Published:Updated:

‘தண்ணி’ காட்டும் மோடி!

‘தண்ணி’ காட்டும் மோடி!
பிரீமியம் ஸ்டோரி
‘தண்ணி’ காட்டும் மோடி!

ப.திருமாவேலன், ஓவியம்: ஹாசிப்கான்

‘தண்ணி’ காட்டும் மோடி!

ப.திருமாவேலன், ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
‘தண்ணி’ காட்டும் மோடி!
பிரீமியம் ஸ்டோரி
‘தண்ணி’ காட்டும் மோடி!
‘தண்ணி’ காட்டும் மோடி!

‘தண்ணீரும் ரத்தமும் ஒன்றாக ஓட முடியாது' என, புதிய புத்தராக மாறி புத்திமதி சொல்லியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இது பொருந்தும் என்றால், தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் பொருந்தாதா மோடி?

குஜராத் மக்களுக்கு தண்ணீர் தருகிறது நர்மதா. மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களும் நர்மதா நதிநீரைப் பங்கிட்டுக்கொள்கின்றன. இது எதன் அடிப்படையில் என்றால், இந்த நான்கு மாநிலங்களுக்குமான நடுவர் மன்றத்தின்படிதான். நர்மதா கன்ட்ரோல் அத்தாரிட்டி அடிப்படையில் மிகச் சுமுகமாக நதிநீர் பங்கீடு நடந்து கொண்டிருக்கும்போது, காவிரிக்கு மட்டும் மேலாண்மை வாரியம் அமைக்க தயக்கம் என்ன மோடி?

`குஜராத்துக்கு வெண்ணெய், தமிழ்நாட்டுக்கு ஏன் சுண்ணாம்பு?' எனக் கேட்க, உரிமை உண்டுதானே?

முதலமைச்சர் சித்தராமையா, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, முன்னாள் பிரதமர் தேவகவுடா, எதற்குமே பிரயோஜனப்படாத வட்டாள் நாகராஜ் - ஆகிய நால்வரும் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும். கர்நாடகாவை நம்பி அரசியல் நடத்துபவர்கள், கன்னடர்களை நம்பி பாத்திரம் நிரப்பிக்கொள்பவர்கள். ஆனால், பெருங்களத்தூரில் உங்களைப் பார்த்ததும் ‘பாரத் மாதா கி ஜே!’ என்று முழக்கமிட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு, தாங்கள் காட்டியது கருணைதானா?

`காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது' என மத்திய அரசு மனுத்தாக்கல் செய்கிறது என்றால், பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய அரசும் தமிழ்நாடு வேண்டாம் என நினைக்கிறார்களா... கருகட்டும் என நினைக்கிறார்களா?

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதால் மட்டும் தமிழ்நாட்டுக்கு நீதி கிடைத்துவிடப்போவது இல்லை. காவிரி ஆணையம் கொடுத்த உத்தரவுப்படி, அறிவிக்கப்பட்ட அளவில் கர்நாடக காங்கிரஸ் அரசாக இருந்தாலும், பா.ஜ.க அரசாக இருந்தாலும் ஓர் ஆண்டுகூட தண்ணீரைத் திறந்துவிடவில்லை. `காவிரி ஆணையமும் கட்டுப்படுத்தாது. மத்திய அரசுக்கும் கட்டுப்பட மாட்டோம். உச்ச நீதிமன்றத்தையும் மதிக்க மாட்டோம்' எனச் செயல்படும் மாநிலமாக கர்நாடக அரசு இருக்கும்போது என்ன செய்ய முடியும்? தண்ணீர் தெளித்துவிடப்பட்டதுபோல் ஒரு மாநிலம் செயல்படும்போது, அதைக் கட்டுப்படுத்த காவிரி மேலாண்மை வாரியமாவது அமையுங்கள் எனக் கேட்க உரிமை இல்லையா?

காவிரி மேலாண்மை வாரியம் அமையுங்கள் எனச் சொல்வதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை என்றால், அவர்கள் சொல்வதற்கு முன்னால் நீங்களே அமைத்திருந்தால் அவர்கள் ஏன் உத்தரவிடப்போகிறார்கள்?

ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது. இந்தத் தடையை நீக்கக் சொல்லி கோரிக்கை வைக்கப்பட்டபோது, ‘உச்ச நீதிமன்றம் சொன்னதை மீற முடியாது' என மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது ஏன் உச்ச நீதிமன்றத்தின் பேச்சைக் கேட்டீர்கள்? இப்போது ஏன் கேட்க மறுக்கிறார்கள்? தமிழ்நாடு, தமிழன் என்பதாலா?

பிரதமர் நரேந்திர மோடிக்குப் பாராட்டு மாலை போட்டு மகிழ்ந்திருக்கிறது, கர்நாடக சட்டமன்றம். அது, பெரும்பான்மை பா.ஜ.க கொண்ட சபை அல்ல; காங்கிரஸ் பெரும்பான்மை கொண்ட சபை. ‘கர்நாடகத்தின் மீது தொங்கிக் கொண்டிருந்த கத்தி விலகி உள்ளது. இதை விலக்கிய மோடிக்குப் பாராட்டுகள்' எனத் தீர்மானம் போட்டுள்ளார்கள்.

“நான் எட்டு முறை பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதினேன். அவர் பதில் கடிதமே போடவில்லை. அவரைச் சந்திப்பதற்காக மூன்று முறை நேரம் கேட்டேன். நேரம் ஒதுக்கவே இல்லை. `நான்கு மாநில முதலமைச்சர் கூட்டத்தையாவது கூட்டுங்கள்' என்றேன். அதையும் செய்யவில்லை'' என்று குற்றம்சாட்டிய காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையாவின் ஆசீர்வாதத்துடன் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

‘தண்ணி’ காட்டும் மோடி!

``பிரதமர் மோடியைச் சந்தித்ததும், காவிரிப் பிரச்னை தொடர்பாகப் பேசினேன். அவர் என்ன நினைக்கிறார் என்றே தெரியவில்லை. எனக்கு மிகுந்த குழப்பமாக இருக்கிறது'' என்று டெல்லியில் சில வாரங்களுக்கு முன்னால் பேட்டி அளித்தார் தேவகவுடா. இப்போது அதே தேவகவுடா, நரேந்திர மோடியைப் புகழ்கிறார். உண்ணாவிரதம் இருந்த தேவகவுடாவை போனில் அழைத்து மோடி பேசியதாக கன்னட இதழ்கள் எழுதுகின்றன. பா.ஜ.க-வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களான அனந்த குமாரும் சதானந்த கவுடாவும் மோடியை மனமாற்றம் செய்ததாகவும் அந்த இதழ்கள் கூறுகின்றன.

இன்னும் ஒன்றரை ஆண்டுகாலத்தில் கர்நாடகச் சட்டமன்றத் தேர்தல் வருகிறது. காவிரிப் பிரச்னை மூலமாக, இழந்து கொண்டி ருக்கும் செல்வாக்கை மீட்கலாம். தமிழ்நாட்டில் பா.ஜ.க இன்னும் தேய்ந்தாலும் பரவாயில்லை. கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்கிற ஓட்டு அரசியல்தான், கட்சி சுயநலம்தான் காவிரிப் பிரச்னையில் தமிழகத்துக்கு வேதனை தரத்தக்க முடிவை எடுக்கவைத்துள்ளது.

ஒரு பக்கம் காங்கிரஸ், மறுபக்கம் பா.ஜ.க., இன்னொரு பக்கம் மதசார்பற்ற ஜனதா தளம் - ஆகிய மூன்று கரங்களும் கர்நாடக முதலமைச்சர் நாற்காலியைக் குறிவைத்துவிட்டன. உண்ணாவிரதம் உட்கார்ந்த தேவகவுடாவா, உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காத சித்தராமையாவா, ‘உச்ச நீதிமன்றத்துக்கே உரிமை இல்லை’ என்று சொன்ன மோடியா என்ற மூன்று சுயநல சக்திகளின் கையில் தமிழ்நாட்டு விவசாயிகளின் முப்போகம் மாட்டிக்கொண்டது.

`காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு சாதகமாக நடந்துகொள்ளாமல், நடுநிலையுடன் செயல்பட வேண்டும்' என்று பிரதமரிடம் நேரில் வலியுறுத்துவதற்காக அ.தி.மு.க எம்.பி-க்கள் அக்டோபர் 3-ம் நாள் டெல்லி சென்றனர். உடல்நலம் குன்றி முதலமைச்சர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருக்கும் இந்த இக்கட்டான நேரத்திலும் அ.தி.மு.க எம்.பி-க்கள் மொத்தமாக டெல்லி சென்றது அவர்கள் காவிரிப் பிரச்னையை எவ்வளவு முக்கியமாக நினைக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

அ.தி.மு.க எம்.பி-க்களை, பிரதமர் சந்திக்கவும் இல்லை; பிரதமர் அலுவலக வளாகத்துக்குள் அனுமதிக்கவும் இல்லை. தம்பிதுரை உள்ளிட்ட சிலர் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டு, அவர்களும் பிரதமரின் செயலாளரைப் பார்த்துவிட்டு வந்துள்ளார்கள். 50 எம்.பி-க்கள் (மாநிலங்களை, மக்களவை) என்பது முக்கியமான எண்ணிக்கை அல்லவா? அல்லது இது முக்கியம் இல்லை என நினைக்கிறார்களா?

‘தண்ணி’ காட்டும் மோடி!

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிராக மத்திய அரசு சொல்வது அனைத்துமே நொண்டிக் காரணங்கள். காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பை மாற்றியமைக்கக் கோரும் வழக்கு, நிலுவையில் இருக்கிறதாம். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு 2007-ம் ஆண்டில் வந்தது. 9 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்படி ஒரு வழக்கு இருப்பது மத்திய அரசுக்கு இதற்கு முன்னர் தெரியாதா? ஆணையம் அமைக்கத் தயார் என ஒப்புக்கொண்டபோது ஞாபகம் இல்லையா?

`காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு விரும்பினால்தான் அமைக்கும்' என்பது, விரும்பினால்தான் தண்ணீர் விடுவோம் என்பதற்கு சமம். இது வாட்டாள் நாகராஜின் குரல். இது மோடி வாயில் இருந்து எப்படி வருகிறது? காவிரியின் குறுக்கே எத்தனையோ அணைகள் கட்டினார்கள். கேட்க ஆள் இல்லை. இதோ மேக்கேதட்டூ அணைகட்ட பல்லாயிரம் கோடி ஒதுக்கப்பட்டுவிட்டது. கேட்க ஆள் இல்லை என்பதைவிட, யாரிடம் கேட்பது என்றே தெரியவில்லை. இதுவரை இருந்தது உச்ச நீதிமன்றம் ஒன்றுதான். இவர்களுக்கும் உரிமை இல்லை என்றால் யாரைக் கேட்பது?

இந்தப் பகல் வேஷப் பதவி அரசியலுக்காக நிலம் காய, மனம் காய, நிலம் கருகவும் மக்கள் மனம் கருகவும் எத்தனை ஆண்டுகள் அனுமதிப்பது... அனுபவிப்பது? டெல்லி செளத் பிளாக் வாசலில் நின்றுகொண்டு தம்பிதுரை சொன்னார், `தமிழகமும் இந்தியாவில்தான் இருக்கிறது!' என்று. இது, விவசாயிகளின் குரலாக மட்டும் முடிந்துவிடக் கூடாது; ஒட்டுமொத்த தமிழகத்தின் குரலாக ஒலிக்க வேண்டும்.