Published:Updated:

தரை தட்டி நிற்கும் தமிழ்நாட்டு அரசியல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தரை தட்டி நிற்கும் தமிழ்நாட்டு அரசியல்!
தரை தட்டி நிற்கும் தமிழ்நாட்டு அரசியல்!

ப.திருமாவேலன் - ஓவியம்: ஹாசிப்கான்

பிரீமியம் ஸ்டோரி
தரை தட்டி நிற்கும் தமிழ்நாட்டு அரசியல்!

ரைதட்டி நிற்கிறது தமிழ்நாட்டு அரசியல். மாநில முதலமைச்சரும் கால் நூற்றாண்டு காலத் தமிழ்நாட்டு அரசியலைத் தீர்மானித்தவருமான ஜெயலலிதா, தற்போது அப்போலோ மருத்துவமனையையே வீடாக ஆக்கிக்கொண்டு விட்டார். ஐந்து முறை மாநில முதலமைச்சராக இருந்தவரும் அரை நூற்றாண்டு கால தமிழ்நாட்டு அரசியலின் மையப்புள்ளியுமான கருணாநிதி, கோபாலபுரம் வீட்டையே மருத்துவமனைபோல ஆக்கிக்கொண்டுவிட்டார். இரண்டு பேருமே நோயில் படுத்ததால்... அவர்களின் கட்சிகள் மட்டும் அல்ல, மொத்த அரசியல் கட்சிகளுமே சித்தப்பிரமை பிடித்ததுபோல உள்ளன என்பதுதான் நிஜம்!

தலைமை இல்லாத அ.தி.மு.க.!

செப்டம்பர் 22-ம் தேதி இரவு சாதாரணக் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, இன்று வரை (நவம்பர் 7) வீடு திரும்பவில்லை. இதயம், நரம்பு, மூளை, நுரையீரல், சிறுநீரகம், உடல் உறுப்புகள் செயல்பாடு, உடல் இயக்கம், உள்ளிட்ட எல்லா பிரச்னைகளுக்குமான மருத்துவர்கள், அவரை மாறிமாறிக் கவனிக்கிறார்கள். அப்போலோ அதிகாரபூர்வமாக வெளியிட்ட அறிக்கையின்படி, ‘அவர் புரிந்துகொள்கிறார்’. அப்போலோவின் தலைவர் பிரதாப் ரெட்டியின் வாக்குப்படி, ‘சுற்றிலும் இருப்பதை அவர் உணர்கிறார்’. உலகத் தரம் வாய்ந்த சிகிச்சைகளை அவருக்குத் தந்துவருவதாகச் சொல்லும் ரெட்டி, உலகப் புகழ்பெற்ற பிரகடனம் ஒன்றையும் செய்துள்ளார். ‘தான் எப்போது வீடு திரும்புவது என்பதை அவரே முடிவுசெய்வார்’ என்றார் ரெட்டி. தான் எப்போது வீடு திரும்புவது என்பதை நோயாளியே முடிவுசெய்வதுதான் ‘மெடிக்கல் மிராக்கிள்’.

சி.பொன்னையனும் சி.ஆர்.சரஸ்வதியும் சொல்வதைக் கவனத்தில்கொள்ளத் தேவை இல்லை. ஜெயலலிதா எந்தத் திசையை நோக்கி இருக்கிறார் என்பதே தெரியாதவர்கள் இவர்கள். அப்போலோவின் புரியாத அறிக்கைகளும், அதற்குப் பொருந்தாத இந்த வகைப் பேட்டிகளும்தான் அ.தி.மு.க தொண்டனை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.

