Published:Updated:

"காங்கிரஸ் - ஜே.டி (எஸ்) கூட்டணி தொடருமா?" - ஹெச். ராஜா!

"காங்கிரஸ் - ஜே.டி (எஸ்) கூட்டணி தொடருமா?" - ஹெச். ராஜா!
News
"காங்கிரஸ் - ஜே.டி (எஸ்) கூட்டணி தொடருமா?" - ஹெச். ராஜா!

"காங்கிரஸ் - ஜே.டி (எஸ்) கூட்டணி தொடருமா?" - ஹெச். ராஜா!

'பி.ஜே.பி. எதிர்ப்பு' என்ற ஒரே திட்டத்தை வைத்துக்கொண்டு கர்நாடகத்தில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு தொடர முடியாது என்று பி.ஜே.பி. தேசியச் செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். பீகாரில் நடந்தது போன்ற சூழ்நிலைதான் கர்நாடகத்தில் ஏற்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆளுநர் அழைப்பின்பேரில் 104 தொகுதிகளில் வெற்றிபெற்ற பி.ஜே.பி-யைச் சேர்ந்த பி.எஸ். எடியூரப்பா முதல்வராகப் பொறுப்பேற்றார். என்றாலும், குதிரைப்பேரத்தைத் தடுக்கும் வகையில், வெள்ளிக்கிழமை (மே 19) மாலை 4 மணிக்கு சட்டசபையில் பெரும்பான்மையை எடியூரப்பா நிருபிக்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்ட போபையா, புதிய எம்.எல்.ஏ-க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து முதல்வர் எடியூரப்பா சட்டசபையில் உருக்கமான உரையை நிகழ்த்தினார். எனினும் போதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை இல்லாததால், சட்டசபையில் நம்பிக்கை வாக்கு கோருவதற்கு முன்னரே, பதவியை ராஜினாமா செய்வதாக எடியூரப்பா அறிவித்தார். 
பெங்களுருவில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்று, ஆளுநர் வஜுபாய் வாலாவைச் சந்தித்து ராஜினாமா கடிதம் அளிப்பதாக அவர் கூறினார். தாம் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்கு ஆளுநர் 15 நாள் கெடு அளித்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்றைக்குள் வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டதால் இந்த நெருக்கடி ஏற்பட்டது. எடியூரப்பா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஆளுநர் அழைப்பு விடுத்ததும் பதவியேற்போம் என்று ஜே.டி (எஸ்) கட்சியின் மாநிலத் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் - ஜே.டி (எஸ்) கூட்டணிக்கு 117 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மொத்தம் 224 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக சட்டசபையில் 222 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. குமாரசாமி போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளார். இந்தச் சூழ்நிலையில், காங்கிரஸ் - ஜே.டி(எஸ்) கூட்டணியை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்ததும், புதிய அரசு பதவியேற்கும் என்று தெரிகிறது.

இதற்கிடையே கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை, முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா செய்தது, மெஜாரிட்டி இடங்களைக் கைப்பற்ற பி.ஜே.பி. தவறி விட்டது போன்றவை குறித்து அக்கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச். ராஜாவிடம் பேசினோம்.

"கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா செய்திருப்பது பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. வெறும் பி.ஜே.பி. எதிர்ப்பு மாத்திரமே அரசியல் ஸ்திரத்தன்மையை கொடுக்காது என்பதை நாம் பீகாரில் பார்த்தோம். அங்கு நிதிஷ் குமாருக்கும், லாலு பிரசாத்திற்கும் பி.ஜே.பி. எதிர்ப்பு என்பதைத் தவிர வேறு ஒரு திட்டமும் இல்லை. எனவே, அங்கு சர்க்கார் நிற்கவில்லை. அதுபோலத்தான் கர்நாடக மாநிலத்திலும் நடக்கும். காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜே.டி.எஸ்) ஆட்சி அமைத்தாலும்கூட அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போதே சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடக்கும். காங்கிரஸ் - ஜே.டி (எஸ்) கூட்டணி தொடராது; அந்தக் கூட்டணி நீடிக்க முடியாது.

நிதிஷ் குமாருடன் இணைந்து பீகாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது போன்று, கர்நாடக மாநிலத்தில் ஜே.டி (எஸ்) - பி.ஜே.பி. கூட்டணி ஆட்சி ஏற்படுமா என்பது பற்றி இப்போதைக்குக் கருத்து தெரிவிக்க இயலாது. 

கர்நாடகத்தில் ஏற்கெனவே ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசுக்கு எதிரான அலை நிலவியது. 104 தொகுதிகளில் வெற்றிபெற்ற பி.ஜே.பி கிட்டத்தட்ட எட்டு தொகுதிகளில் 800 வாக்குகளுக்கும் குறைவாகவே தோல்வியைத் தழுவியுள்ளது. எனவேதான், இந்தச் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் வெறும் 19 சதவிகித வாக்குகளுடன் 40 சீட்களைப் பெற்ற பி.ஜே.பி. இந்தமுறை, 37 சதவிகித வாக்குகளைப் பெற்று 104 சீட்களை வாங்கியிருப்பதே, மக்கள் பி.ஜே.பி-யை விரும்பியிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது" என்றார் ராஜா.