Published:Updated:

``அரசியலில் வெந்துபோக நேரிடும்!'' - ரஜினியை விமர்சிக்கும் தி.மு.க!

``அரசியலில் வெந்துபோக நேரிடும்!'' - ரஜினியை விமர்சிக்கும் தி.மு.க!
``அரசியலில் வெந்துபோக நேரிடும்!'' - ரஜினியை விமர்சிக்கும் தி.மு.க!

``அரசியலில் வெந்துபோக நேரிடும்!'' - ரஜினியை விமர்சிக்கும் தி.மு.க!

``தமிழகத்தில் தேச விரோதிகள் ஊடுருவி விட்டனர்'' என்று கடந்த ஆறு மாதங்களாகப் பேசி வருகிறார் பி.ஜே.பி-யைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். அதே கருத்தை அக்கட்சியின் தேசியத் தலைவர் ஹெச்.ராஜாவும் தெரிவித்துவந்தார். இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்; ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களைப் பார்த்து ஆறுதல் சொன்ன எதிர்க்கட்சித் தலைவர்கள், தமிழக அரசைக் கண்டித்தார்கள். இதுகுறித்து தமிழகச் சட்டமன்றத்தில், விளக்கம் சொன்ன முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``கலவரத்துக்குச் சமூகவிரோதிகளே காரணம்'' என்றார். இந்தக் கருத்தை அப்படியே வழிமொழிவதுபோல, தூத்துக்குடிக்குச் சென்ற ரஜினி, ``துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குச் சமூக விரோதிகள், விஷக்கிருமிகளே காரணம்'' என்றதோடு, ``எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும்'' என்றும் எச்சரித்தார். 

ரஜினியின் இந்தக் கருத்தை வரவேற்று அ.தி.மு.க நாளிதழான, `நமது புரட்சித் தலைவி அம்மா'வும் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. பி.ஜே.பி. தமிழகத் தலைவர் டாக்டர் தமிழிசையோ, ``நாங்கள் சொல்லிவந்த கருத்தைத்தான் ரஜினி சொல்லியுள்ளார்'' என்று பெருமையோடு குறிப்பிட்டார். பி.ஜே.பி. மூத்த தலைவர் இல.கணேசனோ, ``ரஜினி கூறிய கருத்து சரியானதுதான். போராட்டத்தில் சமூகவிரோதிகள் கலந்துகொண்டுள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும். அவர்களைத் தூண்டிவிட்ட சதிகாரர்களையும் தண்டிக்க வேண்டும்'' என்று தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்திருந்தார். இப்படி ஒரே நேரத்தில் அ.தி.மு.க-வும், பி.ஜே.பி-யும் ரஜினியின் கருத்துக்கு வரவேற்பு அளித்துள்ளது மற்ற எதிர்க்கட்சியினரைச் சிந்திக்கவைத்துள்ளது. 

இந்த நிலையில், ரஜினியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள பி.ஜே.பி-யும், அ.தி.மு.க-வும் ஓரணியில் நிற்பது குறித்து தி.மு.க அதிகாரபூர்வ நாளேடான `முரசொலி'யில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ``தூத்துக்குடி துப்பாக்கிப் பிரயோகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லப்போன ரஜினி, அங்கே சென்றவுடன், பாதிக்கப்பட்டவர்கள் உணர்வுக்கு எதிராகப்    பேட்டியளிக்கிறார். மத்திய - மாநில அரசுகளின் பிரதிநிதிபோல தன்னைப் பிரதிபலித்துக்கொள்கிறார்'' என்று அந்த நாளேடு கண்டித்துள்ளது. மேலும் அதில், ``அரசியல் களத்தில் முழு மூச்சாக இறங்குமுன் ரஜினிகாந்த், ஆழம் பார்க்க எடுத்துவைத்த முதல் அடியிலேயே சறுக்கி விழுந்துள்ளார். அவரது தூத்துக்குடி விஜயம்  - அதனைத் தொடர்ந்து அவர் அளித்தபேட்டி - பின்னர் விமான நிலையத்தில் நிருபர்கள் மத்தியிலேயே அவர் ஆத்திரத்தில் வெடித்தது  - இவை எல்லாமே அவரது நிலைகுலைந்த தன்மையை வெளிக்காட்டுவதாகவே இருந்தது. 

ஆன்மிக அரசியல் நடத்தப்போவதாக அறிவித்த அவரது `ஆன்மிகம்’ கேள்விக்குறியாகிவிட்டது. யாரோ ஒருவர் இயக்க, அதன்படி இயங்கி வெற்றிபெறுவது சினிமாவில் சாத்தியமாகலாம். ஆனால், அரசியலில் அது இயலாத ஒன்று என்பதை அவரது தூத்துக்குடி விஜயமும் அதன் விளைவுகளும் அவருக்குத் தெளிவாக்கியிருக்கும் என நம்புகிறோம். தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிப் பிரயேகம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவுசெய்த கருத்துக்கு முற்றிலும் மாறாக ஒரு கருத்தைப் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதையும், `அனைத்துக்கும் போராட்டங்கள் கூடாது' என்று தூத்துக்குடியில் பேசும் அவர், வரவிருக்கும் தனது படத்தில், `அனைத்துக்கும் போராடுவோம்' என்கிறார். 

இவையெல்லாம் சுட்டிக்காட்டப்பட்டு சமூக வலைதளங்களில் பல விமர்சனங்கள் வலம் வருகின்றன. இப்படி மாற்றி மாற்றிப் பேசுவதும், செயல்படுவதும்தான் ஆன்மிக அரசியலா என்பதை ரஜினிதான் தெளிவாக்க வேண்டும். பத்திரிகையாளர் சந்திப்பின்போது தன்  நிலைமறந்து பதற்றத்தோடு வெடித்துவிட்டு, அதற்கு பல திக்குகளிலிருந்தும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பிய பிறகு வருத்தம் தெரிவித்த ரஜினி, தன் கருத்துக்கு எதிராக மறுப்புத் தெரிவிக்கும் வகையில், மறுநாள் வருத்தம் தெரிவித்துள்ளார். 

`நான் ஒருமுறை சொன்னால் அது நூறு முறை சொன்ன மாதிரி'  என்று திரைப்படங்களில், `பன்ச்’ டைலாக் பேசிய ரஜினிதான், இன்று தான் சொன்னதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். தவறாக தன் நிலை மறந்து உணர்ச்சிவசப்பட்டு  வெடித்ததற்கு வருத்தம் தெரிவித்ததை வரவேற்கலாம். ஆனால், அதே நேரத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போரில் விஷக்கிருமிகள், சமூக விரோதிகள் புகுந்ததாகக் கூறிய கருத்து ஏற்கத்தக்கதா? அந்தப் போராட்டத்தில் புகுந்த `விஷக்கிருமிகள், சமூகவிரோதிகளை’த் தனக்குத் தெரியும் என்று தெரிவித்த ரஜினி, அதனை வெளிப்படுத்தத் தயங்குவதேன்? தனக்குத் தெரிந்த விவகாரத்தையும் தெரிவிக்கத் தவிர்ப்பதுதான் ஆன்மிக அரசியலா? இதை, ரஜினி விளக்குவார் என எதிர்பார்க்கலாமா?

`எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால், தமிழகம் சுடுகாடாகி விடும்' எனக் கருத்துக் கூறியுள்ளார் ரஜினி. அப்படிக் கேள்வி எழுப்பியிருப்பது எந்த ரஜினி தெரியுமா? விரைவில் வரவிருக்கும்  தனது திரைப்படமான `காலா’வில், `அனைத்துக்கும் போராடுவோம். புரட்சி உருவாக்கப் போராடுவோம்’ எனப் பாடி நடித்துவிட்டு - நிழலில்ஒன்று; நிஜத்தில் வேறு ஒன்று எனச் செயல்படுவதுதான் ஆன்மிக  அரசியலா? இதை ரஜினி தெளிவாக்க வேண்டும்; அல்லது தெளிவாக வேண்டும். 

துப்பாக்கிச் சூடு நடைபெற்று பல நாள்களுக்குப் பின் திடீரென விழித்து அங்கே செல்கிறார். சென்று, துப்பாக்கிப் பிரயேகத்துக்கு நியாயம் கற்பிக்கிறார்; போராட்டத்துக்கு எதிராக விமர்சனங்களை வைத்ததே; அவர் யாராலோ ஏவப்பட்ட அம்பாகச் செயல்படுகிறார் என்பதைத் தெளிவாக்கவில்லையா? இதனைத்தான் நமது செயல் தலைவர்(ஸ்டாலின்), `அது ரஜினியின் குரல் அல்ல; அது வேறு யாருடைய குரலாகவோ தெரிகிறது' என்று தெளிவுப்படுத்தியுள்ளார்.

அரசியல் சூட்டின் வேகத்தை ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அனுபவித்து அடக்கி வாசித்த ரஜினி, அவர் அன்று நேரிடையான அரசியல்வாதி அல்ல; ஆனால், இன்று யாருடைய அச்சுறுத்தலுக்கோ பயந்து அரசியல் களத்தில் குதிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். எல்லாருக்கும் நல்ல கதாநாயகனாக விளங்கியவர், இன்று பலருக்கும் எதிராக, `வில்ல’னாக விமர்சிக்கப்படுகிறார். அரசியல் உமிழும் வெப்பங்களைத் தாங்கும் பக்குவத்தை ஏற்றிட உடல் உரம் மட்டுமின்றி, உள்ள உரமும் தேவை. ஆன்மிக அரசியல் என்ற போர்வையைப் போர்த்திக்கொண்டு அதனை எதிர்கொள்ள எண்ணினால் வெந்துபோக நேரிடும் என்பதை ரஜினி உணர வேண்டும்'' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்டாலின் - ரஜினியின் அரசியல் மோதல் தொடங்கிவிட்டது..!

அடுத்த கட்டுரைக்கு