Published:Updated:

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு தயங்குவது ஏன்? - சி.பி.எம்!

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு தயங்குவது ஏன்? - சி.பி.எம்!
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு தயங்குவது ஏன்? - சி.பி.எம்!

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு தயங்குவது ஏன்? - சி.பி.எம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டம் வன்முறையாக வெடித்து, போலீஸாருக்கும், போராட்டக் குழுவினருக்கும் இடையே மோதலாக மாறியது. போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவிப் பொதுமக்கள் 12 பேர் பலியாகி விட்டனர்.

தென் மாவட்டங்களில் இதுவரை நடந்திராத வகையில் நேற்றைய துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது அல்லது அரங்கேற்றப்பட்டுள்ளது என்று கூறலாம். ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிராகக் கடந்த 100 நாள்களாக அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராம மக்களிடையே திட்டமிட்டு ஒரு தகவல் பரப்பப்பட்டது. அதாவது, சம்பவம் நடைபெற்ற மே 22- ம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெருந்திரள் பேரணி நடத்தப்படும் என்றும், அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உஷாரான போலீஸார் மற்றும் உயர் அதிகாரிகள், கலவரம் ஏற்படும் சூழலில் துப்பாக்கிச் சூடு நடத்தி போராட்டக்காரர்களை கலைத்துவிட வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. 

தூத்துக்குடியில் நேற்று நடத்தப்பட்ட போலீஸ் துப்பாக்கிச் சூடு, தென் மாவட்டங்களில் அரங்கேற்றப்பட்ட மிகப்பெரிய துப்பாக்கிச் சூடு சம்பவமாகும். தவிர, நேற்றையத் தாக்குதலில்தான் இதுவரை இல்லாத அளவு மிகஅதிகளவில் உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்மைக்காலத்தில் அரங்கேறியுள்ள மிகப்பெரிய போலீஸ் துப்பாக்கிச் சூடு சம்பவம் என்றும், மிக மோசமான கொலைவெறித் தாக்குதல் என்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் பெயர், விவரங்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர். இறந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களின் உறவினர்கள் மீதும் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது, வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சும் செயலாகும்.

இதற்கிடையே ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்த முக்கியப் பிரமுகர்கள் பலர், போலீஸாரால் துப்பாக்கிச் சூடு என்ற பெயரில் குறிவைத்து கொல்லப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது வன்முறை வெடித்ததாலும், போராட்டக்காரர்களின் கைஓங்கியதாலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகக் காவல்துறை தரப்பு தகவல்கள் தெரிவித்த போதிலும், ஒரு முடிவெடுத்த பின்னரே, போலீஸார் இந்தத் தாக்குதலை அரங்கேற்றி இருப்பதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த மோதலில் காவல்துறையினர் செய்த தவறுகள் பற்றி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலப் பொதுச் செயலாளர் கே. பாலகிருஷ்ணனிடம் பேசினோம்.

``காவல்துறை இந்தத் துப்பாக்கிச் சூட்டை திட்டமிட்டே நடத்தியிருக்கிறது. இது யதேச்சையாக நடந்த சம்பவமே அல்ல என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏற்கெனவே நாங்கள் தெளிவாகத் தெரிவித்துள்ளோம். ஏனென்றால், சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் 144 தடையுத்தரவைப் பிறப்பிக்கிறார்கள். கலெக்டர் அலுவலகத்தை நோக்கிச் செல்லும் பேரணிக்காக, இத்தனை பேர் பங்கேற்பார்கள் என்பது உளவுத்துறைக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஒரு பதற்றமான சூழ்நிலை இருக்கும் என்பதும் காவல்துறைக்குத் தெரியாமல் இருக்க முடியாது. பேரணியில் பங்கேற்றவர்கள், கலெக்டரைப் பார்க்கச் செல்லும் நிலையில், அவர் அலுவலகத்தில் இல்லாமல் வெளியே சென்று விடுகிறார். 144 உத்தரவு போடும் கலெக்டரே வெளியே சென்றுவிடுகிறார் எனும்போது, மக்களைச் சந்தித்துப் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த அரசுத்தரப்பில் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அதற்கான வாய்ப்புகளை அரசாங்கம் தவறவிட்டு விட்டது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை ஓரிரு நாள்களுக்கு முன்பே அழைத்துப் பேசியிருக்க வேண்டும். 

ஸ்டெர்லைட் ஆலையை மூட இந்த அரசு பிடிவாதமாக மறுப்பது ஏன்? தமிழ்நாட்டில் இதற்கு முன் தொழிற்சாலைகள் மூடப்பட்டதே இல்லையா?  `ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடுகிறோம்' என்று அரசு அறிவித்திருக்குமேயானால், இந்தப் பிரச்னையே எழுந்திருக்காது. போராட்டக்காரர்களும் தங்கள் போராட்டங்களைக் கைவிட்டு கலைந்து சென்றிருப்பார்கள். பிரச்னை முடிவுக்கு வந்திருக்கும். அப்படிப்பார்த்தால் நோக்கியா தொழிற்சாலையில் 15 ஆயிரம் பேர் வேலை செய்தனர். அத்தனை பேரையும் தெருவில் நிறுத்திவிட்டு ஆலையை மூடிவிடவில்லையா? நோக்கியா ஆலை நிர்வாகத்தை இந்த அரசு என்ன செய்து விட்டது? ஆனால், ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மட்டும் மூட மாட்டோம் என்று சொல்வது ஏன் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. 
மக்களா, ஆலை நிர்வாகமா என்று பார்த்தால், மக்கள்தாம் என்று அரசு தெரிவிக்க வேண்டியதுதானே. மக்களின் எதிர்ப்பு குறித்து ஆலை நிர்வாகத்திடம் எடுத்துக் கூறி சுமுகத் தீர்வு காண வேண்டியதுதானே? சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளதால், விரிவாக்கத்திற்கு அனுமதி கொடுக்க முடியாது என்று சொல்ல ஏன் அரசு தயங்குகிறது? இந்த ஆலை விவகாரத்தின் பின்னணியில் மத்திய அரசின் பங்கு உள்ளது. மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சொல்கிறார், `இவ்வளவு பணம் செலவு செய்து தொழிற்சாலை நடத்தும் உரிமையாளர் எப்படி, அதை மூடுவார்?' என்று. அவர் இப்படிக் கேட்பதிலிருந்தே நமக்கு அதன் பின்னணி என்ன என்பது புலனாகிறது. நாடு முழுவதும் எத்தனையோ தொழிற்சாலைகள், வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் பெற்றுக்கொண்டு, அந்தப் பணத்தைத் திருப்பிச் செலுத்தாமல் மூடிவிட்டதால், பல வங்கிகள் திவாலாகி உள்ளதையும் பார்க்கிறோம்.

தவிர, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை காவல்துறையினர் மட்டுமல்லாது, மாநில அரசே திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளது. காவல்துறைக்கும், மக்களுக்குமான மோதலாக இதை மாற்றி விட்டது. தமிழ்நாட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்த்து மக்களின் போராட்டங்களை வளர விடக்கூடாது என்ற நோக்கில் நடத்தப்பட்ட செயலாகவே கருதலாம். நெடுவாசல், கதிராமங்கலம், நாகப்பட்டினம், கூடங்குளம் போன்ற இடங்களில் எல்லாம் மக்கள் போராட்டம் தீவிரமடைந்தது. அதுபோன்ற நிகழ்வுகளைத் தொடர விடக்கூடாது என்ற நோக்கிலேயே இந்தச் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. ஆகவே கார்ப்பரேட் நிறுவனங்களைத் திருப்திப்படுத்துவதற்காக, மக்களைப் பலியிட்டு, அவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த அரசு துணிந்து இந்தச் செயலை நிறைவேற்றியிருப்பதாகவே பார்க்கப்படுகிறது" என்றார் தீர்க்கமாக.

அடுத்த கட்டுரைக்கு