அம்மா எப்போது வீடு திரும்புவார், அ.தி.மு.க., அடுத்து யார் கைக்குப் போகும் என்ற இரண்டு கேள்விகளுக்கு விடை தெரியாமல் விழிக்கிறான் தொண்டன். ‘இதில் சந்தேகிக்க என்ன இருக்கிறது? சசிகலாதானே அடுத்து..!’ என நினைக்கலாம். இதுவரை ‘பேக் ஸீட் டிரைவிங்’ செய்துவந்த சசிகலா அப்படி நினைக்கிறாரா எனத் தெரியவில்லை. ஆனால், சசிகலா குடும்பத்தில் பலரும் தங்களை இப்போதே அப்படி நினைக்க ஆரம்பித்து விட்டனர். கருணாநிதி குடும்பத்தில் தனித்தனி அதிகார மையங்கள் இருப்பதைப்போல, சசிகலா குடும்பத்திலும் இப்போது தனித்தனி பவர் சென்டர்ஸ் உருவாகிவிட்டன. இப்போது ‘மன்னார்குடி’ என ஒட்டுமொத்தமாகச் சொல்ல முடியாது. சசிகலா குடும்பம், இளவரசி குடும்பம், நடராசன் குடும்பம் என மூன்றாக இருக்கின்றன. சசிகலா, ம.நடராசன், இளவரசி, டி.டி.வி. தினகரன், திவாகரன், அவரது மகன் ஜெயானந்த், டாக்டர் சிவகுமார், இளவரசியின் மகன் விவேக் ஆகியோர் கவனிக்கப்படுகிறார்கள். ஒருகாலத்தில் கோலோச்சிய வி.என்.சுதாகரன், டாக்டர் வெங்கடேஷ், மகாதேவன் ஆகியோர் காத்திருக் கிறார்கள். இவர்களில் யார் அதிகாரபலம் மிக்கவர்களாக ஆகப்போகிறார்கள் என்பதுதான் குழப்பத்துக்குக் காரணம். ஜெயலலிதாவின் உடல்நிலை மட்டும் அல்ல, சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பும் இந்த நேரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. அது சசிகலா, இளவரசி, சுதாகரனின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது.

இவர்களுக்கு வெளியே ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். இரண்டு முறை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்தவர், இப்போது முதலமைச்சரின் துறைகளைக் கவனிப்பவர். இவரை ஏற்பவர்கள் ஓர் அணியாகவும், எதிர்ப்பவர்கள் வைத்திலிங்கம் தலைமையிலும் இருக்கிறார்கள். முக்குலத்தோர் தலைமையை நிராகரிக்கும் கொங்கு மண்டலம், வேலுமணி, எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன் பெயர்களை உச்சரித்துக்கொண்டிருக்கிறது. சாத்வீகிகள், தம்பிதுரை பெயரைச் சொல்கிறார்கள். எம்.எல்.ஏ-க்கள் செல்வாக்கு இல்லாமல் கிரக நிலைகளைப் பார்த்து `தங்களுக்கு நல்லது நடக்கும்' என சொல்லி அலைகிறார்கள். இவை அனைத்துமே அ.தி.மு.க தொண்டனை ரத்தக்கொதிப்பில் கிறுக்குப் பிடிக்கவைத்துள்ளன!

தரை தட்டி நிற்கும் தமிழ்நாட்டு அரசியல்!


‘தலைவர்கள்’ தி.மு.க!

அ.தி.மு.க-வுக்கு ஒன்றுபட்ட ஒரே தலைவர் யார் என்ற குழப்பம் என்றால், தி.மு.க-வில் ஏராளமான தலைவர்கள். ஸ்டாலினா... அழகிரியா என இருந்தது ஆரம்பத்தில். அழகிரி அமுங்கியதும் ஸ்டாலினா... கனிமொழியா என மாறியது. இப்போது அங்கு நடப்பது ஸ்டாலினா... கருணாநிதியா என்ற சண்டை. தொடை தட்டி மல்லுக்கு நிற்கும் பலம் தனக்கு இல்லாததால், அழகிரியையும் ராசாத்தி அம்மாளையும் தனக்கான துணைத் தளபதிகளாக ஆக்கிக்கொண்டுவிட்டார் கருணாநிதி.

அப்போலோவில் இருக்கும் ஜெயலலிதாவைச் சந்திக்க ராசாத்தி அம்மாளை அனுப்பியதும், ஒவ்வாமை காரணமாக உடல் கட்டி ஏற்பட்டு ஓய்வெடுத்துவரும் தன்னைச் சந்திக்க அழகிரியை அடிக்கடி வரவைப்பதும், கருணாநிதியின் ஓரங்க நாடகத்தின் உணர்ச்சி இல்லாக் காட்சிகள். ஸ்டாலின் அப்போலோ போனதும் ராசாத்தி போகிறார். அழகிரி கோபாலபுரம் வந்து போனதும் ஸ்டாலின் பார்க்க வருகிறார். `இந்த உருளைக்கிழங்கு விளையாட்டு எப்போது முடியுமோ?!' என்ற கவலைதான் உடன் பிறப்புகளுக்கு.

‘அழகிரி, என் மகனே அல்ல’ என்றதும் கருணாநிதிதான்; அழகிரியைக் கட்சியைவிட்டு நீக்கியதும் அவர்தான். ஆனாலும், இன்று கொஞ்சுவது பெத்த மகன் பாசம் மட்டும் அல்ல; மத்த மகன் (ஸ்டாலின்) தன்னை மதிக்கவில்லை என்ற கோபம். கட்சியை குடும்பச் சொத்தாக மாற்றுவதற்காகத்தான் பல்வேறு குட்டிக் கர்ணங்களை கருணாநிதி அடித்தார். ‘தனக்குப் பிறகு மகன்தான் வர வேண்டும்’ என நினைத்துச் செயல்பட்டார் கருணாநிதி. தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயத்தானே வேண்டும்! அப்படிப் பாய்ந்தால்தானே குட்டி? அதுவும் கருணாநிதியின் குட்டி! ‘அப்பா இருக்கும்போதே நான் தலைவர் ஆகக் கூடாதா? எனக்கும் 60 வயதுக்கு மேல் ஆகிவிட்டதே!’ என ஸ்டாலின் நினைத்தார். இந்தத் ‘தொழிலை’ குடும்பத்துக்கு ஒருத்தர் பார்க்கட்டும் என ஒதுங்கும்தன்மை, கருணாநிதி குடும்பத்தில் இல்லை. அழகிரி, கனிமொழி, தயாநிதி மாறன், துரைதயாநிதி என வரிசைகட்டினார்கள். (இடையில் வந்த கவிதாயினி கயல்விழி, என்ன ஆனார் எனத் தெரியவில்லை) இதில் சில ஆண்டுகளாக ஒரு தெளிவு கிடைத்து, ஸ்டாலின் கைக்கு மொத்தமாக கட்சி போவதான தோற்றம் வந்தது. அதற்குள் மீண்டும் அழகிரி தாண்டவம்... ராசாத்தி நர்த்தனம்.

ஸ்டாலினும் ஸ்டாலின் ஆட்களும் இன்னும் வேகமாக வேலைபார்த்திருந்தால், தான் முதலமைச்சர் ஆகி இருக்கலாம் என்பது கருணாநிதியின் நினைப்பு. கருணாநிதி மீண்டும் முதலமைச்சர் ஆகிவிட்டால், அழகிரி, ராசாத்தி, கனிமொழி ராஜ்ஜியம் மீண்டும் தொடங்கும் என்பது ஸ்டாலின் மற்றும் ஸ்டாலின் ஆட்களின் கணிப்பு. விஜயகாந்த்தும் அன்புமணியும் முதலமைச்சர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட தேர்தலில், ஸ்டாலின் பெயரை அறிவிக்கவிடாமல் ராசாத்தி தடுத்தார்.

ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு தேர்தல் அதிகாரியாக இருக்கலாம். தி.மு.க-வுக்கான தேர்தல் அதிகாரியாக ராசாத்தி செயல்பட்டார். இப்படி ஒவ்வொருவரும் தனித்தனி ‘முரசொலி’ நடத்துவதால், தி.மு.க-வே மூச்சுத்திணறலுக்கு ஆட்பட்டுள்ளது!

இதுல இவங்க வேற!

சிவகார்த்திகேயனும் சூரியும் சீரியஸாகச் சண்டைபோட்டுக்கொண்டிருக்க, ‘இதுல இவங்க வேற... தள்ளிப் போயி விளையாடுங்கப்பா!’ என ஒருவர் சொல்லிச் செல்வார். அந்த காமெடிதான் மற்ற கட்சிகளில் நடக்கிறது.

வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன்... ஆகிய நால்வரும் மக்கள் நலனுக்கு ஆலோசனை செய்யக் கூடுகிறார்களா அல்லது ‘நாம நாலு பேரும் ஒண்ணாத்தான் இருக்கோமா?’ என்பதைப் பார்ப்பதற்காகக் கூடுகிறார்களா எனத் தெரியவில்லை. அப்போலோவுக்கு நேரில் போயும், அறிவாலயத்துக்கு ‘சே குவேரா’வை அனுப்பியும் உறவுகளைப் புதுப்பிக்கிறார் திருமா. நாராயணசாமியை ஆதரிப்பதன் மூலமாக சின்ன கர்ச்சீப் போட்டுவிட்டார் திருமா. ‘நாம் போகாவிட்டாலும் விவசாயச் சங்கப் பிரதிநிதிகளை அனுப்பலாம்’ என்ற அளவுக்கு தி.மு.க-வுடன் நெருக்கம் காட்டினார்கள் கம்யூனிஸ்ட்கள். வைகோவுக்கு, ஸ்டாலின் தலையெடுக்காமல் இருந்தால் போதும். ‘அண்ணன் கலைஞரே இன்னும் பத்து ஆண்டுகள் தலைவராகத் தொடரட்டும்’ என அவர் உள்மனசு சொல்லும். இவர்களில் முதலமைச்சர் வேட்பாளராக்கப்பட்ட விஜயகாந்த், அந்த வீட்டுக்குள் இருக்கிறாரா... சிங்கப்பூர் போய்விட்டாரா எனத் தெரியவில்லை. அப்போலோ மர்மம் சில வாரங்கள்தான் என்றால், விஜயகாந்த் மர்மம் சில ஆண்டுகளாகவே இருக்கிறது. வீட்டுச்சாவி மட்டும் அல்ல, கட்சிச் சாவியும் பிரேமலதா கைக்குப் போய்விட்டது. இவர்களோடு இருந்து வெளியேறிய ஜி.கே.வாசன், எங்கும் போக முடியாமல் நிற்கிறார்.

புதிய தலைவரைப் போட்டதால் புத்துணர்ச்சி பெற்றிருக்கவேண்டிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி, புதுப்புதுப் பிரச்னைகளில் சிக்கியது. காங்கிரஸ் கட்சிக்கு தலைவரானோமா, ஜெயலலிதா ஆதரவு எம்.ஜி.ஆர். அ.தி.மு.க-வுக்கு தலைவரானோமா என திருநாவுக்கரசருக்குப் பிடிபடவில்லை. சொந்தக் கட்சியை விட்டுவிட்டு ஜெயலலிதாவைப் பற்றி மட்டுமே அதிகம் கவலைப்பட்ட அவரை, டெல்லி அழைத்து மந்திரித்து அனுப்பிய பிறகுதான் திருந்தினார். `தி.மு.க-வுடன்தான் கூட்டு' என அவர் சொன்னாலும் தி.மு.க அவரை வேண்டாத விருந்தாளியாகவே பார்க்கிறது. திருநாவுக்கரசர் - இளங்கோவன் சண்டை முடிந்துவிட்டது என நிம்மதி அடைந்ததும் நக்மா - குஷ்பு சண்டை தொடங்கிவிட்டது. காங்கிரஸ்காரர்கள், முடிவெடுக்க முடியாமல் இரண்டு கோஷ்டி களையும் ஆதரிக்கிறார்கள்.

பாரதிய ஜனதா, கண்கொத்திப் பாம்பாகக் காத்திருக்கிறது. அ.தி.மு.க-வுக்கு இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி அவர்கள் எதிர்பாராதது. முலாயம் சிங் குடும்பம் உடைந்ததைவிட இது அதிக மகிழ்ச்சியைத் தருகிறது. ஜெயலலிதாவின் பலவீனத்தைப் பயன்படுத்தி அ.தி.மு.க-வைத் தங்களுக்குச் சாதகமாக மாற்ற நினைக்கிறது பா.ஜ.க.

அப்போலோவுக்குச் சிறப்பு மருத்துவரைப் போல கவர்னர் அடிக்கடி வருவதும், ஸ்கேனிங் செய்பவருக்கு மட்டுமே தெரிந்த விஷயங்களை சுப்பிரமணியன்சுவாமி ட்வீட் செய்வதும் தூரத்தில் இருந்து காட்டப்படும் மோடிமஸ்தான் வேலைகள். ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களுக்கு, சசிகலா ஆட்சி ஒப்புதல் தருகிறது. மோடிக்கு தேவை, எம்.எல்.ஏ-க்கள் அல்ல; எம்.பி-க்களும் அவர்களது ஓட்டுக்களும். இதைப் பச்சையாகச் சொல்ல, பாரதிய ஜனதாவுக்குக் கூச்சம். புதுச்சேரியில் அ.தி.மு.க வேட்பாளரை அந்தக் கட்சி ஆதரிக்கிறது; தமிழ்நாட்டில் எதிர்க்கிறது. நெல்லித்தோப்புக்கும் அரவக்குறிச்சிக்கும் 500 கிலோமீட்டர் தூரமா? இல்லை. மெதுவாக நூல் விட்டுப் பார்க்கிறார்கள். ‘அ.தி.மு.க-வை அப்படியே பாரதிய ஜனதாவுடன் இணைக்கிறார்கள். தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா ஆட்சி மலரப்போகிறது’ என, சிலர் காவியை உருவிச் சிரிப்பதைப் பார்க்க, கன்றாவியாக இருக்கிறது.

இப்படி எல்லா கட்சிகளும் முட்டுச்சந்தில் மாட்டிக்கொண்டு முழிக்கின்றன. ஜெயலலிதாவுக்கு ‘அப்போலோ’ இருக்கிறது; கருணாநிதிக்கு ‘காவிரி’ இருக்கிறது; தமிழ்நாட்டுக்கு..?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு