Published:Updated:

கருணாநிதி உடல்நிலை!

கருணாநிதி உடல்நிலை!
பிரீமியம் ஸ்டோரி
News
கருணாநிதி உடல்நிலை!

முழு ஸ்கேன் ரிப்போர்ட்

“தலைவர் உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் நேரத்தில் எனக்கு பொதுக்குழுவை நடத்த விருப்பம் இல்லை” என ஸ்டாலினிடம் தனது வருத்தத்தைச் சொல்லி உள்ளார் தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன். அதனால், தி.மு.க-வின் பொதுக்குழு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து கடந்த ஏழாம் தேதிதான் கோபாலபுரம் வீட்டுக்குத் திரும்பினார் கருணாநிதி. ஒரு வாரம் கழித்த நிலையில், மீண்டும் உடல்நிலை மோசமாக 15-ம் தேதி இரவு அதே காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.  கருணாநிதியின் உடல்நிலை குறித்துப் பல்வேறு வதந்திகள் பரவிவந்த நேரத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், கருணாநிதி உடல் நிலை குறித்த முழு ஸ்கேன் ரிப்போர்ட் இது.

கருணாநிதி உடல்நிலை!

ஸ்டீவன் ஜான்சனுக்கு பை... பை!

கடந்த சில மாதங்களாக, கருணாநிதி எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளாலேயே  அவருக்கு ஒவ்வாமை  ஏற்பட்டு ‘ஸ்டீவன் ஜான்சன் சின்ட்ரோம்’ என்ற நோய்த்தாக்கம் இருந்து வந்துள்ளது. உடல் முழுவதும் கொப்புளங்கள் ஏற்பட்டு வேதனையில் துடித்துள்ளார். இதற்கான சிகிச்சைகளை வீட்டில் இருந்தபடியே எடுத்துக்கொண்டு வந்ததில், கொப்புளங்கள் பூரண குணமாகி தற்போது தழும்புகள் மட்டுமே உள்ளன.ஆனால், சில பிரச்னைகள் தொடர்ந்தன.

கர கர குரலைக் கட்டிப்போட்ட இருமல்!

கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து பேச முடியாத அளவுக்கு இருமல் தொல்லையும் இருந்து வந்தது. இது தொண்டை தொற்றாக மாறி, இருமலும் அதிகரித்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக சாப்பிட முடியாமல் திணறி உள்ளார். இருமலோடு சளித் தொல்லையும் சேர்ந்து அவஸ்தைப்படுத்தியதால், கடந்த முறை காவேரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சையின் பலனாக உடல் நலத்துடன் வீடுதிரும்பினார்.

டியூப் வழியாக உணவு!

ஆனால், மறுபடியும் சளி - இருமல் தொல்லை தொடர ஆரம்பித்துள்ளன. திட உணவுகள் எதுவும் எடுத்துக்கொள்ள முடியவில்லை. உணவு செரிமானமும் குறைந்துவிட்டதால்  மருத்துவர்கள் ஆலோசனையின்பேரில் அவரது மூக்கினுள் டியூப் செலுத்தப்பட்டு அதன் வழியாகத் திரவ உணவுகள் கொடுக்கும் நிலை ஏற்பட்டது.

பருவநிலை படுத்தியபாடு!


கருணாநிதியின் தற்போதைய உடல் சிக்கலுக்கு பருவநிலையும் ஒரு காரணம். இரவில் பனி அதிகமாக இருப்பதாலும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. தொண்டை, நுரையீரலில் அதிகரித்துள்ள சளியும் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
மூச்சுத் திணறல்!

கடந்த 15-ம் தேதி மாலை திடீர் என  மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மூக்கு மற்றும் வாய் வழியாக மூச்சுவிட முயன்றும் முடியாமல் திணறியுள்ளார். நுரையீரல் இயக்கமும் பாதிப்படைந்துள்ளது. பரிசோதித்த மருத்துவர்கள், ‘’நுரையீரலில் சளி அதிகரித்து, தொண்டையிலும் புண் ஏற்பட்டு இருக்கிறது.  எனவே, மருத்துவமனையில் சேர்த்து உடனடியாகச் சளியை அகற்றவேண்டும்’’ என்று ஆலோசனை வழங்கியிருக்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கருணாநிதி உடல்நிலை!

வீட்டில் குவிந்த உறவினர்கள்!

இந்தத் தகவல் ஸ்டாலினுக்குத் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவர் கோபாலபுரம் வீட்டுக்கு வந்தவுடன், தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் சிலரும் கோபாலபுரம் வந்தனர். மீடியாவினர் யாரும் படம் எடுத்துவிடக் கூடாது என்பதற்காக வாசலில் இருந்த விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன. அதன் பிறகே வெளியே அழைத்துவரப்பட்டார் கருணாநிதி.

காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்ல முடிவாகியது. ஆனால், கருணாநிதியே ‘‘காரில் போகலாம்’’ என்று சொன்னார்.

நான்காவது மாடியும் ஐ.சி.யு அறையும்!


காவேரி மருத்துவமனையின்  நான்காவது மாடியில் உள்ள  ஐ.சி.யூ-வில்தான் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலில் நுரையீரலில் இருந்து சளியை அகற்றும் பணியை மருத்துவர் தேவராஜன் மேற்கொண்டார். கருணாநிதியின் தொண்டை மற்றும் நுரையீரலில் தொற்று இருப்பதை உறுதிசெய்தார் மருத்துவர் மோகன் காமேஸ்வரன்.

ட்ரைக்யோடோமி சிகிச்சை!

மூக்காலும், வாயாலும், இயற்கையாக சுவாசிக்க முடியாத நிலை இருக்கும்போது தொண்டையில் ஒரு துளை போட்டு, அதில் டியூப் செலுத்தப்பட்டு நுரையீரலை செயற்கை முறையில் இயக்குவார்கள். இதற்கு ட்ரைக்யோடோமி என்று பெயர். கருணாநிதிக்கு  16-ம் தேதியன்று  ட்ரைக்யோடோமி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன் பலனால், அன்று மாலையே அவரால் எளிதாக  சுவாசிக்க முடிந்தது.

காவேரிக்குப் படையெடுத்த குடும்பம்!

16-ம் தேதி காலையில் இருந்தே அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, செல்வி, கலாநிதி, தயாநிதி,  துரைதயாநிதி, கயல்விழி என குடும்பத்தினர் பலரும் காவேரிக்கு வந்துவிட்டனர். தி.மு.க-வின் முன்னணி நிர்வாகிகள் துரைமுருகன், நேரு, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர், எ.வ.வேலு, ஆ.ராசா உள்ளிட்டோரும் மருத்துவமனையில் ஆஜர் ஆகினர். ஆனால், குடும்பத்தினர் மட்டுமே கருணாநிதியின் அறைக்குள் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். கட்சியினர் அனுமதிக்கப்படவில்லை. நான்காவது மாடியில் நான்கு அறைகள் கருணாநிதி குடும்பத்தினருக்கு  ஒதுக்கப்பட்டுள்ளன.

 ராஜாத்தி அம்மாள், மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி மூவரும் நான்காவது மாடியில் தனித்தனி அறைகளில் தங்கி இருக்கின்றனர். ஸ்டாலின், அழகிரி இருவரும் மருத்துவமனையில்கூட ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளாமல்தான் இருக்கிறார்கள். செல்வி மட்டும் அழகிரியின் அறைக்கு அடிக்கடி சென்று பேசி வருகிறார். கட்சியினரும் அழகிரியிடம் பேசிக்கொள்ளவில்லை. ராஜாத்தி அம்மாள், செல்வி, கனிமொழி ஆகிய மூவர் மட்டுமே கருணாநிதியுடன் பெரும்பாலான நேரங்களில் உடன் இருக்கின்றனர். கட்டிலில் தொடர்ந்து படுத்திருக்க முடியாமல் சிரமப்படுவதால், கட்டிலை கொஞ்சம் சாய்வாக வைத்து படுக்கவைத்துள்ளார்கள்.

கருணாநிதியின் உடல்நலக்குறைவுக்கு முதுமையும் ஒரு காரணம் என்கிறார்கள். முதுமை காரணமாக உடல் இயக்கச் செயல்பாடுகள் குறைந்துவிட்டதால் தொற்றுக் கிருமிகளும் எளிதில் தாக்குகின்றன. அண்மைக்காலமாக அவரால், முன்பு போல்  தெளிவாகப் பேசமுடிவது இல்லை. அவர் என்ன சொல்கிறார் என்பதே புரியாத நிலையில் சொற்கள் தடுமாறத் தொடங்கி இருக்கிறது.

கையிலும், மூக்கிலும் டியூப் மாட்டியபடி இருப்பதை விரும்பாமல், சில சமயங்களில் அதை எடுத்துவிடும்படி செல்வியிடம் சொல்லியுள்ளார். சில நேரங்களில் நினைவு தப்பிவிடுவதால் ராஜாத்தி அம்மாளையே ‘’யார்?’’ என்று கேட்டுள்ளார். இயல்பாக சுவாசிக்க ஆரம்பித்ததும் வீட்டுக்கு அனுப்பிவிடலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.

ஆரோக்கிய அரசியல் !


தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிய அ.தி.மு.க எம்.பி-யும் துணை சபாநாயகருமான தம்பிதுரையும், அமைச்சர் ஜெயக்குமாரும் காவேரி மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது ஸ்டாலின் இல்லாததால் பொன்முடி, துரைமுருகன் உள்ளிட்டவர்களிடம் கருணாநிதி உடல்நிலை பற்றிக் கேட்டறிந்தனர். ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப் பட்டிருந்தபோது ஸ்டாலின் அங்கு சென்று உடல்நிலை விசாரித்ததும், தம்பிதுரை இப்போது காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்திருப்பதும் தமிழகத்தில் அரசியலின் ஆரோக்கியம் மீண்டு வருவதை உணர்த்துகிறது.

தள்ளிவைக்கப்பட்ட பொதுக்குழு!


மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்ட பிறகு அன்பழகன் ஸ்டாலினிடம் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது, ‘‘தலைவரை மருத்துவமனையில் வைத்துக்கொண்டு நாம் பொதுக்குழுவை நடத்த வேண்டாம். தலைவர் இல்லாமல் பொதுக்குழுவில் கலந்துகொள்ள எனக்கு விருப்பம் இல்லை’’ என்று சொல்லியிருக்கிறார். ‘‘அப்படி என்றால், தலைவர் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி தேர்தல் கமிஷனிடம் ஒப்புதல் பெற்று அடுத்த மாதத்துக்கு பொதுக்குழுவைத் தள்ளி வைத்துக்கொள்ளலாம்’’ என்று ஸ்டாலினும் கூறியுள்ளார்.

கடந்த வாரம் கருணாநிதியை சந்தித்தார் அன்பழகன். ‘‘வரும் 19-ம் தேதி உங்களுக்குப் பிறந்தநாள் வருகிறது. வழக்கம் போல் இந்தப் பிறந்த நாள் அன்றும் உங்கள் வீட்டுக்கு வந்து நான் வாழ்த்துவேன்’’ என்று சொல்லியுள்ளார் கருணாநிதி. ஆனால், சூழ்நிலைகள் மாறியுள்ளதால், அன்பழகன் பிறந்தநாள் அன்று கருணாநிதி வரமுடியாமல் போயுள்ளது.

கருணாநிதி எப்போது வீடு திரும்புவார் என முன்னாள் அமைச்சர் க.பொன்முடியிடம் கேட்டோம். ‘‘தலைவர் கலைஞர் ஐ.சி.யு-வில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு  டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். நல்ல நிலையில் இருக்கிறார். 5 நாட்களில் முழுமையாகக் குணம் அடைந்து, வீடு திரும்பி விடுவார் என்று டாக்டர்கள் கூறி உள்ளனர்’’ என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

கருணாநிதி உடல்நிலை!

ராகுல் வருகையின் பின்னணி?

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, திடீர் என வருகை தந்து உடல்நலம் விசாரித்தார் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி. அப்போது கருணாநிதியும் உடல்நிலை சரியில்லாமல்தான் வீட்டில் இருந்தார். ஆனால், கருணாநிதியை சந்திக்காமலே ராகுல் காந்தி சென்றுவிட்டார். அப்போதே தி.மு.க-வில் சலசலப்பு எழுந்தது. அதன் பிறகு ஜெயலலிதா மரணத்துக்கு வருகை தந்த ராகுல் காந்தி அப்போதும் தி.மு.க தலைவரை சந்திக்காமலே சென்றுவிட்டார்.
ராகுல் காந்தி கருணாநிதியை சந்திக்காதது குறித்துக் கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார் பீட்டர் அல்போன்ஸ். இந்த நிலையில், கருணாநிதி மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது குறித்து ராகுல் காந்திக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டவர்கள் ராகுல் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, ‘‘ராகுல் காந்தி தொடர்ந்து கருணாநிதி சந்திப்பைத் தவிர்த்து வருவது நமது கூட்டணி உறவுக்குப் பாதகமாக அமைந்துவிடும்’’ என்பதை எடுத்துச் சொல்லியுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து 16-ம் தேதி இரவு டெல்லியில் இருந்து அவசரமாக சென்னை வந்த ப.சிதம்பரம், காவேரி மருத்துவமனை சென்று கருணாநிதி உடல்நிலை விசாரித்தார்.

மேலும், ‘‘ராகுல் காந்தி நாளை வர உள்ளார்’’ என்ற தகவலையும் அங்கிருந்தவர்களிடம் சொல்லிவிட்டுக் கிளம்பிப்போனார். மறுநாள்  ராகுல், கருணாநிதியை சென்னை வந்து சந்தித்தார். திருநாவுக்கரசர் காரிலேயே காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் காங்கிரஸ் நிர்வாகி திக்விஜய்சிங்கும் வந்திருந்தார்.

ஒன்லி கருணாநிதிக்காக!


ஸ்டாலின், கனிமொழி இருவரும் மருத்துவமனை வாசலுக்கே வந்து ராகுலை வரவேற்று அழைத்துச் சென்றனர். நேராக மருத்துவர் மோகன் காமேஸ்வரன் அறைக்குச் சென்று கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்த ராகுல், ஐ.சி.யு-வில் இருந்த கருணாநிதியையும் சந்தித்தார். படுத்திருந்த கருணாநிதியிடம் ராகுல் வந்திருக்கும் விஷயத்தை கனிமொழி எடுத்துச் சொன்னார். உடனடியாக கருணாநிதிக்கு ராகுல் வணக்கம் தெரிவிக்க, கருணாநிதி கண்களை மட்டுமே அசைத்துள்ளார். தொடர்ந்து ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் சிகிச்சை நிலவரங்களைக் கேட்டுவிட்டு வெளியே வந்த ராகுல், அழகிரி, ராஜாத்தி அம்மாள் உள்ளிட்டவர்களிடமும்  நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், தி.மு.க-வுடனான பிணக்கை முடித்து வைத்த மகிழ்ச்சியில் அங்கிருந்து கிளம்பினார். சத்தியமூர்த்தி பவன் போகலாம் என்று திருநாவுக்கரசர் அழைத்ததற்கு, “இந்தப் பயணம் கருணாநிதி சந்திப்புக்காக இருக்கட்டும்” என்று சொல்லிவிட்டு நேராக விமான நிலையம் சென்றுவிட்டார்!

தமிழக அரசியல் சமீப காலமாக ஆஸ்பத்திரிகளில் தான் நடக்கிறது!

-அ.சையது அபுதாஹிர்