Published:Updated:

2019 நாடாளுமன்றத் தேர்தல்.. கணக்குப்போட்டு காய் நகர்த்தும் அமித் ஷா!

2019 நாடாளுமன்றத் தேர்தல்.. கணக்குப்போட்டு காய் நகர்த்தும் அமித் ஷா!
2019 நாடாளுமன்றத் தேர்தல்.. கணக்குப்போட்டு காய் நகர்த்தும் அமித் ஷா!

நாடாளுமன்றப் பொதுத்தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள மாநிலக் கட்சிகளுடன் உறவைப் பலப்படுத்திக் கொள்வதற்கான ஆயத்தப் பணிகளை பி.ஜே.பி. இப்போதே தொடங்கி விட்டது.

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பல மாநிலங்களிலும் அண்மையில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் பி.ஜே.பி. படுதோல்வி அடைந்தது. இதனால், அக்கட்சி கடும் அதிர்ச்சியடைந்தது. காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுகூடுவதற்கான சாத்தியங்கள் இருப்பதையும் பி.ஜே.பி. உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கிவிட்டது. இதையடுத்து நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி. அரசு,  ஏற்கெனவே கூட்டணியில் இருந்த கட்சிகளை சமாதானப்படுத்தி அக்கட்சிகள் கூட்டணில் தொடரவும், புதிதாக ஒருசில கட்சிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டுவரும் முயற்சிகளையும் தொடங்கியுள்ளது.

அடுத்தாண்டு மே மாதத்தில்தான் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றாலும், இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது 2019-ஆம் ஆண்டு தொடக்கத்திலோ, திட்டமிட்ட காலத்திற்கு முன்பே நாடாளுமன்றத் தேர்தலை நடத்தலாமா என்று பிரதமர் மோடி தீவிர யோசனையில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில், மோடிக்கு நெருக்கமானவரும், பி.ஜே.பி. தேசியத் தலைவருமான அமித் ஷா, கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை இப்போதே தொடங்கி விட்டார். இடைத்தேர்தல் தோல்வி, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கக்கூடும் என்று பி.ஜே.பி. கருதுவதால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளிடையே நிலவும் கருத்துவேறுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில், அமித் ஷாவின் சுற்றுப் பயணம் அமைந்துள்ளது. 

பி.ஜே.பி-யின் நீண்டகாலக் கூட்டணிக் கட்சியான சிவசேனாவை சமாதானப்படுத்தி, மீண்டும் மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் அக்கட்சியுடன் இணைந்தே போட்டியிட வேண்டும் என்பதே அமித் ஷாவின் விருப்பம். அண்மைக்காலமாக சிவசேனா - பி.ஜே.பி இடையே இணக்கமான உறவுகள் இல்லை. கடந்த இரு மாதங்களுக்கு முன், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அடுத்து வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்தார். 

இந்தச் சூழ்நிலையில், ஜூன் 6-ஆம் தேதி மும்பை சென்ற அமித் ஷா, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவைச் சந்தித்துப் பேசினார். அப்போது, கூட்டணியை மீண்டும் தொடர்வது பற்றி பேச்சு நடத்தியதாகக் கூறப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறும் எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்று அமித் ஷா கேட்டுக் கொண்டார் என்றும் பரவலாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பையைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலம் சண்டிகர் சென்ற அமித் ஷா, சிரோமணி அகாலி தளம் கட்சியின் மூத்தத் தலைவர்களைச் சந்தித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சண்டிகரில் சிரோமணி அகாலிதள மூத்தத் தலைவரும், பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல், கட்சித் தலைவர் சுக்பீர் பாதல் உள்ளிட்டோரை அமித் ஷா சந்தித்துப் பேசினார்.

இதனிடையே பி.ஜே.பி - சிரோமணி அகாலிதளம் இடையேயான கூட்டணி நீடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றே கூறலாம். ஏனெனில் பிரகாஷ் சிங் பாதலின் மருமகளும், அகாலி தளம் தலைவர் சுக்பீர் பாதலின் மனைவியுமான ஹர்சிம்ரத் கவுர் பாதல், பி.ஜே.பி. தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். எனவே,  பி.ஜே.பி. கூட்டணியை விட்டு சிரோமணி அகாலிதளம் வெளியேறாது என்றே தெரிகிறது.

கடந்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. அந்த தேர்தலுக்கு முன்னதாக, பஞ்சாப் மாநிலத்திற்கு சிறப்புத் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்திருந்தால், அங்கு அகாலிதளம் - பி.ஜே.பி. கூட்டணி ஆட்சியைப் பிடித்திருக்க முடியும் என்று சிரோமணி அகாலி தளம் கருதுகிறது. என்றாலும், பி.ஜே.பி. கூட்டணியை விட்டு வெளியேற முடியாத கட்டாயம் அக்கட்சிக்கு இருந்து வருகிறது. தவிர, பிரதமர் மோடி அரசு அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரி அமல் போன்ற செயல்பாடுகள் சிரோமணி அகாலி தளம் கட்சியால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகின. 

அண்மையில் நடைபெற்ற குர்தாஸ்பூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. பி.ஜே.பி-யின் கோட்டையாகக் கருதப்பட்ட இத்தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்தே கூட்டணியைப் பலப்படுத்தும் நோக்கில் அமித் ஷா, அகாலி தளம் தலைவர்களைச் சந்தித்துள்ளார் என்று தெரிகிறது.

பஞ்சாப் மாநிலத்திற்கு சிறப்புத் திட்டம் எதையாவது மத்திய அரசு அறிவித்தால் மட்டுமே, அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் அகாலிதளம்- பி.ஜே.பி. கூட்டணி வெற்றிபெற முடியும் என்று அகாலி தளம் உறுதியாக நம்புகிறது. மேலும் கிராமப்புறப் பகுதிகளிலும் பி.ஜே.பி-க்கு எதிரான நிலைப்பாடே உள்ளதாக அகாலி தளம் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமித் ஷாவுடனான சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் பாதல், "நாடாளுமன்றத் தேர்தலுக்கான திட்டங்கள் குறித்து விவாதித்தோம். பி.ஜே.பி-யின் நிரந்தர கூட்டணிக் கட்சியாக எங்கள் கட்சி உள்ளது என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் நாங்கள் தொடர்கிறோம். பி.ஜே.பி-யுடன் சிரோமணி அகாலி தளத்திற்கு எந்தக் கருத்துவேறுபாடும் கிடையாது. எனவே, போராட்டத்திற்கான காலம் வந்துள்ளது. எனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் கருத்துவேறுபாடுகளை மறந்து தேர்தலுக்குத் தயாராக வேண்டும்" என்றார். 

நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் மே 28-ஆம் தேதி, மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மொத்தம் 14-இல் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 11 தொகுதிகளில் வெற்றிபெற்றன. தவிர, கடந்த மாதம் நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலிலும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தன. இந்த இரு கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவது என்று முடிவு செய்துள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியை மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவே மோடி தலைமையிலான மத்திய அரசு கருதுகிறது.

லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றிபெற்ற பீகார் முதல்வர் நிதிஷ் குமார், அந்தக் கட்சியுடனான உறவை முறித்து, பி.ஜே.பி-யுடன் கூட்டணி சேர்ந்து மீண்டும் முதல்வர் பதவியேற்றார். எனவே, பீகார் மாநிலத்திலும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட சில கட்சிகளுடன் கூட்டணியை பி.ஜே.பி. புதுப்பிக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியுள்ளது. 

நிதிஷ் குமாருடன் பி.ஜே.பி. கைகோர்த்ததை ஏற்கெனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி, உபேந்திர குஷ்வாரா தலைமையிலான ஆர்.எல்.எஸ்.பி கட்சிகள் ரசிக்கவில்லை. எனவே அந்தக் கட்சிகளையும் சமாதானப்படுத்த வேண்டிய நிர்பந்தம் பி.ஜே.பி-க்கு இப்போது உருவாகியுள்ளது. 

ஆந்திர மாநிலத்தைப் பொறுத்தவரை சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஏற்கெனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டது. தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் ஒருபுறம் மூன்றாவது அணி என்ற கோஷத்தை முன்வைத்து, அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார். நாடாளுமன்றத்துக்கு பொதுத்தேர்தலுக்கு முன்னர், தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பலப்படுத்துவதில் பி.ஜே.பி தற்போது தீவிரம் காட்டி வருவதையே அமித் ஷாவின் இந்தச் சுற்றுப்பயணம் மற்றும் மாநிலக் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பு வெளிப்படுத்துகிறது.

நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே நிலவும் பி.ஜே.பி-க்கு எதிரான சூழ்நிலையை எப்படியாவது மாற்றுவதுடன், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்பதே பி.ஜே.பி-யின் எண்ணமாக உள்ளது. அதற்கான முயற்சிகளை அமித் ஷா ஏற்கெனவே தொடங்கி விட்டார் என்பதே அவரின் இந்தப் பயணம் எனலாம்...!