Published:Updated:

பி.ஜே.பி-க்கு எதிரான கட்சிகளை ஒன்றுதிரட்ட தேவகவுடா முயற்சி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பி.ஜே.பி-க்கு எதிரான கட்சிகளை ஒன்றுதிரட்ட தேவகவுடா முயற்சி?
பி.ஜே.பி-க்கு எதிரான கட்சிகளை ஒன்றுதிரட்ட தேவகவுடா முயற்சி?

பி.ஜே.பி-க்கு எதிரான கட்சிகளை ஒன்றுதிரட்ட தேவகவுடா முயற்சி?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள், பி.ஜே.பி-க்கு சற்றே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அதேபோல் காங்கிரஸ் கட்சியும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் விதமாக கர்நாடக மாநிலத்தில் அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது.

மதச்சார்பற்ற ஜனதா தள மாநிலத் தலைவர் ஹெச்.டி.குமாரசாமி தலைமையில் கூட்டணி ஆட்சியமைக்க முன்வந்ததையடுத்து, பி.ஜே.பி-க்கு எதிராக எந்த நிலைப்பாட்டை எடுக்கவும், எவ்வளவு வேண்டுமானாலும் இறங்கிவரவும் தயார் என்பதை காங்கிரஸ் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது. 

கர்நாடக சட்டசபைக்கு 222 தொகுதிகளுக்கு நடைபெற்றத் தேர்தலில், 104 இடங்களில் பி.ஜே.பி. வெற்றிபெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தபோதிலும், அக்கட்சியால் மெஜாரிட்டிக்குத் தேவைப்படும் எட்டு உறுப்பினர்களின் ஆதரவைப் பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்கு முன்னரே, முதல்வராகப் பதவியேற்ற மூன்றே தினங்களில் பி.ஜே.பி. மூத்தத் தலைவர் பி.எஸ். எடியூரப்பா தன் பதவியை ராஜினாமா செய்தார்.

கர்நாடக மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமையும் நிலை ஏற்பட்டதுமே, காங்கிரஸ் கட்சி மேலிடம், குமாரசாமியை முதல்வராக அறிவித்தது. காங்கிரஸ் - ம.ஜ.தள கூட்டணி அரசு அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாலும், முதலில் ஆளுநர் வஜுபாய் வாலா, பி.ஜே.பி-க்கே அழைப்பு விடுத்தார். அதன்படி எடியூரப்பா பதவியேற்றாலும், உச்ச நீதிமன்றத் தலையீட்டால் உடனடியாக பெரும்பான்மையை நிருபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், எடியூரப்பா பெரும்பான்மை கிடைக்காது என்ற சூழலில் பதவியிலிருந்து விலகினார். அதன்பின்னர் காங்கிரஸ் - ஜே.டி.(எஸ்) கூட்டணியை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார் ஆளுநர். 

குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் - ஜே.டி.(எஸ்) கூட்டணி அரசு, பெங்களுருவில் நாளை பதவியேற்க உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் துணை முதல்வர் மற்றும் 20 அமைச்சர்கள் கூட்டணி அரசில் இடம்பெறுவார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. கர்நாடகத்தில் அமையவிருக்கும் புதிய அரசு குறித்து, புதுடெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை குமாரசாமி சந்தித்து  ஆலோசனை நடத்தியுள்ளார்.

குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்பு விழா, கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் விழா என்பதோடு மட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள மாநிலக் கட்சிகளின் ஒருங்கிணைப்பு விழா என்ற அடிப்படையிலேயே பார்க்கப்படுகிறது. அதன்படி, பி.ஜே.பி. ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் முதல்வர்கள், நாடு முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறாத மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் என பல்வேறு தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. பி.ஜே.பி. எதிர்ப்பு நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளின் தலைவர்கள், இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள குமாரசாமி, பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், மற்ற மாநிலங்களின் முதல்வர்களை நேரிலும், தொலைபேசி மூலமும் அழைப்பு விடுத்து வருகிறார். மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின், ஆந்திர முதல்வரும் தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாயு நாயுடு, தெலங்கானா முதல்வரும், டி.ஆர்.எஸ். கட்சித் தலைவருமான கே.சந்திரசேகர ராவ், கேரள முதல்வர் பினராயி விஜயன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பி.ஜே,பி. எதிர்ப்புத் தளமாக, மாநிலக் கட்சிகளை ஒன்றிணைக்கும் வகையில் இந்த விழா நடைபெற இருப்பது பி.ஜே.பி. தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் பி.ஜே.பி-யை ஆட்சியமைக்க விடாமல் தடுத்ததில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு உள்ள பங்கு என்பது, தமிழகத்திலும் எதிர்காலத்தில் எதிரொலிக்கக்கூடும் என்ற சூழலை உருவாக்கியுள்ளது. 

இவர்களில் சந்திரசேகர ராவ், தேசிய அளவில் பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் அல்லாத கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினையும் சென்னை வந்து அண்மையில் சந்தித்து விட்டுச் சென்றார். குமாரசாமி பதவியேற்பு விழா பெங்களுருவில் புதன்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் நடைபெறவுள்ளது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு குமாரசாமி முதல்வராகப் பதவியேற்க இருப்பதால் பதவியேற்பு விழாவை பிரமாண்டமாக நடத்த மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா திட்டமிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக மாநிலத் தேர்தல் பற்றி கருத்துத் தெரிவித்த தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, "நாங்கள் காங்கிரஸ் கூட்டணியில் ஏற்கெனவே இருந்து வருகிறோம். எந்தவொரு கொள்கை முடிவானாலும், கட்சித் தலைமையே எடுக்கும்" என்றார். 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறுகையில், "காங்கிரஸ்-ஜே.டி (எஸ்) கூட்டணிக்கு 55-56 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன. கர்நாடக மக்கள் பி.ஜே.பி-க்கு எதிராக வாக்களித்துள்ளனர் என்பதையே இது வெளிப்படுத்துகிறது. நாடு முழுவதுமே இதே நிலைதான் காணப்படுகிறது. ஒருசில மாநிலங்களில் கட்சிகள் பிரிந்து கிடக்கின்றன" என்றார்.

நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் அடுத்தாண்டு மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பி.ஜே.பி.-யைத் தவிர்த்து, நாடு தழுவிய அளவில் ஒரு வலுவான கூட்டணியை அமைப்பதற்கான தளமாகவே கர்நாடக மாநில முதல்வர் பதவியேற்பு விழாவைப் பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸும், மற்ற கட்சிகளும் திட்டமிட்டுள்ளன.

அதேநேரத்தில் கர்நாடக மாநிலத்தில் `கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனது' என்ற பழமொழியை நினைவுபடுத்தும் வகையில் பி.ஜே.பி. சூடுபட்டதால், நாடாளுமன்றத் தேர்தலில் இதுபோன்றதொரு நிலை ஏற்படாமல் தவிர்க்க, எல்லா முயற்சிகளையும் அக்கட்சி எடுக்கும் என எதிர்பார்க்கலாம். பல்வேறு மாநிலங்களில் உள்ள சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க பி.ஜே.பி-யும் பிரயத்தனங்களை மேற்கொள்ளும்.

நாடு முழுவதும் பல மாநிலங்களில் பி.ஜே.பி-க்கு எதிராக உள்ள கட்சிகளின் தலைவர்களை ஒரே மேடையில் நிறுத்த முன்னாள் பிரதமர் தேவகவுடா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

ஏற்கெனவே, காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளை ஒன்று திரட்டும் முயற்சியாகவும் கர்நாடக அரசு பதவியேற்பு விழா அமையக்கூடும். 

எனவே, பெங்களுருவில் நாளை நடைபெறும் குமாரசாமியின் பதவியேற்பு விழா, தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற விழாவாகப் பார்க்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு