Published:Updated:

`கால் ஹிஸ்டரி; ஸ்கிரீன் ஷாட்; 2,000 கோடி!’ - பி.ஜெ-வைக் குறிவைக்கும் அடுத்த சர்ச்சை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`கால் ஹிஸ்டரி; ஸ்கிரீன் ஷாட்; 2,000 கோடி!’ - பி.ஜெ-வைக் குறிவைக்கும் அடுத்த சர்ச்சை
`கால் ஹிஸ்டரி; ஸ்கிரீன் ஷாட்; 2,000 கோடி!’ - பி.ஜெ-வைக் குறிவைக்கும் அடுத்த சர்ச்சை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து ஜெய்னுல் ஆபிதீன் நீக்கப்பட்டும், கணக்கு வழக்கு விவகாரங்களில் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது.

மிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து ஜெய்னுல் ஆபிதீன் நீக்கப்பட்டும், கணக்கு வழக்கு விவகாரங்களில் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. `தவ்ஹீத் ஜமாத்துக்கு 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருக்கின்றன. பி.ஜெ-வின் பொறுப்பில் மட்டும் மூன்று இலக்க அளவிலான தொகைகள் சிக்கியுள்ளன. அதை அவர் ஒப்படைப்பாரா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி" என்கின்றனர் தவ்ஹீத்துகள் வட்டாரத்தில். 

சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் பாலியல்ரீதியாகப் பேசிய குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த வாரம் டி.என்.டி.ஜே-வின் தலைவர் பொறுப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டார் பி.ஜெ என்கிற பி.ஜெய்னுல் ஆபிதீன். இதன் பிறகு, அமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமல், மண்ணடியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டைக் கவனித்து வருகிறார் பி.ஜெ. இதுதொடர்பாக, விசாரிக்க வருகிறவர்களிடமும் மனம் திறந்து பேசிக்கொண்டிருக்கிறார். `சிறிது இடைவெளிக்குப் பிறகு, பி.ஜெ மீண்டும் தவ்ஹீத்துக்குள் வந்துவிடுவார்' என்பதால், அவரை விலக்கி வைக்கும் தீர்மானத்தை மாவட்டந்தோறும் நிறைவேற்றி வருகின்றனர் டி.என்.டி.ஜே நிர்வாகிகள். நேற்று வெளியான சுற்றறிக்கை ஒன்றில் சில விஷயங்கள் விளக்கமாகத் தெளிவுபடுத்தப்பட்டிருந்தன. 

`அன்புள்ள கிளை நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கவனத்துக்கு...' என்ற தலைப்பில் வெளியான அந்த அறிக்கையில், 'பி.ஜெ மீதான நடவடிக்கை தொடர்பான கூடுதல் விளக்கங்களுக்காக நேற்று திருச்சியில் மாநிலச் செயற்குழு கூடியதை நீங்கள் அறிவீர்கள். பி.ஜெ மீதான குற்றச்சாட்டு, புகாராக சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் தரப்பில் மாநிலத் தலைமைக்குத் தரப்பட்டது. பி.ஜெ பதவி விலக வேண்டும், அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தாவா களத்திலிருந்தும் அவரை வெளியேற்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை அவர்கள் ஜமாத்திடம் முன்வைத்ததோடு, இதையே பி.ஜெ-விடம் தனிப்பட்ட முறையில் சொல்லி அவரையும் மிரட்டியிருக்கின்றனர். புகார் வந்ததையடுத்து, அதற்கான சாட்சிகள், ஆதாரங்கள் தொடர்பாகக் கேட்டபோது, சம்பந்தப்பட்ட பெண்ணின் சகோதரருடன் பி.ஜெ பேசிய ஆடியோவும் அதேபோன்று, அந்தப் பெண்ணின் சகோதரியிடம் பி.ஜெ பேசிய ஆடியோ ஒன்றும் அதிகாரபூர்வமாகச் சமர்ப்பிக்கப்பட்டது. அதோடு, சமீபத்தில் வெளியான 10 நிமிட ஆபாச உரையாடல் தொடர்பான கால் ஹிஸ்டரியும் ஸ்க்ரீன் ஷாட் வடிவில் தரப்பட்டது. சான்றுகள் போதுமான அளவில் இருந்த நிலையில் அதிர்ச்சியில் நிலைகுலைந்துபோன மாநில உயர்நிலைக்குழு, இது தொடர்பாக பி.ஜெ-வை தொலைபேசியில் அழைத்து, `உங்கள்மீது ஆதாரத்துடன் அந்தப் பெண் தரப்பு குற்றச்சாட்டு சுமத்தியிருக்கிறது, நீங்கள் குற்றம் செய்திருப்பது நிரூபணமாகியிருக்கிறது, இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன' எனக் கேட்டனர். சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மைதான் என அந்த உரையாடலில் பி.ஜெ ஒப்புக்கொண்டார் (அந்த உரையாடல் செயற்குழுவில் போட்டுக் காட்டப்பட்டது). 

