Published:Updated:

தி.மு.க. மீதான விமர்சனம் மற்றும் அலசல்... விகடன் பார்வை!

தி.மு.க. மீதான விமர்சனம் மற்றும் அலசல்... விகடன் பார்வை!
தி.மு.க. மீதான விமர்சனம் மற்றும் அலசல்... விகடன் பார்வை!

விகடனின் விமர்சனத்தைத் தீர்மானிப்பவை கட்சிகளின் அந்தஸ்து அல்ல; அக்கட்சிகளின் செயல்பாடுகளே!

விகடன் எப்போதும் நடுநிலைமையாகச் செயல்படுவதுடன், எது சரி, எது தவறு என்பதைத் தன் வாசகர்களுக்கு உணர்த்தவே விரும்பும். சூழ்நிலைகளைப் பொறுத்து அவை அ.தி.மு.க. அல்லது தி.மு.க மீதான விமர்சனமாக அமையலாம். மற்றபடி, எக்கட்சிக்கும் ஆதரவாக விகடன் எப்போதும் செயல்பட்டதே கிடையாது. விகடனின் விமர்சனத்தைத் தீர்மானிப்பவை கட்சிகளின் அந்தஸ்து அல்ல; அக்கட்சிகளின் செயல்பாடுகளே! 

2011-2016 அதிமுக அரசின் போது, விகடன் அப்போதைய முதல் அமைச்சர் ஜெயலலிதா, பிற அமைச்சர்கள் என அனைவரைப் பற்றியும் கட்டுரைகள் வெளியிட்டு, உண்மைகளை மக்களிடம் கொண்டு சென்றது. அப்போது, விகடனை கடுமையாக விமர்சித்தது அதிமுக. ஆனால், அதற்கு முன்பான திமுக ஆட்சியைப் (2006-2011) பற்றி ’மந்திரி தந்திரி’ தொடரில் அப்போதைய அமைச்சரவையில் இருந்தவர்களைப் பற்றியும் ஆனந்த விகடனில் பதிவு செய்திருந்தோம்.  அதே போல், 2G உண்மைகளை ' சொல்லுங்கள் ராசாவே " என்னும் தலைப்பில் தொடராக வெளியிட்டது விகடன். இப்படி எப்போதும், விகடன் இடது, வலது பேதமின்றி நடுநிலைமையுடன் , உண்மைகளை மட்டுமே உரக்க சொல்லி வருகிறது. இந்த தார்மிக பொறுப்பு விகடனுக்கு எப்போதும் இருந்து வருகிறது. 

சமகால சமுகாயத்தின் ஒருங்கிணைந்த முன்னேற்றதுக்காக, எந்தவித உள்நோக்கமும் இன்றி, விருப்பு வெறுப்பின்றி தொடர்ந்து செய்திகளை அதன் உண்மைத்தன்மையுடப்  வழங்கிக்கொண்டு இருக்கும் விகடன், என்றும் அதைத் தொடரும்.

2006- 2011 காலகட்டத்தில் தி.மு.க கட்சி, அமைச்சரவை, கட்சி நடவடிக்கைகள் குறித்த செய்திகளை அடுத்தடுத்த இணைப்புகளில் வாசிக்கலாம்..!

கட்சித் தலைவராக கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தது லட்சக்கணக்கான தொண்டர்கள்!

ஆட்சி முதல்வராக கருணாநிதியை அமரவைத்து அழகு பார்த்தது கோடிக்கணக்கான மக்கள்!

ஆனால், உண்மையில் கட்சியையும் ஆட்சியையும் கைக்குள் வைத்து, பவர் பாலிடிக்ஸைப் பக்குவமாகச் செய்துவருபவர்கள் யார் யார் தெரியுமா?

'திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன். அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும்’ என்பது கருணாநிதி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். ஆனால், கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவை மிஞ்சியதாக இருக்கிறது இந்த ஹோம் கேபினெட்!

கருணாநிதி குடும்பத்தினர்
கருணாநிதி குடும்பத்தினர்

"பெரிய மீசை வைத்திருப்பவர்கள் எல்லாம் கட்டபொம்மன் ஆகிவிட முடியாது" - என்று சட்டமன்றத்தில் எகிறினார் நத்தம் விஸ்வநாதன். அவர் போக்குவரத்துத் துறையின் முன்னாள் அமைச்சர்!

கே.என்.நேரு
கே.என்.நேரு

"உங்களுக்கு மீசை வளரவில்லை என்றால், நானா பொறுப்பு?" என்று பதில் அளித்தார் கே.என்.நேரு. இப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர்!

அண்ணன் அமைதியாகப் பதில் அளித்தது பலருக்கும் ஆச்சர்யம். அது, அவரது ஒரிஜினல் முகம் அல்ல. சக மந்திரியாக இருந்தாலும், சாதாரணத் தொண்டராக இருந்தாலும், நேருவின் மீசை ஆளை மிரட்டும்... விரட்டும். அப்படி ஓர் ஆளுமைகொண்ட நேரு, ஆரம்ப காலத்தில் அப்படி இல்லை.

