Published:Updated:

2016 டாப் 10 மனிதர்கள்

2016 டாப் 10 மனிதர்கள்
2016 டாப் 10 மனிதர்கள்

2016 டாப் 10 மனிதர்கள்

2016 டாப் 10 மனிதர்கள்

தமிழகத்தின் சுழல் புயல்

2016 டாப் 10 மனிதர்கள்


ரவிச்சந்திரன் அஸ்வின், (கிரிக்கெட் வீரர்)


லகின் நம்பர் ஒன் பௌலர் நம்ம தமிழன் என்பது தமிழ்நாட்டின் பெருமை. அத்தனை டாப் பேட்ஸ்மேன்களையும் அலறவைத்த அஸ்வின், சுழலில் ஆண்டு முழுவதும் பின்னியெடுத்தது விக்கெட் அறுவடை. அநாயாசமாக சீனியர்களின் பல சாதனைகளை அடித்து உடைத்தார். எட்டு டெஸ்ட் போட்டிகளில் 48 விக்கெட்டுகள், பேட்ஸ்மேனாக 336 ரன்கள், 19 டி-20 போட்டிகளில் 27 விக்கெட்டுகள்… என 2016-ம் ஆண்டில் அஸ்வின் ரெக்கார்டுகள் வேற லெவல். கடைசி 20 டெஸ்ட்களில் 133 விக்கெட்டுகள் என்பதும் இன்னோர் இந்திய சாதனை. போன வருடம் ஐ.சி.சி-யின் தரவரிசையில் டெஸ்ட் போட்டிப் பந்து வீச்சாளர்களில் நம்பர் ஒன்னாக வந்தவர், இந்த ஆண்டும் அதைத் தக்கவைத்தார். எல்லா கிரிக்கெட் ஜீனியஸ்களாலும் புகழப்படும் அஸ்வின் முன்னால் உடைபடக் காத்திருக்கின்றன இன்னும் பல சாதனைகள்!

2016 டாப் 10 மனிதர்கள்

இயற்கைப் போராளிகள்

ரெஜி ஜார்ஜ் - லலிதா ரெஜி  (சமூகச் செயற்பாட்டாளர்கள்)

ந்தத் தம்பதிக்குப் பூர்விகம் கேரளா என்றாலும், 23 ஆண்டுகளாகத் தமிழகம்தான் தாய்மடி. பழங்குடி மக்கள் வாழும் தமிழகக் கிராமங்களில் தங்கி, மருத்துவ சேவை செய்வதில் தொடங்கியது இந்தத் தம்பதியின் பயணம். மனிதர்களுக்கு மட்டும் அல்ல, இந்த மண்ணுக்கும் மருத்துவம் தேவை என உணர்ந்த கணத்தில் மலர்ந்தது புதிய அத்தியாயம். சேலம் சிட்லிங்கி பள்ளத்தாக்குப் பகுதியில் படிப்படியாக விவசாயம் அழிந்துகொண்டிருந்த 21 கிராமங்களில், விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்த விழிப்புஉணர்வை உண்டாக்கினார்கள். அவர்களை ஒன்றிணைத்து  ‘சிட்லிங்கி இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு’ என்ற அமைப்பைத் தொடங்கினார்கள். அறுவடை முதல் விற்பனை வரை அனைத்தையும் அந்த விவசாயிகள் மூலமாகவே வெற்றிகரமாக நிகழ்த்திக்காட்ட, அது மகத்தான முன்னுதாரணமாக ஆனது. 20 ஆண்டுகளாக தரிசாகக் கிடந்த நிலங்கள் இந்த மருத்துவர்களால் பசுமை பூமியாக உயிர்த்திருக்கிறது. இந்தப் பகுதியில் வேளாண் தொழிலைக் கைவிட்டு வெளியூர் வேலைகளுக்குப் போனவர்கள், இப்போது விவசாயத்தை நோக்கித் திரும்பி வருவது நம் தேசத்துக்கான பாடம். நான்கு பேருடன் தொடங்கிய இந்த இயற்கை விவசாயப் புரட்சி, இன்று 300 விவசாயக் குடும்பங்களுக்கும் மேல் வளர்ந்திருப்பது, இவர்களின் அன்பில் தழைத்த ஈர விருட்சம்!

2016 டாப் 10 மனிதர்கள்

விண்வெளித் தமிழன்

கே.சிவன் (இயக்குநர், விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்)

நாகர்கோவிலுக்குப் பக்கத்தில், வல்லங்குமாரவிளை என்னும் குக்கிராமத்தில் பிறந்தவர். மிக எளிய குடும்பத்தில் முதல் தலைமுறையாக முளைத்து, சென்னை எம்.ஐ.டி-யில் படித்து, அயராமல் உழைத்து, இந்திய விண்வெளித் துறையின் தவிர்க்க முடியாத மனிதராக உயர்ந்து நிற்பவர் சிவன். படிப்படியாக வளர்ந்து, இன்று விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தின் இயக்குநராக உயரம் தொட்டிருக்கிறார். சந்திராயன், மங்கள்யான் வெற்றிகளில் இவரது பங்கு மிக முக்கியமானது. அடுத்த மைல்கல்லாக ‘மார்க் 3’ என்கிற புதுமையான ராக்கெட் ஆய்வில் இருக்கிறார் இஸ்ரோ சிவன். இன்னும் அண்ணாந்து பார்க்கக் காத்திருக்கிறது தேசம்!

2016 டாப் 10 மனிதர்கள்

எல்லைகள் உடைத்த இயக்குநர்

வெற்றி மாறன் (திரைப்பட இயக்குநர்)

வெற்றி மாறனின் ‘விசாரணை’, பல தளங்களில் தமிழ் சினிமாவின் எல்லைகளை உடைத்து விஸ்தரித்தது. சந்திரகுமாரின் ‘லாக்கப்’ நாவலின் மையமே ‘விசாரணை’ ஆனது. அதை அதிரவைக்கும் சினிமா அனுபவமாக மாற்றியதே வெற்றியின் வெற்றி. எளிய மனிதர்களின் மேல் நடக்கும் அதிகாரத் தாக்குதலையும், காவல் துறைக்கும் அரசியல் அதிகாரத் தொடர்புகளுக்கும் பின்னால் ஒளிந்துகிடக்கும் குரூர  அழுக்குகளையும் பதறப் பதறக் காட்டியது படம். இந்தப் படம் பார்த்த ஒவ்வொருவருக்குள்ளும் ‘நமக்கும் இப்படி நடக்கலாம்’ என்ற விசாரணையை உருவாக்கின காட்சிகள். பாடல்கள் இல்லாமல், சமரசம் இல்லாமல் படமாக்கலிலும் இது புதுப் பாய்ச்சல். வெனீஸ் திரைப்பட விழாவில் மனித உரிமைக்கான படைப்புகள் பிரிவில் கௌரவம், மூன்று தேசிய விருதுகள், இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் வரை போனது என வெற்றி மாறன் தந்தது தமிழனுக்கான பெருமை!    

2016 டாப் 10 மனிதர்கள்

தன்னம்பிக்கைத் தமிழன்

மாரியப்பன்  (தடகள வீரர்)

சேலம் பெரிய வடகம்பட்டி மாரியப்பன், ரியோ பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது, ஓர் அபார சரிதம்! செங்கல் சூளையில் வேலைபார்க்கும் ஏழைத்தாய், குடிகார அப்பா என வறுமைக்கு வாக்கப்பட்ட வாழ்க்கை. துள்ளித் திரியும் பள்ளி வயதில் நடந்த திடீர் விபத்தில் ஒரு கால் சிதைந்தது. ‘நடக்கவே முடியாது’ என்ற உடல் தடையை உடைத்து எழுந்தது மாரியப்பனின் நன்னம்பிக்கை. சீராக நடக்க முடியாத காலுடன் சீறிப் பாய்ந்த  இவரது கனவு, உயரம் தாண்டுதலை இலக்காக்கியது. ஏழைத்தாயின் அணைப்பும், பள்ளி ஆசிரியர்கள் தந்த பயிற்சிகளும், இரவு-பகலாகப் பயிற்சியில் கிடந்த உழைப்பும் அடுத்தடுத்து உயரம் தாண்டவைத்தன. இந்திய அளவிலான போட்டிகளில் சாதனை படைத்தும் நிதி உதவியும் அரசுசார் ஆதரவும் இல்லை. அடுத்தகட்டத்துக்குப் போக முடியாமல் தவித்தபோது, வெளிச்சம் பாய்ச்சினார் பெங்களூரு பயிற்சியாளர் சத்யநாராயணா. அவர் வழிகாட்ட, ரியோ பாரா ஒலிம்பிக் போய் மாரியப்பன் தங்கம் வென்றது, தமிழகத் தடகள வரலாற்றின் வைர அத்தியாயம். 1.89 மீட்டர் உயரம் தாண்டி இந்த இளைஞன் படைத்தது உலக சாதனை. இந்தியாவே வியந்து பார்க்கும் மாரியப்பனின் வாழ்க்கை, நமக்கான நம்பிக்கைப் பாடம்!

2016 டாப் 10 மனிதர்கள்

கலைக் களஞ்சியன்

இ.மயூரநாதன் (தமிழ் விக்கிப்பீடியா முன்னோடி)

ன்று விக்கிபீடியாவில் 85,000-க்கும் அதிகமான தமிழ்க் கட்டுரைகள் குவிந்துகிடக்கின்றன. ஒவ்வொரு நாளும் உலகெங்கிலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வாசிக்கிறார்கள். இதற்குப் பின்னால் இருப்பது இ.மயூரநாதனின் பெரும் உழைப்பு. 2001-ம் ஆண்டு ஆங்கிலத்தில் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது.  அதன் எதிர்கால வீச்சை உணர்ந்து, விக்கிப்பீடியாவோடு இணைந்து தமிழ் விக்கிப்பீடியாவை 2003-ம் ஆண்டில் தொடங்கினார். அதன் அடிப்படைக் கட்டமைப்புக்காக ஒரு வருடம் தனியாளாக உழைத்தார். ஏராளமான இளைஞர்களை ஒன்றுதிரட்டி, ஆன்லைன் அறிவுக்களஞ்சியத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். இன்று 88,000 தமிழர்கள் விக்கிப்பீடியாவில் பதிவுசெய்துள்ளனர். இலங்கைத் தமிழரான இவர், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிகிறார். உலகளாவிய பன்மொழிக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவை, ஆற்றல் வாய்ந்த குழுமமாக உருவாக்கியது இவரது அரிய சாதனை. இவரே தன்னுடைய முனைப்பால் 4,458 கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். உலகப் பன்மொழித் திட்டத்தில் இன்று 291 மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் இயங்குகின்றன. இதில் தமிழ்மொழியின் இடம் 61. இந்திய மொழிகளில் உள்ள விக்கிப்பீடியாவை அலசினால், தமிழ் மொழிக்கான ரேங்க் முதல் மூன்று இடங்களுக்குள் இருக்கும். இதற்கு ஒரே காரணம் மயூரநாதன்.

2016 டாப் 10 மனிதர்கள்

தனிப்பெரும் தமிழ்க் கவிஞன்

மனுஷ்ய புத்திரன் (எழுத்தாளர்)

தொ
டர்ச்சியான தொலைக்காட்சி விவாதங்கள், தி.மு.க மேடைகள் என வருடம் முழுக்க ஒலித்துக்கொண்டே இருந்தது மனுஷ்ய புத்திரன் குரல். இதற்கு நடுவிலும் இவர் எழுதிக் குவித்த கவிதைகள்தான் ஆச்சர்யம். சமூக வலைதளங்கள், பத்திரிக்கைகள் என இந்த ஆண்டு மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமான கவிதைகளை எழுதியிருக்கிறார். எண்ணிக்கையில் மட்டும் அல்ல, அடர்த்தியிலும் ஆழத்திலும் அவை அபாரமான கவிதைகள். ஆண்-பெண் உறவின் அகமனக் காட்சிகளில் இருந்து அரசியல் அறச்சீற்றம் வரை அத்தனை தளங்களிலும் பயணித்தது இவர் எழுத்து. விகடனில் இவர் எழுதிய ‘கிளிக்காவியம்’ என்ற நீள்கவிதை, இந்த ஆண்டு எழுதப்பட்ட மகத்தான படைப்புகளில் ஒன்று. சென்னை வெள்ளத்தின் மீள்துயரத்தையும் கொடும் சித்திரங்களையும் கவிதைகளாக ஆவணப்படுத்தினார். பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் இருந்து ஜெயலலிதா மரணத்துக்குப் பின்பான அரசியல் வரை எல்லாமே கவிதைகளாயின. ஒரு போராளியைப் போல, தோழனைப் போல, காதலனைப் போல எல்லா திசைகளிலும் எழுந்து நடக்கின்றன மனுஷ்ய புத்திரனின் கவிதைகள். 

2016 டாப் 10 மனிதர்கள்

இந்திய கிரிக்கெட்டின் லேடி டெண்டுல்கர்

மித்தாலிராஜ் (கிரிக்கெட் வீராங்கனை)

ந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் 17 ஆண்டுகால நம்பிக்கை நட்சத்திரம். விளையாட விரும்பும் இந்தியப் பெண்களுக்கு இவர்தான்  ரோல்மாடல். இந்த ஆண்டு ஆசியக்கோப்பையை வென்று காட்டியது இவரது பிரமாத கேப்டன்ஷிப்பும் அதிரடி ஆட்டமும்.  இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீராங்கனை... உலக அளவில் 5,000 ரன்களைக் கடந்திருக்கும் இரண்டாவது பேட்ஸ்வுமன்... என ஏராளமான சாதனைகளை எட்டிப் பிடித்திருக்கும் மித்தாலியின் பூர்விகம் தமிழ்நாடு. 1999-ம் ஆண்டில் தொடங்கிய இவரின் சாதனைப் பயணம் சளைக்காமல் தொடர்வது இன்னுமோர் இலக்கை நோக்கி. அது இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணிக்கு உலகக்கோப்பையை வென்று தருவது.  நிகழ்த்திக் காட்டுவார் மித்தாலி!  

2016 டாப் 10 மனிதர்கள்

கலகக்காரக் கேலிச்சித்திரன்

ஹாசிப் கான் (கார்ட்டூனிஸ்ட்)

ஹாசிஃப்கானின் ஒவ்வொரு சித்திரத்திலும் கிழிந்துத் தொங்கின அதிகார முகமூடிகள். அபாரமான புதிய பாணியில் இவர் வரைந்த ஒவ்வோர் ஓவியத்தையும் கொண்டாடியது தமிழ்ச் சமூகம். ஒவ்வொரு சாமானியனுக்குள்ளும் கிடந்த கேள்விகளை  இவர் கேலிச் சித்திரங்களாக்க, அது அநீதிகளுக்கு எதிரான சாட்டையானது. களப் போராட்டங்களின் குரலை ஒரே கார்ட்டூனில் ஒலிக்கவிட்டார் ஹாசிஃப். மோடி, ஜெயலலிதா என ஆளும்வர்க்கத்தின் அத்தனை தவறுகளையும் கூண்டில் ஏற்றியது இவரின் தூரிகை. விவசாயிகள் தற்கொலையில் இருந்து கறுப்புப் பணம் வரை அத்தனை பிரச்னைகளிலும் தன் ஓவியங்களை வீரியமான விமர்சன ஆயுதங்களாக்கினார். இந்த நாகர்கோவில் இளைஞனுக்கு ஆயிரமாயிரம் லைக்ஸ். ஹாட்ஸ் ஆஃப் ஹாசிஃப்!   

2016 டாப் 10 மனிதர்கள்

சளைக்காத சமூகப் போராளி

முகிலன் (சமூகச் செயற்பாட்டாளர்)

மிழ்நாட்டில் எங்கே… என்ன போராட்டம் என்றாலும் முதல் குரலாக முதல் ஆளாகப் போய் நிற்பார் முகிலன். அணுஉலைகளுக்கு எதிராக… மரங்கள் வெட்டுப்படுவதற்கு எதிராக… ஏரிகளின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக… சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கு எதிராக… அத்தனை மக்கள் போராட்டங்களிலும் முகிலன் இருப்பார். அதிகார ஆசையோ பணத்தேவையோ புகழ் போதையோ எந்த எதிர்பார்ப்பும் இல்லாத இவரது முன்னெடுப்புகள் `ஏதாவது செய்யணும்’ என நினைக்கும் எல்லோருக்குமான முன்னுதாரணம். 1980-களில் ஈழப்பிரச்னை உச்சத்தில் இருந்தபோது, போராட்டக்களத்துக்கு வந்தவர், இன்றும் தீராத  உயிர்ப்புடன் போராடுகிறார். `செயற்பாட்டாளராக இருப்பதுதான் மனநிறைவைத் தருகிறது’ என, சம்பளம் கொடுத்த பொதுப்பணித் துறை வேலையைத் துறந்தவர். தாதுமணல் கொள்ளைக்கு எதிரான இவரது தொடர்ச்சியான போராட்டங்கள், இந்த மண்ணுக்கான பெருங்காதல்; அடுத்த தலைமுறைக்கான அறைகூவல். நேரடி வன்முறைகளுக்கும் மிரட்டல்களுக்கும் ஆளானபோதும் முகிலனை இயக்குவது அறத்தின் மீதான பெரும் நம்பிக்கை.
 

அடுத்த கட்டுரைக்கு