Published:Updated:

புதிய இந்தியா பிறக்குமா? - அ.முத்துகிருஷ்ணன்

புதிய இந்தியா பிறக்குமா? - அ.முத்துகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
புதிய இந்தியா பிறக்குமா? - அ.முத்துகிருஷ்ணன்

புதிய இந்தியா பிறக்குமா? - அ.முத்துகிருஷ்ணன்

புதிய இந்தியா பிறக்குமா? - அ.முத்துகிருஷ்ணன்

புதிய இந்தியா பிறக்குமா? - அ.முத்துகிருஷ்ணன்

Published:Updated:
புதிய இந்தியா பிறக்குமா? - அ.முத்துகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
புதிய இந்தியா பிறக்குமா? - அ.முத்துகிருஷ்ணன்
புதிய இந்தியா பிறக்குமா? - அ.முத்துகிருஷ்ணன்

ன்றைய நிலையில் பண மதிப்பு நீக்கம் நடவடிக்கையைப் பற்றி அறியாதவர்கள் இந்தத் தேசத்தில் இல்லை. நவம்பர் 8-ஆம் தேதி இரவு முதலே இந்தியர்கள் அனைவரும் இந்த நடவடிக்கையைப் பற்றி மெள்ள மெள்ளத் தகவல்களை அறிந்துகொண்டு இன்றைய நிலையில் ஆய்வாளர்களாகவே உருமாற்றம் அடைந்திருக்கிறார்கள். முதன்முறையாக ஒரு மக்கள் சமூகத்தின் ஒட்டுமொத்த அடுக்குகளையும் ஒரே நேரத்தில் ஒரு விஷயம் பாதித்திருக்கிறது என்றால், அது இந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கைதான்.

ஒரு தேசத்தில் புழக்கத்தில் இருந்து 86.4% ரொக்கப் பணம் நான்கு மணி நேர அவகாசத்தில் இனி வர்த்தக நடவடிக்கைகளுக்குச் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதன் பின் தொடர்ந்து கடந்த 50 தினங்களில் கின்னஸ் சாதனை படைக்கும் அளவுக்கு இந்திய அரசாங்கம் தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டபடி இருக்கிறது. இந்த அறிக்கைகளைத் தொடர்ந்து வாசித்து அறிய முற்பட்டதிலும் புயல்போல் திட்டமிட்டுக் கிளப்பிவிடப்பட்ட வதந்திகளையும் எதிர்கொண்டதில்தான் ஒரு தேசமே ஆய்வாளர்களாக உருமாறியிருக்கிறது.

முதலில் இந்தக் கடும் நடவடிக்கையை, கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்கும், தீவிரவாதத்துக்கான நிதி மூலதனங்களை முடக்குவதற்கும், கறுப்புப் பணத்தைத் துல்லியமாகத் தாக்குவதற்கும் என பிரதமர் அறிவித்தார். இந்தியாவில் புழங்கும் கள்ள நோட்டுகள் என்பது வெறும் ரூ.400 கோடிதானே, அதற்கு ஏன் ரூ.17 லட்சத்து 60 ஆயிரம் கோடியை செல்லாக்காசாக அறிவிக்க வேண்டும். உலகம் முழுவதுமே தீவிரவாதிகள் ரொக்கப் பணத்தைத் தங்கள் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவது இல்லை என்றும் அவர்கள் ஏற்கனவே ஆன்லைன் டிரான்சாக்‌ஷனுக்கு மாறிவிட்டார்கள் என்பதை, ஏற்கனவே உலகம் முழுமையும் விவாதித்திருக்கிறார்கள். இதனை இந்திய நாடாளுமன்றமும் விவாதித்திருக்கிறது. கறுப்புப் பணம் என்பது புழக்கத்தில் இருக்கும் ரொக்கப் பணத்தில் வெறும் 6% தானே என்பதாக, ஒவ்வொரு வாதத்துக்கும் ஆவணங்களுடன் எதிர்வாதங்கள் தொடங்க, அன்றில் இருந்து தினசரி ஒரு விளக்கம் கொடுத்து விவாதத்தில் ஈடுபடாமல் மொத்தத் தேசத்தையும் திசை திருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். இன்றையத் தேதியில் இந்தத் திட்டத்தை கொண்டுவந்தவர்களுக்கே இதை எதற்குக் கொண்டுவந்தோம் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக, பொருளாதார அறிஞர்கள் கருதுகிறார்கள்.

கறுப்புப் பணத்தை ஒழிப்பதில் பொதுமக்களுக்கு என்றுமே இருவேறு கருத்துகள் இருந்தது இல்லை. அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை இடதுசாரிகளைத் தவிர்த்து முதலாளித்துவக் கட்சிகள் அனைத்துக்குமே அதில் தீவிரமாக ஈடுபடுவதில் கொஞ்சம் சுணக்கம் இருக்கிறது என்பதை வரலாற்றை கொஞ்சம் உற்றுநோக்கினால் எளிதாக புரியும்.

டி-மானிட்டைசேஷன் என்று அழைக்கப்படும் இந்த பணமதிப்பு நீக்கம் நடவடிக்கை ஏற்கனவே 1946 மற்றும் 1978 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டு, அதனால் பெரிய பலன் ஒன்றும் கிட்டவில்லை என்பதை கடந்த மத்தியஅரசு அமைத்த பல குழுக்கள் தெளிவுபடுத்துகின்றன. 1946 மற்றும் 1978 ஆகிய காலத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது, இது ஒரு பத்திரிகை செய்தி மட்டுமே. அன்றையத் தேதிகளில் ஒழிக்கப்பட்ட பெரிய மதிப்பிலான ரூபாய் தாள்களை சாமானியர்கள் பார்த்ததுகூட கிடையாது. ஆனால், இன்றையத் தேதியில் மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 1,000 மற்றும் 500 ரூபாய் தாள்கள் தினக்கூலிகள் வாங்கும் சம்பளப் பணம் என்கிற அளவில் இந்தச் சமூகத்தில் அசைவியக்கத்தைத் தீர்மானிக்கும் ஒரு கருவியாக அது விளங்கிவருகிறது.

புதிய இந்தியா பிறக்குமா? - அ.முத்துகிருஷ்ணன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!இந்தியாவின் 86% பரிவர்த்தனைகள் ரொக்கத்தில்தான் நடந்து வந்தது. இந்தியாவில் 80% வேலைவாய்ப்புகளை வழங்கிய முறைசாராத் தொழில்கள் அனைத்தும் ரொக்கத்தில்தான் நடத்தப்படுகிறது என்பதை அரசு நன்கு அறியும். இந்திய நடுத்தரக் குடும்பங்களின் சேமிப்புகள், விவசாயிகளின் அன்றாடச் செலவுகள், சிறு வியாபாரிகள், குறு தொழில்கள் என அனைத்துமே ரொக்கம்தான். இப்படி தேசத்தின் 86% பரிவர்த்தனைகளை முடக்கிவிட்டால், அதனால் என்ன பலன் கிடைக்கக்கூடும் என்பது பெரும் கேள்வியாக முன்வைக்கப்பட்டது.

உலகின் இரண்டாம் பெரும் ஜனத்தொகை உள்ள ஒரு தேசம், வங்கிகள் நோக்கி அலறியபடி ஓடியது. ஆனால் இத்தனைப் பெரும் கூட்டத்தைச் சமாளிக்கும் அளவுக்கு நம்மிடம் வங்கிகளும் இல்லை, வங்கி ஊழியர்களும் இல்லை. இதில் விவசாய நடவடிக்கைகளின் முதுகெலும்பாகத் திகழ்ந்த கூட்டுறவு வங்கிகள் இந்த மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூபாய் தாள்களை பெறக்கூடாது என ரிசர்வ் வங்கி தடை விதித்தது. 100 கோடி ஜனங்களும் இரண்டு லட்சம் வங்கி கிளைகள் நோக்கிச் சென்று தங்களின் பணத்தை கணக்கில் வரவு வைக்கவும், மாற்றவும் ஒரு மாதம் முழுவதும் காத்துக்கிடந்தார்கள். வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டு, தங்களின் அன்றாடச் சேமிப்புகள் நிர்மூலமாகிவிடுமே என்கிற பதற்றத்தில், எதையும் செய்ய முடியாமல் மொத்த சமூகமே ஒருவித பதற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, இதுவரை 20 வங்கி ஊழியர்கள் உட்பட, 150 பேர் மரணமடைந்திருக்கிறார்கள்.

