Published:Updated:

‘‘அந்தக் குடும்பம் தலையிடாது... சின்னம்மாவும் விடமாட்டார்!’’

‘‘அந்தக் குடும்பம் தலையிடாது... சின்னம்மாவும் விடமாட்டார்!’’
பிரீமியம் ஸ்டோரி
News
‘‘அந்தக் குடும்பம் தலையிடாது... சின்னம்மாவும் விடமாட்டார்!’’

பொன்னையன் பொளேர்

சிகலாவை பொதுச்செயலாளர் ஆக்குவதற்கான வேலைகளில், அ.தி.மு.க-வின் தலைமை நிர்வாகிகள் பம்பரமாக சுழன்று வருகின்றனர். போயஸ் கார்டனில் சசிகலாவுடன் சந்திப்பு, மீடியாவில் பேட்டி, அ.தி.மு.க பொதுக்குழு ஏற்பாடுகள் என தினமும் பிஸியாக இருக்கும் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர்  பொன்னையனை சந்தித்தோம்.

‘‘அந்தக் குடும்பம் தலையிடாது... சின்னம்மாவும் விடமாட்டார்!’’

‘‘சசிகலா-தான் ஜெயலலிதாவின் மனசாட்சி என கூறியிருந்தீர்கள். ஆனால், தொண்டர்களின் மனங்களில் சசிகலா இருக்கிறாரா?’’

‘‘நூற்றுக்கு நூறு சதவிகிதம் இருக்கிறார். அதனால்தான் கட்சியின் 64,000 கிளைகளின் உறுப்பினர்களும் ‘சின்னம்மா அடுத்த பொதுச் செயலாளராக வரவேண்டும்’ என தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள். சின்னம்மா 33 வருடங்களாக அம்மாவின் ஆலோசகராக இருந்துள்ளார். ஜெயலலிதா பேரவையைத் துவக்கி, 30 லட்சமாக இருந்த அ.தி.மு.க தொண்டர்களின் எண்ணிக்கையை ஒன்றரை கோடியாக உயர்த்தப் பெரும் பங்கு வகித்துள்ளார். ஒன்றிய, மாவட்டச் செயலாளர் என அனைத்து நிர்வாகிகளையும் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு அவருக்கு நேரடி பரிச்சயம் உள்ளது. கீழ்மட்டத் தொண்டர்கள் முதல் அமைச்சர்கள் வரை அனைவரின்  மனசாட்சியாகவும் சின்னம்மா இருப்பதால்தான் அவரை தலைமை ஏற்க வேண்டுகோள் விடுக்கிறார்கள். ஆனால், சின்னம்மா இன்னும் சம்மதத்தை தெரிவிக்காமல் அமைதியாக இருக்கிறார்கள்.’’

‘‘நிதி சேமிப்பு திட்டத்தில், சசிகலாவை தனது  வாரிசாக ஜெயலலிதா நியமித்துள்ளார் என ஆதாரம் வெளியிட்டிருக்கிறீர்கள். இதைவைத்து கட்சிக்கும், ஜெ.-வின் சொத்துக்களுக்கும் சசிகலாதான் வாரிசு என்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா?’’

‘‘ஏழு லட்சம் பணத்தை நிதிசேமிப்பு திட்டத்தில் போட்டு வைத்து, அதற்கு வாரிசாக சின்னம்மாவை அம்மா நியமித்துள்ளார். தனக்கு அடுத்த வாரிசாக சின்னம்மாதான் வரவேண்டும் என பெரியம்மாவுக்கு எண்ணத் துடிப்பு இருந்ததால்தான் இந்தப் பணத்துக்கு அவரை வாரிசாக்கியுள்ளார்கள். ஏழு லட்சம் பணத்துக்கு மட்டுமல்ல, அம்மாவின் உள்ளத்துடிப்பும் சின்னம்மாதான் வாரிசாக வரவேண்டும் என கருதியுள்ளது.’’

‘‘ஆனால், சசிகலா கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இருந்ததில்லையே?’’

‘‘பதவியா முக்கியம்? கட்சியை வளர்க்க உதவும் செயலாக்கம்தானே முக்கியம். செயலாக்கத்தில் சின்னம்மாவுக்கு நிகர் சின்னம்மாதான் என தொண்டர்கள் நம்புகிறார்கள்.’’

‘‘சசிகலா பொதுச்செயலாளர் ஆவதற்காக கட்சியின் விதிகளை தளர்த்த தயாராக இருக்கிறீர்கள். ஏன் இந்த அவரசம்... கட்சியில் வேறு ஆள் இல்லையா?’’

‘‘எந்த அவசரமும் காட்டவில்லை. கட்சியைக் காப்பாற்ற சின்னம்மா தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என நாங்கள் விரும்புவதால், தொடர்ந்து 5 ஆண்டுகள் கட்சியில் இருந்தால் மட்டுமே பதவிகளில் போட்டியிட முடியும் என்ற நிபந்தனையை பொதுக்குழு, செயற்குழு மூலம் தளர்த்த தயாராக உள்ளோம். இது சட்டப்படி செல்லும்’’.

‘‘சசிகலா குடும்பத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கிறதே?’’

‘‘அந்தக் குடும்பத்தை அம்மா ஒதுக்கி வைத்திருந்தார்கள். தற்போது சின்னம்மாவும் ஒதுக்கிதான் வைத்து இருக்கிறார்கள். அந்தக் குடும்பம் அரசியலில் தலையிட கட்சி விடாது; சின்னம்மாவும் விடமாட்டார்கள்.’’

‘‘சசிகலாவை எதிர்த்து போட்டியிட சிலர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறதே?’’

‘‘சின்னம்மாவை எதிர்க்க எங்கள் கட்சியில் யாரும் இல்லை. ஸ்டாலின் வேண்டும் என்றால் எங்கள் கட்சியில் சேர்ந்து சின்னம்மாவை எதிர்த்துப் போட்டியிடலாம்.’’

‘‘சசிகலா முதல்வராவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?’’

‘‘அம்மா இருக்கும்போதே ஓ.பி.எஸ்-தான் இரண்டு முறை முதல்வராக இருந்தார். இப்போது சின்னம்மாவின் ஆசியுடன் முதல்வர் பதவியை ஏற்றுள்ளார். கட்சியில் குழப்பம் இல்லை, குளறுபடி இல்லை. வேறு முதல்வர் என்ற பேச்சும் எழவில்லை.’’

‘‘ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு உள்ளிட்ட சொத்துக்கள் யார் பெயருக்கு மாறும்? ஜெயலலிதா உயில் ஏதேனும் எழுதி வைத்துள்ளாரா?’’

‘‘அம்மாவின் சொத்து சட்டப்படி வாரிசுகளுக்குப்  போகும். அந்த சொத்து தனக்கு வேண்டும் என சின்னம்மா உள்ளிட்ட யாரும் கேட்கவில்லை. அம்மா என்ன உயில் எழுதி வைத்துள்ளார்கள் என சின்னம்மாவுக்குத் தெரியாது, எங்களுக்கும் தெரியாது.’’

- ஆ.நந்தகுமார்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz