Published:Updated:

மனைக்காக வாங்கிய நிலத்தில்... மனம் குளிரும் விவசாயம்..!

மனைக்காக வாங்கிய நிலத்தில்... மனம் குளிரும் விவசாயம்..!
மனைக்காக வாங்கிய நிலத்தில்... மனம் குளிரும் விவசாயம்..!

மனைக்காக வாங்கிய நிலத்தில்... மனம் குளிரும் விவசாயம்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ரியல் எஸ்டேட் அதிபரின் 'ஜீரோ பட்ஜெட்’ சிலாகிப்பு!

- ஜெயகுமார்
படங்கள்: பீரகா வெங்கடேஷ் 

''ரியல் எஸ்டேட் பண்ணிட்டு இருந்த நான், இன்னிக்கு விவசாயத்துல வெளுத்துக்கட்டி, விருது வாங்குற அளவுக்கு உசந்திருக்கேன்னா... அதுக்குக் காரணம் 'பசுமை விகடன்’தான். அது மூலமாத்தான் இயற்கை விவசாயத்தப் பத்தி தெரிஞ்சிக்கிட்டு, இயற்கை இடுபொருட்களைத் தயார் பண்ணி பயன்படுத்திட்டிருக்கேன். என்னை மாதிரியே பயன் பெறணும்னு எல்லாரையும் 'பசுமை விகடன்’ படிக்கச் சொல்லிக்கிட்டிருக்கேன்'' என்று சிலாகிக்கிறார், திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி என்கிற இறையழகன்.

'கரிம வேளாண் கூட்டமைப்பு’ என்கிற நிறுவனம், இயற்கை விவசாயத்தில் இறையழகனுக்குள்ள ஆர்வம் மற்றும் செயல்பாட்டுக்காக 'இயற்கை வேளாண் வித்தகர் விருது’ கொடுத்து கௌரவித்துள்ளது.

மனைக்காக வாங்கிய நிலத்தில்... மனம் குளிரும் விவசாயம்..!

கிழக்குக் கடற்கரைச் சாலையில் மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி கூட்டுரோடிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் புதிய இடையூர் என்கிற கிராமத்தில் இருக்கிறது, தெய்வசிகாமணியின் 25 ஏக்கர் பண்ணை. நடவுக்குத் தயாராகி கொண்டிருக்கும் வயல், அறுவடை செய்யப்பட்ட நெல்வயல், மா, கொய்யா, சப்போட்டா, எலுமிச்சை... என அடர்ந்து காணப்படுகிறது, அந்த இயற்கைப் பண்ணை. ''டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிச்சுட்டு, நிறைய இடங்கள்ல வேல செஞ்சேன். ஆனா... மனசுக்கு திருப்தியே இல்ல. அப்புறம் ரியல் எஸ்டேட் தொழிலை செஞ்சுட்டு இருந்தேன். 12 வருஷத்துக்கு முன்ன, வீட்டுமனைப் பிரிவுக்காகத்தான் இந்த நிலத்தை வாங்கினேன். 'இறைக்குருவனார்’ங்கற நண்பர், இந்த நிலத்தைப் பார்த்துட்டு, 'இதுல விவசாயம் செஞ்சா நல்லா வரும்’னு சொன்னதோட, சில விஷயங்களையும் சொல்லிக் கொடுத்தார்.

மனைக்காக வாங்கிய நிலத்தில்... மனம் குளிரும் விவசாயம்..!

அதனால, அப்பாவோடு சேர்ந்து விவசாயத்தை ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல ரசாயன விவசாயம்தான். 6 வருஷத்துக்கு முன்ன, 'பசுமை விகடன்’ படிக்கற வாய்ப்பு கிடைச்சுது. உடனே இயற்கை விவசாயத்துல ஆர்வம் வந்துடுச்சு. கொஞ்சம் கொஞ்சமா, ரசாயன விஷயங்கள குறைக்க ஆரம்பிச்ச நான்... ஜீவாமிர்தம், மீன் அமிலம்னு தயார் செஞ்சு பயன்படுத்த ஆரம்பிச்சேன். நிலத்துல மண்புழுக்கள் பெருகி, நல்ல மகசூலும் கிடைச்சுது. இப்போ, நிலம் நல்ல பக்குவத்துக்கு வந்துடுச்சு. இன்னும் 3 வருஷத்துக்கு பிறகு எந்த ஊட்டமும் கொடுக்கத் தேவையில்ல. அந்த அளவுக்கு மண்ணு வளமாயிடுச்சு'' என்று பூரித்த தெய்வசிகாமணி, பண்ணையைச் சுற்றிக்காட்டிக் கொண்டே பேசினார். 

ஆண்டுக்கு 13 லட்சம்!

''இந்தப் பண்ணைக்கு 'தமிழ்ப் பண்ணை’னு பேர் வெச்சுருக்கேன். 15 ஏக்கர்ல, அல்போன்சா, பங்கனப்பள்ளி, கொய்யா (லக்னோ-49), சப்போட்டா, காட்டுநெல்லி, தென்னை, எலுமிச்சை, குமிழ், மகோகனி, மலைவேம்பு, செம்மரம்னு மொத்தம் 1,300 மரங்கள் இருக்கு. இதுக்கெல்லாம் 3 வயசாகுது. குழி, செடி, நடவு, பராமரிப்புனு இதுவரைக்கும் 5 லட்சம் ரூபாய் செலவாகியிருக்கு. இன்னும் ரெண்டு வருஷத்துக்கு 4 லட்ச ரூபாய் வரைக்கும் செலவாகும்னு நினைக்கிறேன். அதுக்கப்பறம் வருமானம் கிடைக்க ஆரம்பிச்சுடும். சராசரியா ஒரு மரத்துக்குக் குறைஞ்சது ஆயிரம் ரூபாய்னு வெச்சுக்கிட்டாலும், வருஷத்துக்கு 13 லட்ச ரூபாய் கிடைக்கும்னு எதிர்பாக்கிறேன்'' என்ற தெய்வசிகாமணி, தொடர்ந்தார்.

முழு ஜீரோ பட்ஜெட்!

''நிலத்துக்குத் தேவையான மீன் அமினோ அமிலம், ஜீவாமிர்தம், மூலிகைப் பூச்சிவிரட்டி எல்லாத்தையும் பண்ணையிலேயே தயார் செய்றோம். அதுக்காக, 6 நாட்டு மாடுகள் இருக்கு. என் நிலத்துல விளையுற உளுந்தைத்தான் ஜீவாமிர்தம் தயாரிக்கப் பயன்படுத்துறேன். வெல்லம் மட்டும்தான் வெளியில வாங்க வேண்டி வரும். பனம்பழம் கிடைக்கறப்போ... வெல்லத்துக்கு பதிலா அதைப் பயன்படுத்திக்குவேன். திருக்கழுக்குன்றம் மீன் மார்க்கெட்ல இலவசமா மீன் கழிவுகள் கிடைச்சுடுது. அதுலதான் மீன் அமிலம் தயார் பண்றேன். பயன்படுத்தினது போக மிச்சம் இருக்குற ஜீவாமிர்தம், மீன் அமிலம் எல்லாத்தையும் அக்கம்பக்கத்து விவசாயிகளுக்கு விலைக்குக் கொடுத்துடுவேன். அதன் மூலமாவும் ஒரு வருமானம் கிடைச்சுடுது.

நாலே கால் ஏக்கர்ல நெல் சாகுபடி பண்றேன். நான் வழக்கமா வெள்ளைப் பொன்னிதான் நடுவேன். இந்த முறை உளுந்தூர்பேட்டை சாரதா ஆஸ்ரமத்திலிருந்து சேலம் சம்பா ரக விதைநெல்லை வாங்கிட்டு வந்து, 3 ஏக்கர்ல ஒற்றை நாற்று முறையில நடவு செய்தேன். ஒண்ணே கால் ஏக்கர்ல வெள்ளைப் பொன்னியையும் நடவு செய்தேன். ரெண்டையுமே இப்போ அறுவடை செய்துட்டோம். சாதாரணமா, சேலம் சம்பா விளையறதுக்கு 170 நாள் ஆகும்னு சொல்வாங்க. ஆனா, எங்க மண்ணுல 132 நாள்லயே அறுவடைக்குத்

மனைக்காக வாங்கிய நிலத்தில்... மனம் குளிரும் விவசாயம்..!

தயாராயிடுச்சு. ஒரு கதிர்ல, 370 நெல்மணிகள் இருந்துச்சு'' என்ற தெய்வசிகாமணி, நிறைவாக கணக்கு வழக்குகளைச் சொன்னார் இப்படி-

''வெள்ளைப் பொன்னி ஒண்ணேகால் ஏக்கருக்கு 32 மூட்டை (80 கிலோ) அறுவடையாச்சு. அதை மெஷினில் அரைச்சு, 10 கிலோ பைகள்ல போட்டப்ப... 145 பைகள் வந்துச்சு. 1 கிலோ 50 ரூபாய் வீதம், 145 பைகளுக்கு 72,500 ரூபாய் வருமானம் கிடைச்சுது. 3 ஏக்கர்ல விளைஞ்ச சேலம் சம்பா 75 மூட்டைகள் (80 கிலோ) கிடைச்சுது. அரைச்சு, 10 கிலோ பைகள்ல போட்டப்ப 350 பைகள் கிடைச்சுது. கிலோ 55 ரூபாய் வீதம், 350 பைகளுக்கு 1 லட்சத்து 92 ஆயிரத்து 500 ரூபாய் கிடைச்சுது.

மொத்தம் நாலேகால் ஏக்கர்ல இரண்டு ரக நெல் மூலமா 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் கிடைச்சுது. நடவு, அறுவடை, அரவைக் கூலி, பையில போட்டதுனு

1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவு போக, 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் லாபமா கையில நிக்குது!''

தொடர்புக்கு, தெய்வசிகாமணி,
செல்போன்: 93400-47779

- பசுமை விகடன் இதழில் இருந்து.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு