Published:Updated:

சினிமா தயாரிப்பாளர் டு சி.எம் - குமாரசாமி கடந்து வந்த பாதை

சினிமா தயாரிப்பாளர் டு சி.எம் - குமாரசாமி கடந்து வந்த பாதை

குமாரசாமி. 2018-ம் ஆண்டு கர்நாடக தேர்தல் பிரசாரத்தின்போது ``இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மஜத 'கிங் மேக்கர்' அல்ல 'கிங்' ஆகும்" என்று கூறினார் குமாரசாமி. வெறும் 38 சீட்டுகளை மட்டும் வைத்து தான் ஒரு 'கிங்' என்று நிரூபித்தும் காட்டிவிட்டார்.

சினிமா தயாரிப்பாளர் டு சி.எம் - குமாரசாமி கடந்து வந்த பாதை

குமாரசாமி. 2018-ம் ஆண்டு கர்நாடக தேர்தல் பிரசாரத்தின்போது ``இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மஜத 'கிங் மேக்கர்' அல்ல 'கிங்' ஆகும்" என்று கூறினார் குமாரசாமி. வெறும் 38 சீட்டுகளை மட்டும் வைத்து தான் ஒரு 'கிங்' என்று நிரூபித்தும் காட்டிவிட்டார்.

Published:Updated:
சினிமா தயாரிப்பாளர் டு சி.எம் - குமாரசாமி கடந்து வந்த பாதை

இளம் வயதில் அரசியலில் ஆர்வமில்லை; தேர்தலில் நின்றபோது அவர் கட்சி 50 சீட்டுகளைக்கூடத் தொட்டதில்லை; ஒருமுறைகூட அமைச்சராகப் பணியாற்றியதில்லை. ஆனால், இன்று இரண்டாவது முறையாக முதல்வர் அரியணை ஏறுகிறார் ஹெச்.டி.குமாரசாமி என்றால் நம்பவா முடிகிறது. ஆம்! நம்பித்தான் ஆக வேண்டும், கர்நாடக மாநிலத்தின் முதல்வராக இன்று பதவியேற்கவுள்ளார் குமாரசாமி. சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடகத் தேர்தல் பிரசாரத்தின்போது, ``இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் 'கிங் மேக்கர்' அல்ல 'கிங்' ஆகும்" என்று கூறினார் குமாரசாமி. வெறும் 38 சீட்டுகளை மட்டும் வைத்து, தான் ஒரு 'கிங்' என்று நிரூபித்தும் காட்டிவிட்டார்.

யார் இந்தக் குமாரசாமி?

முன்னாள் இந்தியப் பிரதமர் தேவகவுடாவின் மகன்தான் ஹரதனஹல்லி தேவகவுடா குமாரசாமி என்றழைக்கப்படும் ஹெச்.டி.குமாரசாமி. இவர், கர்நாடக மாநிலத்திலுள்ள ஹசன் எனும் மாவட்டத்தில் பிறந்தவர். குமாரசாமியுடன் பிறந்தவர்கள் மூன்று பேர். ஹெச்.டி.ரமேஷ் மற்றும் ஹெச்.டி.பாலகிருஷ்ண கவுடா ஆகிய இருவரும் அரசியலில் இல்லை. இவரின் மூத்த சகோதரர் ஹெச்.டி.ரேவண்ணா முன்னாள் அமைச்சராக இருந்தவர்.

படிப்பு

ஹசன் மாவட்டத்தில் ஆரம்பக் கல்வி பயின்றார் குமாரசாமி. அவர், படிப்பில் பின்தங்கியவராகவே இருந்தாலும், பெங்களூருவிலுள்ள ஜெயநகர் பகுதியில் அமைந்திருக்கும் தனியார் பள்ளியில் உயர்கல்வியையும், விஜயா கல்லூரியில் பியுசி-யையும், ஜெயநகர் நேஷனல் கல்லூரியில் இளங்கலையையும் (B.Sc.,) படித்து நிறைவு செய்தார்.
 
சினிமாப் பயணம்

இன்று அரசியல்வாதியாக அறியப்படும் குமாரசாமி, இளம்வயதில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்த சினிமா தயாரிப்பாளர். தன் தந்தை முன்னாள் இந்தியப் பிரதமராக இருந்தவர் என்றாலும்கூட ஆரம்பக் காலகட்டத்தில் குமாரசாமிக்கு அரசியல்மீது பெரிதாக ஆர்வம் எதுவும் இல்லை. சினிமா தயாரிப்பு மற்றும் விநியோகத்தில்தான் குமாரசாமிக்கு ஈர்ப்பு இருந்தது. சிறுவயது முதலே கன்னட 'சூப்பர் ஸ்டார்' ராஜ்குமாரின் தீவிர ரசிகர் குமாரசாமி. ராஜ்குமார் படங்களில் அணிவது போன்ற உடைகளைத் தனக்கென பிரத்யேகமாக வடிவமைத்து உடுத்திக்கொள்வாராம் இவர்.

தன் அம்மா சென்னம்மாவின் நினைவாக, 'சென்னாம்பிகா ஃபிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி பல கன்னடப் படங்களைத் தயாரித்துள்ளார். தமிழில், விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார் நடித்து வெளிவந்த வெற்றித் திரைப்படம் 'சூர்யவம்சம்'. அந்தப் படத்தின் கன்னட ரீமேக்கான 'சூர்ய வம்ஷா' படத்தைத் தயாரித்தவர் குமாரசாமி. தன் மகன் நிகில் கெளடா நடித்து 2016-ம் ஆண்டு வெளிவந்த 'ஜாகுவார்' படத்தைத் தெலுங்கு, கன்னடம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தயாரித்தார்.

2017-ம் ஆண்டு ஹெச்.டி.குமாரசாமியின் 20 மாத ஆட்சிக் காலத்தை (2006-2007) மையமாக வைத்து 'சென்னாம்பிகா ஃபிலிம்ஸி'ன் ஆஸ்தான இயக்குநர் எஸ்.நாராயண், 'பூமி புத்ரா' என்ற பெயரில் படம் ஒன்றைத் தொடங்கினார். அந்தப் படத்தில் குமாரசாமி வேடத்தில் நடிக்க 'ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்' ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். 'ஏ ஸ்டோரி ஆஃப் லிவ்விங் லெஜண்ட்' என்ற டேக் உடன் இரண்டு ஃபஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியிடப்பட்டன. ஆனால், சில பிரச்னைகளால் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. 

குடும்ப வாழ்க்கை

1986-ம் ஆண்டு அனிதா என்பவரை முதலாவதாகத் திருமணம் செய்துகொண்டார் குமாரசாமி. இவர்கள் இருவருக்கும் பிறந்த மகன்தான் கன்னட நடிகர் நிகில் கவுடா. 2006-ம் ஆண்டு கன்னடப் பட நடிகையும், தமிழில் 'இயற்கை' படத்தில் கதாநாயகியாக நடித்தவருமான 'குட்டி ராதிகா'வை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஷமிகா என்றொரு மகள் இருக்கிறார்.

``குமாரசாமி முதல் மனைவி அனிதா உயிருடன் இருக்கும்போதே குட்டி ராதிகாவை ரகசிய திருமணம் செய்துள்ளார். இது, சட்ட விரோதமான செயலாகும். இதனால், அப்போது அவர் வகித்த மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டும்" என்று வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 

சீ.டி குமாரா

பிற கட்சிகளால் நடத்தப்பெறும் ஊழல்களை வெளிக்கொண்டு வருவதில் கில்லாடியாகத் திகழ்ந்தார் குமாரசாமி. அந்த ஊழல் பற்றிய ரகசிய தகவல்களை ஆடியோ மற்றும் வீடியோ சீ.டி-க்களாக வெளியிடுவது இவர் வழக்கம். எனவே, இவரை 'சீ.டி குமாரா' என்ற சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கின்றனர் கர்நாடக மக்கள். தொண்டர்கள் மத்தியில் 'குமாரண்ணா' என்று அன்பாக அறியப்படுகிறார். இவருடைய ஆட்சிக்காலத்தை 'குமார பர்வா' என்று அழைக்கின்றனர் மதச்சார்பற்ற ஜனதா தள தொண்டர்கள். கன்னடத்தில், `பர்வா' என்றால் `சகாப்தம்' என்று பொருள்.

அரசியல்

ஆரம்பகாலத்தில் அரசியலில் ஈடுபாடு காட்டவில்லை என்றாலும், தன் 37-வது வயதில் அரசியலில் கால்பதித்தார் குமாரசாமி. 1996-ம் ஆண்டு ராமநகரா மாவட்டத்தின் கனகபுரா தொகுதியில்  வெற்றிபெற்று மக்களவை உறுப்பினரானார். பின்னர், அதே தொகுதியில் 1998-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் டெபாசிட் இழந்து படுதோல்வியடைந்தார். 1999-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சாத்தனூர் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் தோல்வியடைந்தார். 

2004-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ராமநகரா தொகுதியில் வெற்றிபெற்றார். அந்தத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், ம.ஜ.த ஆகிய எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறாமல், தொங்கு சட்டப்பேரவை ஏற்பட்டது. இதனால் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த இடையே கூட்டணி ஏற்பட்டு, இரண்டு கட்சிகளும் தலா 30 மாதங்கள் முதல்வர் பதவியேற்பது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி முதல் 30 மாதங்கள் காங்கிரஸ் தலைவர் என்.தரம்சிங் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தது. துணை முதல்வராக ம.ஜ.த கட்சியின் சித்தராமையா பதவியேற்றார். இதனிடையே, தனக்கு முதல்வர் பதவி வழங்காததால் ம.ஜ.த கட்சியைப் பிளவுபடுத்தி காங்கிரஸுடன் கூட்டணி வைத்து முதல்வராகத் திட்டமிட்டார் சித்தராமையா. இதைக் காரணமாகவைத்து, 2006-ம் ஆண்டு ம.ஜ.த-வின் 42 எம்.எல்.ஏ-க்களுடன் காங்கிரஸைவிட்டு வெளியேறி, 79 எம்.எல்.ஏ-க்களைப் பெற்றிருந்த பி.ஜே.பி-யுடன் கூட்டணி அமைத்து முதல்வரானார் குமாரசாமி. தலா 20 மாதங்கள் இரண்டு கட்சியினரும் ஆட்சி செய்யலாம் என்ற ஒப்பந்தத்துடன் அமைந்தது மஜத - பி.ஜே.பி. கூட்டணி.

2006, பிப்ரவரி 3-ம் தேதி கர்நாடகத்தின் 18-வது முதல்வராகப் பதவியேற்றார் குமாரசாமி. "நான் முதல்வரானது ஒரு விபத்து" என்று கூறிய குமாரசாமி, அவர் நடத்திய 20 மாத கால ஆட்சியில் மக்களிடம் நல்ல பெயர் பெற்றார். கிராம தரிசனம், மக்கள் தரிசனம் போன்ற பல புதிய திட்டங்கள் மூலம் எளிய மக்களின் தலைவரானார் குமாரசாமி. அவரின் 20 மாத கால ஆட்சிக்குப்பின்,தன் தந்தையின் ஆலோசனையை மீறி பி.ஜே.பி-க்கு ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்க மறுப்புத் தெரிவித்தார். எனவே, பி.ஜே.பி. தலைவர் எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்ற ஒரே வாரத்தில் ஆட்சி கவிழ்ந்தது.

2008-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 28 இடங்களை மட்டுமே கைப்பற்றி ம.ஜ.த படுதோல்வியடைந்தது. அதன்பின் ம.ஜ.த-வின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார் குமாரசாமி. தலைவராகப் பதவியேற்றபின் கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அதன் விளைவாக, 2013-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 40 இடங்களைக் கைப்பற்றி 18.96 ஆக இருந்த வாக்குச் சதவிகிதத்தை 20.09 ஆக உயர்த்தியதோடு எதிர்க்கட்சித் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராமநகரா மற்றும் சென்னபட்னா ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட குமாரசாமி, இரண்டு தொகுதிகளிலும் வெற்றியடைந்தார். அதிலும், ராமநகரா தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தபின் பிரசாரத்துக்கு ஒருமுறைகூட நேரடியாகச் செல்லாமலேயே வெற்றிபெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்தலில் 2008-இல் எடியூரப்பாவின் பி.ஜே.பி. ஆட்சியைக் கவிழ்த்ததால் குமாரசாமியைப் பழி தீர்ப்பார் என்றெல்லாம் எதிர்பார்ப்பைக் கிளப்பினர். ஆனால், வெறும் 38 இடங்களை மட்டும் கைப்பற்றி காங்கிரஸுடன் கூட்டணி வைத்து,  ஒரே வாரத்துக்குள்  எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து இறக்கி இன்று மீண்டும்  அரியணை ஏறியுள்ளார் ஹெச்.டி.குமாரசாமி. ஐந்தாண்டுகள் ஆட்சியைத் தொடருவாரா என்பதுதான் குமாராசாமியின் முன்னிற்கும் மிகப்பெரிய டாஸ்க்...