மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 4 - கேசட் விடு தூது!

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 4 - கேசட் விடு தூது!
பிரீமியம் ஸ்டோரி
News
மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 4 - கேசட் விடு தூது!

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 4 - கேசட் விடு தூது!

ஜெயலலிதாவின் டூர் கவரேஜ் வீடியோக்கள் ரெடியானதும் அதைக் கொடுப்பதற்கு போயஸ் கார்டனுக்கு போய் வந்துகொண்டிருந்தார் சசிகலா. புதிய வரவாக வந்த வீடியோ தொழிலில் 1980-களில் ஒரு பெண் கால் பதிப்பது ஆச்சர்யமான விஷயம். அந்த ஆச்சர்யம் ஜெயலலிதாவுக்கும் ஏற்பட்டது. சக பெண்மணியாக சசிகலாவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்தார் ஜெயலலிதா. இப்போது இருக்கிற சசிகலாவை பார்க்கிறவர்கள் அவர் கொஞ்சம் ‘மூடி டைப்’ என்றுதான் நினைப்பார்கள். ஆனால், சசிகலா அப்படிப்பட்டவர் அல்ல. எல்லோரிடமும் சகஜமாக பேசக் கூடியவர், பழகக் கூடியவர். அதுதான் அவரை போயஸ் கார்டனுக்குள் சகஜமாகப் போய் வரும் அளவுக்கு வளர்த்தது. அப்படி போய் வந்து கொண்டிருந்த காலத்தில் அங்கே ஜெயலலிதாவைச் சந்திக்கவரும் கட்சி நிர்வாகிகளிடமும் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். புத்தாண்டு அல்லது விழாக் காலங்களில் டைரி, பேனா என பரிசுகளை கொடுத்து தொழிலை வளர்க்க ஆரம்பித்தார். பெண் என்பதால் போயஸ் கார்டனுக்குள் சசிகலாவால் சகஜமாகப் போய் வர முடிந்தது.

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 4 - கேசட் விடு தூது!

திரைப்படத் துறையில் இருந்து வெளியேறிய பிறகு புதிய சினிமா படங்களைப் பார்க்க நினைத்தார் ஜெயலலிதா. ப்ரிவியூ தியேட்டர்களில் மட்டும் நடிகர்களால் புதிய படங்களைப் போய் பார்க்க முடியும் என்கிற காலகட்டம் அது. அப்போது ப்ரிவியூ தியேட்டர்களில் படங்களைப் பார்க்க ஜெயலலிதா விரும்பவில்லை. ஆனால், படங்களைப் பார்க்கும் ஆர்வம் மட்டும் இருந்தது. அதற்கு வீடியோ வரப்பிரசாதமாக அமைந்தது. VCR, VCP என்கிற வீடியோ பிளேயர்கள் மூலம் படங்களைப் பார்க்கும் தொழில்நுட்பம் பிரபலமாக ஆரம்பித்திருந்தது. அதில் VHS கேசட்டுகள் மூலம் வசதி படைத்தவர்கள் படங்களைப் பார்க்க ஆரம்பித்தார்கள். படங்களைப் பார்க்க விரும்பும் ஜெயலலிதாவின் ஆர்வத்தைக் கவ்வி பிடித்துக் கொண்டார் சசிகலா. ஜெயலலிதாவுக்காகப் புதிய மற்றும் பழைய படங்களின் வீடியோ கேசட்டுகளைக் கொண்டு போனார் சசிகலா.

‘வினோத் வீடியோ விஷன்’ அமைப்பதற்காக கணவர் நடராஜனோடு சிங்கப்பூர் போனார் சசிகலா. வீடியோ பிளேயர்கள், கேமராக்கள், கேசட்டுகள் என வீடியோ தொழிலுக்குத் தேவையான கருவிகளை எல்லாம் வாங்கினார். புதிய மற்றும் பழைய படங்களின் வீடியோ கேசட்டுகள் எல்லாம் பெரும்பாலும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்துதான் தமிழகத்துக்கு வந்து கொண்டிருந்தன. தமிழகத்தில் படங்களை வீடியோ கேசட்டுகளில் காப்பி செய்ய வசதிகள் எல்லாம் குறைவாக இருந்ததால் வாரா வாரம் சிங்கப்பூரில் இருந்து படங்கள் வந்தன. சிங்கப்பூர் போனபோது அந்தத் தொடர்புகளை சசிகலா ஏற்படுத்திக்கொண்டார். அதனால், சிங்கப்பூரில் இருந்து புதிய படங்கள் வர வர... அதை கார்டனில் தந்து ஜெயலலிதாவின் மனதில் இடம்பிடித்தார். குறிப்பிட்ட ஒரு படத்தை ஜெயலலிதா பார்க்க விரும்பி அந்தப் படத்தின் டைட்டிலை சொன்னால் எப்பாடுபட்டாவது அந்தப் படத்தை சசிகலா வாங்கி கொடுத்துவிடுவார்.

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 4 - கேசட் விடு தூது!

அந்தக் காலகட்டத்தில் ஜெயலலிதாவுக்கு பி.ஏ-வாக இருந்த பிரேமா, ஜெயலலிதாவின் ஆல் இன் ஆல் தேவைகளைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துகொண்டிருந்தார். எம்.ஏ., எம்ஃபில் படித்தவர் பிரேமா. சினிமாவில் ஜெயலலிதா இருந்த காலத்தில் இருந்து ஜெயலலிதாவுக்கு பி.ஏ-வாக இருந்தவராம். ஜெயலலிதாவின் நிழலாக இருந்து எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பிரேமாவுக்கு சோதனை ஒன்று வந்தது. வயிற்றுவலி தொந்தரவால் பிரேமாவுக்கு அப்பன்டீஸ் ஆபரேஷன் நடந்தது. காத்துக்கொண்டிருந்த சசிகலா அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தத் தவறவில்லை.

அதற்கு முன்பு சின்ன ஃபிளாஷ்பேக்... சிகிச்சைக்காக பெங்களூர் ஜிண்டால் மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப் பட்டிருந்தார். வீடியோ கேசட் கொடுத்த நட்பின் அடையாளமாக பெங்களூருவுக்குச் சென்று ஜெயலலிதாவைப் பார்த்தார் சசிகலா. ஜெயலலிதாவோடு நட்பாகிவிட வேண்டும், அவருக்கு நெருக்கமாகிவிட வேண்டும் என சசிகலா நடத்திய மூவ்களில் இதுவும் ஒன்று. பெங்களூரில் சசிகலாவைப் பார்த்தது ஜெயலலிதாவுக்கு ஆச்சர்யம். ‘‘எதற்காக சிரமப்பட்டு வந்த... என்னைப் பார்க்கிறதுக்காக இவ்வளவு தூரம் வந்திருக்க?’’ என ஜெயலலிதா உருக... ‘‘சிரமம் எல்லாம் இல்ல

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 4 - கேசட் விடு தூது!

மேடம்... உங்களுக்கு உடல்நிலை சரியில்லைனு கேள்விப்பட்டதுமே நலம் விசாரித்துவிட்டு வரலாம் என கிளம்பிவந்துட்டேன். உங்களுக்கு உதவிகள் தேவைப்பட்டால் நான் இங்கே இருந்து உங்களுக்கு உதவக் காத்திருக்கிறேன்’’ என சொன்னதும் ஜெயலலிதா நெகிழ்ந்து போய்விட்டார். இந்த சம்பவம்தான் சசிகலா மீதான நம்பிக்கையை ஜெயலலிதா மனதில் விதைத்தது.

அ.தி.மு.க-வின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆகி கொஞ்ச காலத்திலேயே ராஜ்ய சபா எம்.பி. ஆக்கப்பட்டார் ஜெயலலிதா. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க இருந்த நிலையில்தான் பிரேமாவுக்கு ஆபரேஷன் நடந்தது. ‘‘என் பி.ஏ-வுக்கு உடல்நிலை சரியில்லை... உதவிக்கு என்னோடு டெல்லி வர முடியுமா?’’ என ஜெயலலிதா கேட்க... சசிகலா ஜெயலலிதாவோடு நெருக்கமாகத் தொடங்கினார். டெல்லியில் இரண்டு மாத காலம் ஜெயலலிதாவோடு இருந்து சகல உதவிகளையும் செய்து கொடுத்ததால் சசிகலாவைப் பிடித்துப் போய்விட, பிரேமா புறந்தள்ளப்பட்டார். ‘‘தன் மகனுக்கு என்ஜினீயரிங் சீட் வாங்கித் தர சொல்லி ஜெயலலிதாவிடம் கேட்டிருந்தார் பிரேமா. ஆனால், ஜெயலலிதா சிபாரிசு செய்தும் சீட் வாங்கித் தர முடியாமல் போய்விட்டது. அந்தக் கோபத்தில்தான் ஜெயலலிதாவுக்கு `குட்பை’ சொல்லிவிட்டு பிரேமா கிளம்பிவிட்டார்’’ என ஒரு தரப்பு சொல்கிறது.

பிரேமா இடத்தைப் பிடித்த சசிகலாவின் ஆட்டம் அடுத்தடுத்து ஆரம்பமானது.

-அடுத்த இதழில்...

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி
படம்: ஆ.முத்துக்குமார்,
ஓவியம்: அ.நன்மாறன்