பொன்முடி
பொன்முடி

டாக்டர் தெய்வ சிகாமணி என்கிற பொன்முடி, எம்.ஏ., (வரலாறு), எம்.ஏ., (பொது நிர்வாகம்), எம்.ஏ., (சமூக அறிவியல்), பி.எட்., பி.ஜி.எல்., பிஹெச்.டி!

தமிழ்நாட்டு அமைச்சரவையில் மெத்தப் படித்த மேதாவி. பெயரைவிட நீளமான இந்தப் பட்டங்களை போட்டுத்தான் ஆரம்ப காலத்தில் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வார். இன்று, எந்த டி.வி-யில், எந்த சீரியல், எத்தனை மணிக்கு வருகிறது. அதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதை வரிசையாகச் சொல்லும் அளவுக்கு பொன்முடியின் கலை ஆர்வம் அதிகமாகிவிட் டதாக நண்பர்கள் சொல்கிறார்கள். 

அமைச்சர் பொன்முடியுடன் பிறந்தவர்கள் தியாகராஜன், நடன சிகாமணி, ராதா சிகாமணி, கோபி சிகாமணி, கார்த்திக் சிகாமணி, வைஜெந்தி மாலா, மல்லிகா என எட்டுப் பேர். சமணத் தீர்த்தங் கர்களில் முக்கியமான ரிஷபநாதர் பெயர் சிகாமணி. இவரது குடும்பத்து மூதாதையருக்குச் சமண மதத்துடன் தொடர்பு இருந்ததால், இத்தனை சிகாமணிகள். அப்பா கந்தசாமி, சித்தலிங்கம் மடம் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர். அம்மா மரகதமும் ஆசிரியைதான். வரும் ஆகஸ்ட் மாதம், 60 வயதில் அடியெடுத்துவைக்கிறார் பொன்முடி. ஆனால், துள்ளல் நடை இன்னும் இளமையாகத்தான் வைத்திருக்கிறது.

'பெரும்பான்மை சமூகமான வன்னியர் கோட்டையில் மாவட்டச்செய லாளராகவும், தொடர்ச்சியாக மூன்று முறை அமைச்சராகவும் பொன்முடி ஆனதற்குப் பின்னணி, அவரது துணிச்சலும் யாருக்கும் பயப்படாமல் நினைத்ததைச் செய்யும் குணமும்தான் காரணம்' என்று தி.மு.க. வட்டாரம் சொல்கிறது.

புதுச் சேலையுடன் புறப்பட்டு வாசலுக்கு வந்தார் தமிழரசி. காத்திருந்த வாகனத்தில்

தமிழரசி
தமிழரசி

பின்பக்கமாகப் போய் உட்கார்ந்தார். 'மேடம்... நீங்க முன்னாடி உட்காருங்க மேடம்' என்று பாதுகாவலர் பவ்யமாகச் சொன்னார். 'எனக்கு முன் சீட்ல உட்கார்ந்து பழக்கம் இல்லீங்க. நீங்க யாராவது உட்கார்ந்துக்கோங்க' என்று அதைவிடப் பவ்யமாகப் பதில் அளித்தார் அமைச்சர்.

'இல்ல மேடம், நீங்கதான் முன்னாடி உட்காரணும்' என்று சொல்லப்பட்டது. பயந்தபடியே முன் பக்கம் போனவர், இருக்கையின் ஓரத்தில் ஒண்டிக்கொண்டார். 'எனக்கு எதுக்குங்க இவ்வளவு பெரிய காரு?' என்று சொல்லிக்கொண்டார். வாகனம் புறப்பட்டது. சென்னையின் நெரிசலான அடையாறு பகுதியில் சைரன்கள் முழங்கப் பறந்தது. தன்னை மறந்துபோக ஆரம்பித்தார். இந்த நான்கு ஆண்டு காலமும் அவருக்குக் கனவு உலகத்தில் மிதப்பதுபோலத்தான் இருக்கிறது.

ஐ.பெரியசாமி
ஐ.பெரியசாமி

"தலைவர் அவர்களே... இந்த சாமானியனின் இல்லத் திருமணத்தை நீங்களே நேரில் வந்து நடத்திவைத்துஇருப்பதை நினைத்தால், எனக்குப்பெருமை யாக இருக்கிறது. இதற்கு நான் காலம்எல்லாம் கடன்பட்டு இருக்கிறேன்" என்று சொல்லும்போதே அழுகை முட்டிக்கொண்டு பீறிட்டது ஐ.பெரியசாமிக்கு!

அடுத்துப் பேசிய முதல்வர் கருணாநிதி இப்படிச் சொன்னார், "தி.மு.கழகத்தில் கே.வி.கே. சாமி காலம் தொட்டு இந்தக் காலம் வரையில் பல சாமிகள் இருந்தாலும் கூட, இவர் அவர்களுக்கு எல்லாம் ஒரு படி மேலே பெரிய சாமி என்பதால், இவர் எனக்கு முக்கியமானவர். இந்த நட்பு உனக்கும் எனக்கும் ஏற்பட்டபந்தத் தால் ஏற்பட்டது. என்றென்றும் நான் உனக்கு அண்ணனாக இருப்பதிலே மகிழ்ச்சி அடைகிறேன்."

பொங்கலூரார் என்று கொங்கு தமிழில் தொண்டர்களால் அழைக்கப்படுகிறார். 'வாய்யா பெங்களூரார்!' என்று தமிழக முதல்வரால்

பொங்கலூர் நா.பழனிச்சாமி
பொங்கலூர் நா.பழனிச்சாமி

கிண்டலாக அடையாளப்படுத்தப்படுகிறார். அந்த அளவுக்கு மாநில எல்லைகளைத் தாண்டி தனது வர்த்தக எல்லைகளை விரிவுபடுத்தியவர் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி. பருத்தி பூத்ததும் தைத்ததைப்போல வெண்மையான சட்டை, அதற்குப் போட்டி போடும் அப்பாவித்தன மான சிரிப்பு, காந்தமாகப் பழகுவதும் கரன்சியாக உருகுவதும் இவருக்குக் கை வந்த கலைகள். இன்று அவருக்கு எங்கெல்லாம் சொத்துபத்துக்கள் இருக்கின் றன என்பது முழுமையாக நமக்குத் தெரியாது. ஆனால், அவருக்கே தெரியாது என்பதுதான் உண்மை!

"இன்றைய தி.மு.க-வில் அதிக நிலபுலன்களுக்குச் சொந்தக்காரர்களை விரல்விட்டு எண்ணினால், டாப்-10 பட்டியலில் இவரும் இருப்பார்" என்கிறார்கள். ஈரோடு மாவட்டம் செம்மே கவுண்டம் பாளையத்தில் இவர் பிறந்த வீடு மிகச் சாதாரண மானது. ராமநாதபுரம் மாவட்டம் திருப்பத்தூரில் கல்லூரிப் படிப்பு. பி.எஸ்ஸி., விலங்கியல் பட்டம். அப்போது தி.மு.க. நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டதன் மூலம் அரசியலில் நுழைந்தார். இதில் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் ஆனதால் கருணாநிதியின் கவனத்தைப் பெற்றார். எம்.ஜி.ஆரின் அறிமுகமும் கிடைத்தது.

முதல்வர் கருணாநிதிக்குப் பக்கத் திலேயே இருந்து கிச்சுகிச்சு மூட்டும் கிலுகிலுப்பைக்காரர் துரைமுருகன். முகத்தில் மூன்று நான்கு கோட்டிங் பவுடர் அப்பி... அத்தர் மணக்க... சந்தன நிறச் சட்டை மினுமினுக்க... தொங்கு கன்னங் களும் குறும்புச் சிரிப்புமாக வளையவரும் காட்பாடிக் கதாநாயகன். மேடை ஏறியதும் நினைத்தால் சிரிக்கவைப்பார்... அழ வைப்பார். அடுத்தவரை நக்கல் பண்ணு வதில் அலாதியான கற்பனைத் திறன் உண்டு துரைமுருகனுக்கு! 

துரைமுருகன்
துரைமுருகன்

ஒன்று, தலையாட்டுபவர்கள் இருக்க வேண்டும். அல்லது, தன்னைப் பாராட்டிக் குஷிப்படுத்துபவர்கள் இருக்க வேண்டும் என்று கருணாநிதி நினைப்பார். முன்னதில் முக்கியமானவர் ஆற்காடு வீராசாமி. அடுத்ததில் பொருத்தமானவர் துரை முருகன். இரண்டு பேரும் வேலூர் மாவட்டத்தில் இருந்து முளைத்தது தற்செயலான தாகத்தான் இருக்கும்.

காட்பாடியை அடுத்துள்ள காங்குப்பம் என்ற கிராமத்தில் அரசியல் பின்னணியோ, பரம்பரைச் செல்வாக்கோ இல்லாத ஒரு குடும்பத்தில் முருகன் பிறந்தார். அப்பா பெயர் துரைசாமி. பிற்காலத்தில் செல் வாக்கு உயர்ந்தபோது, துரையும் ஒட்டிக்கொண்டு துரைமுருகன் ஆனார். பள்ளிப் படிப்பைக் கூட முடிக்க முடியாத அளவுக்கு வறுமை தாண்டவம் ஆடியதைப் பார்த்த சென்னக்கேசவலு என்ற தமிழாசிரியர், முருனைத் தன் வீட்டிலேயே தங்க வைத்துப் படிக்கவைத்ததாக வரலாறு சொல்கிறார்கள். அதன் நினைவாகத்தான் காட்பாடி கிளித்தான் பட்டறைப் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பல கோடிகள் மதிப்பில் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியும் ஏலகிரியில் மருத்துவக் கல்லூரியும் அமைத்திருக்கிறார் துரைமுருகன்.

