Published:Updated:

``நாங்க ரெடி,  முதல்வர் ரெடியா..?” முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்!

``நாங்க ரெடி,  முதல்வர் ரெடியா..?” முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்!

``நாங்க ரெடி,  முதல்வர் ரெடியா..?” முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்!

``நாங்க ரெடி,  முதல்வர் ரெடியா..?” முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்!

Published:Updated:

திருவாரூரில் இன்று நடைபெறும் கருணாநிதியின் 95 -வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக திருவாரூர் வந்த மு.க. ஸ்டாலின், தனியார் பள்ளி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, "ஒரு சிலர் தற்போது போராட்டமே வேண்டாம் என்று சொல்கின்றனர். போராட்டம்தான் வாழ்க்கை” என ரஜினியை மறைமுகமாகச் சாடினார்.

இதைத் தொடர்ந்து, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”தி.மு.க சார்பில், கடந்த 29.5.2018 அன்று சட்டமன்றத்தில் மிகவும் தெளிவாக, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும்வரை சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க மாட்டோம்; புறக்கணிக்கிறோம் என பேரவைத் தலைவரிடம் கூறிவிட்டுத்தான் அவையிலிருந்து வெளியேறினோம் என்பதை,  முதலமைச்சர் பழனிசாமி இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்பது, இன்று (31.5.2018) சட்டமன்றத்தில் அவர் அளித்துள்ள விளக்கத்தில் இருந்து தெரியவருகிறது.

ஒரு ஆலையை மூடுவது என்றால், முதலில் அந்த ஆலைக்கு வழங்கப்பட்ட சுற்றுப்புறச்சூழல் அனுமதியைத் திரும்பப்பெற வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில், கடந்த 17.5.1995 அன்று வழங்கப்பட்ட சுற்றுப்புறச்சூழல் அனுமதி திரும்பப் பெறப்பட்டதாக, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக வெளியான இருபக்க அரசு ஆணையில் இல்லை. அதேபோல, 22.5.1995 அன்று ஆலையைத் தொடங்க, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வழங்கிய ஒப்புதல் கடிதம் அந்த ஆணையில் ரத்துசெய்யப்படவில்லை.

ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்திற்குத் தேவையில்லை என்று காரண, காரிய விளக்கங்களோடு, சட்டரீதியாக எந்தவித ஐயப்பாட்டுக்கும் இடம் தராதபடி தெளிவான, முழுமையான ஒரு கொள்கை முடிவை எடுங்கள்; அதனடிப்படையில் எந்த நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளும் வகையில், அந்த ஆலையின் விதிமீறல்களை எல்லாம் ஒன்றுவிடாமல் வரிசையாகச் சுட்டிக்காட்டி, விரிவானதொரு அரசு ஆணையை வெளியிடுங்கள்; அதுமட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கும், நீதிமன்றம் எந்த நிலையிலும் குறுக்கிடாமல் இருப்பதற்கும் ஒரே தீர்வாக அமையும் என்று தி.மு.க சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இன்றுவரை தன்னுடைய அமைச்சரவையைக் கூட்டுவதற்கே தயங்கி, தாமதித்துத் தடுமாறிவரும் முதலமைச்சர், ஏதோ ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிவிட்டதாகப் பேசுவது வியக்கத்தக்கதாக மட்டுல்ல; வேடிக்கையாகவும் இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையைத் தொடங்க முக்கிய அனுமதிகளைக் கொடுத்தது அ.தி.மு.க அரசுதான்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே ஸ்டெர்லைட் ஆலையின் அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்ற புகைப்படங்கள் எல்லாம் இன்னும் செய்தித்துறையில் பாதுகாப்பாக இருக்கின்றன. ஆகவே, ஸ்டெர்லைட் ஆலை என்பது அ.தி.மு.க-வின் வளர்ப்புக் குழந்தை. அதை திடீரென்று எங்களுடையது அல்ல என்று கையை உதறி, தி.மு.க மீது திசை திருப்ப நினைப்பது முதலமைச்சருக்குக் கொஞ்சம்கூட அழகல்ல. அந்த ஆலை விரிவாக்கத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்ற நிலையில், மக்களின் கருத்தைப் பரவலாகவும், விரிவாகவும் கேட்டறிவதுதான் சட்டரீதியில் சரியானது. அதுவே, ஜனநாயக முறையிலான ஒரு அரசுக்கு அழகு. ஸ்டெர்லைட் ஆலை தொடங்குவதற்கும், தூத்துக்குடி பகுதியையே கொடிய நோய்களின் ஊற்றுக்கண்ணாக மாற்றியதற்கும் அ.தி.மு.க அரசு எப்படி காரணமானதோ, அதேபோல இன்றைக்கு 13 பேரை காக்கை குருவி போல சுட்டுக் கொன்றதற்கும் முதலமைச்சர் பழனிசாமியே முழு முதல் காரணம்.

அமைச்சரவை முடிவின்படி வெளியிடப்படும் அரசு ஆணை பற்றியும், ஸ்டெர்லைட் ஆலை தொடங்குவதற்கு யார் காரணம் என்பது பற்றியும், சட்டமன்றத்தில் நாள் முழுவதும் விவாதிக்க, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் நானும் தயாராக இருக்கிறோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். “நாங்க ரெடி; முதலமைச்சர் ரெடியா?” என்பதை உடனே வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.