Published:Updated:

பிரதமர் மோடி - ராகுல்காந்தி பரஸ்பர குற்றச்சாட்டு... உச்சக்கட்ட பிரசாரத்தில் கர்நாடகம்!

பிரதமர் மோடி - ராகுல்காந்தி பரஸ்பர குற்றச்சாட்டு... உச்சக்கட்ட பிரசாரத்தில் கர்நாடகம்!
பிரதமர் மோடி - ராகுல்காந்தி பரஸ்பர குற்றச்சாட்டு... உச்சக்கட்ட பிரசாரத்தில் கர்நாடகம்!

ர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் வரும் 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் இந்தமுறை மகளிருக்கென பிரத்யேக வாக்குச்சாவடிகளை அமைக்கத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. `பிங்க்/சக்தி' என்ற பெயரில் அமையவிருக்கும் இந்த வாக்குச்சாவடிகளில் முற்றிலும் பெண்களே தேர்தல் பணிகளில் ஈடுபடுவார்கள். தேர்தல் பணிகளில் உள்ள அலுவலர்கள் அனைவரும் பிங்க் வண்ணத்தில் உடையணிந்திருப்பார்கள் என்று கர்நாடக மாநிலத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்குச்சாவடிகளில் உள்ள அனைத்து மேஜைகளிலும் பிங்க் வண்ணத்தில் திரைச்சீலைகள் இடம்பெற்றிருப்பதுடன், அதே வண்ணங்களில் பலூன்கள் கட்டப்பட்டு, பெண்களை வரவேற்கும் வகையில் அமைந்திருக்கும். மாநிலம் முழுவதும் இதுபோன்று 600 வாக்குச்சாவடிகள் அமையவுள்ளதாகத் தேர்தல் ஆணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, வாக்குப்பதிவுக்கு மூன்று தினங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. காங்கிரஸ், பி.ஜே.பி. இடையேதான் கடுமையான போட்டி என்றாலும், முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம், இந்தத் தேர்தலுக்குப் பின், புதிய அரசு அமைவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி, பி.ஜே.பி. தலைவர் அமித் ஷா மற்றும் அந்தக் கட்சிகளின் தலைவர்கள், பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்று ஒருவரையொருவர் குறைகூறி வருகிறார்கள்.

கர்நாடக மாநிலத்தில் பிரித்தாளும் கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் காங்கிரஸ் கட்சியை வரும் தேர்தலில் மக்கள் தோற்கடிப்பார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிஜப்பூர் மாவட்டம் விஜயபுரம் என்ற இடத்தில் நடைபெற்ற பேரணியில் பி.ஜே.பி. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டிப் பேசுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஊழலில் சிக்கித் திளைப்பதாகவும், அவருடைய ஆட்சியில் நிதி மோசடியில் ஈடுபடாத அமைச்சர்களே இல்லை என்னும் அளவுக்கு அவர்கள் ஊழலில் சிக்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

``பிரித்தாளும் கொள்கையில் நம்பிக்கை கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி, சாதி மற்றும் மத அடிப்படையில் மக்களைப் பிரித்து, சகோதர்களுக்கு இடையே மோதலை உருவாக்கி வருகிறது. ஆனால், பசவேஸ்வரா வாழ்ந்த இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள், காங்கிரஸ் கட்சியின் நோக்கங்களை அனுமதிக்கக் கூடாது. கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி தேடித்தரும் திறமை ராகுல் காந்தியிடம் இல்லை என்று அக்கட்சியினரே நம்பிக்கை இழந்து விட்டனர். மகன் வெற்றியைத் தேடித் தர மாட்டார் என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் உணரத் தொடங்கியதால், அம்மாவை (சோனியா) வரவழைத்து காங்கிரஸ் வேட்பாளர்களின் டெபாசிட் தொகையைப் பாதுகாக்கத் திட்டமிட்டுள்ளனர்" என்றார் மோடி.

லிங்காயத் சமூகத்தினரால் போற்றி வழிபடப்படும், 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மிக முக்கிய சீர்திருத்தவாதியான பசவேஸ்வராவின் பெயரை, அந்தச் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதியில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பலமுறை உச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

பி.ஜே.பி-க்கு அதிக சதவிகித வாக்குவங்கி உள்ள லிங்காயத் சமூகத்தினரை சிறுபான்மையினர் பட்டியலில் சேர்த்து, கடந்த சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் அரசு அறிவித்தது. இதன்மூலம் அந்தச் சமூகத்தினரின் வாக்குகளைப் பெற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. பி.ஜே.பி-யின் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள எடியூரப்பா, லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வரும் பி.ஜே.பி. தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோருக்கு எதிராக முதல்வர் சித்தராமையா, சட்டரீதியான நோட்டீஸ் அனுப்பியதுடன், அவதூறு வழக்குத் தொடரப்போவதாகவும் எச்சரித்திருந்தார். ஆனால், அதற்கு அடுத்தநாளே மோடி, அமைச்சர்கள் அனைவரும் நிதி மோசடியில் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

இதற்கிடையே மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சங் பரிவார் அமைப்புடன் ஒப்பிட்டுப் பேசி பிரசார அனலைக் கூட்டினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

தேவனஹள்ளி என்ற இடத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய ராகுல் காந்தி, ``ஜே.டி. (எஸ்) என்பதில் உள்ள `எஸ்' சங் பரிவார் அமைப்பைக் குறிப்பதாக உள்ளது. இந்தத் தேர்தலில் ஜே.டி. (எஸ்), கொள்கைகளின் அடிப்படையில் போட்டியிடுகிறதா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

ஒருபுறம் பி.ஜே.பி., மறுபுறம் காங்கிரஸ் கட்சி, இந்த இரண்டுக்கும் இடையே மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கொள்கைகள் எங்கிருந்து வந்தன?" என்று கேள்வி எழுப்பினார்.

ஏற்கெனவே இதுபோன்று மற்றொரு பேரணியில் ஜே.டி.(எஸ்) குறித்துப் பேசிய ராகுல், பி.ஜே.பி-யின் 'பி' டீம்தான் அக்கட்சி என்று விமர்சனம் செய்திருந்தார்.

'என்ன போதனைகளைச் சொல்கிறீர்களோ, அதையே கடைப்பிடியுங்கள்' என்ற 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதி பசவேஸ்வராவின் கொள்கைகளைச் சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, "ஜே.டி.(எஸ்) கட்சியினரை நான் கேட்கிறேன். உங்கள் மனதில் என்ன இருக்கிறது? வெளிப்படையாகச் சொல்லுங்கள்" என்றார்.

இந்தத் தேர்தல் கர்நாடக மாநிலத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய தேர்தல் என்பதால், ஜே.டி (எஸ்) எந்தப்பக்கம் உள்ளது என்பதை அக்கட்சியின் தலைவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார். மேலும் பி.ஜே.பி. தலைவர் அமித் ஷாவுக்கு எதிராகக் குற்றம்சாட்டிய ராகுல், அவர் மீது கொலை வழக்கு இருந்ததைச் சுட்டிக்காட்டினார்.

கர்நாடக மாநிலத்தில் தலைவர்கள் முகாமிட்டு மேற்கொண்டு வரும் பிரசாரம் இன்னும் இரண்டு நாளில் முடிவுக்கு வந்து விடும். அம்மாநில வாக்காளர்கள், தங்களின் பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு, வரும் 12-ம் தேதி நடைபெறும். 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, அன்றைய தினமே முடிவுகள் தெரிந்து விடும்.