Published:Updated:

``சிவகங்கையில் சாதியக் கொலைகளைக் கட்டுப்படுத்த சிறப்புப் பிரிவை ஏற்படுத்துங்கள்" - எவிடென்ஸ் கதிர்

``சிவகங்கையில் சாதியக் கொலைகளைக் கட்டுப்படுத்த சிறப்புப் பிரிவை ஏற்படுத்துங்கள்" - எவிடென்ஸ் கதிர்
``சிவகங்கையில் சாதியக் கொலைகளைக் கட்டுப்படுத்த சிறப்புப் பிரிவை ஏற்படுத்துங்கள்" - எவிடென்ஸ் கதிர்

``சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்" என்றார் அண்ணல் அம்பேத்கர். அப்படியான சாதிய விஷம்தான் சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு பேரை வெட்டிச் சாய்த்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தெய்வேந்திரன் மற்றும் பிரபாகரன். இவர்கள் இருவரும் மே 26-ம் தேதியன்று தங்கள் பகுதியில் அமைந்துள்ள கருப்பண்ணசாமி கோயில் அருகே அமர்ந்து, டீ குடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அந்த வழியாகவந்த அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த அருண், சுமன் என்ற இருவரும் "என்ன தைரியம், எங்க முன்னாடியே நீங்க, கால் மேல கால் போட்டு உட்காந்திருப்பீங்க" என்று அவர்கள் சார்ந்த சமூகப் பெயரைக் கூறி திட்டியுள்ளனர். அதற்கு தெய்வேந்திரனும், பிரபாகரனும் ``தேவையில்லாமல் எங்களின் சமூகப் பெயரைக் குறிப்பிட்டுப் பேசினால், காவல்நிலையத்தில் புகார் தெரிவிப்போம்" என்று குறிப்பிட்டனர். இதையடுத்து அவர்களுடன் சுமன், அருண் ஆகியோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளும் ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட தெய்வேந்திரனும், பிரபாகரனும் எதிர்தரப்பினர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 

இந்த நிலையில் மே 28-ம் தேதி, 20 பேர் கொண்ட கும்பல், கச்சநத்தம் கிராமத்துக்குள் நுழைந்து, அங்கிருந்தவர்களை சரமாரியாக வெட்டியுள்ளனர். அத்துமீறித் தாக்கியதில், சண்முகநாதன், ஆறுமுகம் ஆகிய இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் எட்டு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சம்பவப் பகுதிக்குச் சென்று விசாரணை நடத்திய 'எவிடன்ஸ் உண்மை கண்டறியும் குழு'வைச் சேர்ந்த கதிரிடம் பேசியபோது, ``ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பேர், கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தார்கள் என்பதற்காக, மற்றொரு சமூகத்தினர் கும்பலாகச் சென்று இந்தக் கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளனர். மனிதத்தன்மையற்ற வகையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் இரண்டு பேரின் உயிர் பறிபோயுள்ளது. ஆறு பேர் பலத்த காயமடைந்துள்ளனர். சாதிய உணர்வு, எந்த அளவுக்கு அந்த இளைஞர்களின் மனதில் வன்மத்தை விதைத்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டபோது, சம்பந்தப்பட்ட நபர்கள் அந்த இடத்தில் இல்லை. ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தாக்குதல் நடத்தியவர்கள், குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரைத் தாக்கவேண்டும் என்ற வன்மத்துடன் செயல்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. வயதானவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுபோன்ற சாதியரீதியான தாக்குதல்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. 

தாக்குதல் தொடர்பாக, காவல்துறையில் புகார் அளித்தால், அப்பகுதி அரசியல்வாதிகள் மற்றும் சாதிய அடிப்படையில் அணுகும் போலீஸார், அந்தப் புகாரை நீர்த்துப் போகச் செய்து விடுகின்றனர். இதுபோன்ற சம்பவங்களில் போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுக்காததால், குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வதும், அவர்களின் சாதிப் பெயரைச் சொல்லி திட்டுவதுமான செயல்களில் மற்றொரு தரப்பினர் ஈடுபடுகிறார்கள். சாதியை வைத்து, 'ரவுடியிசம்' செய்வோருக்கு எதிராக போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கண்டுகொள்ளாமல் இருந்து விடுகின்றனர்.

இதுபோன்ற சமூக அடிப்படையிலான மோதல்களின்போது, பெரிய அளவில் நடவடிக்கை எடுப்பதில்லை. அப்படியே எடுத்தாலும் அது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகவே இருக்கிறது. சாதிய ரீதியாக தாக்குதல் நடத்துபவர்களுக்கு எதிராகக் கடுமையான தண்டனை அளித்தால் மட்டுமே இத்தகைய வன்கொடுமைகள் குறையும். தவிர, அதற்கு அந்தப் பகுதியில், சாதிய வன்கொடுமை தடுப்பு சிறப்பு பிரிவை போலீஸார் ஏற்படுத்த வேண்டும்.அப்படி ஏற்படுத்தினால் மட்டுமே தாக்குதலில் ஈடுபடுவோருக்கு அச்சம் ஏற்படும்"  என்றார்.

``சாதிகள் இல்லையடி பாப்பா" என்று பாடிய பாரதியின் வரிகளை மட்டும் இன்னும் நாம் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் சொல்லிக் கொண்டிருப்போமோ!