Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஆக்டிங் சி.எம்... ஆக்டிவ் சி.எம்.!

மிஸ்டர் கழுகு: ஆக்டிங் சி.எம்... ஆக்டிவ் சி.எம்.!
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு: ஆக்டிங் சி.எம்... ஆக்டிவ் சி.எம்.!

மிஸ்டர் கழுகு: ஆக்டிங் சி.எம்... ஆக்டிவ் சி.எம்.!

மிஸ்டர் கழுகு: ஆக்டிங் சி.எம்... ஆக்டிவ் சி.எம்.!

ர்தா புயல் வேகத்தில், பறந்துவந்து லேண்ட் ஆன கழுகாரிடம், ‘‘புது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எப்படிச் செயல்படுகிறார்?’’ என்றக் கேள்வியோடு ஆரம்பித்தோம்.

‘‘ ‘ரொம்ப பவ்யமானவர்... அதிகம் பேசமாட்டார்’ என்றெல்லாம் பல அடைமொழிகள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உண்டு. ஆனால், அவரை ‘ஒர்க் ஹாலிக்’ மனிதர் என்று ரொம்பப் பேருக்குத் தெரியாது. நெருக்கடியான நேரங்களில் அதிகாரிகளைப் பம்பரமாக வேலை வாங்குவதில் கில்லாடி. சென்னையில் புயல் அடித்த திங்கள்கிழமையன்று காலை எட்டு மணிக்கெல்லாம் தலைமைச் செயலகம் வந்துவிட்டார். முக்கிய அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், முதல்வரின் ஆலோசகர் என அனைவரையும் அழைத்தவர், ‘22 வருடங்களுக்குப் பிறகு சென்னை சந்திக்கும் மிகப் பெரிய புயலாக இருக்கும் என்று எனக்குத் தகவல்கள் வந்திருக்கின்றன. அசம்பாவிதங்களைத் தடுக்கும்விதமாக முன்கூட்டியே உங்களது துறை அதிகாரிகளை முடுக்கிவிடுங்கள். மீடியாக்களிலும் புயல் அபாயம் குறித்து பாதுகாப்பு எச்சரிக்கை செய்யுங்கள்’ என்று  சொல்லி உஷார்படுத்தியிருக்கிறார். புயல் சற்று ஓய்ந்த நிலையில், கோட்டூர்புரம் ஏரியாவில் மீட்பு நடவடிக்கையில் இருந்த உள்ளாட்சித் துறை அமைச்சரை போனில் கூப்பிட்டு, ‘பல ஆயிரம் மரங்கள் சரிந்து கிடப்பதாகத் தகவல்கள் வருகின்றன. எந்தவிதத்திலும் டிராஃபிக் பாதிக்கப்படக்கூடாது. முதலில் பிரதான சாலைகளை க்ளியர் செய்யுங்கள்’ என்று அவசர உத்தரவு பிறப்பித்திருக்கிறார். மற்ற ஊர்களில் உள்ள நகராட்சி ஊழியர்கள் தேவையான கருவிகளுடன் சென்னைக்குப் புறப்பட்டுவிட்டதாக அமைச்சரும் பதில் சொல்லியிருக்கிறார். இதையடுத்து, நகரெங்கும் விழுந்துகிடந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, பெரும்பாலான ரோடுகள் க்ளியர் ஆகின. தகவல் பரிமாற்றத்தில் செல்போன் தொடர்புகள் அடியோடு துண்டிக்கப்பட்டுவிட்டது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவன அதிகாரிகளுக்கு துறை அதிகாரிகளை உடனே தொடர்புகொண்டு பேசச் சொல்லி இருக்கிறார். டவர் பாதிப்புகளை உடனடியாக சரிசெய்யுமாறு கேட்டுக்கொண்டார்.’’

‘‘பரவாயில்லையே?’’

‘‘வருவாய்த் துறை அமைச்சரிடம் முதல்வர் சொன்ன ஒரு விஷயம்... ‘வர்தா புயல் என்பது முதலில் படு ஆக்ரோஷமாக இருக்கும். பிறகு அமைதி நிலவும். இதைப்பார்க்கும் மக்கள், புயல் அடித்து ஓய்ந்துவிட்டதாக நினைத்து வெளியில் நடமாடுவார்கள். அது மிக ஆபத்தானது. மூன்று கட்டங்களாக இடைவெளி விட்டுவிட்டு சூறாவளியாகத் தாக்கும் தன்மை கொண்டது வர்தா புயல். மறு அறிவிப்பு வரும்வரையில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பதைச் சொல்லுங்கள்’ என்று உத்தரவிட்டாராம். வருவாய் துறை செயலாளர், சென்னை மாநகராட்சி கமிஷனர் இருவரும் முதல்வர் சொன்ன தகவலை மற்றவர்களுக்கு ‘பாஸ்’ செய்துகொண்டிருந்தனர்.’’

‘‘புயல் அடித்த நேரத்தில் முதல்வர் எங்கே இருந்தார்?’’

‘‘தலைமைச் செயலகத்தில் அவரது அறையில் இருந்தார். மற்ற அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அந்தத் துறைகளின் ஸ்பெஷல் கன்ட்ரோல் ரூம்களில் போய் அமர்ந்தனர். புயல் ஓய்ந்ததும், முதல்வர் திடீரென தலைமைச் செயலகத்தைவிட்டுக் கிளம்பிவிட்டார். எண்ணூர் பகுதியில் கடலுக்கு மிக அருகில் உள்ள பகுதிகளுக்கு விசிட் போனார். அங்கே போய் சேரவே, இரண்டரை மணி நேரம் ஆனதாம். வழிநெடுகிலும் ரோடுகளில் விழுந்துகிடந்த மரங்களை அப்புறப்படுத்தியபடி சென்றிருக்கிறார்கள். அங்கே மக்களுடன் நெருக்கமாக நின்று ஆறுதல் சொல்லியவர், நிவாரண முகாமில் தயாராகிக்கொண்டிருந்த உணவை எடுத்து வாயில் போட்டு ருசி பார்த்தார். அடுத்தடுத்த நாட்களில் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும் விசிட் அடித்தார்.’’

‘‘ம்!’’

‘‘பொன்னேரி ஆர்.டி.ஓ. ஆபீஸில் கூட்டம் நடத்தியிருக்கிறார். மின்சாரம் தடைபட்டிருந்ததால், ஜெனரேட்டர் மின் வெளிச்சத்தில் நடந்த அந்தக் கூட்டத்தில் அதிகாரிகளைக் காய்ச்சி எடுத்துவிட்டாராம். ‘தானே புயல் நேரத்தில் கடலூரில் ஒரே நாளில் ஆயிரம் மரங்களை அப்புறப்படுத்தினோம். ஆனால், இந்த ஆபீஸ் உள்ள ரோட்டில் 10 மின்கம்பங்கள் சாய்ந்துகிடக்கின்றன. ஒருநாள் ஆகிவிட்டநிலையில், அவற்றை இதுவரை ஏன் அப்புறப்படுத்தவில்லை? என்ன நடக்கிறது?’ என்று சத்தம்போட்டிருக்கிறார். இதையடுத்தே மின்னல் வேகத்தில் மின்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன. ‘மின்சாரம் இல்லை. அதனால், மேல்நிலை நீர்தொட்டிகளில் நீர் ஏறவில்லை. தண்ணீர் இல்லாமல் சிரமமாக இருக்கிறது’ என்று மக்கள் முதல்வரிடம் புகார் சொல்ல... உடனடியாக நூற்றுக்கணக்கில் ஜெனரேட்டர்கள் கொண்டுவரப்பட்டு குடிநீர் வசதி செய்துதரப்பட்டுள்ளது.’’

மிஸ்டர் கழுகு: ஆக்டிங் சி.எம்... ஆக்டிவ் சி.எம்.!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘புழல் ஏரியாவில் உள்ள ஒரு ஓட்டலில் முதல்வர் சாப்பிட்டார் என்று தகவல் வந்ததே?’’

‘‘மதிய சாப்பாட்டு நேரத்தில் முதல்வர் திருவள்ளூர் மாவட்ட புயல் நிவாரண பொறுப்பாளர் அமைச்சர் விஜயபாஸ்கரை போனில் கூப்பிட்டு, ‘டி.ஜி.பி., முக்கிய செயலாளர்கள், மீடியாக்காரர்கள் என்னுடன் வந்துகொண்டிருக்கிறார்கள். வழியில் ஏதாவது ஓட்டல் இருக்கிறதா?’ என்று விசாரித்திருக்கிறார். புழலில் இருந்து சில கி.மீ. தூரத்தில் ஜனப்பன் சத்திரம் கூட்டு ரோடு அருகே ஓட்டல் இருப்பதாக விஜயபாஸ்கர் சொல்லியிருக்கிறார். அங்கே மத்திய உணவு ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டாராம் முதல்வர்.’’

‘‘ம்!’’

‘‘அந்த நேரத்துக்கு 50 சாப்பாடுகள்தான் அங்கே இருந்ததாம். முதல்வர் அந்த ஒட்டலில் போய் இறங்குவதை உடன் வந்த அதிகாரிகள் சற்றும் எதிர்பார்க்கவில்லையாம். மீடியாக்காரர்கள் ஒதுங்கி நிற்க... ‘அவர்களையும் அழைத்து வாருங்கள்’ என்று சொல்லிவிட்டு உள்ளே போனாராம் முதல்வர். மற்றவர்களுடன் சமமாக அமர்ந்து முதல்வர் மதிய உணவு சாப்பிட்டதை அந்த ஊர்க்காரர்கள் ஆச்சரியத்துடன் பார்த்திருக்கிறார்கள். அப்போது வெளியே ஏதோ கூச்சல் கேட்க.. அவசரமாக சாப்பிட்டுவிட்டு வெளியே வந்துவிட்டார். ஓட்டல் முன் கூடி நின்ற ஊர் மக்களை போலீஸார் விரட்டியடிப்பதைக் கண்டவர் போலீஸாரைத் தள்ளி நிற்கச் சொல்லிவிட்டு, மக்கள் மத்தியில் போயிருக்கிறார். அவர்கள் முதல்வரிடம், ‘நீங்கள் கூட வந்துவிட்டீர்கள். இங்குள்ள ஆளும் கட்சிக்காரர்கள் இந்தப் புயல் நேரத்தில் இதுவரை எங்களுக்கு உதவ வரவில்லை. பட்டா கேட்டு பல வருடங்களாக அலைகிறோம்’ என்று தங்கள் குறைகளைச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களிடம் கனிவாகப் பேசியவர் ‘நிச்சயமாகக் கவனிக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். காரில் போன போது, சில கிராமங்களில் காரை நிறுத்தி அங்கிருந்தவர்களிடம் குறைகளைக் கேட்டிருக்கிறார் முதல்வர்.

மிஸ்டர் கழுகு: ஆக்டிங் சி.எம்... ஆக்டிவ் சி.எம்.!

பழவேற்காடு முகத்துவாரத்தை நோக்கி முதல்வரும், மந்திரிகளும் சென்றனர். பழவேற்காடு படகு குழாமும், ஊர் பொது மேம்பாலமும் இணையும் மேம்பாலத்தில் நின்றபடி கவிழ்ந்தும் உடைந்தும் கிடந்த படகுகளை எட்டிப்பார்த்தார். போலீஸ் தரப்பில், நைலான் கயிறுகளைக் கட்டி மக்களை நெருங்கவிடாமல், செய்தும்கூட அந்த ஊர் இளவட்டங்கள் போலீஸ் தடுப்பை மீறி முதல்வரோடு செல்ஃபி எடுத்துக்கொண்டனர். முதல்வரும் அதை அனுமதித்தார்.’’

‘‘அப்படியா?”

‘‘திருவள்ளூர் மாவட்டத்தில் சில இடங்களில் மீடியாக்களை முதல்வர் அருகில் போகவிடாமல் தடுத்திருக்கிறார்கள் பாதுகாப்பு அதிகாரிகள். மீடியாக்காரர்கள் குரல் கொடுத்ததும் அதைக்கவனித்த முதல்வர் கோபமாக போலீஸாரை நோக்கி கை சைகைகாட்டி அடக்கியிருக்கிறார். மற்றபடி, மீடியாக்களிடம் அதிகம் பேசாமல் உஷாராக விலகியேப் போனார் முதல்வர். குறிப்பாக செய்தித் துறை கூடுதல் இயக்குநர் எழிலழகன், பழவேற்காடு முதல்வர் விசிட்டின்போது கேமராக்களை இடித்துவிட்டும் செய்தியாளர்களை முழங்கையால் இடித்துத் தள்ளியும் தனது விசுவாசத்தை முதல்வரிடம் காட்டப் பார்த்திருக்கிறார். ‘இவருக்கு என்ன இங்கே வேலை?’ என்ற ரீதியில், முதல்வர் அவரை உற்றுப்பார்த்தார்.’’

‘‘போலீஸார் ஏன் இவ்வளவு பில்டப் தருகிறார்கள்?”

‘‘ஜெயலலிதாவைச் சுற்றிலும் போலீஸார் ஒரு வளையத்தைப் போட்டு வைத்திருந்தார்கள். அதே பாணியில், இப்போது புது முதல்வரை சுற்றிலும் ஒரு மாயை ஏற்படுத்த போலீஸார் முயல்வதை மீடியாக்காரர்கள் முதல்வரின் காதில் சொல்லியிருக்கிறார்கள். ‘அதுமாதிரி நடக்காது. நான் பார்த்துக்கொள்கிறேன். என்னுடைய உதவியாளர்களை எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொள்ளுங்கள்’ என்றாராம்.’’

மிஸ்டர் கழுகு: ஆக்டிங் சி.எம்... ஆக்டிவ் சி.எம்.!

‘‘தலைநகரில் மின்சாரம்தானே அதிகம் பாதிக்கப்பட்டது?”

‘‘புயல் நிவாரண விவகாரங்களில் தினமும் பலமுறை அதிகாரிகள் லெவலில் கூட்டம் நடத்திவருகிறார் முதல்வர். அவர் அதிகம் விவாதித்தது மின்துறை அமைச்சருடன்தான். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மின்சாரத்தைக் கொண்டுவரும் 39 உயர் மின்அழுத்த கோபுரங்கள், சுமார் 10 ஆயிரம் மின் கம்பங்களும் வர்தா புயலில் கீழே சாய்ந்துவிட்டனவாம். 450-க்கும் மேற்பட்ட டிரான்ஸஃபார்மர்கள் முழுக்க சேதமடைந்து

விட்டன. இதையெல்லாம் அமைச்சர் சொல்ல... ‘எப்போது சரிசெய்யப் போகிறீர்கள்?” என்றாராம் முதல்வர். அதேநேரம், பொதுமக்கள் தரப்பில் இருந்து ஏகப்பட்ட புகார்கள் மின் பாதிப்பு பற்றித்தான் வந்துகொண்டிருந்தன. சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மின்வாரிய தலைவர் வீட்டை அடையார் மக்கள் முற்றுகையிட்டனர். அண்ணா சாலையிலும் அதே நிலைமை.’’

‘‘முதல்வரின் நடவடிக்கைகளைப் பார்த்து அதிகாரிகள் என்ன நினைக்கிறார்களாம்?”

‘‘ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இரண்டு பேர் பேசிக்கொண்டார்களாம். ‘மத்திய அரசிடமிருந்து வரும் பணத்தை எதிர்பார்க்காமல், தானே முடிவெடுத்து உடனடியாக ஐநூறு கோடி ரூபாயை முதல்கட்டமாக நிவாரணப் பணிகளுக்காக முதல்வர் அறிவித்தது நல்ல நடவடிக்கை. கடந்த ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிடுவதில் கூட முதல்வர் ஜெயலலிதாவிடம்  இருந்து உரிய நேரத்தில் சிக்னல் கிடைக்காததுதான் பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிட்டது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், புது முதல்வரிடம் அந்தமாதிரி பிரச்னை இல்லை. அத்தோடு, அமைச்சர்கள் இப்போதெல்லாம் மீடியாக்களிடம் ஃப்ரீயாக பேசுகிறார்கள். அரசின் முக்கிய செயலாளர்களை எளிதில் தொடர்புகொள்ளமுடிகிறது’’ என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார்,

‘‘ஜெயலலிதா இறந்த தினத்தன்று போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்த குளறுபடிகளை ஆராய்ந்த முதலமைச்சர் பன்னீர்செல்வம் உயர் போலீஸ் அதிகாரிகளை அழைத்து டோஸ் விட்டதாக ஒரு தகவல் இருக்கிறது. ஆக்டிங் சி.எம். இப்போ ஆக்டிவ் சி.எம். ஆகிவிட்டதாகத் தெரிகிறது” என்றபடி பறந்தார்.

படங்கள்: ஆ.முத்துக்குமார்