Published:Updated:

ஸ்டாலின் கணக்கு! - ஸ்டாலின் Vs சசிகலா

ஸ்டாலின் கணக்கு! - ஸ்டாலின் Vs சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின் கணக்கு! - ஸ்டாலின் Vs சசிகலா

ப.திருமாவேலன் - படம்: ப.சரவணகுமார்

ஸ்டாலின் கணக்கு! - ஸ்டாலின் Vs சசிகலா

ப.திருமாவேலன் - படம்: ப.சரவணகுமார்

Published:Updated:
ஸ்டாலின் கணக்கு! - ஸ்டாலின் Vs சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின் கணக்கு! - ஸ்டாலின் Vs சசிகலா
ஸ்டாலின் கணக்கு! - ஸ்டாலின் Vs சசிகலா

காத்திருந்து, காத்திருந்து கண்கள் பூத்திருந்த ஸ்டாலினுக்கு, இதோ காலம் கனியப்போகிறது.

தி.மு.க-வின் செயல் தலைவராக முடிசூடவிருக்கிறார் ஸ்டாலின். அடுத்து அவரது இலக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதவி!

`மகன் என்பதற்காக ஸ்டாலினை, கருணாநிதி வளர்த்துவிடுகிறார்’ என்று குற்றம்சாட்டியவர்கள்கூட, ‘எப்பப்பா... கருணாநிதி தன் மகனுக்கு விட்டுத்தரப் போறார்?’ என எரிச்சலோடு கேட்கும் அளவுக்கு இழுத்தடித்தார் கருணாநிதி. பொதுக்குழுவா, பொதுக்கூட்டமா, முப்பெரும் விழாவா, மாநாடா... எதுவாக இருந்தாலும் கூட்டத்தினர் கைதட்டுவதற்காகச் சொல்லும் வார்த்தைகளில் ஒன்றாக `ஸ்டாலின்’ பெயர் ஆகிப்போனது.

`தி.மு.க என்ன சங்கர மடமா... வாரிசுகளை நியமிக்க?’ எனக் கேட்ட கருணாநிதிதான், `எங்களுக்குப் பின்னால் உங்களை எல்லாம் வழிநடத்த இருக்கிற தம்பி ஸ்டாலின் அவர்களே...’ எனச் சொல்லிக் கைதட்டல்களை அள்ளினார்; ஒவ்வொரு கூட்டத்திலும் இதோ அறிவிக்கப் போகிறேன்... அதோ அறிவிக்கப்போகிறேன் என சஸ்பென்ஸ் கூட்டினார்; கதை, வசனகர்த்தா என்பதால், காட்சிக்குக் காட்சி திடுக் திருப்பங்களை வைத்து, மர்மம் விலகிவிடாமல் பார்த்துக்கொண்டதில் கருணாநிதி சமர்த்தர். வரும் டிசம்பர் 20-ம் தேதி தி.மு.க பொதுக்குழுவில், ஸ்டாலின் செயல் தலைவர் ஆக்கப்படலாம் அல்லது இதுவும் கருணாநிதியின் இன்னொரு எபிசோட் ஆக்கப்படலாம். எப்படிப் போனாலும் ஸ்டாலின்தான் இன்று தி.மு.க-வின் அறிவிக்கப்படாத தலைவர். தனது காலம் முடிந்து சிலபல ஆண்டுகள் ஆகி விட்டன என்பது கருணாநிதியின் மனசாட்சிக்கே தெரியும்.

ஸ்டாலின் கணக்கு! - ஸ்டாலின் Vs சசிகலா

ஸ்டாலின் தலைமையை ஏற்க மறுப்போர் இப்போது கழகத்தில் இல்லை. ஸ்டாலினை மகனாகப் பார்க்கும் கோ.சி.மணிகள் முடிந்துபோனார்கள்; ஸ்டாலின் எல்லாம் தலைவரா என நினைக்கும் வீரபாண்டி ஆறுமுகங்கள் இறந்துபோனார்கள்; தாங்கள் அல்லவா தலைவர்கள் என நினைத்த வைகோக்கள் வெளியேறிவிட்டார்கள்; அண்ணாவை அறிந்த எல்.கணேசன், ஸ்ரீவில்லிபுத்தூர் அமுதன் போன்றவர்கள் அண்ணாவைவிட அமைதியாகிப்போனார்கள்; கருணாநிதியைக் காதலித்த பலர் மனக் கொப்பளங்களோடு வீட்டையே மருத்துவமனை ஆக்கிக்கொண்டு முடங்கிப்போனார்கள். இப்போது இருப்பது அண்ணா காலத்து தி.மு.க-வும் இல்லை; கருணாநிதி காலத்து தி.மு.க-வும் இல்லை. இது, ஸ்டாலின் தி.மு.க..
 
ஸ்டாலின் தலைமையை ஏற்பவர்கள், ஸ்டாலினை மட்டுமே அறிந்தவர்கள், ஸ்டாலினைத் தவிர வேறு யாரையும் அறியாதவர்கள் - இந்த மூன்று ரத்தவகை கொண்டவர்களுக்கு மட்டும்தான் தி.மு.க-வில் இடம். இதற்கு முரண்பட்ட சிந்தனை கொண்டவர்களுக்கு கழகத்திலேயே இடம் இல்லை. அவர்களுக்கு கழகமே இல்லை. இப்படிப்பட்ட மனிதர்கள் கருணாநிதியையே கசப்போடு பார்க்கிறார்கள். இது அவர்களின் தவறு அல்ல. கருணாநிதி, முன்கூட்டியே ஸ்டாலினுக்குப் பட்டாபிஷேகம் சூட்டி அந்தப் பெருமையை அடைந்திருக்கலாம். `ஒரு பிடி உமியை எடுத்துத் தூக்கிவீசும் அளவுக்கு ஒருவனுக்கு சக்தி இருந்தாலேகூட அவன் செயல் படுபவன்தான்’ என தனிப்பட்ட உரையாடல் ஒன்றில் கருணாநிதி சொன்னதாகச் சொல்வார்கள். ஆனால், இதை உடன்பிறப்புகள் ஒப்புக்கொள்ள வில்லை. ஒருகாலத்தில் கரகர குரலில் கர்ஜித்த தலைவர், இன்று முன்னுக்குப்பின் பொருத்தம் இல்லாமல் பேசுவதைப் பார்த்த வருத்தமும் கலந்துதான் இந்தக் கசப்பும். எனவே, மனரீதியாகவே தங்கள் தலைவராக ஸ்டாலினுக்கு ஏற்கெனவே தொண்டர்கள் மாலை அணிவித்துவிட்டார்கள்.

தலைவர் பதவி அதுவாக வந்துவிடும் என்று எதிர்பார்த்த காலத்தில் எல்லாம் அமைதியாக, சோர்வாக, இன்னும் சொன்னால் அலட்சியமாகக்கூட இருந்தார் ஸ்டாலின். கருணாநிதி விட்டுத்தரப்போவது இல்லை என்பதை எப்போது உணர்ந்தாரோ, அன்றில் இருந்துதான் உழைக்க ஆரம்பித்தார்; இளையவர்களை அரவணைக்க ஆரம்பித்தார். அறிந்தவர்களைப் பார்த்துச் சிரித்தார்; அறியாதவர்களை அறிமுகம்செய்துகொண்டார். மொத்தத்தில் மகன் என்பதற்காக எனக்கு மகுடம் சூட்டப்படவில்லை. எனது உழைப்பால் கிடைத்தது என உணர்த்துவது மாதிரி காட்டிக்கொண்டார். ஸ்டாலின் வளர்வதற்கு இடைஞ்சலாக இருந்தவற்றை வெட்டிவிட்டது வேண்டுமானால், கருணாநிதியின் உபகாரமாக இருக்கலாம். தன்னை உரம்போட்டு வளர்த்துக் கொண்டது ஸ்டாலின்தான்.

இளைஞரணிச் செயலாளர், பொருளாளர் எனக் கட்சியிலும் - சென்னை மாநகராட்சி மேயர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், துணை முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் என நிர்வாகப் பணிகளிலும் - இரட்டைக் குதிரைகளில் பயணம்செய்து, இரண்டு பணிகளிலும் தனது பெயரை நிலைநிறுத்திக் கொண்டதால்தான், தமிழ்நாடு அரசியலில் கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு அடுத்த மூன்றாவது இடம் ஸ்டாலினுக்குக் கிடைத்தது.

ஒருகாலத்தில் ஜெயலலிதாவைப் பார்த்து ஸ்டாலின் பயந்தார். `எங்கே உங்கள் தளபதி? யாருக்கும் தெரியாதது மாதிரி வருகிறார்; யாரும் பார்க்காத நேரத்தில் போய்விடுகிறார். இவர்தான் உங்கள் தளபதியா?’ என்று தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே ஜெயலலிதா கேட்டார். அப்படிப்பட்ட ஸ்டாலின்தான், இப்போது எதிர்க்கட்சித் தலைவராக நின்று, ஜெயலலிதாவுக்கு எதிராகக் கேள்விக்கணைகளைத் தொடுத்தார். அத்தகைய அச்சுறுத்தும் பிம்பமாக இருந்த ஜெயலலிதா இப்போது இல்லை.

ஸ்டாலின் கணக்கு! - ஸ்டாலின் Vs சசிகலா

ஒருகாலத்தில் கருணாநிதியைப் பார்த்து ஸ்டாலின் நெளிந்தார். எதைப் பற்றியும் பத்திரிகையாளர்களிடம் பேசுவதைத் தவிர்த்தார். `உங்கள் பெயர் என்ன?’ என்று கேட்டால்கூட , `தலைவர் கலைஞர் பொதுக்குழுவில் அறிவிப்பார்’ என்று பதில் சொல்லும் நிலையில் இருந்தார். ஆனால், இன்று கருணாநிதி அறிக்கையை முந்திக்கொண்டு ஸ்டாலின் அறிக்கை வருகிறது. கருணாநிதியின் நிலைப்பாட்டுக்குச் சற்று மாறுபட்ட கருத்துக்களைக்கூட ஸ்டாலின் சொல்லிவிடுகிறார். அந்த அளவுக்குத் தைரியம் பெற்றுவிட்டார்.

தடைக்கல்லாக இருந்த கருணாநிதியும் கோபாலபுரத்துக்குள் முடங்கிவிட்டார். ஸ்டாலினே எதிர்பாராத வகையில் அவருக்காகத் திறக்கப்பட்ட பாதைகள் இவை. அவரே மெனக்கெடாமல் பொசுக்கென நடந்துவிட்டவை இவை. அவர் ஜாதகத்தில் இல்லாமல், அடுத்தவர் ஜாதகம் மூலமாக மூன்றாம் இடத்தில் இருந்து முன்னேறிவருகிறார்.

இத்தகைய சூழலில் புதிய இடைஞ்சல்கள் எதுவும் உருவாகிவிடக் கூடாது. வளர்ந்துவிடக் கூடாது என்பதில் கட்சிக்கு உள்ளேயும், கட்சிக்கு வெளியேயும் கவனமாக இருக்கிறார் ஸ்டாலின். `ஒரு குடும்பம், ஒரு பதவி’ என்பது ஸ்டாலின் மொழி. அதனால்தான் அண்ணனாக இருந்தாலும் அழகிரியைத் தள்ளிவைப்பது, தங்கையாக இருந்தாலும் கனிமொழியை ஒரு லிமிட்டுக்குள் வைப்பது. அழகிரி எத்தனை சவால் பேட்டிகள் கொடுத்தாலும், ராஜாத்தி எவ்வளவு கண்ணீர்த்துளிகள் விட்டாலும் ஸ்டாலின் கல்மனதோடு இருப்பதற்குக் காரணம், வீட்டுக்குள் இருந்து இன்னொரு வெட்டுக்கத்தி உருவாகிவிடக் கூடாது என்பதுதான்.

இது உள்ளே என்றால்... வெளியே?

விஜயகாந்தும் வைகோவும் பலம்பெற்றுவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் ஸ்டாலின். அவர்கள் இருவரும் கேட்பதை எல்லாம் கொடுத்து கூட்டணிக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என, கடந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் நினைத்தார் கருணாநிதி. கேட்பதை எல்லாம் கொடுத்தால் அந்த இரண்டு பேரும் அவர்களின் கட்சிகளும் தவிர்க்க முடியாத சக்திகளாக வளர்ந்துவிடுவார்கள். கருணாநிதி காலத்துக்குப் பிறகு தனக்கு எதிராகப் பலமாக நிற்பார்கள் என நினைத்தார் ஸ்டாலின். அதனால்தான் விஜயகாந்த் `கேட்டதை எல்லாம்’ கொடுக்க ஸ்டாலின் மறுத்தார். வைகோவைக் கோபப்படுத்த ஒரு வார்த்தையே போதும். `மு.க.தமிழரசு வீட்டுத் திருமணத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் என்றுதான் என்னைச் சொன்னார். அண்ணன் என்றுகூடச் சொல்லவில்லை. நான் அவரை உயர்வாகச் சொன்னேன்’ என முறுக்கிக்கொண்டு கூட்டணியைவிட்டு விலகினார் வைகோ. ஒருவேளை கருணாநிதி நினைத்த மாதிரி இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தால், இன்று தமிழகச் சட்டமன்றத்தில் மரியாதைக்கு உரிய இடங்களை விஜயகாந்தும் வைகோவும் வைத்திருக்கலாம். அதன் மூலமாக அவர்கள் இருவரும் கவனத்தை ஈர்த்திருக்கலாம். இன்று இவர்களும் சபையில் இல்லை; இவர்கள் கட்சியும் சபையில் இல்லை. பேரம் பேசும் சக்தி இந்தக் கட்சிகளுக்கு இல்லாமல்போனது. இதுவும் ஸ்டாலின் சாமர்த்தியம்தான். கருணாநிதி சொல்லிச் செய்வார். ஸ்டாலின் சொல்லாமல் செய்தார்.

இதுதான் வித்தியாசம்!