Published:Updated:

காஷ்மீர் கல்வீச்சில் கொல்லப்பட்ட தமிழக இளைஞன்...அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம்!

காஷ்மீர் கல்வீச்சில் கொல்லப்பட்ட தமிழக இளைஞன்...அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம்!
காஷ்மீர் கல்வீச்சில் கொல்லப்பட்ட தமிழக இளைஞன்...அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம்!

காஷ்மீருக்குச் சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் திருமணிச்செல்வம், கல்வீச்சில் பலியான சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை ஆவடி பாலமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜவேல் - செல்வி தம்பதியர். ராஜவேல் ஆவடியில் உள்ள போர் வாகனங்கள் மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின்கீழ் செயல்படக் கூடிய நிறுவனம் ஆகும். ராஜவேலுவுக்கு இரண்டு மகன்களும், சங்கீதா என்ற மகளும் உள்ளனர். அதில், இளையவரான திருமணிச்செல்வம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.  

குடும்பத்துடன் கோடை விடுமுறையைக் கழிக்க வெளிமாநிலம் செல்லத் திட்டமிட்டார் ராஜவேலு. இதுகுறித்து தன் குடும்பத்தினரிடம் பேசியபோது, மகள் சங்கீதாவும், மகன் திருமணிச்செல்வமும், ``காஷ்மீர் போகலாம்'' என யோசனை தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பயணத்தைத் தொடங்கியுள்ளனர் ராஜவேலு குடும்பத்தினர். காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள குல்மார்க்குக்குச் செல்வதாக இருந்துள்ளது இவர்களது பயணத்திட்டம். இந்தச் சமயத்தில்தான் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள நரபலி என்ற இடத்தில் துணை ராணுவப் படையினர் பயங்கரவாதிகளைப் பிடிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒருதரப்பினர், துணை ராணுவப் படையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், அந்தப் படை வீரர்களை நோக்கி கல்வீச்சு தாக்குதலையும் நடத்தினர். இந்த நேரத்தில் குல்மார்க்கை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ராஜவேலுவின் பயண வாகன திசையை நோக்கியும் போராட்டக்காரர்கள் கண்மூடித்தனமாகக் கல்வீசி தாக்குதல் நடத்தினர். அந்தத் தாக்குதலில் ராஜவேலு பயணித்த வாகனமும், மேலும் சில சுற்றுலாப் பயணிகளுடைய வாகனங்களும் சேதமடைந்தன. 

இந்தத் தாக்குதலில் திருமணிச்செல்வமும், அவருடைய தாய் செல்வியும் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்த பிறகு, இருவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடுமையான தாக்குதலால் பாதிக்கப்பட்ட திருமணிச்செல்வம் கோமா நிலைக்குச் சென்றுள்ளார். மருத்துவர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இறந்த மகனைக் காண முடியாமல் ராஜவேலு கதறி அழுதது அனைவரையும் கவலையில் ஆழ்த்தியது.

இதுகுறித்து காஷ்மீரில் மகம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த மாநில முதலமைச்சர் மெஹபூபா முப்தி, உயிரிழந்த திருமணிச்செல்வத்தின் தந்தை ராஜவேலுவைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். அதோடு தன்னுடைய வேதனையையும் அவர் தெரிவித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``இச்சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. மனிதநேயத்தைப் படுகொலை செய்துள்ளனர். மனிதநேயத்தின்மீது நடக்கும் இந்தத் தாக்குதலை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் வெட்கித் தலைகுனிகிறேன் நான். மகிழ்ச்சியோடு சுற்றுலா வந்த அந்தத் தந்தை, தனது மகனின் உயிரற்ற சடலத்தை சுமந்து செல்வதைப் பார்க்கும்போது மிகுந்த வேதனை அளிக்கிறது'' என்று கூறியுள்ளார் . 

இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். ``சுற்றுலா வந்த விருந்தினரைக் கல்வீசி கொலை செய்துள்ளோம். அது, அவர்கள்மீது வீசப்பட்ட தாக்குதல் அல்ல... நம் மாநிலப் பண்பாட்டின்மீது வீசப்பட்ட தாக்குதல்; நம் தலையின்மீது விழுந்த தாக்குதல்" என்று தெரிவித்துள்ளார். 

 அதேபோன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தச் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர், ``சுற்றுலா வந்த பயணி மீது கல்வீசி தாக்கிக் கொலை செய்திருப்பதை ஒருபோதும் ஏற்கமுடியாது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்" என்று கூறியுள்ளார்.   

இந்தச் சம்பவம், சுற்றுலாப் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ``எஞ்சியுள்ள பயணிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும்'' உறுதி அளித்துள்ளார். மேலும் அவர், அம்மாநில காவல் துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு சுற்றுலாப் பயணிகளுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், உயிரிழந்த திருமணிச்செல்வத்தின் உடல், ஸ்ரீநகரிலிருந்து சென்னை கொண்டுவரப்பட்டது. இதனிடையே உயிரிழந்த திருமணிச்செல்வத்தின் குடும்பத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்ததுடன், நிவாரண உதவித்தொகையாக 3 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ``தமிழகத்திலிருந்து ஜம்மு -காஷ்மீர் மாநிலத்துக்குச் சுமார் 130 பேர் சுற்றுலா சென்றுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. அவர்கள் அனைவரும் பாதுகாப்பாகச் சென்னை திரும்புவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருமாறு டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்ல அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டுள்ளேன். மேலும், ஜம்மு - காஷ்மீருக்குச் சுற்றுலா சென்றவர்கள் பாதுகாப்பாகத் தமிழ்நாடு திரும்பத் தேவையான உதவிகளைப் பெற டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அதிகாரிகளின் தொலைபேசி எண்களைத் (011-24193450, 011-24193100 மற்றும் 011-24193200) தொடர்புகொள்ளவும்'' என அதில் தெரிவித்துள்ளார்.