Published:Updated:

எம்.ஜி.ஆர் கட்சியில் 8 ‘முஷ்ரப்’கள்!

எம்.ஜி.ஆர் கட்சியில் 8 ‘முஷ்ரப்’கள்!
பிரீமியம் ஸ்டோரி
எம்.ஜி.ஆர் கட்சியில் 8 ‘முஷ்ரப்’கள்!

ஆயிரத்தில் ஒருத்தியும் அடிமைப் பெண்ணும்ப.திருமாவேலன்

எம்.ஜி.ஆர் கட்சியில் 8 ‘முஷ்ரப்’கள்!

ஆயிரத்தில் ஒருத்தியும் அடிமைப் பெண்ணும்ப.திருமாவேலன்

Published:Updated:
எம்.ஜி.ஆர் கட்சியில் 8 ‘முஷ்ரப்’கள்!
பிரீமியம் ஸ்டோரி
எம்.ஜி.ஆர் கட்சியில் 8 ‘முஷ்ரப்’கள்!

ந்தியாவின் அடிமுடியைச் சூழ்ந்துள்ளது மன்னார் வளைகுடா. தமிழ்நாட்டின் தலைமுடியை வளைத்துவிட்டது ‘மன்னார்குடி’ வளைகுடா. இதுவரை போயஸ் கார்டன் கடலுக்குள் மட்டுமே மையம் கொண்டிருந்த சசி சுனாமி, இப்போது கரை கடந்து ஊருக்குள் வரப்போகிறது. ‘இதுதான் முறை’ என்கிறார்கள் சிலர். ‘இது கறை’ என்கிறார்கள் சிலர். ‘கறை நல்லது’ காலத்தில் நடைமுறை பேசுதல் பாவம்.

சசிகலா இனி ‘சின்ன அம்மா’ என்றே அழைக்கப்படுவார். ஓ.பன்னீர் தலைமையிலான அமைச்சரவை ஒளித்துவைத்து நிறைவேற்றிய தீர்மானங்களில் இதுவும் ஒன்று. ‘சின்னம்மா’ என்று எழுதினால் சட்டப்படி குற்றம். ‘சின்ன அம்மா’ என்றே எழுத வேண்டுமாம். முன்னது சித்தி; இது அடுத்த அம்மா என்பது. சில மாதங்களில் ‘சின்ன’ என்பது சன்னம் சன்னமாக மறைந்து சசிகலாவே ‘அம்மா’ ஆகிவிடுவார். காலப்போக்கில் மூத்த அம்மா மறக்கப்படலாம்;  மறைந்துபோகலாம். முன்னுதாரணம் வேண்டுமானால் முப்பிறவி எடுத்த எம்.ஜி.ஆர் நிலைமையை அறியவும்.

எம்.ஜி.ஆர் கட்சியில் 8 ‘முஷ்ரப்’கள்!

இதில் ஆச்சர்யப்பட எதுவும் இல்லை. குத்தகை எடுத்தவரிடம்தான் மொத்த வியாபாரிகளும், சில்லறை வியாபாரிகளும் போவார்கள். முதல் 25 ஆண்டுகள் ஜெயலலிதா எடுத்திருந்தார். இன்று சசிகலாவை மொத்த பெருந்தலைகளும் ஆதரிக்கின்றன. ஆனால், ஜெயலலிதாவுக்கு ஆரம்பத்தில் இந்த நிலைமை இல்லை. ஒரு சிலர் தவிர எல்லோரும் எதிர்த்தார்கள். ‘சசிகலாவுக்கு என்ன தகுதி இருக்கிறது? வேலைக்காரிதானே? சி.எம் ஆக பி.ஏ நினைக்கலாமா?’ என்று சிலர் கேட்கிறார்கள். இவர்கள் எல்லாம் அ.தி.மு.க உறுப்பினர்களா? என்பது அடுத்த விஷயம். ஆனால், அன்று ஜெயலலிதா கொச்சைப்படுத்தப் பட்டார். அவரது ‘கேரக்டர்’ படுகொலை செய்யப்பட்டது. அன்று ஜெயலலிதா ‘ஆரிய மோகினி அவதாரம்’ எனப் பார்க்கப்பட்டார். இன்று சசிகலா ‘ஆதிக்க சாதி அச்சுறுத்தல்’ என நோக்கப்படுகிறார். இப்படி கால் நூற்றாண்டுக்கு ஒருமுறை அ.தி.மு.க-வில் கலங்கல் ஏற்படும். முன்பு தெளிந்திருக்கிறது. இப்போது கலங்கி விடக்கூடாது என்பதில் சசிகலா கவனமாக இருக்கிறார்.

எம்.ஜி.ஆர் காலத்து அ.தி.மு.க என்பது ரசிகர்கள் மயமாக இருந்தது. அதனால், அது கிராம மயமாக இருந்தது. ஜெயலலிதா இதன் தலைமையைக் கைப்பற்றி முன்று முறைக்கு மேல் ஆட்சியை தக்கவைத்து, அவருக்கு சசிகலாவின் அசைக்க முடியாத உதவி கிடைத்தபிறகு அ.தி.மு.க-வில் சாதிப் பசை படர ஆரம்பித்தது. பிராமணர்கள், முக்குலத்தோரால் (தேர்தலுக்குத் தேர்தல் இவர்களது ஆதரவு அளவீடுகள் மாறினாலும்) தொடர்ந்து தாங்கிப்பிடிக்கும் கட்சியாக அ.தி.மு.க வந்தது.

ஜெயலலிதா பிராமணர் என்பதற்காக ஆதரித்தவர்கள், சசிகலாவை ‘ஸ்ரீரங்கத்து இரண்டாவது தேவதையாக’ நினைத்தார்கள். சசிகலாவை தேவர் என்பதற்காக ஆதரிப்பவர்கள், ஜெயலலிதாவை ‘மூத்த நாச்சியாராக’ நினைத்தார்கள். இத்தகைய இரண்டு எண்ணம் கொண்டவர்களும் டிசம்பர் 5-ம் தேதிக்குப் பிறகு குழம்பிப் போயிருக்கிறார்கள். இணையத்தில் மிக நுணுக்கமான அரசியல் விமர்சனங்களை எழுதிவரும் வே.மதிமாறன், ‘இது கட்சிச் சண்டை அல்ல. சாதிச் சண்டை’ என்கிறார். ‘இப்படி இணையத்தில் சண்டை போட்டுக் கொண்டிருப்பவர்கள் அ.தி.மு.க உறுப்பினர் அல்லாதவர்கள்’ என்று சொல்கிறார் சைதை துரைசாமி. ‘சசிகலா தலைமையை நிராகரிப்பவன் அ.தி.மு.க தொண்டனே அல்ல’ என்று சொல்ல ஆரம்பித்துள்ளார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். சசிகலாவின் கையைப் பிடித்துக் கெஞ்சுகிறார் மதுசூதனன். கைக்கட்டி கண்கலங்கி நிற்கிறார் செங்கோட்டையன். 16-ம் நாள் முடிந்ததும் சசிகலாவுக்கு பட்டாபிஷேகம் சூட்டப்படலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எம்.ஜி.ஆர் கட்சியில் 8 ‘முஷ்ரப்’கள்!

அண்ணா தி.மு.க, அம்மா தி.மு.க ஆனது. அம்மா தி.மு.க அடுத்து மன்னார் தி.மு.க ஆகப்போகிறது. அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை இன்று சசிகலாவுக்கு ‘எதிர் கலா’ இல்லை. ஏனென்றால் ஜெ., உருவாக்கி வைத்திருந்த பயத்தில் பாதி, சசி மீதும் இருந்தது. பொதுமக்கள் மத்தியில் சசிகலா தலைவி ஆகாமல் இருந்திருக்கலாம். ஆனால், கட்சிக்காரர்கள் மத்தியில் சசிகலாவும் தலைவியாகவே கருதப்பட்டு வந்தார். 29 படங்கள் எம்.ஜி.ஆருடன் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அந்த அந்தஸ்தை ஜெயலலிதா அடைந்தது போல, 30 ஆண்டு காலம் ஜெயலலிதாவுடன் வலம் வந்ததன் மூலமாக சசிகலாவுக்கு இந்த அந்தஸ்து கிடைத்துள்ளது.

எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் ஊடலும் மோதலும் இருந்ததைப் போலவே ஜெயலலிதா- சசிகலாவுக்கு இடையேயும் ஊடலும் மோதலும் இருந்தன. ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர் தான் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி கொடுத்தார். அதே எம்.ஜி.ஆர்-தான் பறித்தார். ஜெயலலிதாவை தினமும் தலைமைக் கழகத்துக்கு வரவைத்து தொண்டர்களை தரிசிக்கச் சொன்னார் எம்.ஜி.ஆர். அவரே ஜெயலலிதா வெளியூர் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் தடை விதித்தார். தனக்கு எதிராக ஜெயலலிதா மாறக் கூடிய வாய்ப்பு இருக்கிறது என்ற சந்தேகம் எம்.ஜி.ஆருக்குக் கடைசிவரை இருந்தது. ‘எனக்குக் கிடைத்துவரும் புகழைப் பார்த்து எம்.ஜி.ஆர் பொறாமைப்படுகிறார்’ என்று ராஜீவ் காந்திக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் அந்தக் காலத்து ‘மக்கள் குரல்’ நாளிதழின் பேனராக வந்ததைப் பழையவர்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

இதே போன்ற முட்டல் மோதல் ஜெயலலிதாவுக்கும் - சசிகலாவுக்கும் நடந்து வந்ததே 30 ஆண்டு கால போயஸ் சரித்திரம். தான்தான் ஜெயலலிதாவுக்கு எல்லாம் என செயல்பட்டதால் சசிகலாவின் கணவர் எம்.நடராசனுக்கு கார்டனுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் பாதுகாவலராக இருந்த சசிகலாவின் தம்பி திவாகரன், கார்டனைவிட்டு விரட்டப்பட்டார். வளர்ப்பு மகனாக எடுக்கப்பட்ட வி.என்.சுதாகரன் விரட்டப்பட்டார். இவர்கள் மூவர் மீதும் ஜெயலலிதா ஆட்சிதான் வழக்கு போட்டது.

அடுத்து அதிகார மையமாக ஆன டி.டி.வி தினகரன் சில ஆண்டுகளில் அமுக்கப்பட்டார். அவர் மனைவி அனுராதா ஜெயா டி.வி-யில் இருந்து அனுப்பப்பட்டார். சசிகலாவின் அண்ணன் விநோதகனின் மகன் மகாதேவன் சில காலத்திலேயே சென்னைக்கு வர தடை செய்யப்பட்டார். டாக்டர் வெங்கடேஷுக்கு எம்.ஜி.ஆர் ஜெயலலிதா பேரவை பொறுப்பு தரப்பட்டுப் பறிக்கப்பட்டது. இப்படி மன்னார்குடி குடும்பத்தினர் அனைவரும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் ஜெயலலிதாவால் உயரத்துக்கு தூக்கப்பட்டு, ஜெயலலிதாவாலேயே அதல பாதாளத்தில் அமுக்கி மிதிக்கப்பட்டவர்கள்.

எம்.ஜி.ஆர் கட்சியில் 8 ‘முஷ்ரப்’கள்!

ஏன்... சசிகலாவே இரண்டு முறை ஜெயலலிதாவால் கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். ‘`கட்சியா சசிகலாவா... என்பதை நான் முடிவுசெய்ய வேண்டும் என்று தொண்டர்கள் விரும்பினார்கள். கஷ்டமான காலக்கட்டங்களிலும் சோதனையான சூழ்நிலைகளிலும் உற்ற தோழியாக, உடன்பிறவா சகோதரியாக சசிகலா எனக்கு உறுதுணையாக இருந்தார் என்ற நன்றி உணர்வு எனக்கு இருந்தாலும் ஒரு சில தனிநபர்களைவிட கட்சியின் நலனும் எதிர்காலமுமே மிக முக்கியம் என நான் கருதுகிறேன்’’ என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டு சசிகலாவை கட்சியைவிட்டு 1996-ல் ஜெயலலிதா நீக்கினார். அப்போது சசிகலா சென்னை மத்திய சிறையில் இருந்தார். அவரைப் பார்த்துவிட்டு வந்துதான் இப்படி அறிவித்தார் ஜெயலலிதா. பத்தே மாதங்களில் சசிகலா மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்தார்.

