Published:Updated:

குண்டு வெடித்த இடங்களை பார்வையிட்டார் மன்மோகன்சிங்!

 குண்டு வெடித்த இடங்களை பார்வையிட்டார் மன்மோகன்சிங்!
குண்டு வெடித்த இடங்களை பார்வையிட்டார் மன்மோகன்சிங்!

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் குண்டு வெடித்த இடங்களை பார்வையிட்ட பிரதமர் மன்மோகன்சிங்,காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

ஹைதராபாத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 16 பேர் கொல்லப்பட்டனர். 117 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குண்டுவெடித்த பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு தடயங்கள் சேரிக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இந்த வழக்கு மத்திய அரசின் சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு ஹைதராபாத் பேகம்பேட் விமான நிலையத்தில் வந்து இறங்கினார்.அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் விக்டோரியா நினைவு இல்லத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் குண்டு வெடிப்பு நடைபெற்ற தில்சுக் நகருக்கு பிரதமர் மன்மோகன்சிங் சென்றார்.

மன்மோகன்சிங் ஆறுதல்

இரண்டு குண்டுகள் வெடித்த இடங்களையும் 10 நிமிடங்கள் வரை பிரதமர் பார்வையிட்டார். எரிந்து போன வாகனங்கள், சேதம் அடைந்த கடைகளை அவர் பார்த்தார். குண்டு வெடிப்பில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் ஆம்னி மற்றும் யோதா ஆகிய இரு மருத்துவமனைகளுக்கு சென்று, அவர்களுக்கு மன்மோகன்சிங் ஆறுதல் கூறினார்.

 குண்டு வெடித்த இடங்களை பார்வையிட்டார் மன்மோகன்சிங்!

காயம் அடைந்த சிலருடைய குடும்பத்தினரை சந்தித்த பிரதமர், அவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதி அளித்தார். ஏறத்தாழ 40 நிமிடங்கள் வரை காயம் அடைந்தவர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்களுடன் உரையாடிய மன்மோகன்சிங், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கையும் கேட்டறிந்தார்.

பின்னர் பேட்டி அளித்த மன்மோகன்சிங், குண்டு வெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாகவும், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறினார்.

ஹைதராபாத் நகர மக்களின் துயரில் பங்கு பெறுவதற்காக இங்கு வந்திருக்கிறேன். இது போன்ற கொடூரமான தாக்குதல் நடந்தும், ஹைதராபாத் மக்கள் ஆத்திரத்துக்கு இடமளிக்காமல் பொறுமை காப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.துயரமான இந்த நேரத்தில் அனைவரும் தொடர்ந்து அமைதி காக்க வேண்டும்.காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறவர்கள் பொறுமை இழந்து விடாதீர்கள்.நீங்கள் விரைவில் குணம் அடைய அனைத்து உதவிகளையும் ஆந்திர மாநில அரசு செய்யும் என்று மேலும் கூறினார்.

பின்னர் ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டியிடம் குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்தும், விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் கேட்டந்தார்.