Published:Updated:

`சசிகலா சொல்லித்தான் அறிக்கை வெளியானதா?!' - தினகரன் மீது பாய்ந்த திவாகரன்

`சசிகலா சொல்லித்தான் அறிக்கை வெளியானதா?!' - தினகரன் மீது பாய்ந்த திவாகரன்
`சசிகலா சொல்லித்தான் அறிக்கை வெளியானதா?!' - தினகரன் மீது பாய்ந்த திவாகரன்

`சசிகலா சொல்லித்தான் அறிக்கை வெளியானதா?!' - தினகரன் மீது பாய்ந்த திவாகரன்

ன்னார்குடி உறவுகளுக்குள் உச்சகட்ட மோதலை வலுக்க வைத்துள்ளது சசிகலா தரப்பிலிருந்து திவாகரனுக்குச் சென்ற நோட்டீஸ். `சசிகலாவின் ஒப்புதலுடன் இந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. தினகரனின் தூண்டுதலில்தான் இப்படியோர் அறிக்கை வெளியானது. இரண்டு நாளில் இதுகுறித்து விளக்கமளிப்பார் திவாகரன்' என்கின்றனர் குடும்ப உறவுகள். 

பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த வாரம் சசிகலாவைச் சந்தித்துப் பேசினார் டி.டி.வி.தினகரன். இந்தச் சந்திப்பின் முடிவில், `திவாகரன் மீதான சட்டரீதியான நடவடிக்கைகளுக்குச் சின்னம்மா உத்தரவு கொடுத்துவிட்டார்' என டி.டி.வி ஆதரவாளர்கள் பேசி வந்தனர். இதன் பின்னணி குறித்துப் பதிலளித்த குடும்ப உறவினர்களோ, ``வழக்கம்போல, சசிகலா முன்பு கண்ணீரை வரவழைத்துக் கொண்டு பேசினார் தினகரன். `லீகலாகச் செயல்பட்டால்தான், நம்மை நம்பி வந்தவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படாமல் இருக்கும். அவர்களது தேவையற்ற செயல்பாடுகளால் நமக்குத்தான் சிரமம் ஏற்படுகிறது' என உருகினார். அதன்பிறகே, தினகரனின் அடுத்தகட்ட நகர்வுக்குச் சம்மதம் தெரிவித்தார் சசிகலா. தன்னுடைய தரப்பை விளக்குவதற்குக்கூட திவாகரன் தயாராக இல்லை. `அக்கா புரிந்து கொள்வார்' என அமைதியாக இருக்கிறார்" என்கின்றனர். 

இந்நிலையில், சசிகலா பெயரைப் பயன்படுத்தக் கூடாது என திவாகரனுக்கு நேற்று லீகல் நோட்டீஸ் அனுப்பினார் சசிகலா தரப்பு வழக்கறிஞர். அந்த நோட்டீஸில், `எனது கட்சிக்காரரின்(சசிகலா) இளைய சகோதரரான தங்கள் மீது அதிக பாசம் கொண்டவர். ஆனால், தற்போது உங்களில் முரண்பட்ட செயல்பாடுகளால், என் கட்சிக்காரர் கனத்த இதயத்துடன் இந்தச் சட்ட அறிவிப்பை உங்களுக்கு அனுப்புகிறார். சசிகலாவின் பெயரையோ, புகைப்படத்தையோ தாங்கள் (திவாகரன்) பயன்படுத்தக் கூடாது. அதேபோல், உடன் பிறந்த சகோதரி என ஊடகங்களில் பேசக் கூடாது. சசிகலா குறித்து உண்மைக்குப் புறம்பான தகவல்களை தெரிவிக்கக் கூடாது. இந்த நோட்டீஸ் கிடைத்த பின்னரும் தொடர்ந்து பேசினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' எனக் குறிப்பிட்டிருந்தார். இப்படியொரு நோட்டீஸ் அனுப்பப்படும் என்பதையும் திவாகரன் தரப்பினர் அறிந்து வைத்திருந்தனர். 

திவாகரன் ஆதரவாளர்களிடம் பேசினோம். ``தினகரன் தரப்பினரின் இந்த லீகல் நோட்டீஸை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சசிகலாவின் சம்மதத்துடன் இந்த நோட்டீஸ் அனுப்பப்படவில்லை. இப்படியொரு நோட்டீஸ் அனுப்புகிறோம் என இவர்களும் அவரிடம் சொல்லவில்லை. கணவர் மரணம், குடும்ப மோதல்கள், சிறைவாசம் எனத் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருக்கிறார் சசிகலா. அவரை மேலும் சிரமப்படுத்த திவாகரன் விரும்பவில்லை. மோதலுக்குப் பிறகு நான்கு முறை சசிகலாவைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் டி.டி.வி. ஒவ்வொரு சந்திப்பிலும் சசிகலாவின் மன அழுத்தத்தைக் குலைக்கும்விதத்தில்தான் அவர் செயல்பட்டு வருகிறார். `அவரது கட்டுப்பாட்டிலிருந்து அக்காவை மீட்டுக் கொண்டு வர வேண்டும்' எனப் பேசி வருகிறார் திவாகரன்.

இப்படியோர் அறிக்கை வெளியிடுவதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. `உடல்நலமில்லாதவர் திவாகரன். முதலில் அவரது உடல்நலத்தைக் கவனித்துக் கொள்ளட்டும்' எனத் தொடர்ந்து பேசி வருகிறார் தினகரன். இந்த அறிக்கையில் திவாகரனைக் கடுமையாகச் சாடியுள்ளனர். இதன்மூலம், அவருக்குக் கூடுதல் மனஉளைச்சலை ஏற்படுத்தும் வகையில் சதிவேலை செய்கின்றனர். 

அம்மா அணி உருவானதற்கான காரணங்களை விளக்குவதற்காக, சிறைக்குள் தனக்கு நெருக்கமானவர்களை அனுப்பி பேச வைக்கவும் முயற்சி செய்தார் திவாகரன். சிறை வளாகத்திலேயே தினகரனுக்கு வேண்டிய வக்கீல்கள் இருக்கின்றனர். என்ன பேசுகிறோம் என்பதைக் கவனிப்பதற்காக சசிகலா பக்கத்திலேயே அவர்கள் அமர்ந்து கொள்கின்றனர். இப்படிச் செய்தால், எங்கள் தரப்பு நியாயம் என்ன என்பதை எப்படிக் கூற முடியும்? போதாக்குறைக்குச் சுதாகரனும் அருகில் வந்து உட்கார்ந்து கொள்கிறார். தினகரனுக்கு அவர் மூலமாகவும் தகவல் செல்கிறது. இப்படி எல்லா வகையிலும் சசிகலாவை சிறைப்படுத்தி வைத்திருக்கின்றனர். இதைப் பற்றியெல்லாம் இன்னும் இரண்டு நாள்களில் ஊடகங்கள் முன்பு விரிவாகப் பேச இருக்கிறார் திவாகரன். இந்த லீகல் நோட்டீஸை ஒரு பொருட்டாகவே அவர் எடுத்துக் கொள்ளவில்லை" என்கின்றனர். 

அடுத்த கட்டுரைக்கு