பெரிய மதிப்பிலான ரூபாய் தாள்களில்தான் கறுப்புப் பணம் பதுக்கப்படுகிறது. அதனால்தான் 1,000 ரூபாய் தாளை ஒழித்தோம் என்றவர்கள் ஒழித்த கையோடு 2,000 ரூபாயை வெளியிட்டார்கள். சாமானியர்கள் பணம் பெற கடும் உச்சவரம்புகளை அரசு அறிவித்தது. சாமானியர்கள் 4,000 ரூபாய் பெற வங்கிகளின் முன் எல்லாவித சர்க்கஸ் வித்தைகளிலும் ஈடுபட்டார்கள். ஆனால், மறுபுறம் ஒவ்வொரு கறுப்புப் பண முதலையும் சர்வசாதாரணமாக இந்தியா முழுமையிலும் தங்களின் பழைய பணத்தை கோடிக்கோடியாக புதிய 2,000 ரூபாய் தாள்களில்  மாற்றினார்கள். தனியார் வங்கிகள் இதில் முனைப்புடன் செயல்பட்டன. இந்தப் பண மாற்றம் ஒரு பெரும் தொழிலாகவே செழித்தது. இதன் வாயிலாக ஒரு ‘புதிய வேலைவாய்ப்பு’ துரிதமாகவே உருவானது. திரும்பிய பக்கமெல்லாம் தரகர்கள் விதவிதமான கமிஷன் தொகைகளுடன் பேரத்தில் ஈடுபட்டார்கள்.

தங்களின் சொந்தச் சேமிப்பை, வாழ்நாள் உழைப்பை வங்கியில் இருந்து எடுக்க முடியாமல் சாமானியர்கள் தவித்தார்கள். 50,000 திருமணங்கள் நின்றுபோயின.குடும்பங்கள் சொல்லொணாத் துயரத்தில் மூழ்கின. ஆனால், இதே காலகட்டத்தில்தான் 650 கோடி ரூபாய் செலவில் பா.ஜ.க-வின் முக்கியஸ்தரான ஜனார்தன ரெட்டி மகள் திருமணம், அருண் ஜெட்லி மகள் திருமணம், நிதின் கட்கரி மகள் திருமணம் என கோடிகள் புழங்கும் திருமணங்கள் நடந்தேறின. மருத்துவச் செலவுகளுக்கு, அவசரமான அறுவை சிகிச்சைகளுக்கு என பணம் கிடைக்காமல் சாமானியர்கள் வங்கிகள் முன் மண்டியிட்டுக் கிடந்தார்கள்.

இந்தியா முழுவதிலும் தொழில்கள் முடங்கின; பொருளாதாரப் புள்ளி விவரங்கள் மயங்கி விழுந்தன; வேலைவாய்ப்புக் குறியீடுகள் பாதாளம் நோக்கிச் சென்றன; ஏற்றுமதி/இறக்குமதி பாதிக்கப்பட்டது; விவசாயிகள், விதைகளையும் உரங்களையும் வாங்க முடியாமல் தவித்தார்கள்; விவசாயிகள், தங்களின் அறுவடையை விற்க முடியாமல் தவித்தார்கள். ஒரு முட்டுச்சந்தில் தேசமே திணறியது, புலம்பியது. கண்ணீர் மல்கக் கைகளைப் பிசைந்துகொண்டு நின்றது. ஆனால், இதுபற்றி எந்த வகையான ஒரு ஜனநாயகப்பூர்வமான விவாதத்தையும் நிகழ்த்த பா.ஜ.க கட்சியினர் அனுமதிக்கவில்லை. பொருளாதாரத்தை அதன் மொழியில் பேச மறுத்தவர்கள், ஆவணங்கள் - புள்ளிவிவரங்களுக்குப் பதில் சொல்ல மறுத்தவர்கள், தொடர்ந்து மதத்தின் மொழியில் பேசினார்கள். மகா யக்னம், தர்மம் - அதர்மம், தேசப்பற்றாளர் - தேசவிரோதி, சிலுவைப்போர் என்று அனைத்தையும் இருமுனைப் போராக மாற்றினார்கள். பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வந்து விவாதங்களில் ஈடுபடாமல் தனது கைபேசி செயலி மூலம் தனக்குத்தானே வாக்கெடுப்புகள் நடத்தி மகிழ்ந்தார். அரசு செலவில் தினசரி முழுப் பக்க விளம்பரங்கள் கொடுத்தார். தங்களின் தலைவனுக்கு எதிராகப் பேசுபவர்கள் அனைவரும் தேசத்துரோகிகளே என்ற கோஷங்கள் காதைக் கிழித்தன. இந்த 50 தினங்கள் ஜனநாயக ஆட்சியின் சுவடுகளே இல்லாமல், ஒரு மன்னராட்சியை, சர்வாதிகார ஆட்சியை இந்த நாட்கள் நினைவுபடுத்தின.

ரத்தன் டாடா, சந்திரபாபு நாயுடு முதல் நிதிஷ் குமார் வரை முதலில் இதற்கு ஆதரவு தெரிவித்த பலரும் மெள்ள மெள்ள இதன் சங்கடங்கள் பூதாகரமானவை என்பதை அறிந்து வருத்தங்களைப் பதிவுசெய்யத் தொடங்கினார்கள். மாநில அரசுகளின் செயல்பாடுகள் முடங்கின. அரசுகளின் செயல்பாடுகளே முடங்கும்போது சாமானியர்களின் கதி என்ன என்பதை நீங்கள்தான் கற்பனைசெய்து பார்க்க வேண்டும்.

இரண்டரை லட்சம் ரூபாய் வரை வங்கிக் கணக்குகளில் போடலாம். அதுவும், உங்கள் பணமாகவே அது இருக்க வேண்டும். எப்பொழுது வேண்டுமானாலும் அது உங்கள் பணம்தான் என்பதை விசாரணைக்கு உட்படுத்துவோம். அதை நிரூபிக்கும் பொறுப்பு உங்களுடையது என்கிற எச்சரிக்கைகளின் ஊடே நகர்ந்தன நாட்கள். உலகப் பொருளாதாரமே ஆட்டம் கண்ட நேரம் இந்தியப் பொருளாதாரம் ஸ்திரமாக இருந்தது. இந்தியர்களின் சேமிப்புப் பழக்கம் குறித்து வெகுவாகப் பாராட்டிப் பேசப்பட்டது. இந்தியக் குடும்பப் பெண்களின் சேமிப்புகள் ரொக்கமாக உள்ளது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. வங்கிக் கலாசாரத்துக்கு இன்னும் பழக்கப்படாத மக்கள், தங்களின் அவசரத் தேவைக்கு யாரிடமும் கையேந்த விரும்பாத சுயமரியாதை மிக்கவர்களாக தங்களின் சேமிப்பை ரொக்கமாகவே வைத்திருப்பதைப் பாதுகாப்பு உணர்வு அளிக்கும் ஒரு செயலாகக் கருதினார்கள். நம் கூட்டுறவு வங்கிகள் கிராமப்புற மக்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட அளவுக்கு தேசிய வங்கிகளால் நெருங்கிச் செல்ல முடியவில்லை. தேசிய வங்கிகள் தங்களின் செயல்பாட்டு மொழியை ஹிந்தி/ஆங்கிலமாக வைத்திருப்பதும் அதன் அதிகாரத் தோரணையான செயல்பாடுகளால் சாமானியர்களை நெருங்க முடியவில்லை. மக்களிடம் இந்த நெருக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போனது வங்கிகளின் தோல்விதானே ஒழிய, இதில் கிராமப்புற மக்களைக் குறைகூற இயலாது.

புதிய இந்தியா பிறக்குமா? - அ.முத்துகிருஷ்ணன்

அரசு ஊழியர்களும், மாதச் சம்பளம் (ஐந்திலக்கத்தில்) பெறும் நகரவாசிகளும்தான் வங்கிகளை முறையாகப் பயன்படுத்துகிறார்கள். இவர்களின் மனதில் வங்கி சார்ந்த அச்சம் இல்லை. ஆனால், வங்கிகளில் மிகக் குறைந்த வட்டியையே இவர்கள் அளிப்பதால், தங்களின் பணத்தைத் தங்கமாகவும் நிலமாகவும் மாற்றுவதில் முனைகிறார்கள். இதை எல்லாம் தாண்டி பொதுத் துறை வங்கிகளின் சேமிப்புகளைக் கடனாகக் கொடுப்பதுதான் அவர்களின் பெரும் வர்த்தக நடவடிக்கை. இந்தக் கடன்களில் சாமானியர்கள் வாங்கும் வீட்டுக் கடன், வாகனக் கடன், நகைக் கடன், கல்விக் கடன் ஆகியவை மிக முறையாகத் திருப்பிச் செலுத்தப்படுகிறது. இவற்றை வைத்துதான் இந்த வங்கிகளே இயங்குகின்றன. ஆனால், இந்த வங்கிகள் அனைத்தும் சமீபகாலமாக முடங்கும் நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது. அதற்குக் காரணம், கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாத இந்தியாவின் பெரும் தொழில் குழுமங்கள். இந்தியப் பெருமுதலாளிகள் பொதுத் துறை வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை இன்றளவில் ரூ.11 லட்சம் கோடி. இந்தக் கடனை இந்தப் பெரு முதலாளிகள் செலுத்த மறுக்கிறார்கள். தொடர்ச்சியாக இவர்கள் கடன் பெறுவதற்கு பொதுத் துறை வங்கிகளை நாடுவதும் அதைத் திரும்பச் செலுத்தும் நெருக்கடியான நேரங்களில் அரசாங்கத்தை நாடுவதும், அரசியல் கட்சிகளுக்குப் பெரும் நன்கொடை அளிப்பதும், தனிப்பட்ட முறையில் அதிகார வர்க்கத்தின் பிரதிநிதிகள் சகலரையும் கவனிப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். பெரு முதலாளிகள், அரசியல் கட்சிகள், அதிகார வர்க்கம் - இந்தக் கூட்டணிதான் இந்தியத் தேசத்தை சீரழித்து வருகிறது. இவர்கள் வசம்தான் இந்தியாவின் மொத்த கறுப்புப் பணமும் உள்ளது. இவர்கள் நினைத்தால், இந்தக் கடன் வலையில் இருந்து யாரையும் தப்பிக்க வைக்க முடியும். லலித் மோடி, விஜய் மல்லையா முதல் ஒரு பெரும் கூட்டமே தப்பிச் செல்ல எல்லா வகையிலும் அவர்களுக்கு உதவி சௌகர்யங்களைச் செய்து கொடுப்பதே நம் அரசின் வேலையாக உள்ளது. இந்தக் கட்டுரையை எழுதும் நேரத்தில் சஞ்சய் பண்டாரி எனும் பெரும் ஆயுத வியாபாரி இந்தியாவில் இருந்து தப்பிச்  சென்ற செய்தி வந்துகொண்டிருக்கிறது.

புதிய இந்தியா பிறக்குமா? - அ.முத்துகிருஷ்ணன்சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 26,999.

ஹெச்.எஸ்.பி.சி வங்கி இதுவரை 629 இந்தியர்களின் பட்டியலையே அரசு வசம் வழங்கியிருக்கிறது. இந்தப் பட்டியலில் இருப்பவர்களுக்கும் இந்திய அதிகார வர்க்கத்துக்கும் இருக்கும் நெருக்கம்தான் கறுப்புப் பணத்தின் உற்பத்திக்கும் பாதுகாப்புக்குமான உத்தரவாதமாக விளங்குகிறது. அதிலும், இந்தியாவின் பெரும் பகுதி கறுப்புப் பணம் என்பது கனிம வளச் சுரண்டல், உயர் கல்வி மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில்தான் உற்பத்தியாகிறது என்பதை பல ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன. அதுவும் இன்றைய காலத்தில் இந்தப் பணம், முறையாக இங்கிருந்து மொரீஷியஸ், சிங்கப்பூர், கேமன் தீவுகள், கேமரூன் சென்று, மீண்டும் வெள்ளையாக மாறி அந்நிய முதலீடு உடுப்பு அணிந்து இந்தியாவுக்குள் மாலை மரியாதையுடன் வந்து கொண்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக இப்படி இங்கிருந்து வெளியேறிய தொகை 35 ஆயிரம் லட்சம் கோடி என்கிறது Illicit Financial Flows from Developing Countries என்கிற ஆய்வுக் கட்டுரை.

இப்படியாக உண்மையான கறுப்புப் பணம் எங்கே இருக்கிறது, எப்படி இருக்கிறது, எந்த ரூபத்தில் இருக்கிறது என்கிற சகலத்தையும் அறிந்துகொண்டு அதை எல்லாம் நோக்கி சுண்டுவிரலையும் அசைக்காமல், சாமானிய ஜனங்களை அச்சுறுத்தி அவர்களின் சேமிப்புகள் அனைத்தையும் வங்கிகளுக்குள் கொண்டு வந்து சேர்க்கும் நடவடிக்கையாகவே இந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கை மாறியுள்ளது. அவர்களின் வாழ்நாள் உழைப்பை வங்கிக் கணக்கில் போட்டு அதை வெளியே எடுக்க முடியாமல் நாளும் தவித்து வருகிறார்கள். இது அவர்களுக்கு அரசியல் சாசனம் வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கே எதிரானது.

இப்பொழுது புதிதாக கறுப்புப் பணம், ஊழல் ஆகிய அனைத்தையும் விடுத்து, இனி இந்தியாவில் ரொக்கப் புழக்கம் இருக்காது. அனைவரும் இனி ரொக்கம் இல்லா பரிவர்த்தனைக்கு மாறுங்கள் என கழுத்தில் கத்தியை வைக்கிறார்கள். பணம் இல்லா டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் ஈடுபட இந்தியாவில் அதற்கான அடிப்படை கட்டமைப்புகள் உள்ளதா, கருவிகள் உள்ளதா என்றால், இல்லை என்பதே ஒற்றைப் பதில். கிராமங்கள்தோறும் முதலில் மின்சாரம் இருக்கிறதா, சிறு நகரங்களில் கூட தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறதா, அதை விடுங்கள் இந்தியாவில் இணையத்தின் புழக்கம் என்பது 35% மட்டுமே. இதை வைத்துக்கொண்டு எப்படி ஒரு தேசம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நோக்கி நகர இயலும் என்று கேள்வி கேட்டால், நீங்கள் ஒரு அக்மார்க் தேசத்துரோகி என்பதே தேசபக்தர்களின் ரெடிமேட் பதில். டிஜிட்டல் பரிவர்த்தனை நகரங்களில் பல ஆண்டுகளாக இருந்து வந்தபோதிலும் அதைப் பாவிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஏனெனில், அது ஒரு புதிய நடைமுறை. அதை நோக்கி மக்கள் மெள்ள மெள்ளவே செல்வார்கள். இந்தப் புதிய நடைமுறையின் மீது மக்கள் நம்பிக்கைக் கொள்வது மிகவும் அவசியம் என்று அவர்களை அழுத்துவது, ஒருவருக்கு நீங்கள் கட்டாயப்படுத்தி நீச்சல் சொல்லிக் கொடுக்க முயல்வதற்குச் சமம். மற்றொரு விஷயம் இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை களுக்கு நாம் ஒவ்வொரு முறையும் ஒரு கட்டணத்தைச் செலுத்த வேண்டும், சேவை வரி செலுத்த வேண்டும். இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் நிறுவனங்களுக்குத் தினசரி லட்சம், கோடிகளில் லாபம் கிடைப்பதற்கான ஏற்பாடாகவும் இந்தத் திட்டம் முன்வைக்கப்படுகிறது. இதைத்தான் சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய ஊழல் என்று வர்ணிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

இந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பெரும் ஆபத்துகள் இல்லாமல் இல்லை. இணையத்தில் நடக்கும் தில்லுமுல்லுகள், கார்டு ஸ்வைப் செய்யும் இடங்களில் நடக்கும் கோல்மால்கள் பற்றி தினசரி நூற்றுக்கணக்கான செய்திகள் வந்தபடி உள்ளன. சமீபத்தில் இந்தியாவின் பெரும் பொதுத் துறை வங்கியின் ஒட்டு மொத்த வாடிக்கையாளர்களின் கடவு எண்கள் களவாடப் பட்டதை வாசித்தோம். எப்படி இரவோடு இரவாக மொத்த வாடிக்கையாளர்களும் தங்கள் ரகசிய எண்களை மாற்றும்படி அறிவுறுத்தப்பட்டார்கள்? இப்படியான ஒரு நடைமுறையை மக்கள் மீது எப்படிக் கட்டாயப்படுத்தித் திணிக்கிறது மத்திய அரசு என்பது பெரும் கேள்வி.

தங்கள் சொந்தப் பணத்தை பொதுமக்கள் வங்கிக் கணக்கில் செலுத்த/மாற்ற ரிசர்வ் வங்கி பல கெடுபிடிகளை விதித்தது. விரல்களில் அடையாள மை வைக்கும் ரேகை சட்ட காலத்துக்கு சென்றது. ஆனால், இப்பொழுது இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களது வங்கிக் கணக்கில் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் செலுத்தலாம் என்று ஒரு சுதந்திரப் பிரகடனத்தைச் செய்துள்ளது. இதுவும் இந்த நாட்டின் ஜனங்களைக் கேவலப்படுத்தும் மற்றுமொரு செயல். ஏற்கனவே பா.ஜ.க கட்சியினருக்கு மற்றும் அவர்களின் நெருங்கிய வட்டாரங்களுக்கு மட்டும் இந்தத் தகவல் முன்கூட்டியே கிடைத்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் ஏராளமாக வெளியாகியுள்ளன. பா.ஜ.க-வின் மாநிலக் கிளைகள் தங்களின் வங்கிக் கணக்குகளில் நவம்பர் 8 அன்றும் அதற்கு முன்பும் பெரும் தொகைகளைக் செலுத்தியிருக்கிறார்கள். பல மாநிலங்களில் பெரும் ரியல் எஸ்டேட் முதலீடுகள் செய்துள்ளார்கள் என்பதற்கான ஆதாரங்களும் வந்த வண்ணம் உள்ளன. இவை தவிர்த்து நவம்பர் 8 -ம் தேதிக்கு ஒரு மாதம் முன்பாக வங்கிகளுக்கு பல லட்சம் கோடி பணம் டெபாசிட்டுகளாக அதிவேகமாக வந்துள்ளதையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டியது அவசியம் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

புதிய இந்தியா பிறக்குமா? - அ.முத்துகிருஷ்ணன்


இந்திய மத்தியதர வர்க்கம் இன்னும் நம் நாட்டின் உண்மை நிலவரம் என்ன என்பதை அறிந்துகொள்ளாமல் இருப்பதால், அவர்கள் மேக் இன் இந்தியா, இந்தியா ஒளிர்கிறது, டிஜிட்டல் இந்தியா போன்ற விளம்பரங்களுக்குப் பலியாகிவிடுகிறார்கள். இன்றும்கூட மத்தியதர வர்க்கம்தான் பெரும் மெளனத்துடன் கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டே செயற்கையாக புன்னகைக்க முயல்கிறது. சமூகத்தைக் கடும் இக்கட்டான நேரத்தில் வழிநடத்த வேண்டியவர்கள் காக்கும் மௌனம் மிகவும் கொடியது.

பல திசைகளில் இருந்து நெருக்கடிகளைச் சந்தித்து வருகிற மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றமும் சமீபத்தில் ஒரு புதிய நெருக்கடியைக் கொடுத்துள்ளது. உச்ச நீதிமன்றம், தனது பங்கிற்கு 9 கேள்விகளை முன்வைத்துள்ளது. ரூபாய் மதிப்பிழக்கச் செய்யும் அறிவிப்பு, ரிசர்வ் வங்கியின் எந்தச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டது? ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் 26-ன் கீழ், ரூபாய் நோட்டுகளைச் செல்லாததாக்கும் அதிகாரம் முரணானதா? தனக்குச் சொந்தமான சொத்துகளை அனுபவிப்பதை யாரும் தடுக்க முடியாது என்ற 300ஏ பிரிவுக்கு எதிரானதா? அரசியல் சாசனத்தின் 14-வது பிரிவின்படி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்கு புறம்பானதா? சட்டப்பூர்வமான பணத்தை எடுக்க வங்கிகள் அனுமதி மறுப்பது அடிப்படை உரிமைகளை மீறுவதாகாதா? இந்த அறிவிப்பின் நடைமுறைத் தோல்விகள் மக்களைப் பாதிக்காதா? நடைமுறைப்படுத்தும்போது தோல்வி ஏற்பட்டால், மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவது ஆகாதா? ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைவிட, இந்த அறிவிப்பால் கூடுதல் அதிகாரம் பயன்படுத்தப்பட்டதா? ரூபாய் நோட்டு விவகாரத்தில் கூட்டுறவு வங்கிகளுக்குத் தடை விதிக்க முடியுமா? இந்தக் கேள்விகள் மிகவும் நியாயமானவை. மற்ற விமர்சகர்களை அழைத்ததுபோல் உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் தேசத்துரோகிகள் என்று அழைக்க முடியாது. இவர்களுக்கு என்ன பதில் அளிக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நம்முன் உள்ள கடமை என்பது ஒட்டுமொத்த தேசத்திலும் ஒரு சீரான அடிப்படைக் கட்டமைப்பை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். இன்று நாம் ஏற்படுத்தியிருக்கும் கட்டமைப்புகள் அனைத்துமே பெரும் நகரங்கள் சார்ந்தவை மட்டுமே. நகரங்களை விட்டு கொஞ்சம் வெளியே வந்தால், துரிதமான மொபைல் சிக்னல் முதல் பாதாளச் சாக்கடை வரை எதுவும் கிடையாது. வர்தா புயலால் சென்னையில் கிடுகிடுத்துக்கிடக்கும் ஆன்லைன் டிரான்சாக்‌ஷன், கேஷ்லெஸ் எகனாமி என்பதெல்லாம் என்னவாகின என்பதைப் பார்த்தோம். 

இந்தக் கட்டுரையை நீங்கள் ஜனவரி முதல் வாரத்தில் வாசிக்கும்போது அரசாங்கம் தனது அடுத்த அறிவிப்பை வெளியிட்டிருக்கும். 50 நாட்கள் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்ளுங்கள். வரும் புத்தாண்டில் புதிய இந்தியா பிறக்கும். ஆகவே மக்கள் தங்களின் சங்கடங்களை பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்திருக்கிறார்கள். ஆனால் வருகிற ஜனவரி 2 -ம் தேதி வங்கிகள் திறக்கும்போது வியாபாரிகளும் பொதுமக்களும் தங்களின் சொந்தப் பணத்தை தங்களில் தேவைக்காக எடுக்க வரும்போது அது கிடைக்கவில்லை என்றால், பெரும் நெருக்கடிகள் உருவாகும். ஒரு தேசத்தை சதா ஒரு செயற்கையான நெருக்கடியில் வைத்திருக்க இயலாது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism