முதல் கடமை. இதன் மூலம், 16.13 லட்சம் விவசாயிகள் எந்தச் சிரமமும் இல்லாமல், வரும் ஆண்டில் பயிர்ச் சாகுபடியைத் தொடர முடியும். இந்தக் கடன் தள்ளுபடிக்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட்டு, அதற்கான நிதி ஆதாரமும்ம் வருகின்ற நிதிநிலை அறிக்கையில் ஏற்படுத்தப்படவிருக்கிறது. இந்த அறிவிப்பு உடனடியாக செயல்படுத்தப்படவிருக்கிறது" என்று பேசினார்.

முதல்வரின் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு