Published:Updated:

‘‘ஒரு பெண்ணின் வெற்றிடத்தை இன்னொரு பெண்ணால்தான் நிரப்ப முடியும்!”

‘‘ஒரு பெண்ணின் வெற்றிடத்தை இன்னொரு பெண்ணால்தான் நிரப்ப முடியும்!”
பிரீமியம் ஸ்டோரி
News
‘‘ஒரு பெண்ணின் வெற்றிடத்தை இன்னொரு பெண்ணால்தான் நிரப்ப முடியும்!”

வைகைச்செல்வன் விளக்கம்!

‘‘ஒரு பெண்ணின் வெற்றிடத்தை இன்னொரு பெண்ணால்தான் நிரப்ப முடியும்!”

‘பொதுச்செயலாளர் பதவியை சசிகலா ஏற்க  வேண்டும்’ என கட்சியின் நம்பர் 2 மதுசூதனன் தொடங்கி ஆட்சியின் நம்பர் ஒன் ஓ.பன்னீர்செல்வம் வரையில் வலியுறுத்தியிருக்கிறார்கள். செங்கோட்டையன், தம்பிதுரை என சீனியர்களும் ஆதரவு கோஷத்தை எழுப்பியிருக் கிறார்கள். அதற்கு எதிர்ப்புகளும் கிளம்பியிருக்கின்றன. அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் என்ன சொல்கிறார்?
 
‘‘அம்மா இல்லாத வெற்றிடத்தை சின்ன அம்மாவால் மட்டுமே நிரப்ப முடியும். அதற்கான அத்தனை தகுதிகளும் அவரிடம் நிரம்பியிருக்கின்றன. ‘அம்மா’ என்கிற அடைமொழியோடு இணைந்துகொண்ட அன்புமொழிதான் ‘சின்ன அம்மா’. இது தொண்டர்களால் கொடுக்கப்பட்ட அன்பின் மிகுதிக்கான பரிசு. பிறருக்காக விடும் கண்ணீர்தான், உலகில் விலைமதிக்க முடியாத பரிசு என்பார்கள். அப்படித்தான் ‘அம்மா’ என்கிற ஆளுமைக்குத் தாயாக, தாதியாக இருந்து வழிநடத்தியவர் சின்ன அம்மா. எம்.ஜி.ஆரின் மறைவின்போது ராஜாஜி ஹாலில் அம்மா அமைதியே வடிவமாக நின்றார்கள். அவரின் அருகில் நின்று அம்மாவுக்கு ஆறுதலாக, தேறுதலாக நின்றவர் சின்ன அம்மா என்பதில் இருந்து தொடங்கி... நட்பின் இலக்கணமாகத் திகழ்ந்தவர் சின்ன அம்மா!

34 ஆண்டுகள் அந்த நட்பு அரும்பி., மலர்ந்து, மணம் வீசியிருக்கிறது. இன்று அம்மா இல்லாத வெற்றிடத்தை சின்ன அம்மா நிரப்பப் போகிறார். இது, ‘காலம் தந்த கொடை... கடவுள் தந்த விடை’. ‘மக்களால் நான்... மக்களுக்காகவே நான்’ என்று வாழ்ந்த அம்மாவைப் போன்றே சின்ன அம்மாவும் அம்மாவுக்காகவே வாழ்ந்தார். அம்மாவுக்காக கண்ணீர், வேதனை என்று எது வந்தாலும் அவற்றை ஏற்கும் பக்குவம் சின்ன அம்மாவுக்கு இயல்பிலேயே உண்டு.

அம்மாவின் நலம் வேண்டி திருக்கோயில்களில் 108 அடி பிரதட்சணம் செய்ததில் இருந்து அம்மாவின் திருவடிகளுக்கு சேவை செய்வதில் ஆழ்வார் பக்தியின் உச்சம் கொண்டு, அம்மாவை ஒரு குருவாய், தோழியாய், தாயாய், தந்தையாய், சகோதரியாய், நாட்டை வழிநடத்தும் தலைவியாய், கட்சியை கட்டிக்காக்கும் தலைசிறந்த நிர்வாகியாய், ஒரு மாநிலத்தின் முதலமைச்சராய் இந்தியாவே வியக்கும் ஆளுமையாய், 8 மொழிகள் பேசும் அதிசயமாய்... இப்படி எத்தனை பாத்திரங்களைத் தாங்கியபோதும் அம்மா என்ற குழந்தை மனதை பூஜித்தவர்தான் சின்ன அம்மா.

