Election bannerElection banner
Published:Updated:

பிரபாகரன் மகன் கொடூரக் கொலை: கருணாநிதி கண்டனம்

பிரபாகரன் மகன் கொடூரக் கொலை: கருணாநிதி கண்டனம்
பிரபாகரன் மகன் கொடூரக் கொலை: கருணாநிதி கண்டனம்

பிரபாகரன் மகன் கொடூரக் கொலை: கருணாநிதி கண்டனம்

பிரபாகரன் மகன் கொடூரக் கொலை: கருணாநிதி கண்டனம்

சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் இளைய மகன்  பாலச்சந்திரன் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள  கருணாநிதி, ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில்,  இலங்கை  அரசைக் காப்பாற்றிட இந்தியா முயற்சி செய்யக்கூடாது என்று வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,"
சிங்கள இனவாத வெறியர், ராஜபக்சே ஒரு சர்வதேசப் போர்க்குற்றவாளி என்பதற்கு  ஆதாரம் தேடி உலக நாடுகளோ, ஐ. நா. மன்றமோ வேறெங்கும் செல்ல  வேண்டியதில்லை. அதற்காக எந்த விசாரணையும் மேற்கொள்ளவும் தேவையில்லை.

##~~##
விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது மகன்  பாலச்சந்திரன் என்ற இளம் தளிரை, துப்பாக்கிக் குண்டுகளால் கருகச் செய்த கோர  நிகழ்ச்சியைக் காணும் போது, கொடுமை, கொடுமை, இதைவிடப்பெரிய கொடுமையை  வேறெங்கும் காண முடியாது.
உலகத்திலே உள்ள எந்த நாட்டிலும் இப்படிப்பட்ட கொடூரமான கொலை  செய்யப்பட்டதற்கான குறிப்பே இல்லை. மணல் சாக்குகளின் மத்தியிலே  பிணைக்கைதியாக அந்தச் சிறுவனை அடைப்பதற்கே கல் நெஞ்சம் வேண்டும். அந்தப்  பச்சிளம் பாலகன் என்ன பாவம் செய்தான்.
நேற்றைய தினம் வெளியிட்ட அந்தப் புகைப்படங்களைக் கண்டு கலங்கிக் கண்ணீர்  விடாத கட்சித் தலைவர்களே தமிழகத்திலே இல்லை. அந்த இளைஞனை நோக்கித்  துப்பாக்கியை நீட்டுவதற்கு எத்தகைய நெருப்பு நெஞ்சம் வேண்டும்! அமைதியாக  ஆயுதமின்றி சமாதானம் பேசச் சென்ற விடுதலைப் புலிகளின் தலைவர்களையெல்லாம்  ஈவு இரக்கமின்றிக் கொன்று குவித்த இலங்கை ராணுவம், 12 வயது பையனைக்கூட  மணல் மூட்டைகளுக்கு மத்தியிலே தனிமைச் சிறையிலே வைப்பதைப் போல  வைத்திருக்க வேண்டுமென்றால், எத்தகைய கொடுமை அது.
சிங்கள ராணுவத்தினர் அடுக்கடுக்காகச் செய்த அட்டூழியங்களையெல்லாம் லண்டனில்  உள்ள சேனல் 4 தொலைக்காட்சி புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் மூலமாக  உலகத்திற்குத் தெளிவாக்கிக் கொண்டு வருகிறது. உலக நாடுகளுக்கு மத்தியிலே  உத்தமராக வேடம் தரித்த ராஜபக்சேயின் உண்மைச் சொரூபம் தோலுரிக்கப்பட்டு  வருகிறது.
பாலகன் பாலச்சந்திரனின் இந்த மூன்று புகைப்படங்களையும் காணும் உலக நாடுகள்  எல்லாம் சிங்கள இனவாத அரசுக்கு எதிராக இயல்பாகவே தங்கள் குரலை எழுப்பியே  தீரும்.
பாலச்சந்திரனின் மூத்த சகோதரனைப் போர்க்களத்திலே கொன்றொழித்த மாபாவிகள்,  பாலச்சந்திரனை, நிராயுதபாணியாக நிற்க வைத்து, மூன்றடி தூரத்திலிருந்தவாறு, சுட்டுக்  கொலை செய்திருக்கிறார்கள்.
ஆனால் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் சிங்கள ராணுவத்தினரால்  போரின்போது சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவத்தினர் இதுவரை பொய்  சொல்லி ஏமாற்றி வந்தார்கள்.
சுவிஸ் நாட்டிலே உள்ள ஜெனிவா நகரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித  உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் ஒரு  கண்டனத் தீர்மானத்தைக் கொண்டு வரவுள்ளது. இந்தத் தீர்மானத்தை மேற்கத்திய  நாடுகள் எல்லாம் ஆதரிக்கவுள்ள நிலையில், இந்தியா அதன் நிலைப்பாட்டினை இன்னும்  அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காமல் இருப்பதே நம்மையெல்லாம் வேதனையில்  ஆழ்த்தியிருக்கிறது.
ஈழத் தமிழர்கள் இந்தியாவிலுள்ள தமிழர்களின் தொப்புள் கொடிச் சொந்தங்கள் என்பதால்,  இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியாவே முன் நின்று எடுத்துச் செல்ல வேண்டும்  என்ற விழைவு தமிழ்நாட்டிலே உள்ள மக்களுக்கெல்லாம் இயற்கையாகவே இருக்கின்ற  நிலையில், இந்திய அரசு இதைப்பற்றி சற்று அலட்சியமாக இருப்பதுபோலக் காட்டிக்  கொள்வதும், இந்தக் கொடூரங்களுக்கெல்லாம் காரணமான இலங்கை அதிபர் ராஜபக்சே  இந்தியா வரும்போது வரவேற்பு கொடுப்பதும் தமிழர்களால் கொஞ்சமும் தாங்கிக்  கொள்ள முடியாதவைகளாக உள்ளன.
பாலச்சந்திரனின் கொடூரக் கொலையை விளக்குகின்ற ''போர் இல்லா மண்டலம்   இலங்கையின் கொலைக் களங்கள்''' என்ற தலைப்பிலே உள்ள ஆவணப்படத்  தொகுப்பினை ஜெனீவாவில் நடக்கவுள்ள மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில்  வெளியிடவிருப்பதாக நமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இதற்கிடையில் இந்த ஆவணப் படக்காட்சிகளை இலங்கை அரசு முழுமையாக  மறுத்துள்ளது. இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ரூபன் வானிக  சூர்யா என்பவர் ஆவணப் படத்தில் இடம் பெற்றிருக்கிற படக்காட்சிகள் பொய்யானவை,  பாதியே உண்மை. யூகத்தின் பல்வேறு வடிவங்கள் இலங்கை படைகளுக்கு எதிராக  இப்படிப்பட்ட குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவது ஒன்றும் புதிதல்ல.
ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இதை  வெளியிட்டிருப்பதுதான் முக்கிய அம்சம் என்றெல்லாம் வழக்கமாகச் சொல்வதைப்போலச்  சொல்லியிருக்கிறார்.
இந்தப் படத்தினை வெளியிட்டுள்ள இங்கிலாந்தைச் சேர்ந்த சேனல் 4 தொலைக்காட்சி  நிறுவனத்தின் இயக்குனர் கல்லம் மெக்ரே என்பவர், நேற்று வெளிவந்த புகைப்  படங்களைப் பற்றிக் கூறும்போது, பிரபாகரன் மகனுடைய இந்தப் புகைப்படங்கள்  உண்மையானவைதான்; மேலும் பல ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. விரைவில்  அவற்றையும் அம்பலப்படுத்துவோம என்று தெரிவித்திருக்கிறார். மேலும் இதுபற்றி நுண்  அறிவியல் துறையில் உள்ள நிபுணர் இது நூற்றுக்கு நூறு உண்மையானப் படம் என்று  உறுதிப்படுத்தியிருக்கிறார்.
பாலகன் பாலச்சந்திரன் சேனல் 4 வெளியிட்டிருப்பதைப் போல, கொடூரமாக  கொல்லப்பட்டிருந்தாலும், போரின் போது ராணுவத்தினரால் கொல்லப்பட்டிருந்தாலும்  எப்படியும் அது கொலைதான். அப்படி கொலை செய்யப்படும் அளவிற்கு, அந்தப் பாலகன்  செய்த குற்றம் என்ன?
இதற்கு சிங்கள அரசு உலகத்திற்குப் பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்.  எந்தவகையில் பார்த்தாலும் ராஜபக்சே ஒரு போர்க் குற்றவாளி என்பது ஊர்ஜிதமாகிறது.  அதற்காக எந்த விசாரணையும் நடத்தத் தேவையில்லாமலே ஆதாரங்கள் வெளிவந்து  கொண்டிருக்கின்றன.
ஏற்கனவே, ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் அமைக்கப்பட்ட மூவர் குழு,  போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து விசாரித்து தண்டனை  வழங்கப்பட வேண்டுமென்றே தெரிவித்திருப்பதையும் மனதிலே கொள்ள வேண்டும்.
இத்தகைய காட்டு மிராண்டித்தனமான செயலில் ஈடுபட்ட சிங்கள அரசுக்கு இந்திய அரசு  இனியும் துணை போக வேண்டுமா என்பது தமிழக மக்களிடையே கேள்விக்குறியாக  எழுந்துள்ளது.
கடந்த ஆண்டே, ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில், இலங்கை அரசின்  போர்க்குற்றங்கள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசை வற்புறுத்தித்  தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், இலங்கை அரசு கடந்த ஓராண்டு காலத்தில்  அதுபற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
டெல்லியிலே உள்ள மனித உரிமை கண்காணிப்பகம், ஐ.நா. மனித உரிமை ஆணைய  உறுப்பினர்களுக்கு அண்மையில் எழுதிய கடிதத்தில் இலங்கையின் போர்க்குற்றங்கள்  குறித்து ஐ.நா. சபை சுதந்திரமான, சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென்றும்,  அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. சபைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட  வேண்டுமென்றும், இந்த முயற்சிக்கு ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் உறுப்பு நாடுகள்  ஆதரவு தெரிவிக்க வேண்டுமென்றும் கடிதம் எழுதியுள்ளது.
எனவே இலங்கை அரசாங்கத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அமெரிக்கா  போன்ற நாடுகள் முன் வரும்போது, இந்திய அரசு அந்தக் கருத்துக்கு வலுசேர்த்திட முன்  வரவேண்டுமே தவிர, இலங்கை அரசைக் காப்பாற்றிட முயற்சி செய்யக்கூடாது. இதுதான்  இன்று தமிழ் நாட்டு மக்களின் விருப்பம்; வேண்டுகோள்" என்று கூறியுள்ளார்.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு