புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு, விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூர் பகுதியில் நேற்று (மே 6), கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், எஸ்.சி பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளாளர் வெளியேற வேண்டும் எனப் பிரகடனம் வெளியிடப்பட்டது.
இந்த மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, "இந்த மாநாடு, மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடும் மாநாடாகத்தான் கருதுகிறேன். இதேபோல இன்னொரு மாநாடு நடைபெறாது. எச்சரிக்கை முடிந்துவிட்டது. எனவே, எஸ்.சி பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளாளர்களை வெளியேற்ற வேண்டும். கடந்த 30 ஆண்டுகளில், வரலாறு காணாத மாநாட்டை நடத்தியுள்ளோம். தி.மு.க மற்றும் அ.தி.மு.க போன்ற திராவிட கட்சிகளால் நம் சுய மரியாதை இழந்தோம். எனக்கும் பி.ஜே.பி-க்கும், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எஸ்.சி பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளாளர்களை மாற்ற நான் கூறாமல் வேறு யார் கூறுவது? எனக்குத்தான் என் மக்கள் பற்றியும் அவர்களின் நாகரிகம் பற்றியும் தெரியும். நமக்கு அரசு சலுகைகளைவிடச் சுயமரியாதைதான் முக்கியம். எனவேதான், நாம் எஸ்.சி பட்டியலைப் புறக்கணிக்கிறோம். எஸ்.சி பட்டியலை வைத்துக்கொண்டு ஒரு தனியார் வேலையைக்கூட பெற முடியவில்லை. இந்தக் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை என்றால் அக்டோபர் 6 -ம் தேதி கடுமையான போராட்டம் நடக்கும். இந்தக் கோரிக்கைக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு தரவில்லை என்றால், எங்கள் இன மக்கள் அவர்களைத் தங்கள் ஏரியாவுக்குள்கூட இனி விட மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.