Published:Updated:

''ஊரெல்லாம் ஊழல் வழக்கு!''

அதிரடி அ.தி.மு.க. - திடுக் தி.மு.க.

''ஊரெல்லாம் ஊழல் வழக்கு!''

அதிரடி அ.தி.மு.க. - திடுக் தி.மு.க.

Published:Updated:
##~##

''ஊரெல்லாம் வழக்குப் போடுங்க... ஊழலைத் தேடிப் பிடிங்க... விடாதீங்க, ஆளும் கட்சிப் பிரமுகர்களை!'' - நவம்பர் 21-ம் தேதி தனது கட்சிக்காரர்களுக்கு ஜெயலலிதா இட்டுள்ள கட்டளை இது! 

இதென்ன திடீர் கேஸ் - கோர்ட்டு உத்தரவு என்று விசாரிக்கப் புகுந்தால், ஜெயலலிதாவின் ரகசிய உத்தரவுகளைப்பற்றி மெள்ள அவிழ்க்கிறார்கள் அ.தி.மு.க-வினர். கொடநாடு எஸ்டேட்டில் தங்கியிருக்கும் ஜெ., குருப் பெயர்ச்சி நாளான கடந்த நவம்பர் 21-ம் தேதி முதல் தி.மு.கழக எதிர்ப்பு அஸ்திரங்களை இன்னும் வேகப்படுத்த முடிவெடுத்தாராம். அதைத் தொடர்ந்து, ஜெயலலிதாவிடம் இருந்து புதிய உத்தரவுகள் கட்சி நிர்வாகிகளைத் தேடி வருகிறதாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அ.தி.மு.க-வின் முன்னணிப் பிரமுகர்கள் கீழ்க்கண்டவாறு சில கட்டளைகளை வரிசைப்படுத்துகிறார்கள் -

''ஆளும் கட்சியின் கவுன்சிலர்கள் முதல் அமைச்சர்கள் வரை அவரவர் ஏரியாவில் நடத்துகிற ஊழல்கள் குறித்து அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்கள் திரட்ட வேண்டும். அந்தந்த மாவட்டங்களில் உள்ள அம்மா பேரவை, இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் மூலமாக உரிய ஆவணங்களுடன் இதைச் சேகரித்து, 15 நாட்களுக்குள் அந்தந்த மாவட்டப் பொறுப்பாளர்களிடம் கொடுக்க வேண்டும். இந்தப் பொறுப்பாளர்கள் கட்சியின் பிற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, அதற்கேற்ப இந்தத் தகவல்களை வைத்து சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். முக்கியமாக, மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளரிடம் இந்தத் தகவல்கள் மற்றும் ஆவணங்களைக் காட்டி உரிய சட்ட ஆலோசனை பெறுவது அவசியம். சட்ட நடவடிக்கை தவிர, ஊழல்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார்களைக் கொடுத்து, பதிவு செய்துவிட வேண்டும்!'' என்று உத்தரவிட்டுள்ளாராம் ஜெயலலிதா.

''ஊரெல்லாம் ஊழல் வழக்கு!''

''பெரும்பாலான வழக்குகள் அந்தந்த மாவட்ட நீதிமன்றங்களில் போடக் கூடியவை என்பதால், கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் மற்றும் வக்கீல் பிரிவின் மாநில நிர்வாகிகள் இதை ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும்!'' என்று கறாராக உத்தரவிட்டுள்ளாராம் ஜெ.!

கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கள் குறித்த விவரங்களை மாதந்தோறும் தனக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறாராம்.

அ.தி.மு.கழக வக்கீல் பிரிவின் தலைவர் சேதுராமன். செயலாளர் மனோஜ் பாண்டியன். இந்தப் பிரிவின் உறுப்பினர்களாக தமிழகம் முழுவதும் சுமார் 7,000 பேர் உள்ளனர். தலைவரைவிட செயலாளர் பதவிதான் ஆக்டிவ்வானது. இந்தப் பிரிவில் பல ஆண்டுகள் சட்ட ஆலோசகராக இருந்தவர் வக்கீல் ஜோதி. அவருக்குப் பிறகு, ஜோதி கவனித்த சட்ட விவகாரங்களை மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட சில முக்கியப் பிரமுகர்கள் கவனித்துக்கொள்கிறார்கள்.

கடந்த நாலரை வருட காலத்தில், தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் ஆளும் கட்சியினர், அ.தி.மு.கழக பிரமுகர்கள் மீது போட்ட வழக்குகள், இடைத் தேர்தல் மற்றும் தேர்தல் நேரத்து புகார்கள் குறித்து உரிய சட்டத் தீர்வுகளை அளிப்பது மேற்கண்ட பிரிவுதான். மணல் கொள்ளை உள்ளிட்ட ஆளும் கட்சித் தவறுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்த அ.தி.மு.க. பிரமுகர்கள் கோர்ட், ஜெயில் என்று அல்லாட நேர்ந்தால்... அவர்களுக்கும் இந்த வக்கீல் பிரமுகர்கள்தான் ஆலோசனை கொடுத்து உதவுகிறார்கள்.

அதே சமயம், தங்கள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு இன்னும் கவனமாக பலப்படுத்தப்பட வேண்டும் என்ற ஆதங்கம், விவரமான அ.தி.மு.க. பிரமுகர்களுக்கு இருக்கவே செய்கிறது!

தமிழகத்தின் தென் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சிப் பிரமுகர் ஒருவர் நம்மிடம் பேசும்போது,

''தர்மபுரி பஸ் எரிப்பு விவகாரம் துரதிர்ஷ்ட வசமானது. அதில் சம்பந்தப்பட்ட எங்கள் கட்சிக்காரர்களின் தரப்பு வாதத்தை கோர்ட்டில் சரியானபடி ஒலிக்காதது இந்த வக்கீல் பிரிவினர்தானே? உரிய சட்டப் போராட்டம் நடத்தி இருந்தால், தூக்கு தண்டனை என்பதை அட்லீஸ்ட் ஆயுள் தண்டனையாகக் குறைத்திருக்க முடியும்! கட்சியின் மீது நம்பிக்கை கூடியிருக்கும். அதேபோல், தி.மு.கழக வி.ஐ.பி-யான தா.கிருஷ்ணன் படுகொலையானது எங்கள் ஆட்சியின்போதுதான்! அப்போதே வழக்குக்குத் தேவையான அனைத்து ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளைப் பலப்படுத்தி இருந்தால், தீர்ப்பின் தலைவிதியே மாறியிருக்கும். இன்றைய தேதிக்கு அரசியலும்கூட மாறியிருக்கும்.  தா.கிருஷ்ணனின் மனைவியிடம் உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டதா என்பதை விசாரித்தாலே, இதன் பின்னால் உள்ள எங்கள் ஆதங்கம் புரிந்துவிடும்.

முக்கிய வழக்குகள் நடந்த காலகட்டத்துக்குப் பிறகுதான் மனோஜ் பாண்டியன் வக்கீல் பிரிவில் நியமிக்கப்பட்டார். எங்கள் அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன்... சின்ன சின்ன வழக்குகள் என்றால், இந்தப் பிரிவினரிடம் ஒப்படைக்கிறது கட்சி. காரணம், மிகப் பெரிய ஊழல் வழக்குகள் என்றால் இவர்கள் வாதாட கொஞ்சம் பதற்றப்படுவார்கள். அம்மா மீதான ஊழல் வழக்குகள் நடக்கும்போது இந்தப் பிரிவின் முக்கியப் பிரமுகர்கள் என்ன செய்தார்கள்? வக்கீல் வேலையா பார்த்தார்கள்? கோர்ட்டில் வாதாடுவதற்கு பதிலாக, பிரபல வக்கீல்களை வெளியிலிருந்து கொண்டுவரும் ஒருங்கிணைப்பாளர் வேலையைத்தானே செய்தார்கள்?

அப்படி இருக்க, இப்போதும் அம்மா கட்டளைப்படி ஆளும் கட்சிக்காரர்களுக்கு எதிராக வழக்குகளைப் பதிவு செய்யலாமே தவிர... தனியாக வழக்குகளை இவர்கள் நடத்துவது சரிப்பட்டு வராது என்பதுதான் என் கருத்து.  ஊழலைத் துருவும்போது, ஆளும் கட்சியினரின் அதிரடி சட்டத் தாக்குதல்கள் வரலாம். அதை சமாளிக்க தற்காப்பு நடவடிக்கை ஒரு பக்கம் எடுக்க வேண்டும். அதே சமயம், ஆளும் கட்சியினர் மீது கடுமையான எதிர்த் தாக்குதல்களை நடத்தவும் தயாராக இருக்க வேண்டும். இரண்டையும் ஒரே நேரத்தில் செய்யும் அளவுக்கு போதிய திறமையானவர்களைக்கொண்டதாக வக்கீல் பிரிவு தற்போது இருப்பதாகத் தெரியவில்லை!'' என்கிறார் இந்த தென் மாவட்டப் பிரமுகர்.

வக்கீல் பிரிவின் பிரமுகர் ஒருவரோ,

''கடந்த நாலு வருடங்களில் தமிழகத்தில் ஆயிரக் கணக்கான கட்சிக்காரர்களின் வழக்குகளை நாங்கள்தான் முன்னின்று சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம். அந்த அனுபவம் ஒன்றே போதும். பொறுத்திருந்து பாருங்கள்!'' என்கிறார்.

அ.தி.மு.க-வின் திட்டப்படி ஊர் ஊருக்கு வழக்குகள் பதிவானால், அதை ஆளும் கட்சியினர் எப்படி எதிர்கொள்ளுவார்கள் என்பது தனி சுவாரஸ்யமாகத்தான் இருக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism