Published:Updated:

பாலச்சந்திரன் கொடூரக் கொலை: இலங்கையில் ஹிட்லர் ஆட்சி நடைபெறுவதாக ஜெயலலிதா கண்டனம்

பாலச்சந்திரன் கொடூரக் கொலை:  இலங்கையில் ஹிட்லர் ஆட்சி நடைபெறுவதாக ஜெயலலிதா கண்டனம்
பாலச்சந்திரன் கொடூரக் கொலை: இலங்கையில் ஹிட்லர் ஆட்சி நடைபெறுவதாக ஜெயலலிதா கண்டனம்
பாலச்சந்திரன் கொடூரக் கொலை:  இலங்கையில் ஹிட்லர் ஆட்சி நடைபெறுவதாக ஜெயலலிதா கண்டனம்

சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் கொன்றது மிகக்கொடூரமானது என்றும், 12 வயது சிறுவனை கொன்றது போர்க்குற்றம் என்றும் முதலமைச்சர்  ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயலலிதா, " "பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் ஈவு இரக்கமின்றி இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

அந்த 12 வயது குழந்தை எந்த குற்றமும் புரியவில்லை. பிரபாகரன் மகனாக பிறந்த ஒரே காரணத்துக்காக இலங்கை ராணுவம் அவனை சுட்டுத் தள்ளியுள்ளது. இதற்கான ஆதாரங்கள் பல பத்திரிகைகளில், ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

இந்த ஆதாரங்களையும், இன்னும் பல தகவல்களையும் பார்க்கும்போது தற்போதுள்ள இலங்கை அரசின் தன்மை, மனப்பான்மை, எண்ணம் ஆகியவை முன்பு ஜெர்மனி நாட்டில் ஹிட்லரின் ஆட்சியில் நடந்ததுதான் ஞாபகத்திற்கு வருகிறது.

ஹிட்லர் ஆட்சியில் யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். அதேபோல், இன்று இலங்கை அரசு தமிழர்களை இனப்படுகொலை செய்திருக்கிறது. எனவே மத்திய அரசு இதனை கவனத்தில் கொண்டு அமெரிக்கா மற்றும் ஒத்த கருத்துடைய நாடுகளுடன் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை கவனத்தில் கொண்டு இவற்றிற்கு காரணமானவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்க ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரவேண்டும்.

இதுதவிர, இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும். வர்த்தக ரீதியான தடைகளையும் ஒத்த நாடுகளுடன் பேசி விதிக்க வேண்டும். இலங்கையில் இடம்பெயர்ந்து முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்கே செல்ல வாழும் வரை, இலங்கையில் உள்ள சிங்கள பிரஜைகளுக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டும் அதுவரை இந்த பொருளாதார தடை நீடிக்க வேண்டும்.

12 வயது பாலச்சந்திரன் கொல்லப்பட்டது மிகப்பெரிய போர்க்குற்றம். போர்க்குற்றம் நிகழ்த்தியவர்களை சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தி அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்" என்றார்.

காவிரி தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி

இதனிடையே காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது மற்றும் புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றலாம் என பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பு ஆகியவற்றை பற்றி குறிப்பிடும்போது மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்ட அவர்,  காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிப்பட்டுள்ளது,  தமது 30 ஆண்டு கால பொது வாழ்க்கைக்கு மன நிறைவை தரும் வெற்றி என்று கூறினார்.