மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம்

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம்
பிரீமியம் ஸ்டோரி
News
மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம்

சகுனி ஆட்டத்தைவிட மோசமான ஆட்டம்!

2014 செப்டம்பர் 27-ம் தேதி!

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நின்று கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. 4 ஆண்டுகள் சிறையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு எழுதுகிறார் நீதிபதி குன்ஹா. மதியம் 3 மணிக்கு சிறைக்குள் அடைக்கப்படுகிறார் ஜெயலலிதா.

2014 செப்டம்பர் 29-ம் தேதி!

சென்னை ராஜ்பவனில் பிற்பகல் 3 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை அழுகாச்சியோடு பதவியேற்கிறது.

இந்த இரண்டு சம்பங்களுக்கும் இடைவெளி, இரண்டு நாட்கள். சரியாகச் சொன்னால் 48 மணி நேரம். வழக்கில் தண்டிக்கப்பட்ட உடனே ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோகிறது. தெய்வமாகவே பூஜிக்கும் தலைவி, சிறையில் தள்ளப்பட்டதுமே தவித்துப் போனார்கள் கட்சியினர். அழுது புரண்டார்கள். அறிவிக்கப்படாத பந்த் போல காட்சி அளித்தது தமிழ்நாடு. 48 மணி நேரம் காத்திருந்து கடைசியில் தான் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை தேம்பிப் தேம்பி அழுதபடியே பதவியேற்றது.

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம்

2016 டிசம்பர் 5-ம் தேதி

அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் மாலை 6 மணிக்கு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாக அங்கே ஆஜர் ஆகிறார்கள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள். இரவு 7.30 மணிக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களை கவர்னர் மாளிகைக்கு அழைத்துச் செல்ல மூன்று சொகுசுப் பேருந்துகள் கட்சி அலுவலக வாசலுக்கு வந்து நிற்கின்றன. ‘இரவு 11-30 மணிக்கு ஜெயலலிதா இறந்துவிட்டார்’ என்கிற தகவலை அப்போலோ வெளியிடுகிறது. கிட்டத்தட்ட அதே நேரம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, தங்கமணி உள்ளிட்டோர் ஒரே காரில் அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் நுழைகிறார்கள். உயிருக்கு உயிரான தலைவி உயிர்விட்ட பிறகு கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். ஜெயலலிதாவின் உடல் அப்போலோவில் கிடக்க... இங்கே

ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராகத் தேர்வு செய்து கொண்டிருந்தார்கள். நள்ளிரவு 12.30 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்கள் அனைவரும் ஆளுநர் மாளிகை நோக்கிச் சென்றனர். குளு குளு பஸ்களில் ஆளுநர் மாளிகை வந்து இறங்கினார்கள் எம்.எல்.ஏ-க்கள். நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சரவை அடம்பிடிக்காமல்... அழாமல் பதவியேற்கிறது.

இந்தியாவிலேயே முதன்முறையாக ஊரே அடங்கிய நள்ளிரவில் பதவிப் பிரமாணம்  நடந்த பெருமை தமிழகத்துக்குக் கிடைத்தது. அந்தப் பெருமையை விடுங்கள். ஜெயலலிதா உயிருடன் சிறையில் இருந்தபோது 48 மணி நேரம் பொறுத்து கர்சீஃப் நனைய பதவியேற்ற மாண்புமிகுகள், ஜெயலலிதா செத்த செய்தி தெரிந்தும் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை நடத்தினார்கள். அப்போலோவில் இருந்து அவர் உடல் வீட்டுக்கு வந்து சேர்வதற்குள் நள்ளிரவில் அவசர அவசரமாக கண்ணீர் துளிகளைக்கூட சிந்தாமல் பதவியை ஏற்றார்களே... இவர்கள் இத்தனை காலம் ஜெயலலிதா மீது வைத்திருந்தது எல்லாம் வேஷமா? ஜெயலலிதா உயிருடன் சிறையில் இருந்தபோது 48 மணி நேரம் பொறுத்தவர்கள், ஜெயலலிதா இறந்த பிறகு சில மணி நேரம்கூட இவர்களால் பொறுக்க முடியாமல் போனதற்குப் பின்னால் இருந்த அரசியல் என்ன? மன்னார்குடி ஆட்கள் நடத்திய சதுரங்க ஆட்டம்தான் இது. மகாபாரதத்தில் சகுனி ஆடிய சதுரங்கத்தைவிட மோசமான அரசியல் சதுரங்கம் ஆடப்பட்டு கொண்டிருந்தது. ஜெயலலிதாவோடு 30 ஆண்டு காலமாக இருந்த சசிகலா, அவரிடம் கற்ற அரசியலை அவருக்கு பின்னால் ஆட ஆரம்பித்திருக்கிறார். பொதுக்குழுவுக்கு வந்தாலே ஜெயலலிதாவை வரவேற்று பேனர்களால் சென்னையை மூடி விடுவார்கள் கட்சிக்காரர்கள். கோட்டையில் வீடியோ கான்ஃபரன்ஸிங்கில் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்கே விடிய விடிய முழித்து போயஸ் கார்டன் டு கோட்டை வரையில் ஃப்ளக்ஸ் வைப்பார்கள். ஆனால், ஜெயலலிதா இறந்தபோது சென்னையில் இருந்த மொத்த அஞ்சலி போஸ்டர்கள் ஆயிரத்தைக்கூட தாண்டவில்லை. ஆனால், ‘கழகத்தின் பொதுச் செயலாளராக தலைமையேற்க தலைமகளே வா’ என்ற பேனர்கள் முளைத்தன. அதை தூக்கிவந்து வைத்தது ஜெயலலிதாவின் ஆவியா? ‘சிலர் ஆசைக்கும், தேவைக்கும், வாழ்வுக்கும், வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார். ஒரு மானம் இல்லை! அதில் ஈனம் இல்லை! அவர் எப்போதும் வால் பிடிப்பார்!’ என்று எம்.ஜி.ஆர். பாடிவிட்டுப் போனதும்கூட தீர்க்கதரிசனம்தான் போல.

கட்சிக்குத் தலைமையேற்கச் சொல்லி, ‘சொல்லிவைத்தார் போல’ கட்சிக்காரர்கள் படை திரண்டிருக்கிறார்கள். கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா இருந்தபோது மீடியா முன்பு பேசாதவர்கள் எல்லாம், ‘‘அம்மாவை முதல்வர் ஆக்கியதில் சின்னம்மாவுக்குப் பங்கு உண்டு. கட்சியின் வெற்றிடத்தை நிறைவுசெய்ய சசிகலா வர வேண்டும்’’ என பேட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதைக் கொஞ்சமும் செவிசாய்க்காமல் பற்றற்ற துறவு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார் சசிகலா. ஜெயலலிதா வின் உடலைச் சுற்றி அரண் அமைத்தவர்கள், ஜெயலலிதாவை எப்படி சுற்றி வளைத்தார்கள்? அரசியல் அரிச்சுவடியை சசிகலா எங்கே கற்றார். அவருக்குப் பின்னால் இருந்து இயக்கும் மன்னார்குடி ஆட்கள் செய்து வரும் மாயங்கள் என்ன? எப்படி வந்தார்கள்? வளர்ந்தார்கள்!

மன்னார்குடி ஜாதகத்தை அலசுவோம்.

அடுத்த இதழில்

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி