Published:Updated:

1990 முதல் 2018 வரை... ரஜினி சொன்னதும் நடந்ததும்!

ரஜினிகாந்த் சினிமாவைப் போலவே அரசியலை அணுகுகிறார். அங்கும் யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தைப் பேசுகிறார். இங்கும் யாருக்காகவோ பேசுகிறார்' என்ற விமர்சனங்கள் ரஜினியைச் சூழ்ந்துள்ளன. பல்வேறு சர்ச்சைகளையும் எதிர்கொண்ட அரசியல்வாதிகூட சந்திக்காத கேள்வியை அரசியல் களத்துக்குள் வராமலேயே ரஜினி சந்தித்திருக்கிறார். அதுதான்... `நீங்கள் யார்?' 

1990-களின் தொடக்கம்... `தளபதி' படம் வெளியான சமயம்... தமிழகத்தின் சில மாவட்டங்களில், `வருங்கால முதல்வர்' என்று குறிப்பிடப்பட்ட ரஜினி போஸ்டர்களைக் காணமுடிந்தது. 1992ல் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குத் தமிழகத் திரைத் துறையின் சார்பில், ஒரு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அந்த விழாவில், ஜெயலலிதாவின் முன்பாகப் பேசிய ரஜினி, ``நேற்று பஸ் கண்டக்டர், இன்று சூப்பர் ஸ்டார், நாளை என்னவோ... அதே நேரத்தில், ஆண்டவா எந்தச் சூழ்நிலையிலும் என்னை அரசியலில் விட்டுடாதேன்னு வேண்டிக்கிறேன். ஏன்னா அரசியலுக்கு வந்தா நிம்மதி போய்டும்" என்று அரசியலை வெறுத்தவர் போல பேசிய அவர், பின்பு  ``அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்" என்று கூறினார். அன்று முதல் பலநேரங்களில் ரஜினி பரபரப்பான கருத்துகளை தெரிவிக்கும்போதெல்லாம் அதன் பின்னூட்டமாகச் சில நிகழ்வுகளும் நடந்த வண்ணம் இருக்கின்றன... அவற்றின் தொகுப்பு இது!

தீயாய் அரசியல் வசனங்கள் 

போயஸ் கார்டனில், அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் வருகைக்காக ரஜினியின் கார் தடுத்து நிறுத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. அதன் பிறகு 1992 ல் வெளியான `அண்ணாமலை' படத்தில் ``எம்பாட்டுக்கு என் வேலைய செஞ்சிக்கிட்டு சிவனேன்னு நான்  ஒரு வழில போய்க்கிட்டிருக்கேன். என்னை வம்புக்கிழுக்காதீங்க. வம்புக்கிழுத்தா நான் சொன்னதையும் செய்வேன்... சொல்லாததையும் செய்வேன்" என்று சினிமாவில் தன் முதல் அரசியல் வசனத்தைப் பதிவு செய்தார் சூப்பர் ஸ்டார்!

அப்போது வந்த செய்திகளுக்கு ரஜினி எந்தக் கருத்தும் கூறவில்லை என்றாலும், இந்த வசனம் ஜெயலலிதாவுக்கு எதிராகப் பேசப்பட்டதாகவே பார்க்கப்பட்டது.

அதன்பின் தொடர்ந்து பல படங்களில் அரசியல் பிரவேசம் குறித்த வசனங்களாகவே இடம்பெற்றன. அதே ஆண்டில் வெளியான `உழைப்பாளி' படத்தில், ``நேற்றுக் கூலி, இன்னைக்கு நடிகன், நாளை..." என்று பாதியில் முடித்துப் பரபரப்பைக் கிளப்பினார். 1995ல் வெளியான முத்து படத்தில், ``நான் எப்போ வருவேன் எப்டி வருவேன்னு தெரியாது... ஆனா வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்..." என்று அவர் பேசிய வசனம் ரசிகர்கள் மனதில், `அவர் நிச்சயம் வருவார்' என்றே நம்பவைத்தது. 2017 டிசம்பர் 31 இல் `நேரடி அரசியலுக்கு வருகிறேன்' என்று ரஜினிகாந்த் கூறும் வரையிலுமே, ``தலைவர் வர வேண்டிய நேரத்துல கண்டிப்பா வருவார்'' என்றே அவரது ரசிகர்களையும் சொல்ல வைத்தது.

நிஜ வாழ்வில் அரசியல்

 அதுவரை சினிமாவில் மட்டுமே அரசியல் பேசிய ரஜினி, முதன் முறையாக வெளிப்படையாக அரசியல் பேசினார். 1996 இல் ஜெயலலிதாவை எதிர்த்துப் பல கருத்துகளை முன்வைத்தார் ரஜினி. ``ஜெயலலிதா திரும்பவும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது" என்று அவர் சொன்ன அந்தக் கருத்துப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 1996 பொதுத் தேர்தலில் தி.மு.க - தமிழ் மாநிலக் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இது ரஜினியால் கிடைத்த வெற்றியாகவே அவருடைய ரசிகர்கள் கருதினார்கள். ஆனால், இன்று ``ஜெயலலிதா ஆட்சி போல் இப்போது இல்லை... கலவரங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருப்பார்'' என்கிறார்.       

 1996-க்குப் பிறகு ரஜினியின் அரசியல் கருத்துகள் எடுபடவில்லை என்றுதான் சொல்லவேண்டும். 1998 இல் நடந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க-த.மா.கா கூட்டணிக்கு ரஜினி மீண்டும் ஆதரவளித்தும் வெற்றி கிட்டவில்லை. 2002ல் வெளியான `பாபா' படத்தில், ரஜினி புகை பிடிக்கக் கூடாது என்று பா.ம.க  கடுமையாக எதிர்த்தது. பின் 2004 இல் நடந்த தேர்தலில், பா.ம.க-வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார் ரஜினிகாந்த். ஆனால், புதுச்சேரி உட்பட போட்டியிட்ட 6 இடங்களிலும் வெற்றிபெற்றது பா.ம.க. இதற்கிடையில், 2001 ம் ஆண்டு மீண்டும் முதல்வராகப் பதவியேற்ற ஜெயலலிதாவைச் சந்தித்துப் பூங்கொத்துக் கொடுத்ததோடு, `தைரிய லட்சுமி' என்று ஜெயலலிதாவுக்குப் புகழாரமும் சூட்டினார் ரஜினி.

பின்பு அஜித் ஒரு மேடையில், ``எந்தப் பிரச்னைகள் வந்தாலும், சில அமைப்புகள் திடீரென்று ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தறாங்க. அதுல எங்களையும் கலந்துக்கச் சொல்லி வற்புறுத்துறாங்க. மிரட்டுறாங்க." என்று பேசினார். அந்த நிகழ்வில், கலைஞர் அருகில் அமர்ந்திருந்த ரஜினிகாந்த், உடனே எழுந்து நின்று அஜித்தின் பேச்சை வரவேற்று கைதட்டினார். 2014ல் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக சென்னை வந்திருந்த மோடி, திடீரென ரஜினியைச் சந்தித்துப் பரபரப்பு கிளப்பினார். 

மீண்டும் பற்றிய தீ

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த 2017-ம் ஆண்டு, மே மாதம் தன் ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினிகாந்த்! ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது மேடையில், தாமரையின் மீது பாபா சின்னம் இருப்பதுபோன்ற படங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. அதனால் இம்முறை கண்டிப்பாகத் தலைவர் அரசியலுக்கு வருவார் என்று நம்பினார்கள் ரசிகர்கள். ஆனால்,  ``நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்தான் இருக்கிறது" என்று மீண்டும் குழப்பினார். இருந்தும் `சிஸ்டம் கெட்டுப்போச்சு', `போர் வரும்போது பாத்துப்போம்' என்று அவர் பேசிய வார்த்தைகள் இன்னும் அரசியல் ரேஸில் ரஜினி இருக்கிறார் என்று நம்பவைத்தது.

 மேலும் ``எப்போது அரசியல் பிரவேசம் என்று தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். எம்.பி ஆக வேண்டும், எம்.எல்.ஏ ஆக வேண்டும் என்று ஆசைப்படுவதில் தவறேதும் இல்லை. ஆனால், பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் அரசியலுக்கு வர விரும்புபவர்களை நான் அருகில் வைத்துக்கொள்ள மாட்டேன். நான் தமிழனானு கேட்குறாங்க... நீங்க என்ன தமிழனாவே மாத்திட்டீங்க... எங்க மூதாதையர், அப்பா எல்லாம் கிருஷ்ணகிரில பொறந்தவங்கதான்... அதுனால நான் பச்ச தமிழன்" என்றும் பேசினார்.

டிசம்பர் 31 ம் தேதி அனைத்து ரசிகர்களும் கட்சிப் பெயர் என்னவாக இருக்கும், கட்சியின் முக்கியப் பொறுப்புகள் யார் யாருக்குத் தரப்படும் போன்ற எதிர்பார்ப்புகளோடு காத்திருந்தனர். அவர்களது மத்தியில் பேச வந்தார் ரஜினிகாந்த், ``இது காலத்தின் கட்டாயம்... வரப்போர சட்டமன்றத் தேர்தல்ல தனிக் கட்சி ஆரம்பிச்சு, 234 தொகுதியிலேயும் நாம போட்டியிடுறோம்" என்று அவர் சொன்னவுடன் அரங்கம் அதிர்ந்தது. ஆனால், இன்றுவரை அவர் கட்சியோ, கொடியோ எதையுமே அறிமுகம் செய்யவில்லை.

அதன்பின் 2018 ம் ஆண்டில், பல முறை ஊடகத்தைச் சந்தித்தார். ட்விட்டரில் கருத்துகளைப் பதிவிட்டார். குறிப்பாக சேப்பாக்கத்தில் நடைபெற்ற காவிரி மீட்புப் போராட்டத்தின்போது போலீஸார் சிலர் தாக்கப்பட்டபோது, ``வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான். இத்தகைய வன்முறை கலாசாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களைத் தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்" என்று அவர் பதிவிட்ட ட்வீட், அதிகார வர்க்கத்துக்கு ஆதரவாக இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மக்களைத் தாக்கிய போலீஸாரைக் கண்டிக்காத ரஜினிகாந்த், இதற்கு மட்டும் ஏன் முன் வந்து நிற்கிறார்... என்று பலரும் விமர்சித்த பிறகு, போலீஸார் மக்களைத் தாக்கியதும் தவறான விஷயமே என்று கூறினார்.

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடந்தவுடன் ``மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது.நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்குத் தமிழகஅரசே பொறுப்பு'' என்று அரசை விமர்சித்தார். மே 30ம் தேதி தூத்துக்குடிக்குச் செல்வதற்கு முன், ``நான் ஒரு நடிகனாகத்தான் தூத்துக்குடிக்குச் செல்கிறேன். என்னைப் பார்த்தால், மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்'' என்றார். தூத்துக்குடி மருத்துவமனையில், போராட்டத்தில் காயம்பட்ட இளைஞர் ஒருவரை ரஜினி நேரில் சந்தித்தபோது, அந்த இளைஞர் ``நீங்க யார்... சென்னையிலிருந்து இங்க வர 100 நாள்களா?'' என்றெல்லாம் கேள்வி கேட்டு ரஜினியைத் திணறடித்தார். எதிர்பாராத இந்தக் கேள்விகள் அவரை நிலைகுலைய வைத்தன.

தூத்துக்குடியிலிருந்து சென்னைத் திரும்பியதும் பத்திரிகையாளர்களின் கேள்வியைச் சமாளிக்க முடியாமல், ``மக்கள் எல்லாத்துக்கும் போராட்டம் போராட்டம்னு போனா... தமிழ்நாடு சுடுகாடா மாறிடும்" என்று தெரிவித்தார். ரஜினிகாந்தின் இந்தக் கருத்து அவர்மீது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. `ரஜினிகாந்த் சினிமாவைப் போலவே அரசியலை அணுகுகிறார். அங்கும் யாரோ எழுதி கொடுத்த வசனத்தைப் பேசுகிறார். இங்கும் யாருக்காகவோ பேசுகிறார்' என்ற விமர்சனங்கள் ரஜினியைச் சூழ்ந்துள்ளன. பல்வேறு சர்ச்சைகளையும் எதிர்கொண்ட அரசியல்வாதிகூட சந்திக்காத கேள்வியை அரசியல் களத்துக்குள் வராமலேயே ரஜினி சந்தித்திருக்கிறார். அதுதான்... `நீங்கள் யார்?' 

`ரஜினி ஒரே நிலைப்பாட்டில் இல்லை, மாறி மாறி பேசுகிறார், மக்கள் பக்கம் அவர் இல்லை' என்கிறார்கள். அடுத்து என்ன பேச வேண்டும் என்று `ரஜினி' மட்டுமே முடிவெடுத்தால், தெரிந்துவிடும் ரஜினி யார் என்ற கேள்விக்கான பதில்!

அடுத்த கட்டுரைக்கு