வீடியோ வாக்குமூலம் தந்தாக வேண்டும் எனவும் அதற்காக நேரில் வருமாறும் உயர்நிலைக்குழு அவரை அழைத்தது. ஆனால், அதற்குத் தயக்கம் காட்டிய அவர், 'வீடியோ வாக்குமூலம் வேண்டாம், வேண்டுமென்றால் எழுதித் தருகிறேன்' எனச் சொல்லியிருக்கிறார். அதை ஏற்றுக்கொள்ளாத உயர்நிலைக் குழு, வீடியோ வாக்குமூலத்தைத் தொடர்ந்து வலியுறுத்தியும்கூட அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை. எனவே, அவர் தரப்பில் எழுத்துபூர்வமாக மட்டும் வாக்குமூலம் பெறப்பட்டு, ஜமாத்தைவிட்டு நிரந்தரமாக அவர் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. (அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கமில்லை). இதுபோக, இவரின் இத்தகைய செய்கைகள் முன்கூட்டியே பல மாநில நிர்வாகிகள் அறிந்து வைத்திருந்தார்கள் எனவும் அவருடன் சேர்ந்து இவர்களும் கூட்டு சதி செய்ததாகவும் பரப்பட்ட அவதூறுப் பிரசாரங்களை அனைத்து உயர்நிலைக்குழு உறுப்பினர்களும் திட்டவட்டமாக, அல்லாவை சாட்சியாக்கி மறுத்தனர். சையது இப்ராஹிம், சாதிக், சுலைமான், ஷம்சுல்லுஹா போன்றோர் இது தொடர்பாகப் பேசுகின்றபோது, அவரின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக இந்தச் செயலை இதுவரை நாங்கள் நம்பாமல்தான் இருந்தோம் எனவும் தற்போதுதான் இதன் உண்மைத்தன்மையை அறிகிறோம் எனப் பேசியது கண்கலங்க வைத்தது. 

பொதுமக்களைப் போன்று, மாநில நிர்வாகமும் அவரை உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்த்தே வந்திருக்கிறது என்பதையும் அவர்மீது துளியளவும் அவர்களுக்கு சந்தேகம் எழாதநிலைதான் இதுவரை இருந்தது என்பதையும் அவர்மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்திருந்த அனைவருக்கும் அந்த மனிதர் துரோகம் இழைத்துவிட்டார் என்பதையும் நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது. தொடர்ந்து எடுக்கப்பட்ட தீர்மானங்களில், இனி வரும் காலங்களில் பி.ஜெ எழுதிய குர்ஆன் தர்ஜுமா நூல்கள் ஆகியவற்றை, அவருடைய பெயரை நீக்கி, 'டி.என்.டி.ஜே அறிஞர் குழு' எனப் பெயர் மாற்றம் செய்து வெளியிடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது. அவருடைய ஆடியோ, வீடியோக்களைப் பொறுத்தவரை அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் வரை அதை எவருக்கும் வினியோகிப்பதில்லை எனவும், ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் அவற்றை மறைத்து வைப்பதெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எந்த நிலையிலும் நாம் கொண்டிருக்கும் சத்தியக் கொள்கை ஒன்றே நமக்கான ஒரே தலைமை என்பதை உளமார நம்பி செயல்படுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது' எனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். 

மாநிலச் செயற்குழு தீர்மானம் குறித்து நம்மிடம் பேசிய தவ்ஹீத் ஜமாத்தின் முக்கிய நிர்வாகி ஒருவர், "அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து இன்னமும் பி.ஜெ நீக்கப்படவில்லை. அதனால், வரக்கூடிய காலகட்டங்களில் அவர் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகளே அதிகம். இதை முறியடிக்கும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. டி.என்.டி.ஜேவைப் பொறுத்தவரையில் அதிகாரபூர்வமற்ற வகையில் வரக்கூடிய தொகைகள் மிக அதிகம். ஒவ்வொரு மாதமும் பல கோடி ரூபாய்  வந்துள்ளன. இப்படிக் கணக்கில் வராத தொகைகள் எல்லாம் தலைவரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். ஒருமுறை அதிகப்படியான தொகைகள் வந்தபோது, எதிர்காலத்துக்குப் பயன்படும் என அவற்றையெல்லாம் தங்கமாக மாற்றிவிட்டனர். அந்தவகையில் மூன்று இலக்க அளவிலான தொகைகள் முடங்கியுள்ளன. இந்தக் கணக்குகளை ஒப்படைக்க வேண்டிய இடத்தில் பி.ஜெ இருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில், இதைப் பி.ஜெ-விடமிருந்து எப்படிப் பெறுவது என்ற கவலைதான் நிர்வாகிகளை வாட்டி வதைக்கிறது. பி.ஜெ-வும் அந்தக் கணக்குகளை ஒப்படைக்கவில்லை. உதாரணமாக, சென்னையைப் புரட்டிப்போட்ட வெள்ள சேத நிவாரணத்துக்காக 30 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலானது. அந்தப் பணத்தில் 6 லட்ச ரூபாய் எங்கே போனது எனத் தெரியவில்லை. இந்தக் கணக்கு வழக்குகளை சிராஜ் என்பவர் பார்த்து வந்தார். இவருடைய மகனுக்குதான் தன்னுடைய மகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறார் பி.ஜெ. இந்தக் கணக்கை கேட்கப் போய்தான் அல்தாபிமீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. தனக்கு நெருக்கமானவர்களை மட்டுமே கணக்கு வழக்குகளில் பயன்படுத்தி வந்திருக்கிறார் பி.ஜெ" என விவரித்தவர், 

"பி.ஜெ படித்தது மூன்றாம் வகுப்புதான். ஆனால், தகவல் தொழில்நுட்ப விஷயங்களில் அவர் அத்துப்படியாக இருந்தார். 15 வருடங்களுக்கு முன்னே டச் மொபைலை பயன்படுத்தியவர். தவ்ஹீத் ஜமாத் அலுவலகத்தில் பி.ஜெ-வுக்கென்று தனியாக ஓர் அறை இருக்கிறது. அவர் தலைவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அந்த அறையை அவருக்காகப் பயன்படுத்தி வந்தார். அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த லேப்டாப், செல்போனிலிருந்துதான் பாலியல் ஆடியோக்களும் வீடியோக்களும் கைப்பற்றப்பட்டன. அவர் பயன்படுத்திய பாஸ்வேர்டைக் கண்டறிந்து இந்த வேலையைச் செய்துள்ளனர். இதன் பின்னணியில் சில விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. இந்த அமைப்புக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மகாராஷ்ட்ரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் 2,000 கோடி ரூபாய் வரையில் சொத்துகள் இருக்கின்றன. இவற்றை முழுமையாக வளைப்பதற்கு ஒரு டீம் வேலைபார்த்து வருகிறது. இதற்கு மாஸ்டர் மைண்டாக ஒருவர் இருக்கிறார். அந்த நபரை இரண்டு முறை ஜமாத்திலிருந்து விலக்கியும் வைத்துள்ளனர். அவர் தற்போது டி.என்.டி.ஜெ-வின் பொறுப்பிலும் இருக்கிறார். சொத்துகளைக் கைப்பற்றும் முடிவில் அவர் உட்பட சிலர் உறுதியாக உள்ளனர். அமைப்பைவிட்டு அல்தாபியை விலக்கி வைத்ததும் இந்த டீம்தான். அல்தாபி விலகிய பின்னர், இந்த ஆடியோ மூலம் பி.ஜெ-வையும் காலி செய்வதுதான் இலக்கு. அதை மிக எளிதாக சாதித்துவிட்டனர். கணக்கு வழக்குகளை பி.ஜெ ஒப்படைத்த பின்னர், அடுத்த ஆட்டம் தொடங்கப்போகிறது" என்றார் விரிவாக. 

`ஒவ்வொரு நிர்வாகிகளுக்கும் ஏ.சி வசதியுடன்கூடிய கேபின், மாதம்தோறும் சம்பளம், ஹைடெக் வசதிகள் என கார்ப்பரேட் கம்பெனிக்கு உண்டான அனைத்து இலக்கணங்களோடு செயல்பட்டு வந்த டி.என்.டி.ஜே, சொத்து, பணம், பெண் விவகாரங்களில் சிக்கி சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கிறது' என ஆதங்கப்படுகின்றனர் தவ்ஹீத்துகள். 

தவ்ஹீத் ஜமாத் சொத்து வில்லங்கம் தொடர்பாக, பி.ஜெ-வின் விளக்கம் பெற முயன்ற முயற்சிகளுக்கு இதுவரை பலன் இல்லை. இதுதொடர்பாக, அவர் விளக்கம் அளித்தால் பரிசீலனைக்குப் பின் வெளியிடத் தயாராக இருக்கிறோம்!
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு