Published:Updated:

``இந்தியாவில்தான் இன்னமும் இருக்கிறோம்'' - தமிழ்நாடு கண்களுக்குத் தெரியவில்லையா மோடி?

கர்நாடக மக்கள்மீது மோடி வைத்துள்ள அன்பு, அக்கறை பெருமிதம் கொள்ள வைக்கிறது. ஆனால், தமிழகத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டபோது `தூத்துக்குடி மக்களுக்காக வருந்துகிறேன்' என்ற ஆறுதல் பதிவைக்கூட பாரதப் பிரதமர் போடவில்லையே ஏன்? 

``இந்தியாவில்தான் இன்னமும் இருக்கிறோம்''  - தமிழ்நாடு கண்களுக்குத் தெரியவில்லையா மோடி?
``இந்தியாவில்தான் இன்னமும் இருக்கிறோம்'' - தமிழ்நாடு கண்களுக்குத் தெரியவில்லையா மோடி?

``கர்நாடகாவில் பெய்துவரும் பெருமழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பிரார்த்திக்கிறேன். அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என்று ட்வீட் செய்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி! கர்நாடக மக்கள்மீது மோடி வைத்துள்ள அன்பு, அக்கறை பெருமிதம் கொள்ள வைக்கிறது. ஆனால், தமிழகத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டபோது `தூத்துக்குடி மக்களுக்காக வருந்துகிறேன்' என்ற ஆறுதல் பதிவைக்கூட பாரதப் பிரதமர் போடவில்லையே ஏன்? 

இதுமட்டுமல்ல...

2016 ம் ஆண்டு நவம்பர் 26 ம் தேதி... இந்தியாவே பணமதிப்பிழப்பின் பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த நேரம். பிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு மறக்காமல் வருத்தம் தெரிவித்தார். 

2017 ஜனவரி 19 ம் தேதி... உத்திரப் பிரதேசத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்காக வருத்தம் தெரிவித்துப் பதிவிடுகிறார்.

2017 பிப்ரவரி 6... ஆப்கானிஸ்தானில் உயிரிழந்தவர்களுக்காக மனம் வருந்துவதாகவும், இந்தியா அவர்களுக்குத் துணை நிற்கும் என்றும் ட்வீட் செய்துள்ளார். 

2017 ஜூன் 18... போர்ச்சுக்கல் நாட்டில் காட்டுத் தீயால் உயிரிழந்தவர்களுக்காகத் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கிறார். 

2018 பிப்ரவரி 11... மாஸ்கோ விமான விபத்தில், உயிரிழந்தவர்களுக்காக அவர்களது குடும்பத்துக்கு இரங்கல் தெரிவிக்கிறார்.

இவை சில உதாரணங்கள்தாம். இன்னும் பல ட்வீட்டுகள் மோடியின் கணக்கில் குவிந்துகிடக்கின்றன. இதெல்லாம் மோடியின் கவனத்துக்குச் செல்கிறது. வருத்தம் தெரிவிக்கிறார் என்றால், தூத்துக்குடி பிரச்னை மோடியின் கவனத்துக்கே செல்லவில்லையா... இல்லை மோடிக்கு வருத்தம் தெரிவிக்கும் எண்ணமில்லையா?

ஜல்லிக்கட்டு விஷயமோ, அனிதா மரணமோ, கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை மரணமோ, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடோ இவரை ஏன் உலுக்கவில்லை. 104 சீட்டுகளை வென்ற ஊர் என்பதால், கர்நாடகாவுக்கு இளகும் மனம், நோட்டாவுடன் போட்டி போட்டு தோற்பதால், தமிழக மக்கள்மீது இளகவில்லையா?

மணிக்கு ஒருமுறை `தாமரை மலரும்' என்று முழங்கும் உங்கள் கட்சிக்கு இப்போது புரிகிறதா ஏன் நீங்கள் ஒரு சீட்டைக்கூட தமிழகத்தில் கைப்பற்ற முடியவில்லை என்பதன் உண்மை...!

அடுத்தது `காங்கிரஸ் இல்லா இந்தியா' இதுதான் உங்கள் கனவு. இதற்காக நீங்கள் ஆட்சி செய்யாத மாநிலத்தில் பிரச்னை தலைதூக்கும் போதெல்லாம் அவர்களை நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள். பதவி விலகச் சொல்கிறீர்கள். அதற்கான பட்டியல் இதோ...

மேற்கு வங்காளம்

2014, அக்டோபர் 2 ம் தேதி மேற்கு வங்கம், பர்த்வானில் நடந்த  குண்டுவெடிப்புக்குப் பொறுப்பேற்று முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என பி.ஜே.பி கண்டனம் தெரிவித்துள்ளது.

ஒடிசா

ஒடிசாவில் நடைபெற்ற சுரங்க ஒதுக்கீட்டு ஊழலுக்குப் பொறுப்பேற்று நவீன் பட்நாயக் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி கட்சிகள் ஜனவரி4, 2014 ம் ஆண்டு வலியுறுத்துகின்றன.

டெல்லி

அரவிந்த் கெஜ்ரிவால் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றார் என்ற புகார் எழுந்தது மற்றும் தலைமைச் செயலாளரை ஆம் ஆத்மி கட்சியினர் தாக்கியது ஆகிய குற்றச்சாட்டுகளுக்காகப் பதவி விலக வேண்டுமென்று காங். மற்றும் பி.ஜே.பி கட்சியினர் வலியுறுத்தினர். குறிப்பாக பி.ஜே.பி-யிலுள்ள சுப்பிரமணியன் சுவாமி, கெஜ்ரிவால் பதவி விலக வேண்டுமென்று பலமுறை வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடகா

சித்தராமையாவின் அரசை விமர்சித்து, அவர் பதவி விலக வேண்டுமென்று பி.ஜே.பி-யினர் வலியுறுத்தியுள்ளனர்.

புதுச்சேரி

மருத்துவக் கலந்தாய்வு நேர்மையாக நடைபெறவில்லை என்றும், புதுச்சேரி முதல்வரின் ஆட்சி குறித்தும் தொடர் புகார்களை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வந்தார் கிரண் பேடி. 

தெலங்கானா

தெலங்கானாவில் ஏற்பட்ட விவசாயத் தற்கொலை, மின்சாரப் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களுக்காக, அந்த மாநிலத்தின் முதல்வர் சந்திரசேகர் ராவைக் கடுமையாக விமர்சித்தனர் பி.ஜே.பி-யினர்.

மே 22 ம் தேதி தமிழகத்தில், தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுக்குப் பொறுப்பேற்று, தமிழக முதல்வரை ஏன் பதவி விலகச் சொல்லவில்லை? குறைந்தபட்சம் தமிழக அரசை, பி.ஜே.பி-யினர் கேள்விகூட கேட்கவில்லையே ஏன்?

இந்தியாவுக்கு ஜி.எஸ்.டி மூலம் அதிக வருவாய் தரும் 2 வது மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவுக்கு வருமான வரி வருவாய் ஈட்டித்தரும் டாப் 5 மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு இடமுள்ளது. இந்தியாவுக்கு மின்சாரம் தயாரிக்க அதிக அணு உலைகள் இங்குதாம் அமைக்கப்பட்டுள்ளன. இதெல்லாம் வளர்ச்சி என்று மார்தட்டிக்கொள்ளும் நீங்கள், ஏன் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிக்கக்கூட மறுக்கிறீர்கள்? 

கர்நாடகாவின் மழை மக்களைப் பாதிக்கும். இதுவரை அங்கு உயிரிழப்பு இல்லை. அப்படியே இருந்தாலும் அது இயற்கைப் பேரழிவு. ஆனால், தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்டதோ ஒரு ஜனநாயகப் படுகொலை! அரசே, தன் மக்களைக் குறிபார்த்து சுட்டுக் கொல்லும் அவலம்.... இதற்கு ஏன் மெளனம் சாதிக்கிறீர்கள் மோடி? தமிழ்நாடு என்ற வார்த்தையைக் கேட்டாலே ஏதோ வெளிநாட்டுப் பெயர்போல நடந்துகொள்வது ஏன்? 
இதில், `தமிழ்நாட்டுக்கு வந்தால், தோசை சுட்டு தருவீர்களா...' என்று கேட்கும் நீங்கள், இங்குள்ள மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டுகொள்ளவில்லையே ஏன்? நீங்கள் யாருக்கான பிரதமர்?