Published:Updated:

சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் விஜயகாந்த்!

விஜயகாந்த் மருத்துவச் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வது குறித்த கட்டுரை

சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் விஜயகாந்த்!
சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் விஜயகாந்த்!

மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த். அவருடன் அவரது மனைவி பிரேமலதாவும் செல்கிறார்.

சட்டசபையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையையே சிறிதும் பயப்படாமல் கேள்வி கேட்டவர், விஜயகாந்த். ஆனால் அவர், சமீபகாலமாக சமூக வலைதளங்கள்மூலம் வறுத்தெடுக்கப்பட்டுவருகிறார். அதற்குக் காரணம், அவரது உடல்நிலைதான். 

முன்புபோல அவரது உடல்நலம் இல்லாததால், முழுவீச்சில் அவரால் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியவில்லை. இருப்பினும், கட்சியைப் பலப்படுத்தும் வேலைகளில் தொடர்ந்து செயல்பட்டுவருகிறார். இதற்காக, தன் உடல்நிலை பற்றிக் கவலைப்படாமல் ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் பங்கேற்றுவருகிறார். குறிப்பாக, முன்புபோல அவரால் பேச முடியவில்லை. இதை நன்றாக உணர்ந்திருக்கும் அவரது தொண்டர்கள், அதைப் பற்றி பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அதற்காக அவர் சும்மா இருந்துவிடுவதும் இல்லை. தமிழகத்தில் நடக்கும் அரசியல் களேபரங்கள் தொடர்பாகக் குரல்கொடுத்துவருகிறார். சமீபகாலமாகப் பூதாகரமாய் வெடித்துவரும் காவிரி, நீட் தேர்வு, ஆசிரியர் பிரச்னைகள் உள்ளிட்டவற்றுக்கும் அவர் குரல்கொடுத்துவருகிறார். 

இப்படி நாட்டில் நடக்கும் பிரச்னைகள் தவிர, தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் செய்யும் செயல்கள்குறித்தும் விமர்சித்துவருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை நிறைய விமர்சனம் செய்திருந்தார். அதில், 'தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்திக்க வேண்டும் என அனுமதி கேட்டபோது, `'இன்று சூரசம்ஹாரம். கருணாநிதியைச் சந்திக்க உகந்த நாள் இல்லை' என ஸ்டாலின் தரப்பில் இருந்து பதில் வந்தது'' என்று கூறியிருந்தார். மேலும், 'நான் கருணாநிதியைச் சந்திக்க வேண்டும் என எண்ணியதை, ஸ்டாலின் ஏன் தடுத்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. கருணாநிதியிடம் உடல்நலம் விசாரிக்க மட்டுமே நான் விரும்பினேன். ஆனால், ஸ்டாலின் ஏன் பயப்படுகிறார் எனத் தெரியவில்லை. 2016 தேர்தலின்போதே ஸ்டாலின் முதல்வராகி இருக்க வேண்டியது. அப்போது நாங்கள் கேட்ட சீட்டை எங்களுக்கு அளிக்க மறுத்ததால், நாங்கள் அவருடன் கூட்டணி வைத்துக்கொள்ளவில்லை. அப்படி நடந்திருந்தால், இந்த நேரம் ஸ்டாலின் முதலமைச்சராக இருந்திருப்பார். அருமையான வாய்ப்பை ஸ்டாலின் தவறவிட்டு விட்டார்” என்றும் தெரிவித்திருந்தார். 

இது ஒருபுறமிருக்க, திரைத்துறையில் விஜயகாந்த் கால்பதித்து 40 ஆண்டுகள் ஆனதையொட்டி, தே.மு.தி.க சார்பில் விஜயகாந்துக்கு விழா எடுக்கப்பட்டது. கடந்த மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் நடைபெற்ற இந்த விழாவில், திரைத் துறையைச் சார்ந்த ஏராளமானவர்கள் கலந்துகொண்டு விஜயகாந்த் பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டனர். அந்த விழா, விஜயகாந்த் ரசிகர்களுக்கு விருந்தாகவே அமைந்தது.

இப்படியான அனைத்து நிகழ்ச்சிகளிலும் விஜயகாந்த், தன்னுடைய உடல்நலத்தைப் பற்றிச் சிறிதளவிலும் கவலைப்படாமல் கலந்துகொள்கிறார். ஆனாலும், அவரது குரல் முன்புபோல இல்லை. 'விஜயகாந்த்தின் மேடைப்பேச்சு புரியாமல் இருப்பதற்குக் காரணம், அவருக்கு தொண்டைப் பிரச்னை இருப்பதுதான்'' என்று அவரது மனைவி பிரேமலதா கூறியிருந்தார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றுவந்தார். அதேபோல,  2015-ம் ஆண்டும் சிகிச்சை பெறுவதற்காக சிங்கப்பூர் சென்றுவந்தார். 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ம் தேதி, உடல்நிலை குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த், அங்கேயே 10 நாள்களுக்கும் மேலாகத் தங்கியிருந்து சிகிச்சைபெற்றார். அதேபோல, 2017 நவம்பர் இறுதியிலும் சிங்கப்பூர் சென்றிருந்தார். 

இதுதொடர்பாக அப்போது தே.மு.தி.க வெளியிட்ட அறிக்கையில், 'தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனைக்குச் செல்வது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டும் சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் செல்ல இருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தச் சமயத்தில், சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் தங்கி அவர் சிகிச்சை பெற்ற புகைப்படமும் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், தொண்டையில் ஏற்பட்டுள்ள பாதிப்பைச் சரிப்படுத்த மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார். அவருடன் அவரது மனைவி பிரேமலதாவும் செல்கிறார்.