Published:Updated:

"எதற்கெடுத்தாலும் கவர்னர் மீது பழிபோடுகிறார்கள்!" - புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி

"எதற்கெடுத்தாலும் கவர்னர் மீது பழிபோடுகிறார்கள்!" - புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி
"எதற்கெடுத்தாலும் கவர்னர் மீது பழிபோடுகிறார்கள்!" - புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி

``ஆளுநருடன் மோதினால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கும்” என்று புதுச்சேரியின் முன்னாள் முதல்வரும், பிரதான எதிர்க்கட்சித் தலைவருமான ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவருமான ரங்கசாமி, புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். 

அப்போது, "புதுச்சேரியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் காங்கிரஸ் அரசு, தேர்தலின்போதும், சட்டசபையிலும் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. ஆனால், எதற்கெடுத்தாலும் துணைநிலை ஆளுநரைக் குறை கூறிக்கொண்டு இருப்பதையே முதல்வர் வி. நாராயணசாமி வழக்கமாகக் கொண்டிருக்கிறார். கவர்னர் மாளிகையில் ஒரு பக்கம் கோப்புகள் தேங்கிக் கிடக்கின்றன. கவர்னர் முட்டுக்கட்டையாக இருக்கிறார்; திட்டங்களை நிறைவேற்றுவதற்கு கவர்னர் ஆதரவு தருவதில்லை என்று முதல்வர் குறைசொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால், மற்றொரு பக்கம் அனைத்து அமைச்சர்களும் கவர்னரைச் சந்தித்துப் பேசி வருகின்றனர். இது எப்படியான நாடகம் என்பது புரியவில்லை. 

சென்டாக் நிதியுதவி வழங்கப்படவில்லை. அங்கன்வாடி மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்குச் சம்பளம் தரப்படவில்லை. இலவச அரிசி தரப்படவில்லை. சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்படவில்லை. இதனால் பொதுப்பணித்துறை மூலம் மேம்பாட்டுப் பணிகளைத் தொகுதிகளில் மேற்கொள்ள முடியவில்லை. 

எதற்கெடுத்தாலும் கவர்னர் மீது பழிபோடுகின்றனர். ஆட்சியாளர்கள் மாநில வளர்ச்சியின் மீது அக்கறையில்லாமல் செயல்பட்டு வருகின்றனர். சட்டம்- ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதாக முதல்வர் கூறுகின்றார். ஆனால், மாஹேயில் ஒரே நாளில் இரு கொலைகள் நடந்து அங்கே பதற்றம் நிலவுகிறது. புதுச்சேரியில் அன்றாடம் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி நடந்துகொண்டிருக்கிறது. அரசு ஊழியர்கள் விடுமுறையில் ஊருக்குச் செல்லப் பயப்படுகின்றனர். தொடர்ந்து இரண்டு நாள்கள் வீடுகள் பூட்டிக்கிடந்தால் அந்த வீட்டை உடைத்து திருட்டு நடைபெறுகிறது.

மத்திய அரசுக்கு ஆளுநர் அனுப்பிய கோப்புகள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாகவும், அதனால் தார்மீகப் பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் முதல்வர் கூறியிருக்கிறார். ஆனால், கொடுத்த வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றாத இந்த அரசு மட்டும் இருக்கலாமா? காலாப்பட்டில் ஷாசன் தொழிற்சாலைக்காக நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டத்தில் மோதல் நடைப்பெற்று, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் காவல்துறை நண்பர்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் பிரமுகரின் தூண்டுதலாலேயே இந்த மோதலும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது. ரசாயனத் தொழிற்சாலை இருக்கக் கூடாது என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வரும் நிலையில், காங்கிரஸ் பிரமுகரோ தொழிற்சாலை இருக்க வேண்டும் என்று கூறி வருகின்றார். இதனால் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. இது தேவைதானா? இக்கலவரத்திற்காக அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். கவர்னருடன் மோதல் போக்கைக் கடைபிடித்தால் புதுச்சேரிக்கு வளர்ச்சித் திட்டங்கள் எப்படிக் கிடைக்கும்? கூட்டுறவுச் சர்க்கரை ஆலையைத் திறக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கரும்பு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

பின்னர் ரங்கசாமியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும்:-

``தனிக்கணக்கு தொடங்கி, முதல்வராக இருந்தபோது நீங்கள் வாங்கிய கடன்களை அடைத்து வருவதால்தான் புதுச்சேரியில் திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்று முதல்வர் நாராயணசாமி கூறுகின்றாரே?"

``கடன் வாங்காமல் எந்த மாநிலம் திட்டங்களை நிறைவேற்றி வருகின்றது? செயல்படாத அரசாக இருந்துகொண்டு மற்றவர்களைக் குறைசொல்லக் கூடாது"

``ஆளுநரை ராஜினாமா செய்யச் சொன்னார் என்பதற்காக, முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறுகிறீர்களா?"

``இந்த அரசு தனது செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும். இரண்டு ஆண்டுகால ஆட்சியில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை"

``புதுச்சேரி அரசு குறித்து மத்திய அரசிடம் புகார் கூறுவீர்களா?"

``ஆம். மத்திய உள்துறைச் செயலரை விரைவில் சந்தித்துப் புகார் அளிப்போம்" 

``உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே?"

``உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை வரவேற்கிறோம்"

``எதிர்க்கட்சியாக உங்கள் பணியை நீங்கள் சரியாகச் செய்யவில்லை; எந்தப் போராட்டங்களையும் நடத்தவில்லை என்று உங்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே?"

``அரசின் தவறுகளை தொடர்ந்து சுட்டிக்காட்டுகிறோம். போராடித்தான் பெற வேண்டும் என்றால் போராடுவோம்".

அடுத்த கட்டுரைக்கு