ஆலடி அருணாவுக்கு அறிமுகம் தேவைஇல்லை. முழு நேர அரசியல்வாதியான அவர் தனது மகள் பூங்கோதை மீது அரசியல் காற்று 

பூங்கோதை
பூங்கோதை

பட்டுவிடாமல் மருத் துவம் படிக்கவைத்தார். உயர் கல்வி யைப் பெற லண்டனுக்கு அனுப்பினார். ஆனால் அவரது மரணம், மகளை அரசியலுக்குள் இழுத்து வந்தது. டாக்டர் பூங்கோதை, பூங்கோதை ஆலடி அருணாவாக அறிமுகப்படுத்தப்பட்டு ஆலங் குளம் தொகுதி வெயிலில் வேட்பாளராக இறக்கி விடப்பட்டார். அன்றைய தி.மு.க. அவரை அவ்வளவு முக்கியமானவராக நினைக்கவில்லை. தொகுதிக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்தவரை வேட்பாளர் ஆக்கியதைக் கறுப்பு - சிவப்பு கட்சித் தொண்டர்களும் ஆரம்பத்தில் வரவேற்கவில்லை. 'இந்தத் தொகுதி நமக்கு இல்லை' என்று ஏக்கத்துடன் பேசிக்கொண்டார்கள். ஆனால், அப்பாவின் அடை யாளம் இவருக்கான முழு அறிமுகமாக மாறி வெற்றி பெறவைத்தது. அமைச்சரவையில் இணைக்கப்பட்ட பின்னால், தனி அணியாக உருமாற ஆரம்பித்தார். இன்று மாவட்ட அரசியலில் பூங்கோதை... தவிர்க்க முடியாத சக்தி!

மதிவாணன்
மதிவாணன்

கடந்த 1999-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நேரம்... நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட ஏ.கே.எஸ்.விஜயனுக்கும் மதிவாணனுக்கும் போட்டி. அப்போதைய திருவாரூர் மாவட்டச் செயலாளரான கோட்டூர் ராஜசேகரின் ஆதரவுடன் நேர்காணலுக்குப் போனார் மதிவாணன். இரண்டு விரல்களில் மோதிரங்கள், கழுத்தில் தங்கச் சங்கிலி என மின்ன... கடுப்பானார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. "முதல்ல எளிமையா இருக்கக் கத்துக்கய்யா. நானே அண்ணா அணிவிச்ச ஒரு மோதிரம்தான் போட்டிருக்கேன்... நீ இப்படி மின்னுறியே?" எனத் திட்டினார். சீட் விஜயனுக்கே போனது. இதில் பரிதாபம் என்னவென்றால், உண்மையிலேயே அந்த மோதிரங்களும் சங்கிலியும் மதிவாணனுடையது இல்லை. அப்போது மிகுந்த வறுமையில் இருந்த மதிவாணன், தலைவரைப் பார்க்கச் செல்லும்போது கௌரவமாக இருக்க வேண்டுமே என்று நண்பர்களிடம் இரவல் வாங்கிப்போட்டு வந்தவை. கடன், சீட்டை முறித்துவிட்டது!

செக்யூரிட்டிகள், பி.ஏ-க்கள் இல்லாமல் மைதீன்கான் நடந்துபோனால்... அவரை யாரும் அமைச்சர் என்று சொல்ல முடியாது. அந்த

டி.பி.எம்.மைதீன்கான்
டி.பி.எம்.மைதீன்கான்

அளவுக்கு பவ்யமான அமைச்சர்!

உயரம் குறைவான, உருண்டு திரண்ட உருவம், இறுக்கமாகமடக்கி விடப்பட்ட சட்டை, எப்போதும் கையில் எரியும் சிகரெட்... இவை மட்டுமே மைதீன் கானின் அடையாளங்களாக நெல்லை தி.மு.க-வில் பல ஆண்டுகளாக இருந்தது. தான் மந்திரி ஆவோம் என்ற நினைப்பெல்லாம் இல்லாமல்தான் மைதீன்கானும் இருந்தார். அவரே சொல்லிக்கொள்வது மாதிரி, 'அமைதிக்குக் கிடைத்த பரிசு' இது!

நெல்லையில் இருந்து சங்கரன்கோயில் செல்லும் பாதையில் இருக்கிறது மானூர். அதற்குப் பக்கத்தில் உள்ள அயூப்கான்புரம் என்ற ஊரைச் சேர்ந்தவர் மைதீன்கான். அவரது வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது மிளகாய். சுற்றுவட்டாரத்தில் விளையும் மிளகாய் வத்தலை வாங்கி, ஏற்றுமதி செய்ததில் கையில் காசு புழங்கியது. அப்போது அவருக்கு மஸ்தான் அறிமுகம் ஆனார். அந்தக் காலத்து நெல்லை தி.மு.க-வின் அசைக்க முடியாத மாவட்டச் செயலாளராக இருந்தவர். மஸ்தானுடன் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டார் மைதீன்கான்.

கோ.சி.மணி
கோ.சி.மணி

'அமைச்சர் கோ.சி.மணிக்கு இப்போதெல்லாம் காலையில் நடந்தது மாலையில் மறந்துவிடுகிறதாம்' என்று ஒரு பத்திரிகையில் துணுக்கு ஒன்று வெளியானது. அதைப் பார்த்துக் கோபப்பட்ட உதவியாளர், பத்திரிகையை அமைச்சரிடம் கொடுத்தார். படித்துப் பார்த்த அமைச்சர், "ஆமாம்ப்பா... சில நேரத்துல மறந்துபோயிடுதுல்ல. சரியாத்தான் போட்டிருக்கான்!" என்றாராம். ஒரு காலத்தில் தஞ்சையின் சிங்கமாக வலம் வந்தவர் இவர்! அவரை 'சின்னக் கலைஞர்' என்றும் சொல்வார்கள்!

கருணாநிதியைவிட ஐந்து வயதுதான் குறைவு. தி.மு.க. ஆரம்பித்த நாள் முதல் கட்சியின் உறுப்பினராக இருப்பவர். கருணாநிதியும் தஞ்சை மாவட்டத்துக்காரர் என்பதால், அவரைப்போலவே தன்னை வார்த்துக்கொண்டவர் கோ.சி.மணி. தலைவரைப்போலவே தலையை நேர் வகிடு எடுத்து, அவரது நாடகங்களில் நடித்து, இரவு பகல் பாராமல் கட்சிக்காக உழைத்து... இன்று வயதானாலும் அவரது பழைய பெருமைகளைப் பேசும் பெரும் கூட்டத்தை வைத்திருப்பவர். அதனால்தான், 'பழகத் தெரிந்த நாள் முதலாக என்னுடன் இரண்டறக் கலந்துவிட்ட, என் உயிரனைய, உயிருக்கு உயிரான, உயிரினும் உயர்வான உடன்பிறப்பு' என்று கருணாநிதியால்உச்சி முகர்ந்து பாராட்டப்பட்டார். ஒருநாள் சட்ட மேலவையில் முதல்வர் எம்.ஜி.ஆர், 'தம்பி கோ.சி.மணி அவர்கள்' என்று சொன்ன தும், "என்னை முதல்வர் அவர்கள் தம்பி என்று சொல்லக் கூடாது. அவர் எனக்கு அண்ணன் அல்ல. நான் கலைஞர் ஒருவருக்கு மட்டும்தான் தம்பி" என்று சொன்னதும் எம்.ஜி.ஆரின் முகமே இருண்டதாம். அந்த அளவுக்குப் பச்சை தி.மு.க -காரர்.

நாகர்கோவில் பிரபு ஹோட்டலுக்கு அருகில் இருந்த சுரேஷ் ஃபைனான்ஸ், அன்றைய வாலிப தி.மு.க-வினர் வந்து போகும் இடமாக

 சுரேஷ் ராஜன்
சுரேஷ் ராஜன்

இருந்தது. ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட அந்த ஃபைனான்ஸில், 20 ஆயிரம் ரூபாய்க்கான ஏலச் சீட்டு விமரிசையாக நடக்கும். கஷ்டப்பட்ட தி.மு.க-வினருக்கு அதுதான் அமுதசுரபி. அதை நடத்தி வந்தவர் சுரேஷ் ராஜன். அதன் மூலம் பணம் புரள ஆரம்பிக்க, அரசியல் ஆசையும் துளிர்த்தது. நண்பர் அறிவுநிதியிடம் தனது விருப்பத்தை சுரேஷ் ராஜன் சொன்னார்.

அன்றைக்கு தி.மு.க. மாவட்டச் செயலாளராக இருந்த ரத்தினராஜ் வீட்டுக்கு சுரேஷ் ராஜனை அழைத்துப் போனார் அறிவுநிதி. அப்போது, அங்கே இருந்த நாஞ்சில் சம்பத்தின் அறிமுகம் சுரேஷுக்குக் கிடைத்தது. தி.மு.க-வில் ஏதாவது ஒரு பதவி வாங்கித் தரக் கேட்டார்.

எஸ்.என்.எம்.உபயதுல்லா
எஸ்.என்.எம்.உபயதுல்லா

அரசியல் அறிந்தவர்களுக்கும் தி.மு.க. பிரமுகர்களுக்கும்கூட, மிக நீண்ட நேரம் யோசித்தால் தான் இவரை அமைச்சர்கள் வரிசையில் சொல்ல முடியும். அந்த அளவுக்கு அடக்கமானவர். அமைதி யானவர். வெளியுலகத்துக்குத் தெரியாதவர். தஞ்சை மாவட்டத்துக்குள் சும்மா இருந்தால் போதும் என்று தனக்கெனக் கட்டுப்பாடு வைத்துக்கொண்டு, சுகமாக இருப்பவர்தான், வணிக வரித் துறை அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா!

"மக்களோடு மக்களாக இறங்கி வந்து பழக வேண்டிய கவுன்சிலர்கள், இன்றைக்கு வசதியாக சொகுசு வாகனங்களில் பயணிக்கிறார்கள். கால்நடையாகவோ, சைக்கிளிலோ பயணித்தால்தானே, மக்களின் சிரமங்கள் தெரிய வரும்?" - என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு முதல்வர் கருணாநிதி ஆதங்கத்தோடு சொன்னார். இதை கவுன்சிலர்கள் கடைப்பிடிக்கிறார்களோ இல்லையோ, அமைச்சர் உபயதுல்லா இதில் சின்சியர். சனி, ஞாயிறுகளில் தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, கையில் ஒரு மஞ்சள் பையுடன் நகரை வேடிக்கை பார்த்தபடியே நடைபோடுவது உபயதுல்லாவின் வழக்கம். அந்த வழியே அவருக்குச் சொந்தமான வணிக நிறுவனங்களும் இருக்கின்றன. அவற்றைச் சுற்றி வரும்போது மிகுந்த அமைதியோடு தனி ஆளாகத்தான் வருவார். யாராவது வணக்கம் வைத்தால், அவர்களைவிடப் பவ்யமாக இவர் வணக்கம் வைப்பார்!

'இந்தப் பூனையும் பால் குடிக்குமா?' டைப் மந்திரிதான் சாமிநாதன். ஆளைப் பார்த்தால்... அமைதியின் சொரூபம். பேசிப் பார்த்தால்...

வெள்ளக்கோயில் சாமிநாதன்
வெள்ளக்கோயில் சாமிநாதன்

சாந்த வடிவம். ஆனால், அரசியல்வாதிக்கான அத்தனை இலக்கணங்களும் மெத்தப் பொருந்திய மனிதர். நெடுஞ்சாலை என்ற பசையான துறையைக் கையில் வைத்திருப்பதால், இவரைப் பார்த்து கேபினெட் மனிதர்களே பொறாமையில் பொருமுவது உண்டு. அசைக்க முடியாத இடத்தை ஸ்டாலினிடம் பெற்றதால், கிடைத்த கொடை!

வெள்ளக்கோயில் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டதால் 'வெள்ளக்கோயில் சாமிநாதன்' என்று அறியப்படும் இவரை, தொடக்க காலத்தில் 'முத்தூர் சாமிநாதன்' என்றால்தான் எல்லோருக்கும் தெரியும். இன்றைய திருப்பூர் மாவட்டத்தின் செழிப்பான பகுதியான முத்தூர், இவரது பூர்வீகம். பேங்கர் பெருமாள் கவுண்டர் என்ற பெரும் பணக்காரர், இவரது அப்பா. பணம் இருந்தாலும் படிப்பும் இருக்க வேண்டும் என்று, கோவை பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரியில் சாமிநாதனைச் சேர்த்துவிட்டார்கள். கல்லூரிக் காலத்தில், அரசியல் ஆர்வம் அதிகமானது. டி.ராஜேந்தரின் அடுக்கு மொழியின் ரசிகர். டி.ஆர். ரசிகர் மன்றத்துடன் தொடர்பில் இருந்த காலமும் உண்டு. ஆதவன் அச்சகம் என்பதில் பங்குதாரராக வலம் வந்தார். இவரது சித்தப்பா கோவிந்தசாமிக் கவுண்டர் தீவிர தி.மு.க. அனுதாபியாக இருந்ததும், தூரத்து உறவினர் சுப்புலட்சுமி ஜெகதீசன் முக்கியஸ்தராக இருந்ததும், அந்தக் கட்சியின் பக்கமாக சாமிநாதனை நெருங்கவைத்தது.

என்.செல்வராஜ்
என்.செல்வராஜ்

நான் புல்டோசர்! பிடிக்காததைப் பண்ணினா, நசுக்கிடுவேன்!" என்று தன்னிடம் சொல்லிய கருணாநிதியிடம் கோபம்கொண்டு வைகோ ஆரம்பித்த ம.தி.மு.க-வில் ஐக்கியமானார் செல்வராஜ். 'இனிமே அங்க இருக்க முடியாது!' என்று தன் வசம் இருந்த அத்தனை நிர்வாகிகளையும் ஒரே ராத்தியில் ஒன்று திரட்டியவர். காலத்தின் கோலம்... இன்று அதே கருணாநிதியின் அமைச்சரவையில் செல்வராஜும் ஒரு மந்திரி!