எம்.ஜி.ஆர் மறைவின்போது பீரங்கி வண்டியில் இருந்து அம்மாவை இறக்கி விட்டபோது அவரோடு தோள் கொடுத்து, நம்பிக்கை வாள் கொடுத்து தமிழகத்தின் தலைசிறந்த தலைமையாக மாற்றியவர் சின்ன அம்மா. புரட்சித்தலைவி அம்மா குறிப்பிட்டதைப் போல, ‘சசிகலா வடிவத்தில் எனது தாய் சந்தியாவைப் பார்க்கிறேன்’ என்ற வார்த்தைகளுக்குத் தனியாக விளக்கம் தேவையில்லை. இருவரும் இணைந்திருந்த காலங்களில் பொய்யர்கள் கூட்டம் புழுதி வாரி தூற்றிய, பின்னும் சதி வழக்குகள் தொடுத்து சிறைக் கொட்டடிக்குள் அனுப்பிய பின்னும் இருவரின் நட்பும் நீடித்து நிலைத்தது.

‘‘ஒரு பெண்ணின் வெற்றிடத்தை இன்னொரு பெண்ணால்தான் நிரப்ப முடியும்!”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த உறவில் விரிசல் ஏற்படுத்த முயற்சித்த போதும் தோள் கொடுத்து தோழியை சகோதரி என்ற நிலைக்கு உயர்த்தியவர் அம்மா. ‘ஒரே நாளில் ரோமாபுரி சாம்ராஜ்யம் கட்டி எழுப்பப்படவில்லை’ என்பார்கள். அதுபோலவே, அம்மா - சின்ன அம்மா உறவு ஒரே நாளில் உருவானதல்ல. பல்வேறு ஏற்ற இறக்கங்கள், உயர்வு-தாழ்வு, இன்பம்-துன்பம் அனைத்தையும் சமமாகப் பார்க்கும் பக்குவம் மூலம்தான் இந்த நட்பு பலமானது. ராமாயணத்தில் ராமனோடு பயணித்து தனது வாழ்வைத் தியாகம் செய்த லட்சுமணனாகவே சின்ன அம்மாவைப் பார்க்க வேண்டும். தமிழக மக்களின் வாழ்வுக்காக தன் வாழ்வைத் தியாகம் செய்தவர் அம்மா. அந்தத் தியாகத் திருவுள்ளத்துக்காகவே தனது வாழ்வை தியாகம் செய்தவர் சின்ன அம்மா!

துன்பம் வாங்கி இன்பம் கொடுத்து, கோபம் வாங்கி சாந்தம் கொடுத்து எத்தனை இன்னல்கள் வந்தாலும் இன்முகத்தோடு எதிர்கொண்டு தன் வாழ்வைத் தியாகம் செய்த தியாக தீபம் சின்ன அம்மா. புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு பின்பு, அடிமட்டத் தொண்டர்களுக்கும் தலைமைக்கழக நிர்வாகிகளுக்கும் தலைமை தாங்குகின்ற உரிமை சின்ன அம்மாவுக்கே உண்டு. தாயாக இருந்து அ.தி.மு.க-வை வழிநடத்த தாயன்பும் பொறுமையும் சின்ன அம்மாவுக்கு மட்டுமே உள்ளது. அம்மாவின் அருகில் இருந்து அரசியல் பாடம் படிக்கும் வாய்ப்பினை சின்ன அம்மாவுக்கு மட்டுமே காலம் வழங்கி இருக்கிறது. அம்மாவும் வழங்கி இருக்கிறார். அம்மாவிடம் இருந்த அதே அன்பும் மரியாதையும் சின்ன அம்மா மீதும் கழகத்தின் கடைக்கோடி தொண்டர்களுக்கும் கொண்டிருப்பதைக் கண்டு வியந்து போகிறேன். அம்மாவின் வெற்றிடத்தை சின்ன அம்மாவால் மட்டுமே நிரப்ப முடியும். அப்போதுதான் பெண் இனம் எழுச்சி பெறும். ஒரு பெண்ணின் வெற்றிடத்தை இன்னொரு பெண்ணால் மட்டுமே நிரப்ப முடியும். அம்மாவின் தாயார் சந்தியா மறைவுக்குப் பிறகு அம்மாவின் தனிமையைப் போக்கியதோடு புரட்சித் தலைவர் இறுதி ஊர்வலத்தின்போது நேர்ந்த காயத்தையும் ஆற்றி புரட்சித் தலைவியை இத்தனை ஆண்டு காலம் போற்றிப் பாதுகாத்தவர் சின்ன அம்மா. தமிழ்ச் சமுதாயத்தின் பெரும்பான்மையாக இருக்கும் அடித்தட்டு மக்கள், சமூக பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்கள், வஞ்சிக்கப்பட்ட , ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் அரவணைத்து பாதுகாப்பதில் திராவிட சக்தியாக சின்ன அம்மா திகழ்வார். ‘சின்ன அம்மா... இனி எங்கள் அம்மா...’ அவர் தலைமையில் அம்மாவின் லட்சியப் பயணத்தைத் தொடர்வோம்” என்கிறார் வைகைச் செல்வன் நம்பிக்கையுடன்.

- எஸ்.முத்துகிருஷ்ணன்

படங்கள்: தி.குமரகுருபரன், வி.சதீஷ்குமார்