Published:Updated:

இன்றைய ஆட்சி ‘ஜே ஜே’வா... ‘ச்சே’வா? வெளுத்துவாங்கும் கழக நிர்வாகிகள்!

இன்றைய ஆட்சி ‘ஜே ஜே’வா... ‘ச்சே’வா? வெளுத்துவாங்கும் கழக நிர்வாகிகள்!
இன்றைய ஆட்சி ‘ஜே ஜே’வா... ‘ச்சே’வா? வெளுத்துவாங்கும் கழக நிர்வாகிகள்!

“தமிழகத்தில் நடைபெறும் களேபரங்களுக்கெல்லாம் என்ன காரணம், இன்றைய ஆட்சி எப்படியிருக்கிறது” எனக் கழக நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்... அவர்கள் சொன்ன கருத்துகள் எல்லாம் காரசாரமானவையாக இருந்தாலும், உண்மையிலேயே நியாயமானவை; நிதர்சனமானவை.

காலி (வி) யாக்குகிறது!

“தமிழகத்தைப் பொறுத்தவரை எல்லாவற்றையும் ‘காலி’யாக்க வேண்டும் அல்லது எல்லோரையும் ‘காவி’யாக்க வேண்டும் என்று நினைக்கிறது மத்திய அரசு. அதற்கு ஆதரவாகத் தலையாட்டிக்கொண்டிருக்கிறது அம்மா வழிவந்த தற்போதைய தமிழக அரசு. அதனால்தான், தங்களின் தேவைக்காக முதலில் அவர்கள் அடிமையாய் இருக்கிறார்கள்; பின்பு அவர்களுக்காக, நம்மையும் அடிமையாக்கப் பார்க்கிறார்கள். அதையும் மீறி எழுபவர்களை, ஆட்சி அதிகாரத்தாலும்  அராஜகத்தாலும் காவல்துறையை விட்டு அடக்கியாள்கிறார்கள். குறிப்பாக, அம்மாவின் (முன்னாள் முதல்வர் ஜெயலலிதா) மரணத்துக்குப் பிறகு, அவர் உருவாக்கி வைத்துவிட்டுச் சென்ற ஆட்சி, இன்றைய ஆளும் தரப்பினரால் மிகவும் கேவலமான நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது; தலைகுனிவைச் சந்தித்துவருகிறது; தலைகீழ் மாற்றத்துக்கு ஆளாகி நிற்கிறது. 

ஆட்டுவிக்கும் மத்திய அரசு!

அன்றைய காலத்தில் அதிகார பலம் மிக்கதாக இருந்த தி.மு.க-வை வீழ்த்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக அரியாசனத்தில் அமர்ந்து வரலாற்றை மாற்றி எழுதிய தலைவர்கள் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும். அவர்களைப் போலத்தான் இன்றும் அ.தி.மு.க-வில் இரண்டு தலைவர்கள் இருக்கின்றனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர்  புதிய மாற்றத்தை விதைத்தவர்கள் என்றால், இப்போதுள்ள தலைவர்கள் போடப்பட்ட மாற்றத்தையே பொசுக்குபவர்கள். அதற்கு முதல் உதாரணம், எம்.ஜி.ஆர் வகுத்த அ.தி.மு.க-வின் விதிமுறைகளை எல்லாம் ஒழித்துக்கட்டி, புதிதாகச் சில விதிகளை உருவாக்கியிருப்பதுதான். இது, கட்சியில் மட்டுமல்ல, ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஆட்சியிலும் விரிவடைந்திருக்கிறது. இப்போதைய ஆட்சியாளர்களால் தமிழகத்தில் இனி அ.தி.மு.க-வின் சுவடே இல்லாத அளவுக்குப் போய்விடலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. ஆனால், அவர்களுக்கு அதைப் பற்றி எல்லாம் கொஞ்சம்கூட கவலையில்லை. மத்திய அரசின் ஆட்டுவிப்புக்குத் தகுந்தபடி, ஆட்சியாளர்கள் ஆடிக்கொண்டிருக்கிறார்கள் என்றே கூறலாம். அதன் விளைவுதான், தமிழக மக்கள் சந்திக்கும் எண்ணற்ற பிரச்னைகள். 

நீட் தேர்வு பிரச்னை!

குறிப்பாக, ‘நீட் தேர்வே வேண்டாம்’ என்றவர் ஜெயலலிதா. ஆனால், அந்தத் தேர்வைத்தான் இன்றைய அரசியல்வாதிகள் தங்களுடைய சுயலாபத்துக்காக தமிழகத்துக்குள் கொண்டுவந்து, ஏழை மாணவர்கள் மருத்துவத் துறையில் தலையெடுக்க முடியாத அளவுக்குச் செய்துவிட்டனர். நீட் தேர்வை தமிழகத்தில் கொண்டுவருவதற்கு மாணவி அனிதா உட்பட சில உயிர்களும் பறிபோயின. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என எதிர்ப்புக் கிளம்பிய நிலையில், ஆளும் தமிழக அரசாங்கம் அதைக் கொஞ்சம்கூடச் செவிமடுக்கவில்லை. இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வின்போது, சோதனை என்ற பெயரில் நடந்த கொடுமை கொஞ்சநஞ்சமல்ல. மேலும், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கேரளா, ராஜஸ்தானுக்குச் சென்று நீட் தேர்வு எழுதும் சூழலும் உருவானது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, கிராமங்களில் இருந்து வரும் மாணவர்கள், குறித்த நேரத்துக்குள் பெருநகரங்களில் தங்களுக்கான தேர்வுக்கூடங்களைக் கண்டுபிடிப்பதே சிரமம் என்கிறபோது, மொழி தெரியாத மாநிலங்களில் அவர்களுக்குத் தேர்வு மையத்தை ஒதுக்கியது எந்த விதத்தில் நியாயம்? இதுபற்றி இன்றைய ஆட்சியாளர்கள் சிந்தித்திருக்க வேண்டாமா... அதற்காகச் செயல்பட்டிருக்க வேண்டாமா? இதைத்தான் ஜெயலலிதா செய்தாரா... இல்லையே? ஆனால், அவர்வழி வந்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், துரிதமாகச் செயல்பட்டார்கள், தங்களுடைய சுயலாபத்துக்காக?! அதன் விளைவாக நடந்தது என்னவோ, தங்கள் குழந்தைகளை நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்கு அழைத்துச்சென்ற பெற்றோர்களின் உயிர்ப்பலிதான்.  

காவிரிப் பிரச்னை!

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதற்காக சட்டரீதியாகப் போராடி, அதில் வெற்றிகண்டவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், அவர்வழி வந்த இன்றைய ஆட்சியாளர்கள் அனைவரும் காவிரிக்காகப் போராடுகிறார்களோ இல்லையோ, தங்களுடைய ஆட்சியைத் தக்கவைப்பதற்காகத் தினம்தினம் போராடிக்கொண்டிருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்காத மத்திய அரசாங்கத்தை எதிர்த்து இவர்கள் செய்தது என்ன தெரியுமா? பெயரளவுக்கு, ஒருநாள் உண்ணாவிரதம் நடத்தியதோடு சரி. ஆனால், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்காக ஒன்றுபட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் நடத்திய ‘கறுப்பு’ப் போராட்டத்தைக் கண்டு பிரதமர் நரேந்திர மோடியே கடுப்பாகிப்போனார். இங்கிருக்கும் கறுப்பாடுகளை வைத்து அனைத்துக் காரியங்களையும் சாதித்துக்கொண்டிருக்கும் மத்திய அரசு, கர்நாடகத் தேர்தலை மனதில்வைத்து காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதிலும் காலம் தாழ்த்தியது.

ஸ்டெர்லைட் பிரச்னை!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கும் தன் எதிர்ப்பைக் காட்டியவர் ஜெயலலிதா. ஆனால் அவர்வழி வந்த இன்றைய ஆட்சியாளர்கள், முத்தெடுக்கும் நகரை ரத்தம் சிந்திய உடல்களைக் கண்டெடுக்கும் நகராக மாற்றியிருக்கிறார்கள்; மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். மான்களைக் கொன்றாலே வழக்குப்பதிவு செய்யும் இந்திய நாட்டில், மனிதர்களைக் கொன்று புதைக்க அதிகாரம் வழங்கியது யார் என்று தெரியவில்லை; அதற்கு ஆட்சியாளர்களிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அதேவேளையில், ‘தவிர்க்க முடியாத சூழ்நிலையில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது’ என்று விளக்கம் கொடுக்கும் தமிழக அரசு, துப்பாக்கிச் சூட்டை கால்களுக்குக் கீழே நடத்தாமல், கழுத்துக்கு மேலேயும், கீழேயும் நடத்தியது ஏன் என்பதற்கும் எந்தப் பதிலும் இல்லை. 

பேரணியாய் வந்தவர்களிடம் பேரன்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால், இவ்வளவு பெரிய இழப்புகள் நடந்திருக்குமா? ஒவ்வொரு நிமிடமும் மறக்காது, ‘அம்மாவின் ஆட்சி’  என்று சொல்லும் இன்றைய ஆட்சியாளர்கள், அதை உண்மையாக உள்ளத்திலிருந்து சொல்கிறார்களா அல்லது வெறும் உதட்டிலிருந்து சொல்கிறார்களா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்... இல்லையில்லை, அவர்களை ஆட்டிவைப்பவர்களுக்கே வெளிச்சம்.

உயிரிழப்புகள்!

உயிரிழப்பு என்பது அவ்வளவு சாதாரண விஷயமா... இல்லையே? அதன் இழப்பு என்பது மகத்துவமிக்க மருத்துவர்களுக்கும், அதை மதிப்பவர்களுக்கும்தான் தெரியும். ஆனால், இன்றைய ஆட்சியில் ஏற்படும் எண்ணற்ற பிரச்னைகளால் உயிரிழப்புகளை அதிகம் சந்தித்திருக்கிறது தமிழகம். அனிதா தற்கொலை தொடங்கி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடுவரை எத்தனையோ உயிரிழப்புகள், ஆட்சியாளர்களின் அலட்சியப்போக்கால் ஏற்பட்டுள்ளன. கந்துவட்டியில் ஒரு குடும்பமே தற்கொலை; கல்லூரி வாசலில் இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை; தேனியில் நியூட்ரினோ ஆராய்ச்சியைக் கண்டித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நடைப்பயணம் மேற்கொண்டபோது, அவருடைய உறவினர் தற்கொலை; டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி மாணவன் தற்கொலை என அப்பாவி மக்களின் உயிரிழப்புப் பட்டியல் ஒருபுறமிருக்க... மறுபுறம்,  நீட் தேர்வால் நீர்த்துப்போன சில உயிர்கள்; ஒக்கிப் புயலில் மாண்டுபோன மீனவர்கள்; உரிய நேரத்தில் தண்ணீர் வராமல் பயிர்கள் கருகியிருப்பதைப் பார்த்து உயிரைவிட்ட விவசாயிகள்; எங்கு வைத்தியம் பார்த்தும் டெங்குவைக் குணப்படுத்த முடியாமல் இறந்த நோயாளிகள் என கடந்த இரண்டு வருட காலத்தில் நடந்த உயிரிழப்புகள் பற்றிய விவரம் நீண்டுகொண்டே போகிறது. இவை மட்டும்தானா என்றால் நிச்சயமாக இல்லை. இன்னும் நிறையவே இருக்கிறது. இதுதவிர, தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்க நடந்த எண்ணற்ற எழுச்சிப் போராட்டங்களும் அடக்கம். இப்படி, தமிழகத்தின் தலையாய பிரச்னைகள் எல்லாம் தலைசாய்ந்து கிடக்க, அவற்றுக்குத் தீர்வுகாண சிறு துரும்பைக்கூட இந்த ஆட்சியாளர்கள் கிள்ளிப் போடவில்லை. ஆனால், ஊர் ஊராகச் சென்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை, அரசு செலவில் கொண்டாடி, தங்களின் சாதனைகள் குறித்த விழாவாக மாற்றிக்கொண்டதுதான் இப்போதைய ஆட்சியாளர்களின் சாதனை எனலாம். 

தமிழக மக்கள் இதற்காகவா அ.தி.மு.க-வை மீண்டும் ஆட்சியில் அமரவைத்தார்கள்? ஒருபோதும் இல்லை. ஜெ-வின் ஆட்சி ‘ஜேஜே’  என்று இல்லாவிட்டாலும், மற்றவர்கள் ‘ச்சே’  என்று சொல்லாத அளவுக்கு இருந்தது என்பதால், மீண்டும் அதுபோன்றதொரு ஆட்சியை எதிர்நோக்கி வாக்களித்தார்கள். ஆனால், அவர் அமைத்துக் கொடுத்த ஆட்சியை, அவரின் மறைவுக்குப் பின்னர், 'அம்மா வழியில்' தொடர்வதாகக் கூறிக்கொள்ளும் ஆட்சியாளர்கள், 'ச்சே' என்று சொல்லுமளவுக்கு மாற்றிவிட்டனர்” என்கின்றனர், கழக நிர்வாகிகள் சற்றே வெறுப்புடன். 

இனி, எப்போது தமிழகத்திற்கு விடிவுகாலம் பிறக்கும் என்று ஏக்கத்துடன் எதிர்நோக்கி உள்ளனர் மக்கள்...!?

அடுத்த கட்டுரைக்கு