Published:Updated:

``எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வில் என்ன அவ்வளவு பெரிய தலைவரா?" - பாலபாரதி

``எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வில் என்ன அவ்வளவு பெரிய தலைவரா?" - பாலபாரதி
``எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வில் என்ன அவ்வளவு பெரிய தலைவரா?" - பாலபாரதி

``எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வில் என்ன அவ்வளவு பெரிய தலைவரா?" - பாலபாரதி

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் நடைபெற்ற 100-வது நாள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். அன்று நடந்த கலவரம் மற்றும் தடியடியில் ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேசிய அளவில் இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் எனப் பலரும் தங்களின் எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தனர். ஸ்டெர்லைட் விவகாரத்தில், தொடர்ந்து எதிர்ப்புக் குரல் கொடுத்து வரும் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதியை தொடர்புகொண்டு சில கேள்விகளை முன் வைத்தேன்.

``இவ்வளவு நாட்கள் கழித்து ஓ.பி.எஸ்  தூத்துக்குடி சென்றிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

``அரசாங்கத்துடைய உத்தரவில்தான் இந்த சம்பவமே நடந்தது. அவர்கள் சொல்லாமல் இவ்வளவு பெரிய துப்பாக்கிச் சூடும் இத்தனை மக்களின் பலியும் நடந்திருக்காது. அதனால் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்குச் செல்லும் தார்மீக உரிமையை இழந்து விட்டார்கள். அதனால்தான் பொதுமக்கள் மத்தியிலும் எதிர்க்கட்சிகள் மத்தியிலும் நிறைய விவாதங்கள் நடைபெற்றன. இதற்குப்பிறகுதான் ஆட்சியாளர்கள் தூத்துக்குடிக்கு வருகிறார்கள். இவர்கள் இனி மேற்கொள்வதெல்லாம் தாமதமான நடவடிக்கைகள்தான்.

ஏற்கெனவே 144 தடை உத்தரவு போட்டிருந்தாங்க. இவர்கள் போட்ட 144 சட்டத்தால், உடனடியாக இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாது. மேலும் போலீஸ் இன்னும் அவர்களுடையத் தேடலை நிறுத்தவே இல்லை. இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் இவங்க போறதால நிலைமை மாறிடும்னு சொல்லவே முடியாது. எப்பவுமே பொதுமக்கள் எவ்வளவு சோகமாக இருந்தாலும் ஒரு முதலமைச்சர் வர்றாங்கன்னா அவ்வளவு வருத்தத்துலயும் ஆவலோடு எதிர்பார்ப்பாங்க. அவங்க வருவதால் பிரச்னை தீரும்னு நினைப்பாங்க. ஆனால், அந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் தூத்துக்குடி மக்கள்கிட்ட துளியளவும்  இல்லை. அரசு மரபுக்காக மட்டும்தான் இவர் போயிருக்காரு. 

இத்தனை மக்கள் இறந்திருக்கிறார்கள், இவ்வளவு மரணங்கள் நிகழ்ந்திருக்கிறது, முதலில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு யார் பொறுப்பேற்பது? இவ்வளவு பிரச்னைகளில் யாராவது முன்வந்து, `ஆமாம்... இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது அரசுதான் காரணம்'னு ஒப்புக்கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்? அதையும் அவங்க செய்யலை.''

``நேற்று கூட துணை முதல்வர்தான் சென்றிருக்கிறார். இன்னும் தூத்துக்குடிக்கு  முதல்வர்  செல்லவில்லையே?"

``தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு போட்டிருப்பதால் நான் செல்லவில்லை என முன்பு கூறினார். ஒருவேளை இன்னும் தூத்துக்குடியில் 144 நீடிக்கிறதோ என்னவோ? 144 இன்னும் நடைமுறையில் இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார் போல. 144 ஐ எடுத்தது இன்னும் தெரியவில்லை போலிருக்கிறது.

மணிமண்டபம் கட்டுவதற்கு இரண்டு பேரும் இரண்டு மாலைகளைப் போட்டுக்கிட்டாங்க. எங்கே போனாலும் இரண்டு பேரும் சேர்ந்துதான் போறாங்க, சேர்ந்துதான் வர்றாங்க. ஆனால், இந்தப் பிரச்னையில் துணை முதலமைச்சர் மட்டும் தனியா போறாங்க. முதலமைச்சரும் செல்ல வேண்டும் என்பதுதான் என் கருத்து. பழனிசாமி அ.தி.மு.க-வில் என்ன அவ்வளவு பெரிய தலைவரா? அவர் இப்போ முதலமைச்சரா இருக்காரு. அதற்கு முன்னாடி வரைக்கும் சாதாரணமா இருந்தவர்தானே! ஏன் போய் பார்க்கக் கூடாதா?''

``மக்கள் தற்போது என்ன மனநிலையில் இருக்கிறார்கள்?"

``இதுவரைக்கும் தமிழக  வரலாற்றில்  நடக்காத சம்பவம் இது. துப்பாக்கிச் சூடுங்கறது ஒரு கூட்டத்தை கலைப்பதற்காகத்தான் பயன்படுத்துவாங்க. ஆனால், நேரடியாக மக்களைக் கொல்வதற்காகவே நடந்த துப்பாக்கிச்சூடு இது. இந்தத் துப்பாக்கிச் சூட்டினால், மக்கள் கடுமையான கோபத்தில்தான் இருக்காங்க. ஆனால், அவங்க பயத்தோடு இருக்காங்கனு காவல்துறையோ, அரசோ தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

இவ்வளவு நடந்த பிறகும் அவர்கள் உறுதியாக, 'போலீஸை வாபஸ் வாங்கணும்' என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் இவ்வளவு அச்சுறுத்தல்களுக்குப் பிற்பாடும்கூட இன்னும் நல்ல மனநிலைக்கு வந்திருக்காங்க. அரசாங்கம்னா என்னன்னு நல்லா மக்கள் புரிஞ்சுக்கிட்டாங்க. ஒரு துளியளவும்கூட அவங்க பயப்படவும் இல்லை. பின்வாங்கவும் இல்லை.''

``தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு யார் அனுமதி கொடுத்திருப்பாங்கன்னு நினைக்குறீங்க?"

``சுடப்பட்ட துப்பாக்கி, துல்லியமாகக் குறிவைத்து சுடப்பட்ட ஆட்கள்... இவற்றையெல்லாம் பார்க்கும்போது துணை ராணுவத்திலிருந்து ஆட்கள் வந்திருக்காங்கன்னு தெரிகிறது. ஆனால், மாநில அரசு உத்தரவு போட்டதா? இல்லை நேரடியாக மத்திய அரசே உத்தரவு போட்டதான்னு சரியா தெரியலை. ஆனால், இந்தத்  துப்பாக்கிச்சூடு முன்கூட்டியே திட்டமிட்ட ஒரு நிகழ்வுதான் என்னும் பேச்சு மக்களிடத்தில் இருக்கிறது.

மேலும், இவர்கள் கொடுக்கும் நிவாரணத்தால் எல்லாம் சரியாகி விடுமா? முதலில் பத்து லட்சம் ரூபாய் என அறிவித்தார்கள். பிறகு இருபது லட்சம் என அறிவித்தார்கள். அந்த இடைப்பட்ட நேரத்தில், இரக்கம் கூடிடுச்சோ என்னவோ! இல்லை இறந்த உயிருக்கு மார்க்கெட்ல மதிப்பு கூடிடுச்சுன்னு அவங்களா விலை நிர்ணயம் பண்ணாங்களா? அரசிடம் தடுமாற்றம் நிறைய இருக்கிறது. எத்தனை லட்சங்கள்  கொடுத்தாலும் அந்தக் காயம் தூத்துக்குடியை விட்டுப் போகாது. இவங்க மட்டும்னு இல்லைங்க... போறவங்க எல்லாம் பணம் கொடுக்குறாங்க. நம்ம தமிழ்நாட்டைப் பிடிச்ச சாபக்கேடு இது. இவ்வளவு தூரம் போறவங்க மக்களுக்கு ஆறுதல் சொல்லுங்க. அவங்க கஷ்டப்பட்டு நடத்தும் போராட்டத்துல கூட நில்லுங்க. ஆனால், பணம் இருக்குன்னு சொல்லிக்கிட்டு பாக்கெட்டுல இருந்து பணத்தை எடுத்து நாங்க அவ்வளவு கொடுக்குறோம், இவ்வளவு கொடுக்குறோம்னு சொல்றதெல்லாம், அந்தப் போராட்ட உணர்வுக்கு சரியானதா இல்லை!"

``தொடர்ந்து தமிழகத்தில் போராட்டங்களாகவே நடந்து வருகிறதே! இதற்கு என்னதான் தீர்வாக இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?"

``மேலே பி.ஜே.பி அரசும், கீழே மாநில அரசும் மாறணும். காலம் மாறும்... உலகமயமாக்கல்  உலகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொழுத்த லாபத்தில் இயங்கி வருகின்றன. அதனால், நாங்க எங்கே வேண்டுமானாலும் தொழில் நடத்துவோம்னு வர்றாங்க. அதில் நீதிமன்றம் மட்டும் உறுதிப்பாடாக நின்று தடுக்க முடியாது. அப்போ மத்திய அரசும், மாநில அரசும்தான் அந்த இடத்தில நின்னு செய்யணும். கார்ப்பரேட்டோட தனியார் முதலாளி முக்கியமா?  இல்லை... தமிழக மக்கள் முக்கியமா? ஆனால், இப்பொழுது இருக்கும் அரசு கார்ப்பரெட் முதலாளிகளுக்கு சாமரம் வீசிட்டு இருக்காங்க. இன்னைக்கு அரசாங்கம் மக்களுக்கான அரசாங்கமா இல்லாமல், கார்ப்பரேட்களுக்கான அரசாங்கமா இருக்கு! மக்கள் இனி எந்தப் போராட்டத்துக்கும் வரமாட்டாங்க. இந்தத் துப்பாக்கிச் சூட்டால் அவங்கப் பயந்துட்டாங்க... அப்படின்னு இந்த அரசாங்கம் நினைச்சா... அது மிகவும் தவறு. இந்த உலகமயமாக்கல் சூழ்நிலையில் மக்கள் நிச்சயம் வெளியே வருவாங்க. இனி தமிழகத்தில், புது அரசியல் சூழ்நிலை உருவாகும். இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு நடத்தியது போன்ற மக்களுடைய போராட்டம்தான் இனி  புது அரசியலாக இருக்கும்." 

``ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் என்ற தமிழக அரசாணை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"

``தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை தூத்துக்குடி மக்களுடைய போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் பார்க்கிறேன்.  தாமதமானாலும் இது ஒரு நல்ல நடவடிக்கைதான். அந்த நூறு நாள் போராட்டத்தப்பவே மக்களைக் கூட்டி பேச்சுவார்த்தை நடத்தி தலையிட்டிருந்தா இவ்வளவு உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. அரசாங்கத்துக்கும் கெட்டப்பெயர் ஏற்பட்டிருக்காது. இவ்வளவு தூரம் நடந்த பிறகுதான் இந்த அரசாங்கம் செயல்படுது. இதற்குப் பிறகாவது இந்த மாதிரி சம்பவங்கள் தொடராமல் இருக்க வேண்டும். நடந்த துயரங்களுக்கு இந்த ஆலையை மூடுவது ஒரு முற்றுப்புள்ளியாக இருக்கட்டும். ஸ்டெர்லைட் நிர்வாகம் உடனடியாக வெளியேறணும்.''

அடுத்த கட்டுரைக்கு