2011-ல் இதே மாதிரியான சூழ்நிலை ஏற்பட்டது. சசிகலா நீங்கலாக அவரது உறவுகள் அனைவரையும் ஒதுக்கிவைத்தார் ஜெயலலிதா. சசிகலா போயஸ் கார்டனில் இருக்கும்போது உறவுகளால் சந்திக்க முடியாது. அதற்காகவே சசிகலாவுக்கு புதிய பயணத்திட்டங்கள் வகுக்கப்பட்டன. சொத்துக் குவிப்பு வழக்குக்காக பெங்களூரு வரும் சசிகலா அங்கு தொடர்ந்து தங்க ஆரம்பித்தார். அங்கு மன்னார்குடி குடும்பத்தினர் அனைவரும் கூடி பேச ஆரம்பித்தனர். ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வருக்கும் சிக்கல் ஏற்படுத்தும் வழக்கு இது. இந்த நான்கு பேருக்கும் எதிராக தீர்ப்பு வந்தால் சசிகலா குடும்பத்தில் இருந்து அடுத்து யார் கட்சியையும் ஆட்சியையும் கையில் எடுப்பது என்று  பெங்களூரில் ஆலோசனை நடத்தப்பட்டதாக அன்றைய உளவுத்துறை அதிகாரி  முதல்வர் ஜெயலலிதாவிடம் கூறினார். கொதித்தெழுந்த ஜெயலலிதா கல்தா பட்டியலை தயார் செய்தார். சசிகலா, திவாகரன், தினகரன், பாஸ்கரன், சுதாகரன், வெங்கடேஷ், மகாதேவன், ராவணன், தங்கமணி, பழனிவேலு, கலியபெருமாள், ராஜராஜன், ராமச்சந்திரன், மிடாஸ் மோகன், மிடாஸ் குலோத்துங்கன்... ஆகியோரை கட்சியை விட்டே நீக்கினார். இதில் சசிகலாவை மட்டுமே மன்னிப்புக் கடிதம் வாங்கிக்கொண்டு வீட்டுக்குள் சேர்த்தார். மற்றவர்கள் சேர்க்கப்படவில்லை, இப்படி 30 ஆண்டுகளுக்கு முன் நீக்கப்பட்டவர்கள் முதல் மூன்று ஆண்டுகளுக்கு முன் நீக்கப்பட்டவர்கள் வரை அனைவரும் கைகோத்து இப்போது அ.தி.மு.க-வைக் கைப்பற்றி உள்ளனர்.

ஜெயலலிதா சிறைக்குப் போனால் என்ன செய்ய வேண்டும் என்று கஷ்டப்பட்டு யோசிக்க வேண்டிய நிலைமை இப்போது இல்லை. ஜெயலலிதாவே அந்த சிரமத்தை வைக்கவில்லை. ‘இங்கேயும் இருக்கிறான் ஒரு முஷ்ரப்’ என்று பேட்டி கொடுத்தார் ம.நடராசன்.

எம்.ஜி.ஆர் கட்சியில் 8 ‘முஷ்ரப்’கள்!

‘பாகிஸ்தான் பெனாசிர் பூட்டோ மீது பல்வேறு வழக்குகளைப் போட்டார் நவாஸ் ஷெரிப். பெனாசிருக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனையும் தரப் பட்டது. ‘இனி தன்னை வெல்வாரும் இல்லை கொல்வாரும் இல்லை’ என்று மமதையோடு கட்சி நடத்தினார் ஷெரிப். இந்த நிலையில் தனக்குள்ள ராணுவ அறிவைப் பயன்படுத்தி அரைமணி நேரத்தில் ஆட்சியைப் பிடித்தார் முஷ்ரப். அதுவரை முஷ்ரப் எங்கே இருந்தார் என யாருக்கும் தெரியாது. இனி இதுதான் தமிழ்நாட்டிலும் நடக்கப் போகிறது பாருங்கள்’ என்று சொன்னவர் ம.நடராசன்.

‘முஷ்ரப் என்று யாரைச் சொல்கிறீர்கள்?’ என்றபோது, ‘தமிழ்நாட்டிலும் ஒரு முஷ்ரப் இருக்கிறான்’ என்றார் ம.நடராசன். அதாவது தன்னை முஷ்ரப்பாக ம.நடராசன் சொல்லிக் கொண்டார். ஆனால், சசிகலா குடும்பத்தில்தான் இன்று எத்தனை முஷரப்புகள்?

ம.நடராசன், திவாகரன், டி.டி.வி.தினகரன், வீ.பாஸ்கரன், வீ.என்.சுதாகரன், டாக்டர் வெங்கடேஷ்,  மகாதேவன், விவேக் - என எட்டுப் பேர் எழுந்து நிற்கிறார்கள். இந்த ‘எட்டுப் பேரையும் அடக்க ஒரே ஒரு பெனாசிர்... சசிகலாவால் முடியுமா? அ.தி.மு.க. அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளை அடக்குவதைவிட சிரமமானது இந்த மன்னார் கம்பெனி டைரக்டர்களை அடக்குவது. அ.தி.மு.க அமைச்சர்கள் விழுந்தே கிடப்பார்கள். கால்கள் மட்டுமே மாறிக்கொண்டு இருக்கும். ஆனால், மன்னார்குடி குடும்பத்தினர் ஒவ்வொருவரும் நாட்டாமை ஆக நினைப்பவர்கள். இதுவரை இவர்களை அடக்க ‘ஆயிரத்தில் ஒருத்தி’ ஜெயலலிதா இருந்தார். இப்போது இருப்பது ‘அடிமைப் பெண்’ சசிகலா மட்டும்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism