Published:Updated:

“தொண்டர்கள் மனநிலையை சசிகலா அறியவேண்டும்!”

“தொண்டர்கள் மனநிலையை சசிகலா அறியவேண்டும்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“தொண்டர்கள் மனநிலையை சசிகலா அறியவேண்டும்!”

ஆனந்தராஜ் திடீர் குரல்

சிகலாவுக்கு எதிராக அ.தி.மு.க-வில் ஒலிக்கும் பிரபலக் குரல்களில் ஒன்று நடிகர் ஆனந்தராஜ் உடையது. தனது வில்லத்தனமான நடிப்பால் தமிழ் சினிமாவில் பல ஹீரோக்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த ஆனந்தராஜ், இப்போது சசிகலாவுக்கு எதிராகக் கருத்துகளைச் சொல்லி வருகிறார். அ.தி.மு..க தலைமைக் கழகப் பேச்சாளரான இவர், ‘‘சசிகலாவைப் பொதுச் செயலாளர் ஆக்க வேண்டும் என்றால், கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி தொண்டர்களின் ஆதரவும் தேவை’’ என்று தன் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார். அ.தி.மு.க-வின் அடுத்த பொதுச்செயலாளர் சசிகலாதான் என்று முடிவாகிவரும் சூழலில் ஆனந்தராஜை சந்தித்தோம்.

“தொண்டர்கள் மனநிலையை சசிகலா அறியவேண்டும்!”

‘‘ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க-வை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘தமிழகத்தில் அ.தி.மு.க ஆளும் கட்சி. இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி.   அப்படிப்பட்ட கட்சியின் தலைவர் அவர். கோடிக்கணக்கான தொண்டர்கள் இதயத்தில் வைத்து பூஜிக்கும் தலைவி அவர். அவர்களின் இழப்பு எவ்வளவு பெரிய துயரம் என்பது மெரினா கடற்கரைக்குப் போய் பார்த்தால் புரியும். யாராலும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.’’

‘‘இந்தச் சூழ்நிலையில் சசிகலாவை நீங்கள் எதிர்த்து உள்ளீர்களே?”

‘‘யாரைப் பொதுச் செயலாளர் ஆக்க வேண்டும் என்று கட்சியினர் முடிவு செய்கிறார்களோ அவர்களை ஏற்றுக்கொள்வதுதான் ஒரு நல்ல தொண்டனின் கடமை. ஆனால், எதைச் செய்ய வேண்டும் என நினைத்தாலும் அதற்கு நேரம் காலம் பார்த்து செயல்பட வேண்டும். குறிப்பாக, மக்களுடைய,  தொண்டர்களுடைய நலன்களைக் கருத்தில் கொண்டு ஒருமித்து செயல்பட வேண்டியது அவசியம்.’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz


‘‘பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலாவை தவிர வேறு யார் தகுதியானவர் என்று நினைக்கிறீர்கள்?’’

‘‘இதற்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. கட்சியின் முன்னோடிகள், மூத்தவர்கள் நல்ல முடிவை எடுப்பார்கள் என்று தொண்டர்களில் ஒருவனாய் நானும் காத்துக் கொண்டிருக்கிறேன். மாவட்டம்தோறும் சசிகலாவைப் பொதுச் செயலாளர் ஆக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர். தீர்மானம் நிறைவேற்றுவது என்பது அந்தந்த மாவட்ட நிர்வாகிகளின் கருத்தாகத்தான் இருக்கக் கூடும். ஆனால், நான் அந்த மாவட்டங்களில் உள்ள தொண்டர்களுக்காகப் பேசுகிறேன். எந்த முடிவை எடுத்தாலும், அது மக்களோட நலனுக்காகவும், கொஞ்சம் நிதானத்துடனும் செயல்பட வேண்டும் என்பதுதான் கருத்து.’’

‘‘இதுவரை மக்களோட பிரச்னைகளுக்காகப் பேட்டிகள் கொடுக்காத நிர்வாகிகள், சசிகலாவை பொதுச் செயலாளராக்குவது பற்றி பேட்டிகள் கொடுத்தார்களே?’’


‘‘கருத்து சொல்வது எல்லோருடைய சுதந்திரம். யார் வேண்டுமானாலும் கருத்துகள் சொல்லலாம். ஆனால், கருத்து சொல்வதற்கு முன் அது மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்குமா என்பதை சிந்தித்தால் போதுமானது. வெளிப்படுத்தும் கருத்துக்கு பின்னால் என்ன நோக்கம் இருக்கிறது, என்ன பலனை எதிர்பார்க் கிறார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.’’

‘‘முதல்வர் பன்னீர்செல்வம் தனித்து செயல்பட கட்சியில் சுதந்திரம் இருக்கும் என்று நினைக்கிறீர்களா?’’

‘‘நிச்சயமாக செயல்படலாம். செயல்பட வேண்டும். அம்மா வழிகாட்டுதலில் அவர் இரண்டு முறை முதல்வராக இருந்திருக்கிறார். அம்மாவின் நம்பிக்கைக்குரியவர், அமைதி யானவர். அனுபவம் உடையவர் என்பதால் அவருடைய செயல்பாடுகள் நல்ல முறையில் இருக்கும் என நம்புகிறேன்.’’

‘‘ஜெயலலிதாவின் மறைவு தொடர்பாகப் பல கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. அதைப் பற்றி கட்சி சார்பாக என்ன சொல்கிறீர்கள்?’’


‘‘மக்களும், தொண்டர்களும் கேட்கும் கேள்விகளுக்கு மருத்துவமனை உரிய பதில் தர வேண்டும். மரணம் குறித்தான சந்தேகங்கள் யாரால் எழுப்பப்படுகிறது என்பதை முதலில் பார்க்க வேண்டும். எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் மட்டுமே பதில் கூற முடியும்.’’

‘‘இரண்டாம் தலைமுறை இல்லாததால்தான் கட்சியை யார் தலைமை தாங்க வேண்டும் என்ற குழப்பங்கள் எழுகிறதா? கட்சி வாரிசாக யார் இருக்க வேண்டும்?’’


‘‘வாரிசு இல்லாத கட்சிதான் அ.தி.மு.க. கட்சி ஆரம்பித்தது முதல் ரத்த சொந்தங்கள் இல்லாமல்தான் இயங்கி வருகிறது.’’

‘‘தீபா அ.தி.மு.க சார்பாக ஆர்.கே நகரில் போட்டியிடப் போவதாகச் சொல்கிறார்களே?’’

‘‘கட்சியில் எந்த முடிவு எடுத்துக் கட்டளையிடு கிறார்களோ அதை நான் ஏற்பேன். கட்சி முன்னோடிகள் சிந்தித்து முடிவெடுப்பார்கள் என நம்புகிறேன்.’’

‘‘போயஸ் கார்டன் வீடு யாருக்கு சொந்தம்?’’


‘‘பேரறிஞர் அண்ணா வாழ்ந்த வீடு, எம்.ஜி.ஆர் வாழ்ந்த வீடுகளை நினைவிடமாக மாற்றியிருக் கிறார்கள். அம்மா வாழ்ந்த வீட்டை நினைவிடமாக மட்டும் இல்லாமல், அதை ஒரு ஆலயமாக அறிவித்து தினமும் பூஜை செய்யும் இடமாக மாற்ற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.’’

- நந்தினி சுப்பிரமணி 
படம்: சு.குமரேசன்