Published:Updated:

`2019 நாடாளுமன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவோம்!’ - அமைச்சரவையை இறுதி செய்த காங்கிரஸ் - ஜே.டி.எஸ்

`2019 நாடாளுமன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவோம்!’ - அமைச்சரவையை இறுதி செய்த காங்கிரஸ் - ஜே.டி.எஸ்
`2019 நாடாளுமன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவோம்!’ - அமைச்சரவையை இறுதி செய்த காங்கிரஸ் - ஜே.டி.எஸ்

கர்நாடக மாநில அமைச்சரவை இலாகாக்கள் ஒதுக்கீடு தொடர்பாக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையிலான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. 
 

Photo Credit: ANI

கர்நாடகத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி முதலமைச்சராகப் பதவியேற்றார். துணை முதலமைச்சராகக் காங்கிரஸ் கட்சியின் பரமேஸ்வரா பதவியேற்ற நிலையில், இரு கட்சிகளிடையே அமைச்சர்கள் இலாகா ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது. இதனால், முதலமைச்சர், துணை முதலமைச்சர் பதவியேற்று ஒருவாரம் கடந்த நிலையிலும் அமைச்சரவை பதவியேற்கவில்லை. கடந்த சில நாள்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. 

இதுகுறித்து பெங்களூரில் காங்கிரஸ் கட்சியின் கே.சி.வேணுகோபால் மற்றும் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மாநிலத் தலைவருமான குமாரசாமி ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய கே.சி.வேணுகோபால், `அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது மற்றும் இலாகாக்கள் ஒதுக்குவது ஆகியவை தொடர்பாக எங்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு நிதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. துறைகள் ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்கப்பட்டு விட்டது. அதேபோல், வரும் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலையும் கூட்டணியாக சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார். அதன்படி, கர்நாடக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு சமூக நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, மருத்துவக் கல்வி, பஞ்சாயத்து ராஜ், வீட்டுவசதித் துறை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட 22 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு நிதித்துறை, பொதுப்பணித் துறை, சுற்றுலாத் துறை, கல்வி (மருத்துவம் தவிர), போக்குவரத்துத் துறை உள்ளிட்ட 12 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சரவை விரைவில் பதவியேற்கும் எனத் தெரிகிறது.