Published:Updated:

' நமது வாக்குகளே நமக்கு வந்து சேராது!' - அன்புமணியிடம் ஆதங்கப்பட்ட ராமதாஸ் 

' நமது வாக்குகளே நமக்கு வந்து சேராது!' - அன்புமணியிடம் ஆதங்கப்பட்ட ராமதாஸ் 
' நமது வாக்குகளே நமக்கு வந்து சேராது!' - அன்புமணியிடம் ஆதங்கப்பட்ட ராமதாஸ் 

' நமது வாக்குகளே நமக்கு வந்து சேராது!' - அன்புமணியிடம் ஆதங்கப்பட்ட ராமதாஸ் 

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை திருமாவளவன் சந்தித்தது, தி.மு.க வட்டாரத்தில் மட்டுமல்ல, பா.ம.க வட்டாரத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. ' கூட்டணி தொடர்பாக ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன' என்கின்றனர் பா.ம.க வட்டாரத்தில். 

நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி மேடை அமைக்கும் பணியில் தேசிய கட்சிகளும் மாநில கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், மூன்றாம் அணிக்கான முயற்சிகளும் வேகம் பெற்று வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் 29-ம் தேதி கோபாலபுரத்தில் கருணாநிதியை சந்தித்தார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ். இந்த சந்திப்பில், அரசியல் நிலவரம் தொடர்பாக ஸ்டாலினுடன் அவர் விவாதித்தார். இந்த சந்திப்புக்கு அடுத்த ஓரிரு நாள்களில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தியை டெல்லியில் சந்தித்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். ' நாங்கள் நடத்தும் 'தேசம் காப்போம்' மாநாட்டுக்கு வருமாறு ராகுலுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். காங்கிரஸ் அணியில் நாங்கள் இருப்போம்'  எனத் தெளிவுபடுத்தினார் திருமா. இந்த சந்திப்பை அறிவாலய வட்டாரம் ரசிக்கவில்லை. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்னெடுக்கும் மூன்றாவது அணிக்கு ஸ்டாலின் வாழ்த்து கூறியதும் வி.சி.கவின் அடுத்தகட்ட அதிரடி நகர்வுகளும் அரசியல் களத்தை அதிர வைத்துக் கொண்டிருக்கின்றன. இந்தநிலையில், 'நாடாளுமன்றத் தேர்தலில் எந்த அணியில் நாம் இருப்போம்?' என்ற கேள்விகளும் பா.ம.க வட்டாரத்தில் எழுந்துள்ளன. 

" நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பான விஷயத்தில் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. இந்தமுறையும் தனித்துப் போட்டியிடுவதில் உறதியாக இருக்கிறார் ராமதாஸ். இதுதொடர்பாக, அவரிடம் பேசிய அன்புமணி, ' கடந்த சட்டமன்றத் தேர்தலில் என்னை முன்னிறுத்தி ஐந்தரை சதவீத வாக்குகளை வாங்கினோம். ஆனால், ஓர் இடத்திலும் வெற்றி பெற முடியவில்லை. வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் நாம் செல்வாக்காக இருக்கக் கூடிய ஆறு தொகுதிகளில் தனித்து நின்றாலும், ஒன்றிலாவது நாம் வெற்றிபெறுவோம் என்பதற்கு என்ன உத்தரவாதம் கொடுக்க முடியும்?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி அலை, கொங்கு வேளாளர்கள் உள்பட தலித் அல்லாதவர்களின் வாக்குகள் நமக்கு வந்ததால் வெற்றி பெற்றோம். இனி மோடியோடு கூட்டணி வைப்பதில் எந்தப் பலனும் இல்லை. இந்தமுறை, தலித் அல்லாத பிற சமூகங்கள் நம் பின்னால் வரப் போவதில்லை. தருமபுரி உள்பட எந்தத் தொகுதியிலும் வெற்றி பெற முடியாது. தனித்துப் போட்டியிடுவது சரியானதாக இருக்காது' எனக் கூறியிருக்கிறார். 

இதற்குப் பதில் அளித்த ராமதாஸ், ' நாம் தனித்துப் போட்டியிட்டுத்தான் ஆக வேண்டும். தி.மு.கவைத் தவிர்த்து, காங்கிரஸ் தலைமையில் ஓர் அணி உருவானால், அந்த அணியில் விடுதலைச் சிறுத்தைகள் இருந்தாலும் நமக்குக் கவலையில்லை. அந்தக் கூட்டணியில் நாம் பங்கேற்கலாம். தி.மு.க, அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்தால், எந்த வாக்குகளும் நமக்கு வந்துசேராது. தி.மு.கவில் உள்ளவர்களும் நமக்கு வாக்களிக்க மாட்டார்கள். அந்த இரு கட்சிகளையும் நாம் கடுமையாக விமர்சித்து வருகிறோம். இவர்களில் ஒருவரோடு நாம் கூட்டணி வைத்தாலும், நமது சமூகத்து மக்களே நமக்கு வாக்களிக்க மாட்டார்கள். தி.மு.க, அ.தி.மு.கவோடு கூட்டு சேர்ந்து எம்.பி ஆகிவிடலாம் என்ற கனவு இனி சரிவராது. 1989, 91, 96 ஆகிய மூன்று தேர்தல்களில் கடுமையாகப் பாடுபட்டு வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொண்டேன். இதன்மூலம், 1998-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றோம். 

எனவே, ஒரு தோல்வி வந்தவுடன் சுருண்டு போய்விடக் கூடாது. ஐந்தரை சதவீத வாக்குகள் என்பது சாதாரணப்பட்ட விஷயம் கிடையாது. இந்தத் தேர்தலிலும் நாம் தனித்து நிற்பதுதான் சரியாக இருக்கும். தி.மு.க, அ.தி.மு.க என அணி சேர்ந்தால், நமக்கு வாக்குகள் வராது. எந்த சூழ்நிலையிலும் கூட்டணி என்ற அஸ்திரத்தை நாம் எடுக்கக் கூடாது. அரசியல் களத்தில் கஷ்டப்பட்டுத்தான் ஆக வேண்டும். தமிழக அரசியலில் பல மாற்றங்கள் வரப் போகின்றது. பா.ம.க தனித்து நின்று மிகப் பெரிய சக்தியாக உருவாக முடியும். காங்கிரஸ் கூட்டணிக்கு நாம் தயார் என்பதை, இப்போது சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நேரம் வரும்போது அறிவிப்போம்' என உறுதியாகக் கூறிவிட்டார். அதாவது, நமது தலைமையில் காங்கிரஸ் அணி உருவாகும் என நம்புகிறார் ராமதாஸ். அவரது இந்த விளக்கத்தைக் கேட்டு அமைதியாகிவிட்டார் அன்புமணி" என்றார் விரிவாக. 
 

அடுத்த கட்டுரைக்கு