Published:Updated:

தெலங்கானாவுக்கு வயது நான்கு... எப்படி இருக்கிறது சந்திரசேகர் ராவ் அரசு? #4YearsOfTelangana

தெலங்கானாவுக்கு வயது நான்கு... எப்படி இருக்கிறது சந்திரசேகர் ராவ் அரசு? #4YearsOfTelangana
தெலங்கானாவுக்கு வயது நான்கு... எப்படி இருக்கிறது சந்திரசேகர் ராவ் அரசு? #4YearsOfTelangana

தெலங்கானாவுக்கு வயது நான்கு... எப்படி இருக்கிறது சந்திரசேகர் ராவ் அரசு? #4YearsOfTelangana

ந்திராவிலிருந்து தெலங்கானாவைப் பிரித்துத் தனிமாநிலமாக்க வேண்டும் என்பது பல ஆண்டு கோரிக்கை. ஜூன் 2, 2014 நள்ளிரவு 12 மணி, தெருவெங்கும் பட்டாசு வெடிக்கும் சத்தம். தெலங்கானா முழுவதும் மகிழ்ச்சியில் திளைத்தது. ஆந்திராவிலிருந்து `தெலங்கானா' தனி மாநிலமாகப் பிரிந்தது. இந்தியாவின் 29-வது மாநிலம் உருவாகி நான்காண்டுகள் கடந்துவிட்டன. 4 ஆண்டுகளில் தெலங்கானா ஒரு பார்வை.

2014-இல் வெகுவிமரிசையாகச் சந்திரசேகர் ராவ் 11 அமைச்சர்களுடன் பதவியேற்றார். இதில் சந்திரசேகர் ராவின் மகன் ராமா ராவ், மருமகன் ஹரீஷ் ராவ் ஆகியோரும் அடங்குவர். ஆட்சிக்கு வந்ததுமே பல அதிரடியான திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியாயின. 

விவசாயம் முதல் கல்வி,பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம், சுகாதாரம் வரை எல்லாத் துறைகளையும் முதல் 6 மாதங்களுக்குள் அலசி ஆராய்ந்து, ஒரு வரைவுத் திட்டத்தினை உருவாக்கிப் படிப்படியாகத் திட்டங்களை அறிவிப்புகளாக மட்டுமல்லாமல் செயலிலும் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார் சந்திரசேகர் ராவ்.

தெலங்கானாவில் `அம்மா திட்டம் !'

`கே.சி.ஆர். கிட்' என்ற திட்டத்தைக் கொண்டுவந்தார், சந்திரசேகர் ராவ். இத்திட்டம் வேற எதுவும் இல்லை; நம்முடைய தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த `அம்மா குழந்தை நலப் பரிசுப் பெட்டகமே'! இது மட்டுமல்ல, தமிழ்நாட்டில்  மாதந்தோறும் மகப்பேறுத் திட்டத்தின் மூலம் கர்ப்பிணிப் பெண்களுக்கு 12,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அதுபோலவே தெலங்கானாவிலும் தரப்பட்டு வருகிறது. 

தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம்

இரண்டே மாதத்தில் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து மாபெரும் சர்வே ஒன்றினை நடத்தினார், சந்திரசேகர் ராவ். இதன்மூலம் 38 லட்சம் விவசாயிகளுக்கு 17,000 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் தொகையை ரத்து செய்தார். அத்துடன், 24 மணி நேரம் விவசாயிகளுக்கு மின்சாரம் இலவசம், ஏரி மற்றும் குளங்களைத் தூர்வாருதல் எனப் பல திட்டங்களை அறிவித்தார். மீனவர்களுக்கு 51 கோடி ரூபாய் மதிப்பில் மீன் உற்பத்திக்கான விதைகளைக் கொடுத்தார். அத்திட்டம் வெற்றி பெறவே, தற்போது 2018 - 2019- ம் நிதியாண்டில் 82 கோடி ரூபாய் மதிப்பில் மீன் விதைகளைக் கொடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அனைத்தும் `இணைய' மயம்!

1931 நிஜாம் காலத்தில் இருந்த நிலவளங்களை முறைப்படுத்தி, அனைத்தையும் கணினி மயமாக்கி உள்ளனர். 577 குடியிருப்புப் பள்ளிகள், விவசாய ஆராய்ச்சிக்கு எனச் சோதனை மையங்கள், இலவச ஹெல்த் செக் அப் போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 40 அரசுத் துறைகளையும் இணையத்தில் இணைத்து, அரசுத் துறை முழுவதும் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. மக்களின் எந்தவொரு கோரிக்கையையும் உடனடியாக முதல்வரும், அமைச்சர்களும், அதிகாரிகளும் பார்க்க முடியும் என்ற அமைப்பில் இணையமயமாக்கப்பட்டுள்ளது.

நடுநிலை!

2016 செப்டம்பரில் தெலங்கானா மாநிலமே வெள்ளத்தில் மிதந்தது. அப்போது பேசிய சந்திரசேகர் ராவ், ``ஆறு, ஏரி, குளங்களை ஆக்கிரமித்துக் கட்டடங்களைக் கட்டியுள்ள எனது தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், கண்ணை மூடிக்கொண்டு புல்டோசரை வைத்துக் கட்டடத்தை இடித்துத் தரைமட்டம் ஆக்குங்கள்'' என்று கூறி மக்களை வியக்கவைத்தார். 

``அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களின் பெயர்ப் பலகைகளைத் தெலுங்கிலே வைக்க வேண்டும். ஒருவேளை, வேறு மொழியில் வைக்க விரும்பினால் தெலுங்குடன் சேர்த்துக்கொள்ளலாம். முதல் வகுப்பு முதல் 12- ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் கட்டாயம் தெலுங்கு கற்க வேண்டும். இனிமேல் தெலுங்கு கற்பிக்காமல் எந்த ஒரு கல்வி நிறுவனமும் செயல்பட முடியாது'' என்று கூறினார். இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தொடர்ந்து வலியுறுத்தி, தன்னுடைய எதிர்ப்பை மத்திய அரசுக்குக் காட்டிவருகிறார்.

வீட்டுப்பாடத்துக்கு `நோ'!

மாணவர்களுக்கு இனி வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது. ஏதாவது ஒரு குறிப்பிட்ட பாடத்துக்கு மட்டுமே வீட்டுப்பாடம் கொடுக்க வேண்டும். மாணவர்கள் அடுத்த நாள் என்ன பாடத்தைக் கொண்டுவர வேண்டும் என்று முந்தைய நாளே ஆசிரியர்கள் கூறிவிட வேண்டும். இதுமட்டுமல்லாமல், `பள்ளிக்கு மாணவர்கள் கொண்டுசெல்லும் பாடப் புத்தகங்களின் அளவையும் குறைத்துள்ளனர்.

சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை!

சந்திரசேகர் ராவ் பதவியேற்ற இரண்டே மாதத்தில் 80 விவசாயிகள் இறந்தது முக்கியமான பிரச்னையாக அப்போது கருதப்பட்டது. விவசாயிகள் வறட்சியில் இருந்தபோது 7 கோடி ரூபாய் செலவில் இவர் நடத்திய யாகம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. 5 கோடி ரூபாய் மதிப்பிலான பென்ஸ், 4.5 கோடி ரூபாய் மதிப்புள்ள டொயாட்டா ரக கார்கள் வாங்கும் போதும் சர்ச்சையில் சிக்கினார். மாவோயிஸ்ட் தாக்கலாம் என்பதால் குண்டு துளைக்காத பஸ் ஒன்று இவருக்காகப் பிரத்யேகமாக 5 கோடி ரூபாய் அளவில் உருவாக்கப்பட்டது. அப்போது எதிர்க் கட்சிகள், `மாநில முதல்வருக்கு எதற்காக 5 கோடி ரூபாய் செலவில் பேருந்து' என்று கேட்டு விமர்சித்தன.

ஹைதராபாத்தின் பேகம்பெட்டில் மிகப்பெரிய வீடு கட்டப்பட்டதும் மீண்டும் பரபரப்புக்குள்ளாக்கியது. இதில் சினிமா தியேட்டர், கான்ஃப்ரென்ஸ் ஹால், ஆடிட்டோரியம் போன்றவை இடம்பெற்றுள்ளன. இவ்வீடு முழுவதும் புல்லட் ப்ரூப் வசதியைக் கொண்டது.  தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் எந்த ஒரு பதிலும் அளிக்காமலேயே இருக்கிறார் முதல்வர்.

தமிழ்நாட்டின் முதலீடுகளை ஈர்க்கிறதா தெலங்கானா ? 

கூகுள் கேம்பஸ் ஹைதராபாத்தில் அமையவுள்ளது. இதன்மூலம் தொழில்நுட்ப வசதிகள் பெருகும் என்று எதிர்பார்க்கிறது தெலங்கானா அரசு. அமேசான் போன்ற நிறுவனங்களும் தங்களது நிறுவனத்தைத் தெலங்கானாவில் தொடங்க விருப்பம் தெரிவித்து வருகிறது.

முதலீடுகளை ஈர்ப்பதில் சென்ற ஆண்டில் தேசிய அளவில் 4-ஆவது மாநிலமாக உள்ளது தெலங்கானா. ஹைதராபாத்தைத் தலைநகராகக் கொண்ட தெலங்கானா, 31 மாவட்டங்கள், 6 மாநகராட்சிகள், 38 நகராட்சிகள், 443 மண்டல மக்கள் மன்றங்கள், 8,878 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் பலவற்றில் சிலவற்றைச் செயலில் கொண்டு வந்துள்ளது சந்திரசேகர் ராவின் தலைமையிலான அரசு. அதேசமயம், இந்த ஆட்சியில் மக்கள் முழுத் தன்னிறைவுடன் இருக்கிறார்களா என்றால், நான்கு ஆண்டுகளை வைத்து ஒரு மாநிலத்தின் வளர்ச்சி அதிகரித்துவிட்டது என்று கூற முடியாத நிலையில்தான் உள்ளது. புதிய மாநிலத்தின் முதல் அரசு என்பதால், எல்லாவற்றையும் சரியாகச் செய்ய வேண்டிய பொறுப்பில் சந்திரசேகர் ராவ் அரசு இருந்தது. எப்படியும் தெலங்கானா மாநிலம், நாடாளுமன்றத் தேர்தலுடன் தேர்தலைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலங்கானாவின் வளர்ச்சி அடுத்த ஆட்சி அமையும்போதுதான் நிலையாகத் தெரிய ஆரம்பிக்கும். 

நான்கு ஆண்டுகளில் தெலங்கானாவின் செயல்பாடுகள் `பாஸ்' என்றே சொல்லவைத்துள்ளன.

அடுத்த கட்டுரைக்கு