Published:Updated:

‘சசி லீலாவதி’ - நிஜமாகுமா நாடகம்?

‘சசி லீலாவதி’ - நிஜமாகுமா நாடகம்?
பிரீமியம் ஸ்டோரி
‘சசி லீலாவதி’ - நிஜமாகுமா நாடகம்?

ப.திருமாவேலன், ஓவியம்: பாரதிராஜா

‘சசி லீலாவதி’ - நிஜமாகுமா நாடகம்?

ப.திருமாவேலன், ஓவியம்: பாரதிராஜா

Published:Updated:
‘சசி லீலாவதி’ - நிஜமாகுமா நாடகம்?
பிரீமியம் ஸ்டோரி
‘சசி லீலாவதி’ - நிஜமாகுமா நாடகம்?

`அம்மா’வை வாழ்த்தி எழுதிய பாசுரங்களை, `சின்ன அம்மா’வுக்காகச் சின்னத் திருத்தங்களுடன் ரத்தத்தின் ரத்தங்கள் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதே கதை, அதே காட்சி, அதே நடிப்பு, அதே பாட்டு... விசிலடிக்கும் ரசிகர்களும் ஒன்றுதான். நடிக்கும் ஆள் மட்டுமே மாறியிருக்கிறார். முன்னர் ஜெயலலிதா; இதோ இப்போது சசிகலா!

‘சசி லீலாவதி’ - நிஜமாகுமா நாடகம்?

‘நமது எம்.ஜி.ஆர்’ சித்ரகுப்தனுக்குச் சொல்லியா தர வேண்டும்?

‘வங்கக் கடலோரம்
உறங்குகிற தாய்க்கு வரமாகக் கிடைத்தவர்
வலக்கரமாய் வாய்த்தவர்
வல்லூறுகள் வாலறுந்த நரிகள்
ஏவுகின்ற பழிகளை
வாழ்வெல்லாம் சுமப்பவர்
வரும்பகை தூவிய வசவுகளை
வாழ்வெல்லாம் சகித்தவர்
தாயே உலகமென
தவம்கொண்ட தாயே
தாய் காத்த கழகத்திற்குத்
தலைமையேற்க வருவாயே


-எனப் பொங்கியிருக்கிறார். ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழைத் திறந்தாலே, `சின்ன அம்மா’வைக் கட்சியின் பொதுச்செயலாளர் ஆக்குவதற்காக கிளைக் கழகம் முதல் தலைமைக் கழகம் வரை அனைவரும் கிளர்ந்தெழுந்து போடும் தீர்மானங்களும், அந்தத் தீர்மான நகல்களுடன் சசிகலாவை அவர்கள் சந்தித்துக்  கண்ணீர் வடிக்கும் காட்சிகளும்தான் இடம்பெற்றுள்ளன. மிகச் சாந்தமான முகத்துடன், வழுவழுப்பான கிரே கலர் சேலைகளை அணிந்து, துக்கம் தொண்டை அடைக்க நிற்கிறார் சசிகலா.

‘அம்மா... நீங்கள்தான் எங்களுக்கு வாழ்வு அளிக்க வேண்டும். எங்களை அநாதை ஆக்கிவிடாதீர்கள். நீங்கள்தான் பொதுச்செயலாளர்; நீங்கள்தான் முதலமைச்சர்; நீங்கள்தான் இனி எங்களுக்கு எல்லாம்’ என ஒவ்வொருவரும் ஏதேதோ சொல்கிறார்கள். அனைத்துக்கும் மெள்ளத் தலையாட்டுகிறார் சசிகலா. வணக்கம் வைக்கிறார். அழுவதுபோல காட்டுகின்றன கண்கள். மெள்ளச் சிரிக்கின்றன உதடுகள். சசிகலாவின் மக்கள் தரிசனம் ஆரம்பம் ஆகிவிட்டது.

`சின்ன அம்மா’தான் அடுத்த பொதுச் செயலாளர் என சில நாட்களாக இருந்த முழக்கம் இப்போது இன்னும் வலுவடைந்து, ‘நீங்கள் விரைவில் முதலமைச்சர் ஆக வேண்டும்’ என மாறியிருக்கிறது. தனி நடிப்பில் கில்லாடியான அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், இந்த ஓரங்க நாடகத்தை ஒரு பக்கம் நடத்த ஆரம்பித்துவிட்டார். ‘அம்மா நீங்கள் இருக்கும் இடம் கோயில். அதனால் உங்களைப் பார்க்க வரும்போது செருப்பு அணிய மாட்டேன்’ என ஜெயலலிதாவிடம் சொன்னவர் இந்த உதயகுமார். அவரைத்தான் முதலில் அமைச்சர் பதவியில் இருந்து ஜெயலலிதா தூக்கினார். அப்படிப்பட்ட உதயகுமார், இன்று சசிகலாவுக்காக ‘சசிலீலாவதி’ சினிமா தொடங்கியிருக்கிறார். உதயகுமாருக்குச் சளைத்தவர்கள் அல்ல மற்றவர்கள். அடுத்தவர்களும் இதே ‘முதலமைச்சர்’ முழக்கத்தை முன்மொழியலாம். சசிகலா, இன்றைய சூழ்நிலையில் அ.தி.மு.க-வின் அடுத்த பொதுச்செயலாளராக ஆவதற்கோ, முதலமைச்சர் பொறுப்பில் உட்காருவதற்கோ, அந்தக் கட்சி பொதுக்குழுவில், சட்டமன்றக் கட்சியில் எந்த எதிர்ப்பும் இருக்க வாய்ப்பு இல்லை. அந்த அளவுக்குத் தன் அஸ்திவாரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டி எழுப்பியவர் சசிகலா. அம்மா சொன்னால் சின்ன அம்மா சொன்னதாக அர்த்தம், சின்ன அம்மா சொன்னால் அம்மா சொன்னதாக அர்த்தம் என வளர்ந்த கட்சி அ.தி.மு.க.. எனவே, அந்தக் கட்சிக்கு அவரை விட்டால் யார் பொதுச்செயலாளராக வர முடியும்? அந்த இடத்துக்கு மனதளவில்கூட போட்டியிடும் ஆட்கள் இன்று இல்லை. ஜெயலலிதா இடத்தை சசிகலா நிரப்புவாரா, அந்த அளவுக்குப் பேசுவாரா, தேர்தல் பிரசாரம் செய்வாரா, சமாளிப்பாரா என்பது காலப்போக்கில்தான் தெரியும். ஆனால், அந்தக் கூட்டத்துக்கு அவர்தான் பொருத்தமானவராக இருக்க முடியுமா?

‘சசி லீலாவதி’ - நிஜமாகுமா நாடகம்?

அ.தி.மு.க ஆதரவாளர்கள் சிலருக்கு, சசிகலா கெட்டவர் என இப்போதுதான் தெரிந்துள்ளது. ஒரு கெட்டவரை, தவறான நபரை, 30 ஆண்டுகளாக ஜெயலலிதா எதற்காக உடன் வைத்திருந்தார்? அவருக்கு அப்படி என்ன அவசியம் ஏற்பட்டது? தான் செய்யும் தவறுகளுக்குப் பழிபோடுவதற்காக சசிகலாவை வைத்திருந்தாரா ஜெயலலிதா? அரசியல்வாதிகள் எப்போதுமே தங்கள் மீது நேரடியாகப் பழிகள் வந்துவிடக் கூடாது என்பதற்காக, யாரையாவது ஒருவரை முகமூடியாகப் பயன்படுத்துவார்கள். அப்படி சசிகலாவைப் பயன்படுத்திவந்தார் ஜெயலலிதா என ஏன் சொல்ல முடியாது? மிகக் கெட்டவரைத் தன்னோடு வைத்திருப்பவர் எப்படி நல்லவராக இருந்திருக்க முடியும்... போன்ற கேள்விகளுக்கு, இந்தத் தரப்பினர் முழுமையாகப் பதில் சொல்லியாக வேண்டும்.

ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருக்கிறது என்பதும், 75 நாட்களுக்குப் பிறகுதான் அ.தி.மு.க ஆதரவாளர்கள் சிலருக்கு உறைக்க ஆரம்பித்துள்ளது. ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்த மர்மங்களை உடைத்து ஊடகங்கள் கிளப்பியபோது, (குறிப்பாக ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், விகடன் இணையம்... ஆகியவற்றில் எழுதியபோதும், இது தொடர்பாக ஆடியோவில் வீடியோவில் பல கேள்விகள் எழுப்பியபோதும்...) ‘உங்களுக்கு எல்லாம் இரக்கமே இல்லையா? ஒருவர் நோயில் படுத்திருக்கும்போதுதான் உங்களது புலனாய்வுப் புத்தியை நிரூபிக்கப்பார்ப்பீர்களா?’ என ஜெயலலிதா ஆதரவு மனிதர்கள் கோபத்தால் பொங்கித் தீர்த்தார்கள். அதே நபர்கள் இப்போது சசிகலாவைக் ‘கொலைகாரி’யாகச் சித்திரிக்கும் காரியத்தைக் கனகச்சிதமாகச் செய்கிறார்கள். ஜெயலலிதா சிகிச்சை பெறும் புகைப்படத்தை வெளியிட வேண்டும் எனக் கோரிக்கை வந்தபோது கோபமாகக் கர்ஜித்தவர்கள்தான், ‘ஜெயலலிதாவை விஷஊசி போட்டுக் கொன்றுவிட்டார் சசிகலா’ எனக் கதற ஆரம்பித்துவிட்டார்கள்.

‘விஷஊசி போட்டுக் கொன்றிருந்தால் உடலை எரிக்கத்தானே செய்திருப்பார்கள்’ என்றும், ‘அவர்கள் நினைத்தது மாதிரி நாடகம் ஆடுவதற்கு அப்போலோ போயிருக்க மாட்டார்கள்’ என்றும், அதற்கு வேறு ஒரு மருத்துவமனையின் பெயரைக் குறிப்பிட்டும், சசிகலா ஆதரவு சக்திகள் செய்திகள் பரப்புகிறார்கள். இப்படிப்பட்ட சந்தேகங்களை எதிர்க்கட்சிக்காரர்கள் கிளப்பவில்லை. ஆளும் கட்சியின் ஆதரவு சக்திகள்தான் கிளப்புகின்றன.

அந்தக் காலத்தில் ஜெயலலிதாவை அ.தி.மு.க-வினர்தான் அதிகமாகக் கொச்சைப்​படுத்தினார்கள். இப்போது சசிகலாவுக்கு எதிராக அ.தி.மு.க ஆதரவாளர்கள்தான் அதிகம் சந்தேகம் கிளப்புகிறார்கள். இப்படிப்பட்ட மனிதர்களுக்குப் பதில் சொல்வதற்காகத்தான், தினமும் தொண்டர்களை போயஸ் கார்டன் வீட்டுக்கு வரவைத்து சசிகலா சந்தித்துக்கொண்டி ருக்கிறார். ‘பார்த்தீர்களா... எனக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது!’ என்பதை நித்தமும் சசிகலா காட்டிக்கொண்டிருக்கிறார்.

‘சசி லீலாவதி’ - நிஜமாகுமா நாடகம்?

இந்தச் சந்திப்புகள் அனைத்தையும் போயஸ் கார்டனில் நடத்துவதில்தான் சசிகலாவின் சாமர்த்தியம் இருக்கிறது. அதுவும் ஜெயலலிதாவின் அறையில், அவர் எந்த இடத்தில் உட்கார்ந்து விருந்தினர்​களோடு பேசுவாரோ, அந்த இடத்தில் உட்கார்ந்து சந்திப்புகளை நடத்துகிறார் சசிகலா. இதன் மூலமாக, ‘நான் வேலைக்காரி அல்ல, வீட்டுக்காரி’ என்பதை நிரூபிக்கிறார் சசிகலா. அதே வீட்டில் அதே இடத்தில் அதே நாற்காலியில் தன்னை அடையாளப்படுத்திக்​கொள்வதன் மூலமாக, ‘நான் வேறு ஜெயலலிதா வேறு அல்ல. நான்தான் ஜெயலலிதா; ஜெயலலிதாதான் நான்’ என்பதை நாட்டுக்கு அறிவிக்கிறார்.

‘வேதா இல்லத்தில் தனிமையில் இருந்த ஜெயலலிதாவுக்குத் துணையாக வந்தவள் நான். அவரது கஷ்ட நஷ்டங்கள் அனைத்திலும் பங்கெடுத்தவள் நான். அவரை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களும் முக்கியப் பிரமுகர்களும் கொச்சைப்படுத்தியபோது கலங்கிவிடாமல் காத்தவள் நான். அமெரிக்காவுக்குப் போய்விடலாமா... ஹைதராபாத்துக்குப் போய்விடலாமா என ஜெயலலிதா யோசித்தபோது தடுத்தவள் நான். எம்.ஜி.ஆர் உடல் தாங்கிய ராணுவ வாகனத்தில் இருந்து இறக்கிவிட்டபோது, தனக்கு எதிர்காலம் இனி இல்லை என நினைத்த ஜெயலலிதாவுக்கு ஊக்கம்கொடுத்தவர் என் கணவர். ‘நான் உடன்கட்டை ஏறலாமா என யோசிக்கிறேன்’ என்ற விரக்தியில் இருந்த ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை கொடுத்தவள் நான். ஜெயலலிதா எங்கு சென்றாலும் அவர் மீது துரும்புகூட படாமல் பார்த்துக்கொண்டது என் தம்பி திவாகரன். பாதுகாப்புப் படையை அமைத்துக்கொடுத்தது எனது அக்கா மகன் தினகரன். ஒவ்வொரு கட்டத்திலும் சுதாகரன், வெங்கடேஷ், மகாதேவன் ஆகியோர் கட்சிப் பணிக்காக ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றார்கள். இறுதிக்கட்டத்தில் ஜெயலலிதாவின் உடல்நிலையைப் பார்த்துக்கொண்டது டாக்டர் சிவக்குமார். கடந்த நான்கு ஆண்டுகளும் ஜெயலலிதாவைக் கவனிப்பதைத் தவிர, வேறு எந்தக் காரியமும் பார்க்க நேரம் இல்லாமல் இருந்தார் அவர். இப்படி எங்களது மொத்தக் குடும்பமும் ஜெயலலிதாவுக்காக, அ.தி.மு.க-வுக்காக கடந்த 30 ஆண்டுகளாக உழைத்திருக்கிறதே! எங்கள் குடும்பத்தைத் தவிர வேறு யார் பொதுச்செயலாளர் பதவிக்கு தகுதியானவர் இருக்க முடியும்?’ என்ற கெத்தில் உட்கார்ந்திருக்கிறார் சசிகலா.

இவை அனைத்தும் உண்மைதான். ஆனால், இதற்காக அந்தக் குடும்பத்தினர் அடைந்த லாபம் என்பது பெரும் மலை அளவு. சசிகலா என்ற ஒரு மனுஷி போயஸ் கார்டனுக்குள் போனதால், அவரது அக்கா, அண்ணம், தம்பி குடும்பத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் இன்று கோடிக்கணக்கான கரன்சியில் குளித்துவருகிறார்கள். எங்கே பணம் இருக்கிறது என அவர்களுக்கே தெரியாத அளவுக்குப் பதுங்கிக் கிடக்கிறது. ஒருமுறை அல்ல இரண்டு முறை முதலமைச்சர் நாற்காலியில் இருந்து ஜெயலலிதாவைக் கீழே தள்ளிவிட இந்தக் குடும்பம்தான் காரணம். சென்னை மத்தியச் சிறைச் சாலையிலும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலும் ஜெயலலிதா அடைக்கப்பட காரணம் இந்தக் குடும்பம்தான். இறுதிக்காலத்தில் ஜெயலலிதாவை நிம்மதி இல்லாமல் ஆக்கிய சொத்துக்குவிப்பு வழக்கின் பிதாமகர்களாக இந்தக் குடும்பம் இருந்தது. ஜெயலலிதாவுடன் சேர்ந்து சிறையில் இருந்தார்கள் சசிகலாவும் சுதாகரனும் இளவரசியும். சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீடு, உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது. கடைசி இரண்டு ஆண்டு காலத்தில் ஜெயலலிதாவின் உடல்நிலை மிக மிக மோசம் அடைந்ததற்குக் காரணம் இந்த வழக்குதான். உச்ச நீதிமன்றத்தில் எதிர்மறையான தீர்ப்பு வந்தால் ஒருநாள்கூட சிறையில் இருக்க முடியாது என நினைத்து, விரக்தியில் துடித்துவந்தார் ஜெயலலிதா.

இப்படி ஜெயலலிதாவை ஒரு பக்கம் வளர்க்கவும், இன்னொரு பக்கத்தில் ஜெயலலிதாவுக்கு எல்லாவிதமான சிக்கலை ஏற்படுத்துவதுமாகவும் இருந்தது சசிகலா குடும்பம். இவை அனைத்தும் ஜெயலலிதாவுக்குத் தெரியாதது அல்ல. தெரியாது எனச் சொல்பவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்பவர்கள். ஜெயலலிதாவுக்கு அனைத்தும் தெரியும். பலவற்றை அனுமதித்தார். பலவற்றை அவரால் தடுக்க முடியவில்லை. அது அவரது ஆட்சியையும் கட்சியையும் ஏன் அவரது உடல் நிலையையுமே கவலைக்கிடமாக ஆக்கிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் ஜெயலலிதா பயன்படுத்திய அதே மருந்துகளுடன், சசிகலா கட்சியை, ஆட்சியை நடத்த முன்வந்தால் அது முழுத் தோல்வியில்தான் முடியும். ஜெயலலிதா எதைச் செய்தாலும் அதை நியாயப்படுத்த ஒரு பிம்பம் இருந்தது; பிரபல்யம் இருந்தது.  ஆனால் சசிகலாவிடம் இருப்பது, ‘ஜெயலலிதாவின் தோழி’ என்ற ஒரே ஒரு பந்தம் மட்டும்தான். அது இப்போது பதவிகளைக் கைப்பற்றப் பயன்படலாம். தக்கவைப்பது சசிகலாவின் கையில்தான் இருக்கிறது. இதுவரை ஆட்டம்போட்ட தனது குடும்பத்தினரையே இனியும் ஆட்டம்போட சசிகலா அனுமதித்தால், பாதாளம் நிச்சயம். இன்று ஆட்சி இருப்பதால், ‘சின்ன அம்மா... சின்ன அம்மா...’ என ஜெபிக்கும் உதயகுமார்கள், ஆட்சி போய்விட்டால் யாரையும் `அம்மா' என்று அழைக்கத் தயாராகிவிடுவார்கள். அப்போது சசிகலாவின் பெயரை இவர்களே ‘சதிகலா’ என்றுகூட மாற்றிச் சொல்லலாம்.

சசிகலா இதுவரை எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். இனி அவர் ரகசிய வாழ்க்கை வாழ முடியாது!