Published:Updated:

எம்.ஜி.ஆர்: நிஜமும் நிழலும் வேறு வேறு அல்ல - சுகுணா திவாகர்

எம்.ஜி.ஆர்: நிஜமும் நிழலும் வேறு வேறு அல்ல - சுகுணா திவாகர்
பிரீமியம் ஸ்டோரி
எம்.ஜி.ஆர்: நிஜமும் நிழலும் வேறு வேறு அல்ல - சுகுணா திவாகர்

ஓவியங்கள்: எஸ்.சிவகுமார், கார்த்திகேயன் மேடி

எம்.ஜி.ஆர்: நிஜமும் நிழலும் வேறு வேறு அல்ல - சுகுணா திவாகர்

ஓவியங்கள்: எஸ்.சிவகுமார், கார்த்திகேயன் மேடி

Published:Updated:
எம்.ஜி.ஆர்: நிஜமும் நிழலும் வேறு வேறு அல்ல - சுகுணா திவாகர்
பிரீமியம் ஸ்டோரி
எம்.ஜி.ஆர்: நிஜமும் நிழலும் வேறு வேறு அல்ல - சுகுணா திவாகர்
எம்.ஜி.ஆர்: நிஜமும் நிழலும் வேறு வேறு அல்ல - சுகுணா திவாகர்

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டுவிழா தொடங்கிவிட்டது. ஒருவரின் நூற்றாண்டு கொண்டாடப்படும்போதும் அவர் மக்களின் மனதில் மறையாத ஆளுமையாக இருப்பது வரலாற்றில் அரிது. எம்.ஜி.ஆரோ இன்னும் பல ஆண்டுகளுக்கு மக்களின் மனதில் செல்வாக்கு செலுத்தக்கூடிய ஆளுமையாக இருக்கிறார். எம்.ஜி.ஆர் மறைந்து பல ஆண்டுகள் ஆகியும், ‘எம்.ஜி.ஆர் இறந்துவிட்டார்’ என்பதை நம்பாத மக்கள் இருந்தார்கள் என்பது கடந்தகால நிதர்சனம். இன்றுவரையும் எம்.ஜி.ஆர் உருவாக்கிய சின்னம் என்பதற்காகவே, இரட்டை இலைக்கு வாக்களிப்பவர்கள் உண்டு. எம்.ஜி.ஆர் மறைந்து கால்நூற்றாண்டு கடந்துவிட்டது. ஒரு புதிய தலைமுறையே அதற்குப் பிறகு உருவாகிவிட்டாலும், இன்னமும் எம்.ஜி.ஆர் படங்கள் ஏதேனும் திரையரங்குகளில் திரையிடப்படும்போது கணிசமான கூட்டம் கூடுகிறது. அவர் உருவாக்கிய அ.தி.மு.கவுக்கு அப்பாலும் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள். எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையும் நினைவுநாளையும் எந்த எதிர்பார்ப்புமில்லாத அவரது ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். எல்லா நகரங்களிலும் எம்.ஜி.ஆரைப் போலவே தன் தோற்றத்தை மாற்றிக்கொண்ட ஒரே ஒரு ‘எம்.ஜி.ஆரை’யாவது நாம் சந்தித்திருப்போம். எம்.ஜி.ஆரின் சினிமாக்கள் குறித்தும் அவரது அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் நமக்குப் பல விமர்சனங்கள் இருந்தாலும், நேரடியான அர்த்தத்தில் ‘மக்கள் தலைவர்’ என்ற வார்த்தைக்கு உண்மையில் பொருந்திப்போகிறவர், எம்.ஜி.ஆர்.

சினிமா எம்.ஜி.ஆரையும் அரசியல் எம்.ஜி.ஆரையும் சுலபத்தில் பிரித்துப் பார்த்துவிட முடியாது. இன்றளவும் தி.மு.க-வின் பொதுக்கூட்டங்களிலோ அல்லது கருணாநிதி பிறந்தநாள் விழாக் கொண்டாட்டங்களிலோ நாகூர் ஹனீஃபா போன்ற தி.மு.க. பாடகர்களின் கட்சிப் பாடல்கள் ஒலிக்கும். ஆனால், அ.தி.மு.க கூட்டம் என்றாலும் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா என்றாலும் தெருக்கள்தோறும் எம்.ஜி.ஆர் படப்பாடல்களே ஒலிக்கும். ‘சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகளும் மது அருந்தும் காட்சிகளும் இடம்பெறக் கூடாது’ என்று கடந்த சில பத்தாண்டுகளாக எதிர்ப்புக்குரல்கள் எழுகின்றன. புகையிலை குறித்த எச்சரிக்கை அறிவிப்புகளுக்குப் பிறகே நாம் இப்போது எந்தவொரு படத்தையும் பார்க்க முடியும். இதற்கெல்லாம் முன்னோடி எம்.ஜி.ஆர்தான். ‘புகை, மது காட்சிகள் தடை செய்யப்படுவது கலை சுதந்திரத்தைப் பாதிக்கும் நடவடிக்கை’ என்ற குரல்கள் இன்னொரு பக்கம் எழுகின்றன. ஆனால், எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை சினிமா என்பதை ஒரு பொறுப்புள்ள கலை ஊடகமாகப் பார்த்தார். பெண்களையும் சிறுவர்களையும் தமது ரசிகத் தளமாகக் கொண்ட எம்.ஜி.ஆர், இந்தத் தணிக்கையின் மீது அதிக ஆர்வம்கொண்டவராக இருந்தார்.

நான் ‘எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித்: பிம்பங்களுக்குப் பின்னால்...’ கட்டுரையில் எழுதியிருந்ததைப்போல, எம்.ஜி.ஆரின் படங்கள் என்பவை உருமாற்றப்பட்ட நீதிக்கதைகள்தான். நீதிக்கதைகளுக்கும்

எம்.ஜி.ஆர்: நிஜமும் நிழலும் வேறு வேறு அல்ல - சுகுணா திவாகர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இலக்கியத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. நீதிக்கதை, நேர்கோட்டில் கதை சொல்வது; வாழ்க்கையைக் கறுப்பு வெள்ளையாகப் பார்த்து இது சரி, இது தப்பு என்று சொல்லும். இறுதியில் நீதி வென்றால்தான் அது நீதிக்கதை. இலக்கியமோ, வாழ்க்கையின் பல சிக்கலான பரிமாணங்களைப் பேசும். நீதி வெல்வதும் தோற்பதும் இலக்கியத்தின் கையில் இல்லை. ஆனால், தெளிவாகவே எம்.ஜி.ஆர் தன் படங்களை நீதிக்கதைகள் பாணியிலேயே அமைத்துக்கொண்டார். ஒரே நேரத்தில் நீதிக்கதைகள் சொல்பவராகவும் நீதிக்கதையின் முதன்மைப் பாத்திரமாகவும் எம்.ஜி.ஆர் இருந்தார் என்பதுதான் ஆச்சர்யம். எம்.ஜி.ஆரின் நீதிப் படங்களுக்கும் அதன் மூலம் அவர் உருவாக்கிய பிம்பங்களுக்கும் மக்களிடத்தில் அவர் சொல்ல நினைத்த விஷயங்களுக்கும் உதவியவர்கள் பலர். ஆனால் மக்களோ, அதை எம்.ஜி.ஆரின் படைப்பாகவே புரிந்துகொண்டனர். ‘சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா’ பட்டுக்கோட்டையார் பாடலாக இருந்தாலும், மக்கள் அதை ‘எம்.ஜி.ஆர் பாட்டாக’வே பார்த்தனர். பட்டுக்கோட்டை, மருதகாசி, கண்ணதாசன், வாலி, எம்.எஸ்.விஸ்வநாதன், டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா என்று பலரின் உழைப்பு இருந்தாலும் மக்களைப் பொறுத்தவரை எல்லாமே ‘எம்.ஜி.ஆர் பாடல்கள்’தான். அதை எம்.ஜி.ஆரே எழுதி, எம்.ஜி.ஆரே பாடியதாகத்தான் மக்கள் நினைத்தனர். இந்த வகையில் நீதிக்கதைகளை உருவாக்குபவராகவும் நீதிக்கதைகளின் முதன்மைப் பாத்திரமாகவும் எம்.ஜி.ஆரின் இரட்டைப் பிம்பங்கள் மக்கள் மனதில் பதிந்துபோயின.

எம்.ஜி.ஆர்: நிஜமும் நிழலும் வேறு வேறு அல்ல - சுகுணா திவாகர்

பின்னாளில் அவர் தனிக்கட்சி ஆரம்பித்து, ஆட்சியைப் பிடித்து, தமிழக அரசியல் வரலாற்றில் நீண்டகாலம் ஆட்சியில் இருந்தபோதும் மக்கள் அவரை சினிமா எம்.ஜி.ஆராகவே பார்த்தனர். அதனால், எம்.ஜி.ஆரை எதிர்ப்பவர்களை நம்பியா ராகப் பார்த்தனர் என்பதும் நிதர்சனம். இன்றளவும் அ.தி.மு.க-வுக்கு விழும் வாக்குகளில் கணிசமானவை ‘கருணாநிதி வெறுப்பு’ வாக்குகள். எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதாவின் நடவடிக்கைகளில் அதிருப்தியுற்றவர்கள்கூட கருணாநிதி வெறுப்பைக் கைவிடத் தயாராக இல்லை. அவர்களைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர்தான்; கருணாநிதி நம்பியார்தான். எம்.ஜி.ஆரைப் பற்றி சாதகமாகவும் பாதகமாகவும் உலவும் கதைகளைத் தொகுத்தால், அது எம்.ஜி.ஆர் நடித்த படங்களின் எண்ணிக்கையைத் தாண்டலாம். மக்களின் உளவியலில் தாக்கம் செலுத்தும் ஒரு மக்கள் தலைவர் குறித்தே இத்தகைய கதைகள் அதிகம் உருவாகும் என்பதற்கு, உலக வரலாற்றில் ஏராளமான உதாரணங்கள் உள்ளன.

சரி, எம்.ஜி.ஆரை ஒரு திராவிட இயக்க அரசியலாளர் என்று சொல்ல முடியுமா என்று கேட்டால், குழப்பம்தான் மிஞ்சும். எம்.ஜி.ஆர் படங்களைத் திராவிட இயக்க சினிமாக்களின் வரிசையில் வைத்துப் பார்ப்பதிலும்கூட நிறைய தயக்கங்கள் உள்ளன. கடவுள் மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு ஆகியவற்றை நேரடியாகவும் மறைமுக மாகவும் சொல்பவையாக திராவிட இயக்கத்
தவர்களின் சினிமாக்கள் அமைந்தன. குறிப்பாக அண்ணா, கருணாநிதி வசனங்களில் அமைந்த படங்களில் சாத்தியப்பட்ட அளவுக்கு இந்தக் கருத்தியல் அடிப்படைகள் பேசப்பட்டன. எம்.ஆர்.ராதா, இவர்களைத் தாண்டித் தீவிரமாகத் தன் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் பெரியாரின் கொள்கைகளை முன்வைத்தார்.

எஸ்.எஸ்.ஆர் புராணப்படங்களில் நடிக்க மறுத்ததால், ‘லட்சிய நடிகர்’ என்று அழைக்கப்பட்டார். மற்றவர்களின் படங்களோடு ஒப்பிடும்போது, உண்மையில் எம்.ஜி.ஆர் படங்களில் இத்தகைய அம்சங்கள் குறைவு. அவை அதிகமும் தாய்ப்பற்று, பெண்களைக் காப்பாற்றுவது, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவது ஆகியவற்றை முன்வைத்தது. தொடக்ககாலத்தில், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் வழியாக எளிய மக்கள் மத்தியில் பொதுவுடைமைக் கருத்துகளைக் கொண்டுசென்றதில் எம்.ஜி.ஆரின் பங்கு குறிப்பிடத்தக்கது. ‘காடு விளைஞ்சென்ன மச்சான், நமக்குக் கையும் காலும்தானே மிச்சம்’ என்று கிராமங்கள் வரை ஒலித்த பாடல், ‘இழப்பதற்கு எதுவுமில்லை கைவிலங்குகளைத் தவிர’ என்ற காரல் மார்க்ஸின் குரல்தானே! ‘தனியுடைமைக் கொடுமைகள் தீரத் தொண்டு செய்யடா; தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா’ என்று நேரடியாகவே கம்யூனிஸ பிரசாரம் ஒலிக்கும் பாடலையும் எம்.ஜி.ஆர் அடித்தட்டு மக்களிடம் கொண்டுசேர்த்தார். இன்னும் சொல்லப்போனால், ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் அறிவிப்புகள் ‘கம்யூனிஸக் கட்சி அறிக்கை’யில் இருந்த விஷயங்கள்.

எம்.ஜி.ஆர்: நிஜமும் நிழலும் வேறு வேறு அல்ல - சுகுணா திவாகர்

ஆனால், ‘தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா’ என்று புரட்சிகரக் குரல் ஒலித்தாலும், எம்.ஜி.ஆர் படங்கள் சாத்வீகமான மக்கள் போராட்டங்களையே முன்வைத்தன. முக்கியமாக, ஏழைகளைச் சுரண்டும் முதலாளிகளின் மனமாற்றத்தையே அவரது படங்கள் அழுத்தமாக முன்வைத்தன. ஒருவகையில் காந்தி முன்வைத்த ‘தர்மகர்த்தா முறை,’ வினோபா பாவேவின் பூமிதான இயக்கம் ஆகியவற்றில் இருந்த தொனியே எம்.ஜி.ஆர் படங்களிலும் இருந்தன. முதலாளிகளிடம் இருந்து உழைக்கும் மக்கள் அதிகாரத்தைப் பறித்து, உடைமைகளைப் பறிமுதல் செய்வது கம்யூனிஸ அணுகுமுறை என்றால், முதலாளிகளை மனமாற்றத்தின் மூலம் ஏழைகளுக்கு இரங்கச்செய்வது என்பது காந்தி மற்றும் வினோபா பாவேவின் அணுகுமுறையாக இருந்தது. எம்.ஜி.ஆர் படங்களின் அணுகுமுறையோ, கம்யூனிஸ அணுகுமுறையையும் காந்திய அணுகுமுறையையும் இணைத்தது. புத்தர், ஏசு, காந்தி மூவரின் பிம்பங்கள் அதிகமும் எம்.ஜி.ஆர் படங்களில் பயன்படுத்தப்பட்டன. இவர்களின் நீட்சியாகவே அவர் அண்ணாவைப் பார்த்தார் என்பதையும் அண்ணாவின் படம் காட்டப்படும் காட்சிகள், அண்ணாவின் பெயர் சுட்டப்படும் பாடல் வரிகள் ஆகியவற்றின் மூலம் அறியலாம்.

அதேபோல், மற்ற திராவிட இயக்கத்தவர்களின் சினிமாக்கள் தீவிரமாகத் திராவிட நாட்டுப் பிரிவினையைப் பேசியவை. ‘பராசக்தி’ படத்தின் இறுதிக் காட்சியில் ‘வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே வளமார் எங்கள் திராவிடநாடு’ என்ற பாரதிதாசன் பாடல் ஒலிப்பது தொடங்கிப் பல உதாரணங்களைச் சொல்லலாம். ‘அஞ்சாமை திராவிடர் உடைமையடா’ என்பது எம்.ஜி.ஆர் படப் பாடலாக இருந்தாலும், இந்திய தேசியத்துக்கு எதிரான தீவிரக் குரல்களை எம்.ஜி.ஆர் படங்களில் பார்க்க முடியாது. காந்தியின் மீது மட்டுமல்ல, காமராஜர் மீதும் அவர் அபிமானம்கொண்டிருந்தார். 60-கள் காலகட்டம் தி.மு.க., காங்கிரஸைத் தீவிரமாக எதிர்த்துக்கொண்டிருந்த காலகட்டம். ஆனால், 1965-ம் ஆண்டில் காமராஜர் பிறந்தநாள் விழாவில்

எம்.ஜி.ஆர்: நிஜமும் நிழலும் வேறு வேறு அல்ல - சுகுணா திவாகர்

கலந்துகொண்ட எம்.ஜி.ஆரோ, ‘காமராஜர் என் தலைவர்; அண்ணா என் வழிகாட்டி’ என்று பேசினார். பின்னாளில் கருணாநிதி அரசைவிட எம்.ஜி.ஆரின் அரசே மத்திய அரசோடு அதிகம் நெருக்கம் பேணிய அரசாக இருந்தது. இந்திய தேசியத்துக்கு எதிரான திராவிட இயக்க நிலைப்பாடுகளுக்கு மாறாக, தன் கட்சியின் பெயரையே ‘அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்று மாற்றிக்கொண்டார் எம்.ஜி.ஆர். எனவே, எம்.ஜி.ஆரின் சினிமாக்களும் சரி, அவரது அரசியல் நிலைப்பாடுகளும் சரி, மிதமான கம்யூனிஸம், சாத்விகமான இந்தியத் தேசியம், திராவிட அரசியலின் சில அடிப்படைகள் என எல்லாமும் கலந்திருந்தன. பின்னாளில், ‘அ.தி.மு.க-வின் கொள்கை என்ன’என்று கேட்கப்பட்டபோது, ‘அண்ணாயிஸம்’ என்ற எம்.ஜி.ஆர், ‘கம்யூனிஸம், கேப்பிடலிஸம், சோஷலிஸம் ஆகியவை கலந்ததுதான் அண்ணாயிஸம்’ என்றார். அண்ணாவால் உருவாக்கப்பட்ட அவரது கட்சிக்காரர்களே ‘அண்ணாயிஸம்’ என்பதை அரசியல் கருத்தியலாக ஏற்கவில்லை.

எம்.ஜி.ஆர்: நிஜமும் நிழலும் வேறு வேறு அல்ல - சுகுணா திவாகர்

எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை தீர்மானகரமான அரசியல் நிலைப்பாடு, கருத்தியல் தெளிவு என்பதைவிடவும் பாமர மக்களை ஈர்க்கக்கூடிய, பாமர மக்களுக்கு ஏதேனும் ஒருவகையில் உதவக்கூடிய பாமர அரசியலையே நம்பினார். பாமர மக்களுக்கும் அவரைத் தங்கள் தனிப்பெரும் அரசியல் தலைவராக ஏற்றுக்கொள்வதற்குக் கருத்தியலோ, அரசியல் தெளிவோ தடையாக இருக்கவில்லை. இன்னும் எளிமையாகச் சொன்னால், ‘மக்களின் பசி தீர்ப்பது’ என்பதே அவரது எளிய அரசியல் கொள்கையாக இருந்தது. பல கல்விக் கூடங்களைத் திறந்த, மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்த காமராஜரை அவர் ஆதர்சமாகப் பார்த்ததற்கும் இது காரணமாக இருக்கலாம். அடிப்படையில் எம்.ஜி.ஆர் மிகவும் வறுமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர். பல நாட்கள் பட்டினியில் கழித்தவர். எனவே, அவரால் ஏழைகளின் வறுமையைப் புரிந்துகொள்ள முடியும், அதைப் போக்க முடியும் என்று மக்கள் நம்பினார்கள். எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மை குறித்தும் ‘ராமாவரம் தோட்டத்துக்கு வந்தவர்கள் பசியாறியது’ குறித்தும் நூற்றுக்கணக்கான சம்பவங்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

அவர் ஆட்சியின் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் சத்துணவுத் திட்டம் முக்கியமான ஒன்று. அதனால் ஏற்பட்ட சமூக, பொருளாதார மாற்றங்கள் குறித்து விரிவான ஆய்வுகள் எதுவும் இல்லை என்றாலும், இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் நான் உள்பட பல கோடிக்கணக்கானவர்கள் சத்துணவுத் திட்டத்தால் பலன் பெற்றவர்கள் என்பதுதான் உண்மை. அவரது சத்துணவுத் திட்டமும் இலவசச் சீருடைத் திட்டமும் ‘மக்களைச் சோம்பேறிகளாக்கும் திட்டங்கள்’ என்று இப்போதுபோலவே அப்போதும் விமர்சிக்கப்பட்டது. ஆனால், பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கில் வரிச் சலுகைகளும் இன்னொரு
புறம் ஏழை, எளிய மக்களுக்கான மானியங்கள் மீதான ரத்துகளும் நிறைந்துள்ள இன்றைய உலகமயச் சூழலில், எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டம் எந்தளவுக்கு மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கை என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ‘மக்கள் நல அரசு’ என்ற கருத்தாக்கமே காலாவதியாகிக் கொண்டிருக்கும் இன்றையச் சூழலில் ‘இலவசத் திட்டங்களை எள்ளி நகையாடுவது மேட்டுக்குடி மனோபாவம்’ என்றே சமூக ஆய்வாளர்கள் வரையறுக்கிறார்கள்.

சாதியப் பெருமித சினிமாக்கள் உருவாகத் தொடங்கியுள்ள கடந்த கால் நூற்றாண்டோடு ஒப்பிடும்போது, எம்.ஜி.ஆரின் சினிமாக்கள் மேலானவை என்று சொல்லலாம். அவரது படங்களில் ஆணாதிக்கக்கூறுகள் இருந்
தாலும் சாதியப் பெருமிதமோ, மதவாதமோ இல்லை. எம்.ஜி.ஆர் தமிழகத்தில் உள்ள எந்தச் சாதியைச் சேர்ந்தவராகவும் இல்லாமல் இருந்தது அவரது முக்கியமான பலம். அவர் ‘மீனவ நண்பனி’லும்  ‘படகோட்டி’ யிலும் மீனவராக நடித்தபோது, மீனவ மக்கள் தங்களில் ஒருவராக அவரை ஏற்றுக்கொண்டனர். ‘மதுரை வீரன்’ படத்தில் நடித்ததற்காகவே அருந்ததியர்கள் அவரை அரசியலிலும் ஆதரித்தனர். இன்னும் சொல்லப்போனால், ‘ஒளிவிளக்கு’ படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சியில் நரிக்குறவராகத் தோன்றி நடித்ததாலேயே, இன்னமும் நரிக்குறவர் மக்கள் அவரை ஆதர்ச நாயகனாகக் கொண்டாடுகிறார்கள். அதேபோல், 80-களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தாலும், மிக மோசமாக நடந்த விஷயம், நாயகர்கள் முஸ்லிம் வேடங்களில் நடிப்பது குறைந்துபோனது. 90-களுக்குப் பிறகோ, தமிழ் சினிமாக்களில் முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப் பட்டார்கள். ஆனால், எம்.ஜி.ஆரோ ‘குலேபகாவலி’, ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’, ‘ராஜா தேசிங்கு’ எனப் பல படங்களில் முஸ்லிம் பாத்திரம் ஏற்று நடித்தார். பெரியாரின் சுயமரியாதை இயக்கமும் சரி, பின்னாளில் உருவான தி.மு.க-வும் சரி, எப்போதுமே சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருந்தது இதன் முக்கியமான காரணம்.

‘திராவிட அரசியல்’ பேசிய தி.மு.க எம்.ஜி.ஆர் தனிப்பெரும் சக்தியாக உருவானவுடன் அவரை ‘மலையாளி’ என்று வசைபாடியது. ஆனால், மக்களிடத்தில் இந்த இனநிலைப்பாட்டு அரசியல் எடுபடவில்லை. ஏனெனில், சமூகத்தின் பலதரப்பு மக்களும் அவரைத் தங்களவராக நினைத்ததற்கும் அவரது தமிழ்ச் சாதி அடையாளத்துக்கு அப்பாற்பட்ட நிலை ஒரு காரணம். ஆனால், எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை அவர் தன்னைத் தமிழ்த்தாயின் தலைமகனாகவே நினைத்துக்கொண்டு, ‘தாய் மேல் ஆணை; தமிழ் மேல் ஆணை’ என்று வெற்றிகரமாகப் பதியவைக்கவும் செய்தார். தமிழீழ விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்த
போது அவர் விடுதலைப்புலிகளை ஆதரித்ததோடு, அவர்களுக்குப் பொருளாதாரரீதியாக உதவவும் செய்தார். அதைக் கருத்தியல்ரீதியாக அவர் செய்தார் என்பதைவிடவும் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்த சாகச மனோபாவம் அதற்கு ஒரு முக்கியமான காரணம் எனலாம். தனிப்பட்ட முறையில் அவர் சிங்கம் வளர்த்ததைப் போல, ஈழத்தில் புலிகளை வளர்த்தார். ஆனால், இதை ஓர் அரசியல் நிலைப்பாடாக மாற்றித் தன் கட்சித் தொண்டர்கள் மத்தியில் கொண்டுசெல்லத் தவறினார் என்பதையும் சொல்ல வேண்டும்.

எம்.ஜி.ஆர்: நிஜமும் நிழலும் வேறு வேறு அல்ல - சுகுணா திவாகர்

என்னதான் கருத்தியலுக்கு அப்பாற்பட்ட பாமர அரசியல் என்பது வெற்றிகரமாகப் பலனளித்தது என்றாலும், முற்றிலுமாகக் கருத்தியல் அடிப்படைகளைத் தமிழ்ச் சமூகம் கைவிட்டது இல்லை. சமூகநீதி என்பதும் அதன் விளைவான இட ஒதுக்கீடு என்பதும் தமிழகத்தின் பலமான அரசியல் அடிப்படைகளில் ஒன்று. ‘சாதியா, வர்க்கமா’ என்று நீண்ட விவாதங்கள் நடைபெற்ற தமிழகத்தில் ‘பொருளாதார அளவுகோல் அடிப்படையில் இட ஒதுக்கீடு’ என்பதைத் தமிழர்கள் எப்போதும் ஏற்றுக்கொண்டது இல்லை. ஆனால், எம்.ஜி.ஆரோ இதைப் புரிந்துகொள்ளாமல் இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலைக் கொண்டுவந்து பெரும் எதிர்ப்பையும் அப்போது நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் தோல்வியையும் சம்பாதித்தார். பிறகு தன் நிலைப்பாட்டைத் திரும்பப் பெற்றுக்கொண்டதுடன், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 31 சதவிகிதத்தில் இருந்து50 சதவிகிதமாக உயர்த்தினார்.

எம்.ஜி.ஆரை முற்றுமுழுதான திராவிட இயக்கத் தலைவர் என்று சொல்லமுடியாவிட்டாலும், திராவிட இயக்கம் முன்வைத்த சில கொள்கைகளை நிறைவேற்றச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1982-ம் ஆண்டு நீதியரசர் எஸ்.மகாராஜன் தலைமையில், கோயில் அர்ச்சகர் நியமனமுறை தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டு பரிந்துரைகள் செய்வதற்கான ஒரு குழுவை நியமித்தார். அந்தக் குழுவின் அறிக்கை, இன்றளவும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை வேண்டும் என்கிற கோரிக்கைக்கு ஆதரவான முக்கிய ஆவணமாக இருக்கிறது. மூகாம்பிகை கோயிலுக்குச் சென்றார் என்றாலும், ஜெயலலிதாவைப்போல தீபாவளிக்கும் கிருஷ்ண ஜெயந்திக்கும் வாழ்த்துகள் சொன்னது இல்லை. பெரியார் நூற்றாண்டு விழாவை அவரது அரசு சிறப்பாகக் கொண்டாடியது. பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்ததும் எம்.ஜி.ஆர்தான். தெருப் பெயர்களில் இருந்த சாதிப் பெயர்களை நீக்கியதும் அவரது முக்கியமான சாதனை.

எம்.ஜி.ஆர் மீதான விமர்சனங்களைத் தவிர்த்துவிட்டு, அவரது ஆளுமை குறித்து மதிப்பிட்டுவிட முடியாது. எம்.ஜி.ஆர் சினிமாக்கள் சாதிய அடையாளங்களுக்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும், அவரது கட்சி அரசியல், சாதிய அடையாளங்களைப் பயன்படுத்திக்கொண்டதாகத்தான் இருந்தது. பெயர்களுக்குப் பின்னால் இருந்த சாதிப் பெயரை நீக்கும் தீர்மானத்தை 1929 -ஆம் ஆண்டு, செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாட்டில் கொண்டுவந்தவர் பெரியார். ஆனால், எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. சார்பாக முதன்முதலில் வெற்றிபெற்ற வேட்பாளரின் பெயர் ‘மாயத்தேவர்’. சாதிய அரசியல் இயக்கங்களும் மதவாதமும் எம்.ஜி.ஆர் ஆட்சியில் முளைவிட்டன. மண்டைக்காடு கலவரம் நடந்ததும் ‘இந்து முன்னணி’ உருவானதும் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில்தான். நக்ஸலைட்டுகள் வேட்டை என்ற பெயரில் கொடூரமான மனித உரிமை மீறல்கள் நடந்தன. ஏழைகள் கல்வி பெறுவதற்காக சத்துணவுத் திட்டத்தைக்  கொண்டுவந்த எம்.ஜி.ஆர் ஆட்சியில்தான் நர்சரி பள்ளிகளுக்கும் சுயநிதிக் கல்லூரிகளுக்கும் வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டது. பாமர அரசியல் என்பது சில சாதகமான அம்சங்களைக் கொண்டிருந்தாலும் தனிமனித வழிபாடு, கொள்கையற்ற மந்தை அரசியல் போன்ற பல தீமைகளையும் அது விளைவித்தது என்பதையும் கணக்கில்கொள்ளத்தான் வேண்டும்.

இந்துத்துவ அரசியலை முன்வைக்கும் பா.ஜ.க., சாதிய அரசியலை முன்னெடுக்கும் பா.ம.க., ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்று முழங்கும் சில தமிழ்த்தேசிய இயக்கங்கள் ‘திராவிடக் கட்சிகளை ஒழிப்பது’ என்பதைத் தங்கள் முக்கியமான அரசியல் முழக்கமாக, கடந்த சில ஆண்டுகளாக முன்வைக்கத் தொடங்கியிருக்கின்றனர். ஆனால், சமீபத்திய தேர்தல் முடிவுகள் இன்னும் பல பத்தாண்டுகளுக்குத் தமிழக அரசியலில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம்தான் இருக்கும் என்று நிரூபித்திருக்கின்றன. இதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர் எம்.ஜி.ஆர் என்பதையும் நினைவுகூர வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism