Published:Updated:

பிரதமர் மன்மோகன் சிங்குடன் டேவிட் கேமரூன் சந்திப்பு!

புதுடெல்லி: இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன்,பிரதமர்  மன்மோகன் சிங்கை இன்று டெல்லியில் சந்தித்துப் பேசினார்.

அப்போது இருநாட்டு உறவு, பாதுகாப்புத்துறை தொடர்பான ஒப்பந்தங்கள், பரபரப்பை  ஏற்படுத்தி வரும் ஹெலிகாப்டர் ஒப்பந்த விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள்  குறித்து விவாதித்தனர்.

அதன்பின்னர் மன்மோகன் சிங், கேமரூன் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை  சந்தித்தனர்.

கேமரூன் கூறுகையில்,"ஹெலிகாப்டர் ஊழல் விசாரணைக்கு இந்தியா கோரும் உதவிகள்  அனைத்தும் தரப்படும்.

ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரப்படும்.  இந்தியா- இங்கிலாந்து வர்த்தக உறவை 2015-க்குள் இரு மடங்காக பலப்படுத்த  நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் இந்தியாவில் கூடுதலாக வணிக  அலுவலகங்களைத் திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது" என்றார்.

பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில்,"ஹெலிகாப்டர் வாங்குவதற்கு ஒப்பந்தம்  செய்யப்பட்டுள்ள அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் இங்கிலாந்து நிறுவனம்  என்பதால், அந்த நிறுவனம் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இங்கிலாந்தின் உதவி  கோரப்பட்டது.

இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கேமரூன் உறுதி அளித்துள்ளார்.  ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. பொருளாதார ஒத்துழைப்பு  மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினோம். இந்த  சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்திய அணுசக்தி திட்டங்களுக்குத்  தேவையான உதவிகள் செய்வதாகவும் இங்கிலாந்து உறுதி அளித்துள்ளது" என்றார்.