செல்வராஜுக்கு ஜூனியர்தான் அமைச்சர் கே.என்.நேரு. ஆனால், அமைச்சரவையில் இன்று சர்வ வல்லமை பொருந்தியவராக நேரு வலம் வர, இவரோ 'அவருக்குப் பின்னால் அரசியலுக்கு வந்தவர்' என்பதுபோன்ற முகபாவத்துடன், கண்களை அப்பாவியாக உருட்டி உருட்டிப் பார்த்து, ஓரமாக ஒதுங்கி நின்றுகொண்டு இருப்பார். அமைச்சர்கள் கூடி இருக்கும் இடங்களில், மற்றவர்களிடம் வம்பு பேச்சுக்களை வைத்துக்கொள்ளாமல் அடக்கி வாசிப்பார். காரணம், எல்லா அமைச்சர்களும் நேருவுக்கு வேண்டப்பட்டவர்கள். யார் எப்படிப் போட்டுக்கொடுப்பார்களோ என்ற பயம். எனவே, தான் உண்டு தன்னுடைய 'இந்து' பேப்பர் சுடோகு உண்டு என்று அதை நிரப்புவதிலேயே கவனமாக இருப்பார். தனக்கான கட்டம் காலியாகிவிடக் கூடாது என்ற கவலை மட்டும் எப்போதும் உண்டு!

ஐபுரோ பென்சிலால் மீசை வரைந்து வலம் வருபவர், தமிழக கேபினெட்டில் சுப.தங்கவேலன் மட்டும்தான்! 

சுப.தங்கவேலன்
சுப.தங்கவேலன்

கருணாநிதியின் நடு உச்சி... நெடுஞ்செழியனின் அரும்பு மீசை... இவைதான் அந்தக் காலத்துத் திராவிட இயக்கத்தவர்களின் அடையாளம். அந்த சாயலில் இன்னும் இருக்கிற சிலரில் இவரும் ஒருவர். அரும்பு மீசையை வரையவே தினமும் பிரத்யேகமாக நேரம் ஒதுக்குபவர்!

ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க-வின் ஆரம்ப காலத் தொண்டர்களில் ஒருவர், சுப.தங்கவேலன். பரமக்குடி அருகே உள்ள பி.கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவர். அந்தப் பகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. ராமநாதபுரம் மன்னர் குடும்பமே அதற்குக் காரணம். அப்போது, தி.மு.க-வினால் களம் இறக்கப்பட்டார் முன்னாள் எம்.எல்.ஏ., தங்கப்பன். இந்த தங்கப்பனுடன் வலம் வர ஆரம்பித்த தங்கவேலனும் முக்கியமானவராக ஆக்கப்பட்டார். தங்கப்பனுக்கு ஆதரவாகத் தேர்தல் வேலைகளில் ஆர்வமுடன் பங்கேற்று அரசியலில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார். 

கீதா ஜீவன்
கீதா ஜீவன்

கீதா ஜீவனைப் பற்றி எழுதுவதா அல்லது அவருடைய அப்பா பெரியசாமியைப் பற்றி எழுதினாலே எல்லாம் அதில் அடங்கிவிடுமா என்ற கேள்வியோடுதான் இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது!

தைரியமும் தலைமையை மாற்றிக்கொள்ளாத தன்மையும் இருந்தால், ஒருவர் அரசியலில் நீண்ட காலத்துக்கு அசைக்க முடியாமல் கோலோச்சலாம் என்பதற்கு உதாரணம், தூத்துக்குடி என்.பெரியசாமி!

நெல்லையில் இருந்து தூத்துக்குடியைத் தனியாகப் பிரித்து புது மாவட்டம் உருவாகி இந்த மாதத்துடன் 25 ஆண்டுகள் முடியப்போகின்றன. இந்த 25 ஆண்டுகளும் தி.மு.க-வின் மாவட்டச் செயலாளராக இருப்பவர் பெரியசாமி. இப்படி 25 ஆண்டுகளாக சேலம் மாவட்டச் செயலாளாரக இருப்பவர் வீரபாண்டி ஆறுமுகம். இவர்கள் இருவரைத் தவிர தி.மு.க-வில் வேறு எவருக்கும் இந்தப் பாக்கியம் கிட்டவில்லை.

வீராசாமி... பிரஸ்காரங்களைக் கூப்பிட்டு இந்த அறிக்கையைப் படிய்யா!' என்று கருணாநிதி சொன்னதும், பத்திரிகையாளர்கள்

ஆற்காடு வீராசாமி
ஆற்காடு வீராசாமி

முன்பாக உட்கார்ந்தாராம் ஆற்காடு வீராசாமி.

'ஆற்காடு வீராசாமி என்கிற நான், இன்று முதல் தி.மு.க-வைவிட்டு விலகிக்கொள்கிறேன்!' என்று வாசித்தாராம். பதறிய பத்திரிகையாளர்கள், 'என்ன சார் ஆச்சு உங்களுக்கு? அதிர்ச்சியான நியூஸை இவ்வளவு அமைதியா சொல்றீங்க?' என்று ஒரு நிருபர் கேட்டாராம். 'அதெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. தலைவர் கூப்பிட்டு, இந்தக் காகிதத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். நான் படிச்சேன். அவ்வளவுதான்!' என்று சொல்லிவிட்டு உள்ளே போன ஆற்காடு, 'சொல்லியாச்சு தலைவரே!' என்று சொல்லி, கருணாநிதிக்குப் பக்கத்தில் உட்கார்ந்தாராம்!' 

பரிதி இளம்வழுதி
பரிதி இளம்வழுதி

செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, இப்போது வேட்டி கட்டி இருக்கிறாரா... பேன்ட் அணிந்து இருக்கிறாரா என்பதே ஒரு செய்திதான்!

சில நாட்களுக்கு முன்னால் நடந்த ஒரு விழாவில், முதல்வர் கருணாநிதி வைத்த கோரிக்கை, 'இனிமேல் பரிதி வேட்டி அணிந்து தான் வர வேண்டும். பேன்ட் அணியக் கூடாது' என்பதாக இருந்தது. சுமார் 20 ஆண்டுகளாக மிக மிக முக்கியமான நிகழ்வுகளில்கூட அவர் கறுப்பு - சிவப்புக் கரை வேட்டி அணிந்து வராதது அந்தக் கட்சியின் தலைவருக்கு வேண்டுமானால் வருத்தமாக இருக்கலாம். ஆனால், அதற்குப் பின்னால் உள்ள கதை தெரியுமா?

1991 தேர்தலில் தி.மு.க. சார்பில் சட்டசபைக்குள் போனவர்கள் துறைமுகத்தில் இருந்து கலைஞர் கருணாநிதியும், எழும்பூரில் இருந்து பரிதி இளம்வழுதியும் மட்டுமே. அ.தி.மு.க. அசுர பலத்துடன் ஆளும் கட்சியாக இருக்கும் சபைக்குள் கருணாநிதி செல்வது விபரீதமானது என்பதால், அவர் பதவி விலகினார். அந்தத் தொகுதியில் செல்வராஜ் என்பவர் வென்று வந்தார். ஆனால், அவரும் ம.தி.மு.க-வில் ஐக்கியமானதால், தி.மு.க-வுக்கு ஒண்ணே ஒண்ணு... கண்ணே கண்ணாக இருந்தவர் பரிதி மட்டும்தான்.

பங்குச் சந்தை ஊழலுக்கு அடுத்த படியாக சி.பி.ஐ. அதிகாரிகளை மண்டை காயவைத்த விவகாரம், 

ஆ.ராசா
ஆ.ராசா

ஸ்பெக்ட்ரம்!

'பிப்ரவரி 10-க்குள் வழக்கு விவகாரத்தின் முழுக் கதையையும் தனது மேஜையில் கொட்டியாக வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தர விட்டதால், இந்த 50 நாட்களுக்குள் தங்களை முழுமையாகத் தயார்ப் படுத்திக்கொள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் பகீரதப் பிரயத்தனங்களைச் செய்து வருவதுதான் டெல்லியின் இன்றைய ஹாட் டாபிக்!

''உள்ளூர் போலீஸ் என்றால், குற்றவாளியைப் பிடித்துவைத்துக் கொண்டு சாட்சியங்களைத் தேடுவார்கள். ஆனால், எங்கள் நிலைமை தலைகீழானது. முதலில் சாட்சியங்களையும் ஆதாரங்களையும் கண்டுபிடித்து வைத்துக்கொண்டுதான் குற்றவாளிகளைத் தேடுவோம். எந்தக் குற்றவாளியாவது சாட்சி யங்களை அழிக்க முயற்சி செய்கிறார் என்று தெரிந்தால்தான், அப்படிப் பட்டவர்களை சி.பி.ஐ. கைது செய்வதில் முனைப்புக் காட்டும். ஜெயிலுக்கும் அனுப்பும்! சில சமயம் குற்றவாளிகள் முழு ஒத்துழைப்புக் கொடுத்தால், கைது செய்யாமலேயே நேரடியாக அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வாய்ப்பும் உண்டு!'' என்று நுணுக்கங்களை நம்மிடம் சொன்னார், சி.பி.ஐ. அதிகாரி ஒருவர். இவை எல்லாமே, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராவதற்கு முன்னால்!  

அடுத்த கட்டுரைக்கு