Published:Updated:

டிச-20 பொதுக்குழு - கருணாநிதி வருவாரா?

டிச-20 பொதுக்குழு - கருணாநிதி வருவாரா?
பிரீமியம் ஸ்டோரி
News
டிச-20 பொதுக்குழு - கருணாநிதி வருவாரா?

டிச-20 பொதுக்குழு - கருணாநிதி வருவாரா?

ரும் 20-ம் தேதி தி.மு.க. பொதுக்குழு என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அதில் கருணாநிதியால் கலந்து கொள்ள முடியுமா என்ற கேள்வி கட்சியின் முன்னணியினர் மத்தியில் எழுந்துள்ளது. அந்தளவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளார் கருணாநிதி. படுத்தே இருக்கிறார். பேச முடியவில்லை. சில நேரங்களில் நினைவு தவறிவிடுகிறது. முதுமை மற்றும் உடல்நலக் குறைவுகளே இதற்குக் காரணம்!

கடந்த ஜூன் மாதம் 3-ம் தேதி 93-வது வயதில் கருணாநிதி அடியெடுத்து வைத்தார். அதற்கு முன்பாகவே அவரால் முன்னைப்போல் சுறுசுறுப்பாகப் பணியாற்ற முடியவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, அவரால் திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் சுற்றி வர முடியவில்லை. புதுச்சேரி வழியாக நாகை, திருவாரூர், திருச்சி என தனது பயணத்தைச் சுருக்கிக்கொண்டார். ஒரு கூட்டத்தில், முதலில் பேசியதையே திரும்பவும் பேசினார். ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட உரையை, அவரது உதவியாளர் சண்முகநாதன் கொடுக்க முயற்சித்தபோது, கருணாநிதி அதை வாங்க மறுத்துக் கோபப்பட்டார். தள்ளாமை தன்னை ஆட்கொள்வதை அவர் விரும்பாவிட்டாலும், முதுமை அவரை பிரசாரத்தில் இருந்து ஓய்வெடுக்க வைத்தது.

டிச-20 பொதுக்குழு - கருணாநிதி வருவாரா?

நினைவு தவறுதல்!

மேடையில் பேசும்போது, பல ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகளைக்கூட குறிப்பு எதுவும் இல்லாமல், மிகச் சரியாக நினைவுபடுத்திப் பேசுகிற திறன்படைத்தவர் கருணாநிதி. ஆனால், அண்மைக் காலமாக அவரால் அரசியல் நிகழ்வுகள் மட்டுமின்றி, தனது சொந்த நிகழ்வுகளைக்கூட நினைவில் வைத்துக்கொள்ள இயலவில்லை.

காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்த கருணாநிதியைப் பார்க்க காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கோபாலபுரம் வீட்டுக்குச் சென்றார். எப்போதும் அவரைப் பார்த்த உடன், அவரது பெயரைச் சுருக்கமாகச் சொல்லி அழைக்கும் கருணாநிதி, அவரை உற்றுப் பார்த்துவிட்டு எதுவும் பேசவில்லையாம். இந்த விஷயத்தை ராஜாத்தி அம்மாளிடம் அந்த காங்கிரஸ் பிரமுகர் சொல்லி இருக்கிறார். அதற்கு ராஜாத்தி அம்மாள், “ஆமாம், தலைவருக்கு வீட்டில் இருப்பவர்களைக்கூட சில நேரங்களில் ஞாபகம் இருப்பது இல்லை’’ என்று சொன்னாராம்.

வார்த்தைகள் குளறுதல்!


கருணாநிதி, அண்மைக் காலமாக மேடையில் தோன்றுவது இல்லை. சேப்பாக்கம் ஆர்ப்பாட்டம், தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆகியவற்றில் மட்டுமே அவர் கடைசியாகப் பங்கேற்றார். தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்கூட அவர் பேசவில்லை. இதன் பிறகு, அவர் பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை. அண்மையில் பேராசிரியர் அன்பழகனை வரவழைத்து அவருடன் பேசிக்கொண்டிருந்தார் கருணாநிதி. நீண்டநாட்களுக்குப் பிறகு அப்போதுதான் அவர் இருக்கும் புகைப்படம் வெளியானது.

 அப்போது கருணாநிதி, தன் சகோதரியைப் பற்றி பேராசிரியரிடம் ஏதோ சொல்ல முயற்சித்துள்ளார். ஆனால், கருணாநிதி சொன்னது அன்பழகனுக்கு விளங்கவில்லை. இப்படி பல நிகழ்வுகளில் கருணாநிதி என்ன சொல்ல வந்தார் என்பது உடன் இருந்தவர்களுக்குப் புரியவில்லை. இது மட்டுமின்றி அவருக்குக் கேட்கும் திறனும் குறைந்து வருவதாகச் சொல்கின்றனர்.

உடல் எடை அதிகரிப்பு!

சக்கர நாற்காலியில் அமர்ந்த பிறகு, கருணாநிதி நடப்பது இல்லை. அதனால், அவரது உடல் எடை அதிகரித்தது. அண்மைக் காலமாக, வழக்கத்தைக் காட்டிலும் அவரது உடல் எடை அதிகரித்து வருகிறது என்கிறார்கள். உடல் எடை மட்டுமல்ல, கைகள் இரண்டும் வீங்கிக் காணப்படுகிறது. கால் பாதங்களிலும் வீக்கம் அதிகமாக இருக்கிறது. கைவிரல்கள் வீக்கமாகி வருகின்றன.

உட்கார முடியவில்லை !

அவருக்கு, இடுப்புப் பகுதியில் கொப்புளங்கள் இருப்பதால் இருக்கையில் உட்கார முடியாமல் சிரமப்பட்டார். அதற்கான மருந்துகள் எடுத்துக்கொண்ட பிறகும்கூட, அதன் தாக்கம் குறையவில்லை. கொப்புளம் உடைந்தால், அது அருகிலேயே வருகிறது. எனவே, அவர் எந்த நேரமும் படுத்தேதான் இருக்கிறார். சாப்பிடும் போது மட்டும் பிறர் தாங்கிப்பிடித்துக் கொள்ள, அவருக்கு உணவு அளிக்கப்படுகிறது என்கின்றனர். இப்போது அவரால் எதையும் படிக்க முடியவில்லை என்றும் சொல்கிறார்கள். அவர் தெரிந்து கொள்ள வேண்டியதை வாசித்துக் காட்டுகிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
டிச-20 பொதுக்குழு - கருணாநிதி வருவாரா?

மருந்தும் ஏற்றுக்கொள்ளவில்லை!

முதுமை, உடல் ஆரோக்கியம், வைட்டமின் சத்துகள் ஆகியவற்றுக்காக அவருக்கு பல்வேறு மாத்திரைகள் தரப்பட்டு வருகின்றன. வயிறு செரிமானப் பிரச்னையும் இருக்கிறது. இதற்கும் மாத்திரை எடுக்கிறார்.

இந்த மாத்திரைகள் காரணமாக உடலில் அலர்ஜி ஏற்பட்டது. அதற்கும் மருந்து எடுத்து வருகிறார். இந்த மருந்துகளை அவரது உடல் நிலை ஏற்க மறுக்கிறது என்றும் சொல்கிறார்கள். கொப்புளத்துக்கு குறிப்பிட்ட அளவு மருந்து உட்செலுத்த வேண்டுமானால் அதனை ஏற்கும் நிலையில் உடல் நிலை இல்லாததால் அதனை செலுத்த முடியவில்லை என்றும் மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

அலர்ஜி!

மருந்துகளால் ஏற்பட்ட அலர்ஜி காலமாக அவரால் சட்டை, பனியன் அணிய முடியாது. விரலில் மோதிரங்களை கழற்றிவிட்டார்கள். கண்ணாடி அணிய முடிவதில்லையாம். முகச் சவரம் செய்யாமல் இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

இவ்வளவு உடல் உபாதைகளுடன் படுத்த படுக்கையாக கருணாநிதி இருக்கும் நிலையில் வரும் 20-ம் தேதி தி.மு.க. பொதுக்குழு நடக்க இருக்கிறது என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்து உள்ளார். இதில் ஸ்டாலினுக்கு செயல் தலைவர் அல்லது துணைத்தலைவர் பதவி தரப்பட்ட உள்ளது. இந்தச் சூழ்நிலையில் கருணாநிதியால் பொதுக்குழுவுக்கு வர முடியுமா என்பது சந்தேகமே. அப்படி கருணாநிதி வராமல் ஒரு பொதுக்குழு நடந்தால், அது தி.மு.க. உருவாக்கிய காலத்தில் இருந்து பார்க்காத வித்தியாசமான காட்சியாக இருக்கும்!

-  கே.பாலசுப்ரமணி
படங்கள்: சு.குமரேசன்