Published:Updated:

மிஸ்டர் கழுகு: சுவாமிக்கு தூது விட்டு...

மிஸ்டர் கழுகு: சுவாமிக்கு தூது விட்டு...

மிஸ்டர் கழுகு: சுவாமிக்கு தூது விட்டு...

மிஸ்டர் கழுகு: சுவாமிக்கு தூது விட்டு...

Published:Updated:
##~##
''ஞாயிறு வந்தது... நாணயம் தந்தது!'' என்று ஹம்மிக்கொண்டே வந்தார் கழுகார்.

''நீர் என்ன குடும்பஸ்தரா? உமக்கென்ன வரவு- செலவு? நாணயம் விகடன் வாரப் பத்திரிகை ஆவதில் அத்தனை ஆர்வம் காட்டுகிறீரே?'' என்றோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''உமக்காகச் சொன்னேன் ஐயா... ஒரே அறைக்கு மூன்று பல்புகள் மாட்டியிருக்கிறீரே... ஒரு பல்பை வைத்தே குடும்பஸ்தர்கள் எப்படியெல்லாம் மின்சார செலவைக் கணிசமாக மிச்சம் பிடிக்கலாம் என்று ஒரு கட்டுரை நாளை வருகிறது. நாணயம் படித்துப் பாரும்!'' என்று விளம்பரத் தொனியில் விளம்பிய கழுகார், சட்டென்று அரசியல் நியூஸுக்குள் புகுந்துவிட்டார்.

''டெல்லியில் வலம் வந்த சுப்பிரமணியன் சுவாமியை, தமிழக அரசியல் வாரிசுப் பிரமுகர் ஒருவர் சந்தித்து நெடுநேரம் பேசிக்கொண்டு இருந்தாராம். 'நீங்கள் கையில் எடுத்து இருக்கும் பிரச்னையின் தீவிரத்தைக் குறைத்துக்கொள்ளக் கூடாதா?’ என்று கெஞ்சும் குரலில் அவர் கேட்டதுதான் தாமதம், பொரிந்து தள்ளி விட்டாராம் சுவாமி!''

மிஸ்டர் கழுகு: சுவாமிக்கு தூது விட்டு...

''தன்னை ஆ.ராசா சந்தித்துப் பேசியதைத் தான் ஜூ.வி. நிருபரிடம் பேட்டியாகக் கொடுத்திருந்தாரே சுவாமி. அதன் அடுத்த எபிஸோடா இது?''

''எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று நினைப்பவர்கள், யாரையும் சந்திப் பார்கள் அல்லவா? அந்த வாரிசுப் பிரமுகர் கேட்டதும் கொந்தளித்த சுவாமி, 'இப்பத் தான் இந்த சுவாமியை உங்கள் கண்ணுக்குத் தெரியுதா? சுவாமின்னா யாருன்னு கேட்ட வாளாச்சே நீங்க? உங்களுக்குத்தான் என்னைப் பிடிக்கவே பிடிக்காதே? 95-ம் வருஷத்துல உங்களுக்கு எவ்வளவோ பெரிய ஹெல்ப் பண்ணினேன். கைம்மாறா நான் என்ன கேட்டேன். ஒரே ஒரு ஸீட்தானே கேட்டேன். தந்தீங்களா? அதுக்கு முன்னாடி இருந்தே என்னை நீங்க மதிச்சதில்லை. ஆட்சிக்கு சிக்கல் ஏற்படுத்துற நெருக்கடி கொடுத்த பிறகும், உங்களுக்கு என்னோட மரியாதை எல்லாம் தெரியலே இல்லையா? கேட்டா... என்னோட சாதியைச் சொல்லித் திட்டுறேள். நான் எடுத்த விஷயத்துக்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம்? நான் பொறந்த சாதியில எத்தனை பேரை எதிர்த்து நான் சண்டை போட்டிருக்கேன்னு பட்டியல் தரட்டுமா?’ என்று கேட்டு நிறுத்தினாராம் சுவாமி!''

''என்ன சொன்னாராம் அந்தப் பிரமுகர்?''

''அமைதியாக உட்கார்ந்திருந்தாராம். சுவாமிதான் யாருடைய பதிலையும் எதிர் பாராமல் ஊசிப் பட்டாசாக வெடிக்கும் ரகம் ஆச்சே! இன்னும் என்னென்னவோ பழைய கதைகளை எல்லாம் சொல்லித் தீர்த்திருக்கிறார். கடைசியாக, 'உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் பண்றோம்’ என்று சொல்லப்பட்டதாம். 'எனக்கா? நான் பிச்சை எடுத்துக் கட்சி நடத்துறவன்... மண் வித்துக் கட்சி நடத்துறவன் இல்லே. என்னை ஹார்வர்டு யுனிவர்சிட்டி கிளாஸ் எடுக்க எப்ப வர்றேள்... எப்ப வர்றேள்னு கேட்டுட்டு இருக்கு. மரியாதையாப் போய் உட்கார்ந்து ராஜாவா வாழலாம். அதை விட்டுட்டு இங்க ஏன் இருந்து நான் கஷ்டப்படுறேன்’ என்று சொன்னாராம். கடைசியில் இன்னும் கறார் வார்த்தைகளை சுவாமி உதிர்க்க... சந்திப்பு எந்த முடிவும் இல்லாமல் முறிந்துபோனதாம்!''

''அவரை சந்தித்துப் பேசியதே தைரியம்தானே?''

''இந்தப் பிரச்னை எப்படி முடியும்? எப்போது அணையும் என்பதுதான் கருணாநிதியின் கவலையாக இருக்கிறது. டெல்லி பாலிடிக்ஸ் தன்னை இந்த அளவுக்குப் போட்டுத் தாக்கும் என்று கொஞ்சமும் நினைக்கவில்லையாம் கருணாநிதி. தன்னை சந்திக்க வந்த முன்னாள் அமைச்சர்

டி.ஆர்.பாலுவிடம் மணிக்கணக்காகச் சில விஷயங்களைச் சொல்லி வருத்தப்பட்டாராம். இறுதியாக, 'டெல்லியில் எத்தனையோ விஷயங்கள் நடந்திருக்கு. எதையுமே எனக்கு சொல்லலையே?’ என்று  கருணாநிதி சொல்ல, 'எனக்குத் தெரியாமத்தான் பல விஷயங்கள் நடக்க ஆரம்பிச்சிருச்சே. எனக்கே மந்திரி பதவி கிடைக்காமப் பண்ணிட்டாங்களே’ என்று அவர் தன்னுடைய வருத்தங்களைச் சொல்ல... 'டெல்லியில் லாபி பண்ண நமக்கு சாமர்த்தியம் பத்தலைய்யா! அதனால்தான் இவ்வளவு சிரமப்பட்டோம்!’ என்ற கருணாநிதி, 'ஸ்டாலினிடம் சில விஷயங்களைப் பேசியிருக்கேன். எதுவா இருந்தாலும் அவர் சொல்றதைக் கேட்டுட்டுச் செய்’ என்று உத்தரவு போட்டாராம். கடந்த சில ஆண்டுகளாக,  'தான் உண்டு... தன்னுடைய இலாகா உண்டு’ என்று இருக்கும் தயாநிதி மாறன் வசம் இனி டெல்லி மீடியேட் வேலைகளை ஒப்படைக்க கருணாநிதி நினைத்து இருப்பதாகவும் சொல்கிறார்கள். இதற்கு அழகிரி, ஸ்டாலின் இருவரும் பச்சைக் கொடி காட்டிவிட்டதாகவும் ஒரு தகவல்!''

மிஸ்டர் கழுகு: சுவாமிக்கு தூது விட்டு...

''திடீரென வள்ளுவர் கோட்டத்தில் மத்திய அரசைப் பார்த்து கொந்தளித்தாரே கருணாநிதி?''

''எவ்வளவு காலம்தான் அவரும் சும்மா இருப்பார்! 'இளங்கோவன் தொடங்கி யுவராஜா வரை காங்கிரஸ் கட்சியில் ஆள் ஆளுக்கு தி.மு.க. அரசாங்கத்தை திட்டித் தீர்ப்பார்கள்! அதை டெல்லியும் கண்டுகொள்ளாது என்றால்... தலைவர் சும்மா இருப்பாரா?’ என்கிறார்கள் தி.மு.க-வில். அதனால்தான், வேளாண் கருத்தரங்க அலுவலர்கள் மாநாட்டில் கொட்டித் தீர்த்துவிட்டார். 'மாநில அரசு செய்வதையும் மத்திய அரசு செய்வதையும் பிரித்துப் பேசக் கூடாது. தனியாகப் பதினாறு அடி பாயக்கூடும் என்று அண்ணா காலத்தில் அப்படிக் கேட்டோம். நாங்கள் தனியாகப் பதினாறு அடி அல்ல, சேர்ந்தே பதினாறு அடி பாய்வோம் என்று சொன்ன பிறகும் சேர்ந்தே இருப்பது தீது என்றால் சொல்லுங்கள்! யோசிக்கிறோம். அவ்வளவுதான் சொல்ல முடியும்’ என்று கர்ஜித்தார் கருணாநிதி.

மத்திய அரசை மிரட்டும் தொனி இதில் இருந்தாலும் கருணாநிதியின் வேதனையே இதில் வெளிப்படுவதாகச் சொல்கிறார்கள். அதே நாளில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக ஒரு கடிதமும் அனுப்பி இருக்கிறார். அதாவது மத்திய அரசு மனம் கோணும் விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்!''

''இதை காங்கிரஸ் எப்படி எடுத்துக்கொள்ளும்?''

''பீகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மண்ணைக் கவ்விய அன்றுதான் கருணாநிதியின் இந்தக் குரல் ஒலித்து இருக்கிறது. 'பீகாரில் தனியாக நின்று ஜெயித் தால், அதைப்போன்ற ஃபார்முலாவை தமிழ்நாட்டிலும் அமல்படுத்தலாம்’ என்பதுதானே ராகுலின் கணக்கு. அதுதான் பீகாரில் பணால் ஆகிவிட்டதே. அதனால் இங்கும் காங்கிரஸ் கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்கும் என்று நினைக்கிறார் கருணாநிதி. பீகார் ரிசல்ட்டை அதீத ஆர்வத்துடன் அன்றைய தினம் கேட்டு வாங்கிப் பார்த்தாராம் அவர்!''

''மறுபடியும் தி.மு.க. மாவட்ட ஆய்வுக் குழுவைக் கூட்டி, பரபரப்பு கூட்டப்போகிறாரே கருணாநிதி?''

''நாடாளுமன்றம், அழகிரி மகன் கல்யாணம் ஆகியவற்றால் இடையில் நிறுத்தப்பட்டு இருந்தது அந்த விசாரணை வைபோகம். அழகிரியிடமும் கேட்டு இருக்கிறார்கள். 'இனி நிச்சயம் வருவேன்’ என்று சொல்லிவிட்டாராம். அதனால் காரசாரம் மீண்டும் ஆரம்பம் அறிவாலயத்தில்!''

''புதிய மாப்பிள்ளை எப்படி இருக்கிறாராம்?''

மிஸ்டர் கழுகு: சுவாமிக்கு தூது விட்டு...

''புதுமணத் தம்பதி வெளிநாடு பயணத்துக்குத் தயார்.  ஆனால், அழகிரியின் இரண்டாவது மகள் அஞ்சுகச் செல்வியின் குடும்பத்தினர் வெளிநாட்டுக்குச் சென்று நிரந்தரமாக செட்டில் ஆவதற்கான வேலைகள் தொடங்கி இருக்கின்றன. இன்னும் சில வாரங்களில் அவர்கள் பறக்கலாம். 'துரையையும் வெளிநாட்டில் செட்டில் பண்ணுங்க’ என்றும் சிலர் அழகிரிக்கு ஆலோசனை சொன்னார்களாம்!'' என்ற கழுகாரிடம் கருத்து சொல்லாமல் இருந்தோம்.

''வரும் 30-ம் தேதி தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ராகுலை டெல்லியில் சந்திக்கிறார்கள். பாத யாத்திரை வந்தவர்களை தனது வீட்டுக்கு அழைத்து நலம் விசாரிக்கிறாராம் ராகுல். அன்று தமிழக அரசியல் நிலவரம் தொடர்பான அவரது மனவோட்டத்தை அறிய முடியும் என்கிறார்கள்!''

''ம்!''

''தென் மாவட்டங்களிலும் தஞ்சையிலும் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளை மந்திரிகள் போய்ப்பார்க்க வேண்டும் என்று உத்தரவிட்ட முதல்வர் கருணாநிதி, கட்சிக்காரர்களையும் நிவாரணப் பணிகளை பார்க்கச் சொல்லி இருக்கிறார். இதை ஆளும் கட்சி பயன்படுத்திக் கொள்ளும் என்று சொல்கிறார்கள். 'வெள்ள நிவாரண உதவி என்று 'கவர்’ பண்ணி  வாக்காளர்களை வசமாக்கும் வேலையும் ஆரம்பிக்கலாம்’ என்கிறார்கள்!'' என்றபடி பறந்தார் கழுகார்.

சில நிமிடங்களிலேயே அவர் மீண்டும் நம் அலுவலகத்துக்கு ஆஜரானார்.

''வெளியே போனால் அண்ணா சாலை மொத்தமும் ஏதோ கலவரம் மாதிரி மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. என்னவென்று விசாரித்தேன். 'இன்று போக்குவரத்து ஊழியர் தேர்தல் என்பதால், பேருந்து வருகை காலையில் குறைந்ததாம். மதியத்துக்குப் பிறகு சுத்தமாக அறவே நின்றுவிட்டதாம். பல மணி நேரமாக மக்கள் சாலையில் நிற்கிறார்கள். கோயம்பேடு நிலையத்தில் வெளியூர் பேருந்துகளையும் எடுக்க பல ஊழியர்கள் வரவில்லையாம். தவிக்கிறார்கள் மக்கள். தேர்தல் நடந்தால் ஓட்டைப் போட்டுவிட்டு வேலை பார்க்க வர வேண்டியதுதானே? அத்தனை ஊழியர் களுக்கும் மொத்தமாக விடுமுறை விட்டுவிட்டார்களா என்ன? தேர்தல் தேதி நவம்பர் 25 என்று எப்போதோ அறிவித்துவிட்டார்கள். அன்று இப்படி நடக்கும் என்று அரசாங்கத்துக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாதா? அல்லது அவர்களுக்கு இப்படி ஒரு யோசனையே வரவில்லையா?'' என்று கோபமான வார்த்தைகளை உதிர்த்துவிட்டு மீண்டும் பறந்தார் கழுகார்!  

படம்: கே.கார்த்திகேயன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism