Published:Updated:

"திரு.கமல் அவர்களே... குமாரசாமியின் உள்நோக்கம் உணருங்கள்!" தகிக்கும் காவிரி உரிமை மீட்புக் குழு

"திரு.கமல் அவர்களே... குமாரசாமியின் உள்நோக்கம் உணருங்கள்!" தகிக்கும் காவிரி உரிமை மீட்புக் குழு
"திரு.கமல் அவர்களே... குமாரசாமியின் உள்நோக்கம் உணருங்கள்!" தகிக்கும் காவிரி உரிமை மீட்புக் குழு

"திரு.கமல் அவர்களே... குமாரசாமியின் உள்நோக்கம் உணருங்கள்!" தகிக்கும் காவிரி உரிமை மீட்புக் குழு

"அண்டை நாடுகளான பாகிஸ்தானோடும், வங்கதேசத்தோடும் நதிநீரைப் பகிர்ந்துகொள்ளும் இந்தியா, தனது சொந்த நாட்டுக்குள் உள்ள மாநிலங்களான தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் காவிரி நீரைப் பகிர்ந்து தரமுடியாதா? அது இயலாமை அல்ல; இழிவான அரசியல். கர்நாடகத்தில் பதவி நாற்காலிக்காக நடத்தும் நாடகம்" என்று கடந்த வாரம் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவனருமான கமல்ஹாசன். 

இந்தப் பதிவை வெளியிட்டு ஒரு வாரம் ஆன நிலையில் கமல் தற்போது, "காவிரிப் பிரச்னைக்குப் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும்" எனக் கர்நாடக முதல்வர் ஹெச்.டி. குமாரசாமியைச் சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியிருப்பது, தமிழக விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு சென்ற கமல்ஹாசன், ஜூன் 4- ம் தேதி கர்நாடக முதல்வர் குமாரசாமியைச் சந்தித்து காவிரி விவகாரம் குறித்துப் பேசினார். பின்னர், குமாரசாமியும், கமல்ஹாசனும் கூட்டாகச் செய்தியாளர்களுக்குப் பேட்டிளித்தனர். அப்போது பேசிய கமல், "காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தில் குறுவை சாகுபடி தொடங்க உள்ளதால் காவிரி நீர் திறந்துவிடப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து கர்நாடக முதல்வரிடம்  எடுத்துரைத்தேன்" என்றார். மேலும், காவிரிப் பிரச்னை தொடர்பாக, தமிழக-கர்நாடக மாநில அரசுகள் சகோதரத்துவத்துடன் பேசி, பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டும்" என்றும் கமல் கூறினார். அவருடைய இந்தக் கருத்துக்குத் தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் எனப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய காவிரி உரிமை மீட்புக் குழுவின் தலைவர் பெ. மணியரசன், "கர்நாடகத்தில் முதல்வராகப் பதவி ஏற்றுள்ள குமாரசாமியை கமல்ஹாசன் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், இருவரும் கூட்டாகச் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்ததைப் பார்த்தால், அதை ஒரு பண்பாட்டு நிகழ்வாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. 'பேச்சுவார்த்தை மூலம் காவிரிப் பிரச்னைக்குத் தீர்வுகாணலாம்' என்று கமல் திடீரென்று கூறியிருப்பது, அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவே தெரிகிறது. குறிப்பாக, அவர்கள் இருவரின் சந்திப்பும் முன்கூட்டியே பேசி எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலான ஒரு சந்திப்பாகவே  தெரிகிறது. இந்தச் சந்திப்புக்கான முன்முயற்சியை கர்நாடக முதல்வர் குமாரசாமியே எடுத்திருக்கலாம். இந்தச் சந்திப்பின் பின்னணி குறித்தும், யாரெல்லாம் குமாரசாமியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள் என்பது பற்றிய உண்மையும் அடுத்தசில நாள்களில் வெளியே தெரியவரும். கமல் மட்டுமல்லாமல் வேறு சில விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கர்நாடக முதல்வரைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

காவிரி விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்திருப்பதாக ஒரு பொய்யான தோற்றத்தை மத்திய அரசு கொடுத்துள்ளது. காவிரி நடுவர் மன்றம் கடந்த 1991- ம் ஆண்டில், 'தமிழகத்துக்குக் கர்நாடகம் 205 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும்' என்று வெளியிட்ட இடைக்கால உத்தரவை அரசிதழில் வெளியிடாமல் அப்போதைய நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசு காலம் தாழ்த்தி வந்தது. அதன் பிறகு 2007- ம் ஆண்டு 192 டி.எம்.சி. வழங்க வேண்டும் என்று இறுதித் தீர்ப்பை நடுவர் மன்றம் அளித்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் தலையிட்ட பின்னரே, அந்தத் தீர்ப்பு 2013- ம் ஆண்டு அரசிதழில் வெளியிடப்பட்டது. அரசிதழில் வெளியிட்டபோதிலும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்காமல், முன்பிருந்த காங்கிரஸ் அரசும், தற்போதைய பி.ஜே.பி. அரசும் தொடர்ந்து இழுத்தடித்து வந்தன. காவிரிப் பிரச்னையில் நடவடிக்கை மற்றும் செயல்பாடு என்பது துளியும் இல்லாமல் போனது. 

பிரதமர் மன்மோகன் சிங்கைத் தொடர்ந்து, 2014-ல் பி.ஜே.பி. அரசு அமைந்ததும் பிரதமர் நரேந்திர மோடியும் காவிரிப் பிரச்னையில் எந்த நடவடிக்கையும் எடுத்து, உத்தரவை நிறைவேற்றவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசு தொடர்ந்து மதிக்காமல், அரசியல் காய்களை நகர்த்தி வருகிறது. மத்திய அரசின் போலியான நடவடிக்கைக்குக் கடந்த பிப்ரவரி மாதம் காவிரி விவகாரம் தொடர்பாக வெளியான தீர்ப்பையும் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஜூன் முதல் வாரத்துக்குள் கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் கிடைக்கும் வகையில் அந்தத் தீர்ப்பு அமைந்தபோதிலும், அதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் தங்களின் சூழ்ச்சி தெரியக் கூடாது என்பதற்காக நடவடிக்கை எடுப்பது போன்ற ஒரு தோற்றத்தை மத்திய அரசு ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியே உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை ஜூன் முதல் தேதி மத்திய அரசிதழில் வெளியிட்டிருப்பது எனலாம். இது இப்படி என்றால், மத்திய நீர்வளத்துறை செயலர் யு.பி. சிங், `காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேரப் பணியில் உள்ளவர்களை பணியமர்த்த முடியாது' என்கிறார். காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கான வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வழங்கியிருப்பதை அறியாதவரா நீர்வளத்துறை செயலாளர்?  

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களில் 'காவிரி மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர்கள், முழு நேரப் பணியாளர்களாக இருக்க வேண்டும்; அதிகாரியாக இருந்தால் செகரட்டரி நிலையிலான பதவியில் இருக்க வேண்டும். மேலும், பொறியாளராக இருந்தால் 20 வருடம் அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும்' என்று தெரிவித்திருப்பதுடன், ஒட்டுமொத்தமாக ஒன்பது பேர் இந்தக் குழுவில் இடம்பெற வேண்டும் என்றும் கூறியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தில் தலைவர், இரண்டு முழுநேர உறுப்பினர்கள், இரண்டு பகுதி நேர உறுப்பினர்கள் மற்றும் செயலர் என 5 பேர் மத்திய அரசின் சார்பிலும், எஞ்சிய நான்கு பேர் தமிழகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெளிவான உத்தரவை வழங்கியுள்ளது. மத்திய நீர்வளத்துறைச் செயலருக்கு இது தெரியாதா?

எனவே, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும் மத்திய அரசின் இப்போதைய நடவடிக்கையைப் பார்க்கும்போது, இந்த ஆணையத்தை மத்திய அரசின் துணைக்குழுவாக மாற்றும் நடவடிக்கையாகவே தெரிகிறது. தன்னிச்சையான அமைப்பாக அதை ஏற்படுத்தும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்பதும் தெளிவாகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதில் மத்திய அரசு திட்டமிட்டே உள்நோக்கத்துடன் செயல்படுகிறது. அதனை, கர்நாடக அரசு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறது. அதன் தொடர்ச்சியாகவே, 'பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்குத் தீர்வு' என்ற அரசியல் காய் நகர்த்தலை கர்நாடக அரசு தொடங்கியிருக்கிறது. எனவே, பேச்சுவார்த்தை என்ற வரம்புக்குள் சென்றுவிட்டால், ஒருவேளை காவிரி விவகாரத்தில் தமிழக அரசு மீண்டும் நீதிமன்றத்துக்குச் செல்லும்பட்சத்தில் 'பேச்சுவார்த்தை நடைபெறுகிறது' என்ற வாதத்தைப் பதிவு செய்யும் வகையில் இதுபோன்றதோர் அரசியல் நாடகத்தை அரங்கேற்றத் தொடங்கியுள்ளது கர்நாடக அரசு.

அந்தத் திட்டத்தை நிறைவேற்றவே, கமல்ஹாசனையும் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் சிலரையும் அழைத்துள்ளார் முதல்வர் குமாரசாமி. எனவே, இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானது அல்ல; காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைத் தகர்க்கும் அரசியல் சூழ்ச்சி. இதையெல்லாம் தெரிந்துதான் கமல் சென்றாரா என்பது தெரியவில்லை? 

காவிரிப் பிரச்னை தொடர்பாக, 1968- ம் ஆண்டில் தொடங்கி, கர்நாடக மாநில அரசுடன் தமிழக அரசு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஆனால், அவற்றில் எல்லாம் தீர்வு காணமுடியாததாலேயே, நடுவர் மன்றம் அமைத்து, உச்ச நீதிமன்றம்வரை செல்ல நேர்ந்தது. இதுபோன்ற நிலையில், கர்நாடக முதல்வர் குமாரசாமி பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார் என்றால் அதன் பின்னணியில் உள்ள அரசியல் கமலுக்குத் தெரியவில்லையா? உண்மையிலேயே அவருக்குத் தெரியவில்லை என்றால், 'குமாரசாமி அழைப்பின் உள்நோக்கம் தெரியாமல் அவரைச் சந்திக்கப் போய்விட்டேன். தற்போது என் நிலைப்பாட்டை நான் திருத்திக் கொண்டேன். தமிழக மக்களே, என்னைப் பொறுத்தருளுங்கள்' என்று கமல் அறிக்கை வெளியிடுவாரா?" எனக் கேள்வியெழுப்பினார்.

அடுத்த கட்டுரைக்கு