
அன்புள்ள பிரதமருக்கு... ஓர் இந்தியக் குடிமகனின் கடிதம்!

மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வணக்கம்.
தமிழ்நாட்டின், மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவன் நான். `பேசாம வயக்காட்டைப் பாருடா'னு எங்க அப்பன்-ஆத்தா சொன்ன பேச்சைக் கேட்காமல், `நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு' என என் பள்ளி ஆசிரியர்கள் சொன்னதையும் கேட்காமல், ஓரளவுக்குப் படித்துவிட்டு, வேலை தேடி சென்னை நகரத்தில் ஒட்டிக்கொண்ட, வருமானவரி கட்டும் பெருமைக்குரிய ஓர் இந்தியக் குடிமகன் நான்.
நவம்பர் 8 அன்று `500, 1,000 ரூபாய் நோட்டு ஒழிப்பு' என்ற அறிவிப்போடு கறுப்புப் பணத்துக்கு எதிரான உங்களின் அதிரடி யுத்தம் தொடங்கியபோது, `இவன் வேற மாதிரி' என உங்களை நினைத்துப் புளகாங்கிதப்பட்டுப்போனேன். கண்ணில் பட்டவர்களிடம் எல்லாம் உங்களுடைய பெருமைதான். ஆனால், அடுத்தடுத்த நாட்களில் நிலைமை தலைகீழாக மாறிப்போனது. `அவசரத்தில் அள்ளிக் கொட்டின கதையாக மாறிக்கொண்டிருக்கிறதே!' என்ற பெரும் கவலை எனக்குள் தொற்றிக்கொண்டது.
இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை. இன்னும் ஓர் ஆண்டுகூட நாங்கள் காத்திருக்கத் தயார். ஆனால், ஆறு மாதங்களாக திட்டம் தீட்டி செதுக்கப்பட்ட `சர்ஜிக்கல் ஸ்டிரைக்' எனக் கூறியது எல்லாம் செயல்பாட்டில் தெரியவில்லையே! ஏ.டி.எம்-களில் தொடர் பணத் தட்டுப்பாடு, சில்லறை கிடைக்காமல் மக்கள் திண்டாட்டம், வங்கி அதிகாரிகளோடு கைகோத்துக்கொண்டு பெரிய புள்ளிகள் பணத்தைக் கட்டுக்கட்டாக மாற்றியது, கடைகளில் தங்கமாக வாங்கிப் பதுக்கியது... இதை எல்லாம் முன்கூட்டியே யோசிக்காமல் எப்படித் திட்டமிட்டீர்கள் மோடிஜி?
செய்ததும் - நடந்ததும்

எங்கள் கிராமத்தில் வாழை விவசாயம் செய்யும் நல்லசாமியும் செல்லமுத்துவும் வியாபாரிகளிடம் காய்களை விற்று, அவர்களிடம் 3 லட்சம், 4 லட்சம் என ரொக்கமாகப் பெற்று வீட்டில்தான் கட்டிவைத்துள்ளனர். அவர்களுக்கு, வங்கிகளைவிட வீட்டுப் பரண்தான் மிகவும் வசதியானது. அப்போதுதான் அவர்களால் அடுத்தடுத்த வெள்ளாமைக்கு உடனுக்குடன் பணத்தை எடுத்துப் பயன்படுத்த முடியும். இப்போது `அது மொத்தத்தையும் வங்கியில் கட்டினால், அது `அத்துமீறி சம்பாதித்த பணம்' என்றாகி, வருமானவரி சோதனைக்கு உள்ளாகுமோ?' என அஞ்சுகிறார்கள். இதுபோல ஆயிரக்கணக்கான பிரச்னைகள்.
நீங்கள் `மன் கி பாத்' உரையில் 500 ரூபாயில் திருமணம் முடித்த ஜோடியைப் பற்றிப் பெருமையாகக் குறிப்பிட்டீர்கள். உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஆனால், சுமார் 650 கோடி ரூபாய் செலவில் தன் மகளுக்குக் கல்யாணம் நடத்திய உங்கள் கட்சியைச் சேர்ந்த கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரை எதுவும் கண்டிக்கவில்லை. நாடே கறுப்புப் பணப் பிரச்னையில் சிக்கித் தவித்த சூழலில், இந்த 650 கோடி ரூபாய் செலவில் நடந்த திருமணத்தை நினைத்து, ஒவ்வோர் இந்தியனும் வெட்கப்படுகிறான்.
வீட்டில் இருக்கும் பெண்களில் பலரும் தங்கள் வீட்டுக்குத் தெரியாமல் குறிப்பாக கணவருக்குத் தெரியாமல் பணத்தைச் சேமிப்பது, இந்தியாவில் பண்டைய காலம் தொட்டே இருக்கும் சேமிப்பு முறைகளில் ஒன்று. கடுகு டப்பா, அரிசிப் பானை எனச் சேர்த்துவைக்கும் சிறுவாட்டுப் பணத்தை எல்லாம் இப்போது வங்கியில் கட்டுவது கட்டாயமாகிவிட்டது. இதில் பெரும்பாலான பெண்கள் தங்களின் ஊதாரி, குடிகாரக் கணவர்களை எதிர்பார்க்காமல் குடும்பத் தேவைக்கும், பிள்ளைகளின் படிப்புச் செலவுக்கும், கல்யாணச் செலவுக்கும் என்றுதான் சிறுவாடு சேமிக்கிறார்கள். இப்படிப்பட்ட பணம் எல்லாம்கூட இப்போது வெளிவந்துவிட்டன. இதனால் பெண்கள் இனி கணவர்களை நம்பியே காலம் தள்ளவேண்டிய நிலை உருவாகிவிட்டது. பாவம் சிறுவாடு சேர்க்கும் பெண்கள், அவர்களைக் காப்பாற்ற உங்களின் அதிரடித் திட்டத்தில் வாய்ப்பு வழங்காமல் விட்டுவிட்டீர்கள்.

இப்படி எல்லாம் கேள்விகளை அடுக்குவதால், நான் உங்கள் கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிரானவன் என்று கருதிவிடாதீர்கள். கறுப்புப் பணத்தை ஒழிப்பது என்பதில் இரு வேறு கருத்து இல்லை. ஆனால், இந்த 500, 1,000 ரூபாய் பழைய நோட்டுகள் செல்லாது என்பது வெறும் ஆரம்பமே! இதற்கு அடுத்தபடியாகவும் உங்களின் அதிரடிகளுக்காகக் காத்திருக்கும் விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. செய்திகள் மற்றும் அறிக்கைகள் மூலமாக நான் அறிந்துகொண்டவற்றில் இருந்து மிக முக்கியமானவற்றை இங்கே அடுக்குகிறேன். நிச்சயமாக இவற்றின் மீது உங்களின் நடவடிக்கை பாயும் என்ற நம்பிக்கையோடு!
தங்கம்:
தங்கப் புழக்கத்தில் உலகிலேயே முதல் இடம் இந்தியாவுக்கே!
18 ஆயிரம்(1) டன்னுக்கும் மேல் இங்கே தங்கம் புழக்கத்தில் உள்ளது. தங்க வர்த்தகத்தில் 70 முதல் 80 சதவிகிதம்(2) கறுப்புப் பணம்தான் பயன்படுத்தப்படுகிறது. ஆண்டுத் தேவையில் 1,000 டன்னில்(3) மூன்றில் ஒரு பங்கு கறுப்புப் பணமே!
தீர்வு:

* தங்கத்துக்கான இறக்குமதி வரிகளை நீக்குவதன் மூலம், கடத்தல் தங்கத்தைப் பெருமளவில் தடுக்க முடியும். ஏனென்றால், கடத்தல் தங்கம், தங்க நகை அடகு மூலம்தான் கறுப்புப் பணம் பெருமளவு பதுக்கப்படுகிறது. இனி, தங்க நகை அடகுக்கடன் வங்கிகள் மூலம் மட்டுமே என்ற நிலையைக் கொண்டுவர வேண்டும்.
* பொதுமக்கள் வாங்கும் தங்க நகைகள், தங்கக் காசுகள், தங்க பிஸ்கட் போன்றவற்றை அடகுவைக்கவோ விற்கவோ வேண்டுமென்றால், வங்கி வழியாக மட்டுமே சாத்தியம் என்பதை டைமுறைப்படுத்தவேண்டும்.
பொதுமக்களிடம் இருந்து வாங்கும் தங்க நகைகள் உள்ளிட்டவற்றை புல்லியன் எக்ஸ்சேஞ்சுக்கு மட்டுமே வங்கிகள் கொடுக்க வேண்டும். கடைகள், தங்கத்தைக் கொள்முதல் செய்யும்போது புல்லியன் எக்ஸ்சேஞ்சு மூலமாக மட்டுமே வாங்க வேண்டும்.
ரியல் எஸ்டேட்:
* ரியஸ் எஸ்டேட் துறை, இந்திய ஜி.டி.பி-க்கு 11 சதவிகித(4) அளவுக்குப் பங்களிக்கிறது. ரியல் எஸ்டேட்டில், பணமாகப் பரிவர்த்தனை செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், கறுப்புப் பணம் எல்லாம் நிலங்களாக, வீடுகளாக மாற்றப்படுகின்றன. `ரியல் எஸ்டேட்டில் கிட்டத்தட்ட 30 சதவிகிதம்(5) கறுப்புப் பணப் புழக்கம் இருக்கிறது' என எஃப்.ஐ.சி.சி.ஐ அமைப்பு 2012-ம் ஆண்டு கூறியுள்ளது.
தீர்வுகள்:
* இந்தியா முழுவதும் உள்ள நிலங்கள் முற்றிலும் ஆய்வு செய்யப்பட்டு, விளைநிலங்கள் எவை, விலை நிலங்கள் எவை, நீர்நிலைகள், சதுப்பு நிலங்கள் எவை என்பது வகைப்படுத்தப்பட வேண்டும். அவற்றின் மதிப்புடன்கூடிய டிஜிட்டல் மேப் உருவாக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.
* நிலம்/வீடு விற்பனைக்கான பணப்பரிவர்த்தனை, வங்கி மூலமாக மட்டுமே நடைபெற வேண்டும்.
* அரசின் வழிகாட்டி மதிப்பீடுகளில் இருக்கும் தவறுகளைச் சரிசெய்வதோடு, வழிகாட்டி மதிப்பீட்டை ஆண்டுக்கு ஒருமுறை மாற்றியும் அமைக்க வேண்டும்.
பங்குச்சந்தையில் அந்நிய முதலீடுகள்:
நம் ஊரில் பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவற்றில் சில ஆயிரங்கள் முதலீடு செய்வதற்கே K.Y.C முதலான பல விதிமுறைகள் உள்ளன. ஆனால், அடிப்படை அடையாள விவரங்களைக்கூட கேட்காமல் கோடிகளில் நம் பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறார்கள் எஃப்.ஐ.ஐ-க்கள் (அயல்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்). அதற்கு அவர்களுக்கு உதவியாக இருப்பது பி-நோட்ஸ் முதலீடு. இந்த முதலீட்டு ரூட்டுகளை, இந்தியாவில் இருக்கும் கறுப்புப் பணப் புள்ளிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
`எப்படி?' எனக் கேட்கிறீர்களா. மொரீஷியல் போன்ற வெளிநாடுகளில் இருப்பவர்களின் பெயரில் அங்கே தொடங்கப்பட்ட நிறுவனங்களுக்கு, இந்தியாவில் இருக்கும் கறுப்புப் பணம், `ஹவாலா' மூலம் மாற்றப்படுகிறது. பிறகு, அங்கு இருந்து டாலர்களில் அந்நிய நேரடி முதலீடு என்ற பெயரில் இந்தியப் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்து, கறுப்புப் பணத்தை வெள்ளையடித்து இந்தியாவுக்குள் அந்நியச் செலாவணி வருகையாகக் காட்டுகிறார்கள். இந்த வழிமுறையையே `பி நோட்ஸ்' (பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ்) என்கிறார்கள். இந்த முதலீடு மூலம் கிடைத்த வருமானத்தை, மொரீஷியஸ் நாட்டு நிறுவனத்துக்கு லாபம் வந்ததாகக் கணக்குக்காட்டி, இரு நாட்டு வருமானவரி ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் வரி கட்ட மாட்டார்கள். குறிப்பாக, மொரீஷியஸ் போன்ற சிறிய நாடுகளை இதற்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இந்த நாடுகளில் வருமானவரி மிகக் குறைவு. இதை `ரவுண்ட் டிரிப்பிங்' என்பார்கள்.
தீர்வு:
* பி நோட்ஸ் மூலம் முதலீடு செய்பவர்களின் விவரம், அரசிடம் தெளிவாக இருக்கும்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

வங்கிக் கடன்:
சிறு தொழில்முனைவோர்களில் ஒருவரான செந்தில், சென்னை போரூரில் இருக்கிறார். இவர், தானியங்கி முறையில் இயங்கக்கூடிய பேக்கிங் மற்றும் பேக்கேஜிங் இயந்திரங்களை நிறுவனங்களுக்குத் தேவையான வகையில் வடிவமைத்துக் கொடுப்பதைத் தொழிலாகச் செய்துவருகிறார். 2004-05 நிதி ஆண்டில் இந்த யோசனையைச் சொல்லி வங்கியில் கடன் கேட்டபோது, ``இதெல்லாம் பெரிய கம்பெனிகளே செஞ்சுக்காதா. தேறாத புரொஜக்ட்களைக் கொண்டுவராதீங்க'' என்று வங்கியில் விரட்டிவிட்டார்கள். அதேசமயம், ``நல்ல புரொஜக்ட் சார். ஆனால், லோன் அமௌன்ட்டுக்கு ரெண்டு மடங்கு செக்யூரிட்டி கொண்டு வாங்க'' என்று வேறு வங்கிகள் கூறின. அதன்படியே கடன் வாங்கி, தொழில் தொடங்கியவர் 600-க்கும் மேற்பட்ட இயந்திரங்களை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார்.
செந்திலைப் போல பல லட்சக்கணக்கான சிறு குறு தொழில்முனைவோர்கள்தான், இந்திய ஜி.டி.பி-யில் 37.54 சதவிகிதம்(6) பங்கு வகிக்கிறார்கள். `முறைப்படுத்தப்படாத துறைகள்' எனச் சொல்லப்படும் இந்தச் சிறு குறு நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ)தான் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கின்றன. இவை பல மடங்கு வேலை வாய்ப்புகளையும் உருவாக்கி, பலரையும் வாழவைத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், இவர்களின் வளர்ச்சிக்குக் கடன் கிடைப்பதில் நிறையச் சிக்கல்கள் இருக்கின்றன. இவர்களைப் பார்த்தாலே வங்கிகளுக்குப் பிடிப்பதில்லை. அவர்களின் கோரிக்கைகளைக் காதுகொடுத்துக்கூட கேட்பது இல்லை.
ஆனால், இந்திய ஜி.டி.பி-யில் 11 சதவிகிதம்(7) மட்டுமே பங்கு வகிக்கும் முறைப்படுத்தப்பட்ட தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் உத்தரவாதம், பிணையம் என எதுவும் இல்லாமலேயே கடனை வாரி வாரி வழங்குவது எந்த ஊர் நியாயம்? இந்த கார்ப்பரேட் நிறுவனங்களில் பலவும் தாங்கள் வாங்கியக் கடனைத் திருப்பிச் செலுத்துவதே இல்லை. இறுதியில் அவை வாராக்கடனாக மாறி, வங்கிகளுக்கும் நாட்டுக்கும்தான் அழிவை உண்டாக்குகின்றன. இதற்கு சமீபத்திய சாட்சி, விஜய் மல்லையா. ஆனால், கடன் கொடுப்பதில் ஏன் சிறு குறு தொழில்களுக்கு மட்டும் இத்தனை பாகுபாடு பார்க்கின்றன வங்கிகள் என்பது புரியவில்லை. நாட்டுக்கும் மக்களுக்கும் உதவும் சிறு குறு நிறுவனங்களுக்கு இருக்கும் பிரச்னைகளைச் சீர்செய்யாமல், வேறு எதைச் செய்தாலும் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை.

தீர்வு:
* சிறு நிறுவனமோ, பெரிய கார்ப்பரேட்களோ கடன் வழங்குவதில் ஒரே விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
* கடந்த இரண்டு ஆண்டுகளில் குறைந்தபட்சம் 8 சதவிகித நிகர லாபத்தைச் சம்பாதித்திருக்கும் நிறுவனத்துக்குத்தான் மேற்கொண்டு கடன் வழங்கப்பட வேண்டும்.
* தனிநபரோ அல்லது நிறுவனமோ தன்னுடைய கடன்களைச் சரியாகத் திருப்பிச் செலுத்தவில்லை என்றால், அவரின் துணை நிறுவனங்கள் மற்றும் அதே நபர் நிர்வகிக்கும் மற்ற நிறுவனங்களுக்கு, தனியார் மற்றும் அரசு வங்கிகள் கடன் கொடுக்கக் கூடாது.
* குறிப்பிட்ட காலகெடுவுக்குள் கடனை அடைக்காவிட்டால், அடமானமாகப் பெற்ற சொத்துக்களை விற்று உடனடியாக கடன்களைக் கட்ட வேண்டும் (ஏட்டில் இருந்தாலும் நடைமுறைப்படுத்துவதில்தான் சிக்கல்கள் நீடிக்கின்றன).
* நிதி அமைப்புகளான ஃபைனான்ஷியல் இன்டலிஜென்ஸ் யூனிட், எக்கனாமிக் அஃபென்ஸ் விங், செபி, ஆர்.பி.ஐ., ஐ.ஆர்.டி.ஏ., ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் டீம் போன்ற அனைத்து அமைப்புகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, அவற்றின் விவரங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அவை பொதுவெளியில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும்.
* தனிநபர்களின் கடன் வாங்கும் திறன், `சிபில்' என்ற அமைப்பு மூலம் கண்காணிக்கப்படுவதைப்போல, கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் வாங்கும் திறனையும் கண்காணிக்க அரசே ஓர் அமைப்பை உருவாக்கிட வேண்டும்.
விவசாயம்:
இந்தியாவில் விவசாயத்தின் மூலம் ஈட்டும் வருமானத்துக்கு வருமானவரி இல்லை. விவசாயக் கடன்கள்

அவ்வப்போது ரத்துசெய்யப்படுகின்றன. இயற்கை நிகழ்வுகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்துக்கு இழப்பீடும் வழங்கப்படுகிறது. ஆனாலும், இந்தியாவில் 32 நிமிடங்களுக்கு(8) ஒரு விவசாயி தற்கொலை செய்துகொள்வதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஏன்? அரசு தரப்பில் விவசாயிகளுக்குத் தரப்படும் அத்தனை சலுகைகளும் திட்டங்களும் ஏழை விவசாயிகளுக்கு முழுமையாகச் சென்று சேர்வதே கிடையாது என்பதுதான். பெரும்புள்ளிகளும் பெரும்நிறுவனங்களும் அதை அனுபவிக்கின்றனர். உதாரணத்துக்கு, தனியார் கரும்பு ஆலைகளுக்கு நிறையச் சலுகைகள் இருக்கின்றன. ஆனால், மத்திய மற்றும் மாநில அரசுகள் நிர்ணயிக்கும் விலையை அவை விவசாயிகளுக்குக் கொடுப்பது இல்லை.
2010-ம் ஆண்டில் விவசாய வருமானத்தைத் தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 4,25,085(9). சராசரியாக 19.7 லட்சம்(10) ரூபாய் ஒரு நபரின் வருமானமாகக் கணக்கிடப்பட்டது. 2011-ம் ஆண்டில் விவசாய வருமானம் கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 6,56,944(11) ஆக அதிகரித்துள்ளது. ஆனால், சராசரியாக ஒரு நபரின் வருமானம் அதிர்ச்சி தரும் வகையில் 30.4 கோடியாக(12) அதிகரித்துள்ளது. இதுவே 2012-ம் ஆண்டில் 83 கோடி(13) ரூபாய் என, நம்ப முடியாத வகையில் பதிவாகி உள்ளது. ஆனால், இந்தக் காலகட்டங்களில் விவசாயத் துறையின் உற்பத்தி என்னவோ வழக்கமான அளவில்தான் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், விவசாயத்தில் இந்த அளவுக்கு வருமானம் வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஆக, ஏழை விவசாயிகளுக்குக் கொடுக்கப்படும் சலுகை என்பது கடைசியில் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குபவர்களுக்கும் பினாமிகளுக்கும்தான் சாதகமாக இருக்கிறது.
தீர்வு:
* விவசாய நிலங்கள் குறிப்பிட்ட கால அடிப்படையில் அந்தந்தக் கிராம அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, விளைச்சல் விவரங்களைத் தவறாமல் பதிவுசெய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் விவசாயத்தை வைத்து கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குபவர்கள் கட்டுப்படுத்தப்படுவார்கள்.
* விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை சொற்பமான விலைக்கு வாங்குவதோடு, கலப்படம் செய்யவும் பதுக்கவும் செய்கின்றன தனியார் நிறுவனங்கள். இதனால் பெரும் கறுப்புப் பணம் உருவாகிறது. இதைத் தடுக்க, விளைபொருட்கள் அனைத்தையும் அரசே நியாயமான விலைக்கு கொள்முதல் செய்து தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யலாம்.
* கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயம் செய்தால், அதன் மூலமாகக் கிடைக்கும் வருமானத்துக்கு வரி விதிக்கலாம்.
* விவசாயிகளுக்கான அனைத்து மானியங்களும் நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தலாம்.

எளிமையான வரிவிதிப்பு முறைகள்:
இந்தியாவில் கறுப்புப் பணம் உருவாவதற்கு முக்கியக் காரணம் வரி. குறிப்பாக, வருமானவரி. விற்பனைவரி, கலால்வரி, வருமானவரி, சுங்கவரி எனப் பலவிதமான வரிகள் தற்போது உள்ளன. இந்த வரிகளுக்குப் பயந்துதான் பணத்தைப் பதுக்குகிறார்கள். வரிவிதிப்பு முறைகள் எளிமையாக்கப்பட்டால், கறுப்புப் பணம் பதுக்கப்படுவது கணிசமாகக் குறையும். அதோடு மக்கள் அனைவரும் வரி கட்டத் தொடங்கினால், நாட்டின் மீதான அக்கறையும் கூடும். தங்களின் வரிப் பணம் விரயம் ஆவதையும் மக்களே கேள்வி கேட்கத் தொடங்கிவிடுவார்கள்.

தீர்வு:
* இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் கட்டாயம் வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட வேண்டும். அனைத்து வங்கிக்கணக்குகளும் ஆதார் மற்றும் பான் எண்களோடு இணைக்கப்பட வேண்டும்.
* அனைத்து கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் ஆன்லைன் மூலமே பணப் பரிமாற்றங்கள் நடக்க வேண்டும். பெட்டிக்கடைகளுக்குக்கூட பான் அட்டைகள் வழங்கப்பட வேண்டும்.
* ஒருவர் வங்கிக்கணக்கில் பணம் வரும்போதுதான் வரிகள் பிடித்தம் செய்யப்பட வேண்டும். அதாவது, நாம் வங்கியில் செலுத்தும் பணம் யாருடைய கணக்கில் போய்ச் சேருகிறதோ, அவர் வரி செலுத்த வேண்டும் என்பதை நடைமுறைப் படுத்தலாம். இந்த வங்கிப் பரிவர்த்தனைக்கான வரி என்பது இரண்டு சதவிகிதமாக இருக்கலாம். இதன் மூலம் கிடைக்கும் வரி வருவாய், தற்போது வருமான வரி வருவாயைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒவ்வோர் ஆண்டும் நிதிப் பற்றாக்குறை இல்லாமலே பட்ஜெட் போடலாம்.
அறக்கட்டளைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசியல் அமைப்புகள்:
`இந்தியாவில் 31 லட்சம்(14) தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இயங்குகின்றன. இவற்றில் சட்டபூர்வமாக திவுசெய்யப்பட்டவை சுமார் 2 லட்சம்(15) மட்டுமே' என சி.பி.ஐ அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு மனுவில் கூறியுள்ளது.
மக்களின் நன்மைக்காக, அவர்களுடைய நலனுக்காக என்றுதான் அறக்கட்டளைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (என்.ஜி.ஓ) இங்கே இயங்கிவருகின்றன. ஆனால், இதுபோன்ற அமைப்புகளில் பெரும்பாலானவை கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதையே முதன்மையான வேலையாகச் செய்கின்றன. இவை அனைத்துக்கும் வரிச்சலுகை இருக்கிறது. கல்வி மற்றும் மருத்துவக் கல்வி ஆகியவற்றின் பெயரால் பல்வேறு அறக்கட்டளைகள் இயங்கிவருகின்றன. அடுத்து அரசியல் கட்சிகள் பலவும் கிட்டத்தட்ட அறக்கட்டளை பாணியிலேயே பல்வேறு சலுகைகளை அனுபவிக்கின்றன. இந்த அறக்கட்டளைகள் மற்றும் அரசியல் கட்சிகளில் பலவும் தான், லஞ்சம் மற்றும் ஊழல்களின் ஊற்றுக் கண்கள் என்பது ஊர் அறிந்த உண்மை.

தீர்வு:
* அரசியல் அமைப்புகள், அறக்கட்டளை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அனைத்துச்

செயல்களும் வெளிப்படைத்தன்மையாக இருக்க வேண்டும். இவற்றுக்கு வரும் நன்கொடை மற்றும் பிற வருமானங்கள் அனைத்தும் கணக்கில் கொண்டுவர வேண்டும். நன்கொடை கொடுத்த நபரின் விவரங்கள் மற்றும் அந்த நன்கொடை எதற்குப் பயன்படுத்தப்பட்டது, யாரெல்லாம் பயன் அடைந்தார்கள் போன்ற விவரங்களையும் ஆராய வேண்டும். இவர்களின் கணக்கு வழக்குகள் அனைத்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும்.
* லாப நோக்கில் செயல்படும் கல்வி நிலையங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களையும் தொண்டு நிறுவனங்களையும் அனுமதிக்கவே கூடாது.
மோடிஜி, நீங்கள் கறுப்புப் பண ஒழிப்புக்காக எடுத்திருக்கும் நடவடிக்கைகள் காரணமாக மக்களுக்குப் பலவிதமான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது உண்மை. என்றாலும், உங்களின் இந்த நடவடிக்கையைப் பெரும்பாலானவர்கள் ஆதரிக்கவே செய்கிறார்கள். தற்போது கடைக்கு வந்திருக்கும் ஜூனியர் விகடன் (4/12/16 தேதியிட்ட இதழ்) சர்வே முடிவுகளும் அதையேதான் காட்டுகின்றன. அதாவது, தங்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டாலும், கறுப்புப் பணம், கள்ளப் பணம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். இவர்களின் நம்பிக்கைக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில், கறுப்புப் பணம் மற்றும் கள்ளப் பணத்தை அடியோடு ஒழிக்க, மேலே நான் எடுத்துவைத்திருக்கும் பிரச்னைகள் மற்றும் தீர்வுகளில் தங்களின் கவனத்தைத் திருப்புவீர்கள் என பலமாக நம்புகிறேன்.
நன்றிகளுடன்...
ஒரு சாமானிய இந்தியக் குடிமகன்
1, 2 - எஃப்.ஐ.சி.சி.ஐ அறிக்கை, 2015
3 - எக்கனாமிக் டைம்ஸ் நவ 25, 2016
4, 5 - எஃப்.ஐ.சி.சி.ஐ அறிக்கை 2015
6 - எம்.எஸ்.எம்.இ ஜிடிபி பங்களிப்பு, பிஐபி, 22 ஜூலை 2014
7 - நிறுவன விவகாரத் துறை அமைச்சகம்
8 - யு.என்.சி.எஸ்.டி அறிக்கை
9, 10, 11, 12, 13 - இந்திய வருமான வரித்துறை
14 - சிபிஐ, உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை
15 - இந்திய வருமான வரித்துறை
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் :
பணமதிப்புநீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்டு 1 மாத காலம் ஆகிவிட்டது. இந்த ஒரு மாதத்தின் ஒவ்வொரு நாளும் நமக்கு விதவிதமான அனுபவங்களை தந்திருக்கும். அந்த அனுபவங்களை விகடனோடு நீங்களும் பகிர்ந்து கொள்ளலாம். இந்த பணமதிப்புநீக்க அறிவிப்பு தொடர்பாக நீங்கள் பார்த்த காட்சிகள், சுவாரஸ்யமான சம்பவங்கள், மனதை நெகிழவைக்கும் நிகழ்வுகள் என உங்களுடைய பதிவுகள் எதுவாகவும் இருக்கலாம். அதை உலகத்திற்கு எடுத்து செல்லவும் சொல்லவும் விகடன் காத்திருக்கிறது.
உங்கள் அனுபவங்கள் மட்டும் அல்ல... பண மதிப்பு நீக்க நடவடிக்கையை தொடர்ந்து, அரசு இன்னும் என்னவெல்லாம் செய்தால் கறுப்புப்பணமும் கள்ளப்பணமும் முடிவுக்கு வரும் என்பதிலும் உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளலாம்.
உங்கள் வாதங்களை ஆதாரங்களோடும், கொஞ்சம் புள்ளி விவரங்களோடும் கமெண்ட் பாக்சில் பதிவு செய்யுங்களேன்!
நன்றி!